நான் அறிந்த சிலம்பு – 26
மலர் சபா
புகார்க்காண்டம் – 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை
காதலரைப் பிரிந்த மகளிரின் நிலை
தம் காதலரைப் பிரிந்த மகளிர்
காண்பவரெல்லாம் வருந்தும்படி
உலையில் ஊதுகின்ற
துருத்தியதன் மூக்குப் போல்
சூடான தொடர்ந்த பெருமூச்சுடன்
வாடிப் போய்க் கிடந்தனர்.
இளவேனில் பொழுதுக்காகவென அமைந்த
நிலா முற்றத்துக்குச் செல்வது தவிர்த்து
குளிர்காலத்துக்காகவென அமைக்கப்பட்டிருந்த
மாளிகையின் இடைப்பட்ட பகுதியில் தங்கினர்.
அங்கேயும் கூடத்
தென்றலும் நிலவும் புகுந்து
பிரிவுத் துயர் ஆற்றாது தவிக்கும்
தம்மை மென்மேலும் வாட்டுமோ
என்றஞ்சியே
அவை புகுந்திடா வண்ணம்
சாளரங்களை மூடி வைத்தனர்.
பொதிகைமலையதன் சந்தனமும்
அழகிய முத்தாலான மாலையும்
தம் மார்பில் அணியாது
வருந்தியே இருந்தனர்.
தாழியில் மலர்ந்த குவளை மலர்களும்
செங்கழுநீர் முதலிய குளிர்ந்த மலர்களும்
தூவி வைத்திருந்த படுக்கையது துறந்தனர்.
தன் சேவலொடு கூடி மகிழ்ந்த
அன்னப்பேடையது
கூடலின் மகிழ்வில்தான் உதிர்த்து நின்ற
தூவி கொண்டடைத்த
மென்பஞ்சணை மீதினில் இருந்திடினும்
துயில் கொண்டாரில்லை.
(தூவி – அடிவயிற்று மயிர்)
உற்ற தம் கணவரொடு
முன்பொரு நாள் ஊடிய காலத்தில்
அம்மகளிர் தம் நெடிய கண்கள்
தம்மிடை நின்ற குமிழ்மலர் போன்ற
மூக்கைத் தாக்கியும்
காதிலிருந்த குழைகளை
இப்படியும் அப்படியும் அலைக்கழித்தும்
கணவனின் கலங்கா உள்ளமும் கலங்கும்படி
கடையோரம் சிவந்தும் நின்றன.
ஊடல் இன்பத்தில் துன்பத்தில்
அன்று வருந்தின மகளிர்தம் கண்கள்;
சிவந்தும் இருந்தன.
ஆனால் இன்றோ
தனிமைத் துயரில்
குறுகிப் பிறழ்ந்து
முத்துத் தாரையென
நீர் வார்க்கின்றன.
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 58 – 60
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 61 – 71
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram10.html
படத்துக்கு நன்றி:
http://www.4shared.com/all-images/kYIHdZYW/_online.html?&firstFileToShow=500