நீ அணைப்பாயென….
விசாலம்
இன்னும் இரண்டு நாட்கள் தான்…. என் பேரன் பேத்தியைப் பார்த்துவிடுவேன். அவர்களை ஒரு ஆறு மாதங்கள் முன்பு பார்த்தது.
இப்போது இன்னும் வளர்ந்திருப்பார்கள்.. ஏர் போர்ட்டில் என்னைக்கண்டு ஓடி வந்து “அம்மா’ என்று அணைத்துக் கொள்வார்கள் என்ற எண்ணமெல்லாம் மனத்தில் சினிமா சீன் போல் ரீல் ஓடியது. ஆயிற்று அந்த நாளும் வந்தது தில்லி ஏர்போர்டில் விமானம் வந்து இறங்கியது. நான் என் கணவருடன் என் கையில் இருக்கும் சக்கரம் பொதித்த சூட்கேஸை “கரகர”வென இழுத்தபடி வெளியே வந்தேன்.
என் மகன் ஆசையுடன் தூரத்திலிருந்தே கையை ஆட்டினான். பின் ஓடி வந்து கட்டிக்கொண்டான்.
என் கண்கள் என் பேரனைத்தேடியது. “ஏன் ராஜா குழந்தைகள் வரலையா?”
“இல்லையம்மா ஒண்ணு டென்னிஸ் .ஒண்ணு பியானோ ன்னு போயிடுத்துகள்”
“சரி பரவாயில்லை அந்த கிளாஸும் போகணுமே. வாரத்லே மூணு கிளாஸ்தானே”
“ஆமாமம்மா”
என் வாய் பரவாயில்லை என்று சொன்னாலும் மனத்தில் ஒருவிதமான ஏமாற்றம் தான்.
வீடு வந்தது. எங்களுக்கென்று ஒரு தனி அறை. அதான் கெஸ்ட் ரூம். எங்களது இரண்டு பெட்டிகளும் அங்கு தஞ்சம் அடைந்தன. எல்லோரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று அங்கு போகும் நாளை ஞாயிற்றுக்கிழமையாக தேர்ந்தெடுத்திருந்தோம். அதன்படி இருந்ததா என்ன?
நல்லவேளையாக என் மகன் எங்களுடன் இருந்தான். மதியம் மணி இரண்டாகியது. பசி வந்து போய்விட்டது.
எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று இருந்ததால் தான் இந்த நிலை…தில்லியில் பலர் லீவு நாட்களில் பகல் இரண்டு மணிக்கு மேல் லஞ்ச் எடுத்துக்கொள்கிறார்கள். நம்ம வயசுக்கு இது தாங்குமா? பரவாயில்லை….. குழந்தைகளுடனும் மகன், மருமகளுடனும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைப்பது எங்களுக்கு மிகக்குறைவு தான்.
வாசல் கதவில் இருக்கும் காலிங் பெல் ஒரு பாட்டு பாடியது. பின், கதவு திறக்கப்பட என் பேரன் வந்தான். அவனுடன் என் மருமகளும் வந்தாள். பாவம் ஞாயிறு வந்தால் அவள் தான் டிரைவர்…. என் பேரன் என்னைப் பார்த்து ஒரு நிமிடம் நின்றான்.
நான் ஆவலுடன் “வாடா கண்ணா. எப்படி இருக்கே ?’ என்று இரு கைகளையும் நீட்டினேன்.
“ஹலோ அம்மா . ஹௌ ஆர் யூ?’ என்றபடி என் காலைத் தொட்டான் எல்லோருக்கும் நான் அம்மா தான்..
.அவன் என்னை அணைத்துக் கொள்வான் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் அவன் அப்படியே டென்னிஸ் மட்டையைச் சுழற்றியபடி நின்றான். பின் நானாகவே அவனை இறுக்கிக்கட்டி அணைத்து முத்தம் கொடுத்தேன். என் கண்கள் கலங்கின. ஆனால் அவன் “ஒகே ஐ வில் சேஞ் தெ டிரெஸ் அண்ட் கம்” என்று சொல்லி போய்விட்டான். நான் என் மகனைப்பார்த்தேன்.
“அம்மா இதுக்கெல்லாம் ஃபீல் செய்யாதே. அவன் வளர்ந்து விட்டான். இந்த வயதில் அவனுக்கு பிரண்ட்ஸ் தான் எல்லாம்.”
“ஆமாம் பதிமூன்று வயசாச்சே ..பல சேஞ்ச் வந்துடும் ……”
நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் அவன் உடை மாற்றிக்கொண்டு அவனது தாயின் வற்புறுத்தலால் எங்களிடம் வந்து அமர்ந்தான்.
நான் பேச்சை ஆரம்பித்தேன்.
“என்ன பேராண்டி நன்னா படிக்கிறாயா ?”
“உம் “
“டென்னிஸ் நன்னா விளையாடறாயா ?”
“உம்”
“என்ன எல்லாத்துக்கும் உம் கொட்டறாய். பேசு நான் ஆசை ஆசையா உன்ன பாக்க வந்திருக்கேன்”
“ஸாரி ஐ கான்ட் அண்டர்ஸ்டேண்ட் வாட் யூ டாக். பிளீஸ் ஹிந்தி மே போலியே”
இதைக்கேட்டு அப்படியே அதிர்ந்து போனேன். தலையில் இடி விழுந்தாற் போல் இருந்தது.
“என்ன இன்னும் தமிழ் கத்துக்கலையா ? ஒரு டூயூஷனாவது வச்சுக்கப்படாதா? தாய் மொழிக்கு முதலிடம் தரவேண்டாமா?” என்று கூறியபடி என் மகனைப்பார்த்தேன். அவனும் ஒரு குற்ற உணர்வுடன் மௌனம் சாதித்தான்.
“சரி சரி விடு”..என்று என் கணவர் அங்கு இருந்த மௌன சூழ்நிலையை மாற்றி, வேறு ஜோக் சொல்ல ஆரம்பித்தார்.
நான் அங்கு இருக்கும் வரை என் பேரன் ஒரு நாளில் நாலு வாக்கியங்கள் சொல்வான்.
காலையில் எழுந்தவுடன், “குட்மார்னிங்க் அம்மா ஹலோ ஹௌ ஆர் யூ ?”
பள்ளிக்குப் போகும் முன், “ஓகே ஹேவ் எ குட் டே”
பள்ளியிலிருந்து வந்தவுடன், “ஹலோ அம்மா ஹௌ வாஸ் தெ டே ?”
படுக்கும் முன், “குட் நைட். ஹேவ் எ குட் ஸ்லீப். டேக் கேர்”
மற்ற நேரங்களெல்லாம் அவன் கணினி முன் அமர்ந்து இருந்ததைத் தான் நான் கண்டேன்.
இவன் தான் இப்படி என்றால், வீட்டில் இருக்கும் மகன், மருமகள் எல்லோருக்கும் ஒரு இயந்திர வாழ்க்கை தான். காலையில் வேலைக்குக் கிளம்பினால், மாலை 6 முதல் ஒவ்வொருத்தராக வீடு வருவார்கள். அது வரையிலும் நான், என் கணவர், சிவா [நாய்] வீட்டிலேயே இருக்கும் பணிப்பெண், அத்துடன் ஒரு டிவியும் தான். மற்றவர்கள் எல்லாம் படு பிசி. சனி ஞாயிறு எப்போது வரும் என்று ஏங்கிவிடும் மனது. அந்த சனி ஞாயிறும் பார்ட்டி அல்லது பிறந்த நாள் என்று வந்துவிட்டால் எல்லோரும் அதற்கு போய் விட, திரும்பவும் பழைய நிலைமை தான். சுமார் ஒரு 2 மாதங்கள் இருந்தும், நாங்கள் யாவரும் சேர்ந்து இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இந்த நிலைமையில் தான் இன்று முக்கால்வாசி பேர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இனிப்பு, பழங்கள், பொருட்கள் என்று பல கிடைத்தாலும் அவர்கள் ஏங்கும் பாசம் குறைவாகத்தான் கிடைக்கிறது. இதைப்பற்றிக் கேட்டாலோ “நோ டைம் ” என்ற பதில் தான் பலரிடமிருந்து எழுகிறது. அன்பு, பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த காலம் போய் பணம், புகழ் என்று ஓடும் காலமாக இருக்கிறது. ஆனால் இன்றும் சில கூட்டுக் குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இந்த நிலைமை பிஸினஸ் செய்யும் பஞ்சாபி, சர்தார்ஜி அல்லது மார்வாடி குடும்பங்களில் ஏற்படுவதில்லை. அங்கெல்லாம், இன்றும் கூட்டுக்குடும்பம் நிலைத்து நிற்கிறது. ஒரு பெரிய பங்களா போல் வீடு எடுத்துக்கொண்டு அதில் பல சகோதரர்கள் வாழுகின்றனர். அத்துடன் அவர்களது பெற்றோர்களும் இருக்கின்றனர். சாப்பிடும் நேரத்தில் எல்லோரும் ஒரு டைனிங் டேபிளில் சேர்ந்து கூடி மகிழ்ந்து ரசித்து சாப்பிடுவதைக் கண்டிருக்கிறேன். நாலைந்து மருமகள்கள் சேர்ந்து சமையல் வேலையும் செய்வதால் வேலையின் பளு தெரியாமல் எளிதில் முடிந்து விடுகிறது.
ஆண்கள் செய்யும் வியாபாரத்திலும், அவர்கள் வீட்டு மாப்பிள்ளைகள், பல உறவினர்கள் என்று பலரும் உழைப்பதால் வியாபாரத்துடன் உறவும் வளர்கிறது.
இந்த மாதிரியான குடும்பத்தை நான் இருக்கும் அண்ணாநகரிலும் பார்த்திருக்கிறேன். ஜய்சல்மிர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இங்கு வசிக்கின்றனர். துணி வியாபாரம் செய்கின்றனர் .தமிழும் நன்றாகப் பேசுகின்றனர்.
அவர்களின் செல்வங்கள், பல உறவினர்களுடன் வளர்வதால் அவர்களது தாய்மொழியிலேயே பேசுகிறார்கள். மேலும் கூட்டுக்குடும்பம் ஆனதால் ஒருவரும் தனிமையை உணருவதில்லை. தவிர பேரன் பேத்திகள், தாத்தா, பாட்டியின் மேற்பார்வையில் இருக்க, அவர்கள் பாசத்தைக் குழந்தைகளுக்கு அள்ளித்தர, இருவரிடையே நல்ல இணைப்பும், பிணைப்பும் உண்டாகிவிடுகிறது.
இந்தக் குழந்தைகளும் சேர்ந்தே இருக்கப் பழகி விடுவதால் தனித்தனி அறையில் புகுந்து கதவைச் சார்த்திக் கொள்ளும் பழக்கம் இருப்பதில்லை.
மற்றபடி ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் இருந்து, அவர்களின் பெற்றோர்கள் உத்தியோகத்திலும் இருக்க, அவர்களும் புகழ், பணம் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு ஓட, அந்தக் குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியாமல் போய், சரியான பாதையை விட்டு விலகிப்போகும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆரம்ப காலத்தில் சரியான விதை விதைப்பது மிக அவசியம்.
இதெல்லாம் தவிர, சீனியர் சிடிசன் ஆன நாம், நம்மை மாற்றிக் கொள்வதும் மிக அவசியம். அந்தக்காலத்தில் வாழ்க்கையில் மூன்றாவது நிலையாக வானப்பிரஸ்தா என்ற நிலையை வைத்திருந்தார்கள்.
இந்த நிலையைப் பார்க்கும் போது ஒரு திருக்குறள் ஞாபகத்திற்கு வருகிறது.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு ..”
பற்றில்லாத கடவுளைத்தான் நாம் பற்றிக்கொள்ள வேண்டும். எதற்கு? இருக்கும் பற்றுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து வெளியே வரத்தான்….
மற்றொன்று எதிர்பார்ப்பு…. இந்த எதிர்பார்ப்ப்பு தான் கஷ்டங்களுக்கு அஸ்திவாரம். எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யும் காரியத்தில் கிடைக்கும் ஆனந்தமே தனி. நிம்மதியே அன்பை அள்ளிக்கொடுக்க, அமைதியான சூழ்நிலை உருவாகிறது.
கீதையிலும் இதைக்காண்கிறோமே! ஆனாலும் நான் பல தடவைகள் கீதை பிரவசனம் கேட்டும், படித்தும், அந்த நேரத்தில் புத்தி வருகிறது. ஆனால் பிறகு மாயை என்ற வலையில் விழுந்து விடுகின்றேன். வலையில் விழாமல் இருக்க ஏதாவது வழி சொல்லுங்களேன் !
தான் கடவுளின் அவதாரம் என்று தெரிந்தும் சீதையைப் பிரிந்தவுடன் கலங்கவில்லையா இராமன்? மனிதனாய்ப் பிறந்தவுடன் இறைவனையே மயக்கிவிடும் இந்த மாயை தங்களைத் தாக்காமல் இருப்பது எங்ஙனம்?
அது ஒரு புறம் இருக்க, இரவும் பகலும் மாறி மாறி வருவது போல, மீண்டும் அன்பையும், உறவுகளையும் மதிக்க மனித சமுதாயம் கற்றுக் கொள்ளும் என நம்புவோம்.