இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………. (12)
அன்பினியவர்களே !
மடலொன்று வரைகின்றேன், மனதைத் திறக்கின்றேன். நினைவுகள் சிலிர்க்கின்றன, கனவுகள் வெளுக்கின்றன. மூடிய விழிகளுக்குள் தேடிய விடியல்களைச் சூடிய விரல்களினால் இழைத்திட்டேன் மாலையாக.
காலத்தின் மாற்றம் மனித மனங்களை மாற்றி விடுகிறது எனும் வாதம் எங்கே உண்மையாகிப் போய் விடுமோ எனும் அச்சம் என் உள்ளத்தினுள் ஓங்காரமாய் ஒலிக்கின்றது.
வாழ்க்கை என்னும் பள்ளியில் அரிவரி மட்டுமே முடித்தவனாக இலண்டன் நகருக்குள் நான் காலடி வைத்த போது எனக்கு வயது 18 முடிந்து பத்தொன்பது ஆரம்பமாகி இருந்தது.
அந்தக் காலகட்டத்திலே என்னைச் சுற்றி நான் கண்ட புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் ஈழத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அத்துடன் இங்கு வந்தவர்களில் பெரும்பான்மையோர் இருபதுகளின் மத்தியில் உள்ள முதிர்ந்த மாணவர்களாக இருந்தார்கள்.
அவர்களுக்கு என்னை விட வாழ்க்கை அனுபவங்கள் அதிகமாகவே இருந்தது. காலச்சக்கரம் உருண்டோடி நான் இங்கிலாந்திலே இப்போது ஏறத்தாழ முப்பத்தி எட்டு ஆண்டுகளை ஓட்டி விட்டேன். எனது வாழ்வின் அனுபவங்கள் ஏறக்குறைய முழுவதுமே இந்த அந்நிய மண்ணிலே புலம்பெயர்ந்த சூழ்நிலையிலே தான் எனக்குப் புகட்டப்பட்டது.
இத்தகைய ஒரு காலமாற்றத்தினூடாக நான் பிரயாணித்த போது என்னைச்சுற்றி இருந்த மனிதர்களினதும், எனதும் மனநிலை மாற்றங்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறேன்.
சமுதாயம், சமூகம் எனும் பார்வையின் மீதான மனிதர்களின் கண்ணோட்டம் கணிசமான அளவிலே மாறி விட்டதென்பதே என் ஊகம். அம்மாற்றங்களில் சில காலத்தின் கட்டாயம் என்பதை உணரும் அதேசமயம் பல தன்னலத்தின் அடிப்படையில் எழுந்ததோ எனும் அச்சம் மனதை மருவி நிற்பது உண்மையே !
என்ன எதைப் பற்றிக் கூறுவதற்காக இந்த ஆலாபனை என நீங்கள் எண்ணுவது எனக்குப் புரிகிறது.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை 1970பதுகளின் கடைசியிலும் எண்பதுகளிலும் நாடளாவிய ரீதியில் மக்கள் ஒருவிதமான பழமைவாத கருத்துப் போக்குடைய ஆங்கிலத்தில் கன்சர்வேடிவ் என அழைக்கப்படும் மனப்பான்மையினுள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
அந்தச் சமயத்திலே தான் “இரும்புத் தலைவி” என அழைக்கப்பட் திருமதி மார்கிரெட் தாச்சர் அவர்கள் இந்நாட்டின் முதலாவது பெண் பிரதமர் ஆனார் என்பது வரலாற்று உண்மை. அவர் இந்நாட்டின் தலைவியாவதற்கு தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை.
தொழிலாளர் நலன்களை முன்னெடுக்கும் கட்சியான தொழிற் கட்சி பதவியிலிருந்த காலம் அவரின் முதுகெலும்பாக விளங்கிய தொழிலாளர் யூனியன்கள் தமது போராட்டத்தை அதியுச்ச கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள். அதன் நிமித்தம் வேலை நிறுத்தங்கள் சரமாரியாகத் தொடர்ந்தன.
இவற்றிலே சில நியாமான கோரிக்கைகளுக்காக இருந்தாலும், வேறு சில தொழிலாளர் நலன் எனும் எல்லையைத் தாண்டி தாம் கொண்டிருந்த அரசியல் கொள்கைகளுக்காக தொழிலாளர் நலன் எனும் போர்வையில் வேலை நிறுத்தங்களை முன்னெடுத்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
இவ் வேலை நிறுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் அல்லல்படும் சாதாரண மக்களே ! இவர்களில் பலர் இவ் வேலை நிறுத்தங்களின் பின்னால் இருந்த அரசியல் கோஷங்களைக் கண்டு வெகுண்டதுவே மார்கிரெட் தாச்சர் அவர்களும், அவரது அரசியல் கட்சியும் பதவிக்கு வருவதற்கு மூலகாரணமாயிருந்தது.
முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பைக் கொண்டிருந்த மேலைத்தேசமான இங்கிலாந்தில் உள்ள சோஷலிஸக் கொள்கை வழி நின்ற லேபர் கட்சி தான் அரசிற்கு வந்ததும் அதே முதலாளித்துவ கட்டமைப்புக்குள் இயங்க வேண்டிய நிர்பந்தம் இருந்தமையால் அவர்களது சோஷலிஷ வாதம் வெறும் ஏட்டுச்சுரைக்காயாகவே இருந்தது.
கொள்கைகள் பேசுவதற்கு இனிமையாக இருக்கும் ஆனால் அதைப் பேசுபவர்கள் வசதியான வாழ்க்கைக் கட்டமைப்பில் இருப்பாராகில் அக்கொள்கைகளை வழி நகர்த்த முயன்றால் அது தமது வாழ்க்கை முறையையே உலுப்பிவிடும் என்று காணும் போது பேசாமடந்தையாகி தாமும் குட்டையிலே ஊறிய ஒரு மட்டையாக ஆகி விடுவார்கள். இதுதான் பொதுவாக நான் கண்ட அரசியல்.
இதற்கு விதிவிலக்காக சிலர் இருந்தார்கள், இனியும் வருவார்கள் என்பதை மறுக்க முடியாது.
அந்நேரம் பிரதமராக இருந்த மார்கிரெட் தாச்சர் அவர்கள் சொன்ன ஒரு வாக்கியம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. “சமுதாயம் என்று ஒன்றுமில்லை நாமொவ்வருவரும் தனி மனிதர்களே” என்பதுவே அது. அவ்வாக்கியத்தின் படி தனது கொள்கைகளை வழி நடத்திய அவர் இந்நாட்டிலே தனியுடைமையை பிரதானமாக்கி மக்களின் மனதிலே தனது வாழ்க்கையின் அத்தியாவசியத்திற்கும் சுயநலத்திற்கும் இடையே இருந்த வரம்பை தெளிவற்றதாக்கி விட்டார்.
எம்முடைய சமூகம், சமுதாயம் என்று எண்ணுவதை விடுத்து எனக்கு , என்னுடையது என்று எண்ணுவதே சரியானது என்று எண்ணும் ஒரு தலைமுறையை இக்காலகட்டம் இங்கிலாந்தில் உருவாக்கி விட்டது என்பது உண்மை.
ஆனால் அதே சமயம் சமூக நல அமைப்புகளுக்கும், அந்நிய நாடுகளில் நடக்கும் அனர்த்தங்களுக்கான நிதி உதவியிலும் இந்நாட்டு மக்கள் பின் தங்கியவர்கள் இல்லை என்பதையும் நான் சொல்லியாக வேண்டும்.
தொழிலாளருக்கு அளவிற்கு அதிகமான உரிமைகள் கொடுக்கப்படுகின்றன எனும் வாதத்தைச் சரிசெய்வதற்கு அதற்கு நேர் எதிர்மாறான பாதையில் செல்லத் தொடங்கிய இங்கிலாந்து இன்று தொழிலாளர்களின் நலன் என்பதைக் கணக்கிலெடுக்கத் தவறி விட்டதோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.
இதற்கு ஏதுவாக தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியும், ஜரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடியும் துணை போகின்றதோ எனும் அச்சம் மேலோங்குகிறது.
எந்த ஒரு நாடோ அன்றி நிறுவனமோ தன்னுடை மக்களிடமிருந்தோ அன்றிப் பணியாளர்களிடமிருந்தோ நூறு சதவீத உழைப்பை உளவாங்கிக் கொள்ள வே்ண்டுமானால் அவர்களது நலனை முதன்மைப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம்.
ஆனால் இன்று நடப்பதோ அதற்கு எதிர்மாறாக உள்ளாது. அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரிபவர்களின் நலனைப் பற்றி கொஞ்சமும் கவனம் எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இந்த மனோபாவம் பணியாளர்களிடமும் பற்றிக் கொண்டு விட்டது போலுள்ளது. பலர் தம்மோடு பணிபுரியும் சக ஊழியர்களின் மீதேறி தாம் முன்னேறத் தயாராகவிருக்கும் ஒரு நிலையை காணக்கூடியதாக உள்ளது.
இது மாறக்கூடிய ஒரு மனப்பான்மையா? இல்லையானால் எமது எதிர்காலச் சந்ததியும் இத்தகைய ஒரு சகதிக்குள் உள்வாங்கப்பட்டு விடுமா? கேள்விக்குறி பாரமாக நெஞ்சில் தொங்கிக் கொண்டு இருக்கிறது? காலம் இதற்கு விடையளிக்கும் என நம்புகிறேன்.
அப்போது நான் இருப்பேனோ? இல்லை காற்றோடு கலந்து விடுவேனோ?
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்
படங்களுக்கு நன்றி : பி.பி.ஸி இணையத்தளம், டெய்லி டெலிகிராப் இணையத்தளம்