முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari Annamalaiதாயாக இருக்க விரும்பாத பெண்களைப் பற்றிப் போன வாரம் சொன்னேன்.  இப்போது தான் பெற்ற குழந்தைகளையே கொன்ற தாயைப் பற்றிய செய்தி, அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது.

ராணுவத்தில் உளவு வேலை பார்க்கும் ஒரு பெரிய அதிகாரியின் மனைவி, தன் இரண்டு குழந்தைகளைக் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்த வரை இந்தத் தாயைப் பற்றியோ, இந்தக் குடும்பத்தைப் பற்றியோ யாரும் சந்தேகிக்கும்படி எதுவும் நிகழவில்லை என்று தெரிகிறது. இந்தத் தாய் ஒரு நல்ல தாயாக, தன் மகனைக் கால்பந்து விளையாட்டுப் பயிற்சிக்கு தவறாமல் அழைத்து வருவார் என்று பையனின் பயிற்சியாளர் கூறுகிறார்.  தாய்க்கும் மகளுக்கும் எந்தவிதப் பிரச்சினையும் இருந்ததாகத் தெரியவில்லை.

இந்தத் தாய் இப்படித் தன் குழந்தைகள் இருவரையும் சுட்டுக் கொன்றதற்குச் சில நாட்களுக்கு முன்னால் ஒரு சாலை விபத்தில் மாட்டிக்கொண்டாராம். இவருடைய கார்  முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு காரின் பின்னால் மோதியிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்குப் பின் இவருடைய நடத்தையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டதாக இப்போது அவருடைய நண்பர்கள் சொல்கிறார்கள். ஒரு முறை தன் மகளை வேறு யாராவது ஒருவர் வந்து, அவளுடைய கள விளையாட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் கூட்டிச் செல்வார் என்று அவளுடைய தந்தை கூறியதாக மகளுடைய பயிற்சியாளர் கூறுகிறார். தன் மனைவிக்கு அவ்வளவு உடல் நலமில்லாததால்தான் அந்த ஏற்பாடு என்று கூறினாராம். இதைத் தவிர, அந்தத் தாயைப் பற்றி வித்தியாசமான தகவல் எதுவும் இல்லை.

Julie-Scheneckerஇந்தத் தாய், கால்பந்தாட்ட விளையாட்டிற்குக் கூட்டிச் செல்லக் காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, தன் மகனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார். காரில் உட்கார்ந்தபடியே மகன் இறந்துவிட்டதும் வீட்டிற்குத் திரும்பி வந்து, காரை அதனிடத்தில் நிறுத்திவிட்டு, நேரே மாடிக்குப் போய், கணினியில் வேலை செய்துகொண்டிருந்த தன் மகளை முதுகிலும் கழுத்திலும் சுட்டுக் கொன்றிருக்கிறார். காவல் துறை அதிகாரிகள் இவர்கள் வீட்டிற்கு வந்த போது கண்டெடுத்த ஒரு குறிப்பில் தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொள்ளப் போவதாகக் காணப்பட்டது.  பின்னர், ஏன் தன்னை மாய்த்துக்கொள்ளவில்லை என்பதற்குக் காவல் துறை அதிகார்களுக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. துப்பாகி வாங்க ஆர்டர் கொடுத்துவிட்டு, இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்ததால் இந்தக் கொலை செய்யும் திட்டமும் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தப்பட்டதாகவும் அந்தக் குறிப்பில் இந்தத் தாய் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே இது திட்டமிட்டுச் செய்த கொலை.

முதலில் காவல் துறை அதிகாரிகள் இந்தத் தாயை விசாரித்தபோது, பிள்ளைகள் தன்னை மதிக்கவில்லை என்பதாலும், தன்னை எதிர்த்து அதிகமாகப் பேசுவதாலும் அவர்களைக் கொன்றதாகக் கூறிய அந்தத் தாய், பின் அந்தக் குற்றத்தைத் தான் செய்யவில்லை என்று மறுத்திருக்கிறார்.

கொலைகள் நடந்தபோது தந்தை மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றில் வேலை விஷயமாக இருந்திருக்கிறார். இதுவரை வெளிப்படையாக இந்தச் சம்பவம் பற்றி எதுவும் பேசாத இவர், நாடு திரும்பியதும் மனைவியைச் சிறையில் சந்தித்து, அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

இந்தத் தாயின் மனத்தில் தன் பிள்ளைகள் மீது என்ன கோபம் இருந்தது, அப்படி கோபம் இருந்தாலும் அவர்களைக் கொல்லும் அளவிற்கு எப்படிப் போனார் என்பது போன்ற கேள்விகளுக்கு இப்போதைக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. போகப் போகத் தெரியலாமோ என்னவோ.

mother killed childrenஇருப்பினும், வருடத்திற்கு நூறுக்கும் மேலான தாய்மார்கள் அமெரிக்காவில் தங்கள் குழந்தைகளைக் கொல்வதாகப் புள்ளி விபரம் கூறுகிறது.  இது குறைந்த மதிப்பீடு; இப்படிச் செய்யும் தாய்மார்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் மேல் என்கிறது ஒரு கணிப்பு. 2001இல் தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் குளியலறைத் தொட்டியில் முக்கிக் கொன்ற ஒரு தாயின் கதை பரபரப்பாகப் பேசப்பட்டது. இவருக்கு மனநிலை சரியில்லாததால்தான் அப்படிச் செய்தார் என்று அவருடைய வழக்கறிஞர் வாதாடினார். தன் வீட்டுக்கே தீவைத்துத் தன் இரண்டு குழந்தைகளை ஒரு தாய் கொன்ற கதையும் உண்டு.

இந்தியாவிலும் வறுமையால் தான் பெற்ற ஏழு குழந்தைகளையும் கிணற்றில் போட்டுக் கொன்றதாக நல்ல தங்காள் நாடோடிக் கதை கூறுகிறது.  நல்ல தங்காளுக்குப் பிறகு, தான் பெற்ற குழந்தைகளையே கொன்ற தாய்மார்களை நாம் கதைகளிலும் சரி, உண்மை வாழ்க்கையிலும் சரி, சந்திக்கவில்லை.

அமெரிக்காவில் இப்படித் தங்கள் குழந்தைகளையே கொல்லும் தாய்மார்கள் இருப்பதற்கு ஒரு காரணம் தங்களுக்குப் பிறகு தங்கள் குழந்தைகள் இந்த உலகில் இருந்து தங்களைப் போல் கஷ்டப்பட வேண்டாம் என்று தாய்மார்கள் நினைப்பது என்று சில மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.  அப்படியென்றால் இவர்கள் தங்களையும் அல்லவா மாய்த்துக்கொண்டிருக்க வேண்டும்?

அமெரிக்காவில் கணவனோ, காதலனோ விட்டுச் சென்றுவிடுவது (கணவன் இல்லாமல் குழந்தைகளுடன் உள்ள பெண்கள் அமெரிக்காவில் நிறையவே உண்டு), சமூகத்தில் தனிமை வாழ்க்கை வாழ்வது, இவற்றால் மனநிலை பாதிக்கப்படுவது போன்ற வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தாய்மார்கள் சிலர், இப்படிப்பட்ட செயல்களில் இறங்குகிறார்கள் என்றும் கூறுகிறார்கள். வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் இல்லாமல் இருக்குமா? இதற்காக எப்படி ஒரு தாயால் தான் பெற்ற குழந்தையையே கொல்ல முடியும் என்ற கேள்விக்கு எளிதான விடை இல்லை.  அமெரிக்காவில் எல்லோராலும் எளிதாகத் துப்பாக்கி வாங்க முடியும், அதை எளிதாக உபயோகிக்க முடியும் என்பதும் ஒரு காரணமாக இருக்குமோ? தனி உரிமை, தனி உரிமை என்று சொல்லி, ஒரு தாய்க்குத் தன் குழந்தைகள் மீதுள்ள பாசத்தைக் கூட மறக்கடிக்க வைக்கிறதா இந்த அமெரிக்கச் சமூகம்?

தன் குழந்தைகளைக் கொன்ற தாயின் செய்தி வந்த மறுநாளே தன் பெற்றோர்களையும் தம்பி தங்கையையும் கொன்ற ஒரு பன்னிரண்டு வயதுப் பையனின் கதையும் வந்திருக்கிறது. பெற்றோர்களுக்குப் பயந்து நடுங்கும் பிள்ளைகளை இந்தியாவில் பார்த்திருக்கிறோம். தாய், தந்தையையே தீர்த்துக் கட்டும் குழந்தைகளைப் பார்த்ததில்லை. எவ்வளவோ பொருளாதார வளர்ச்சி கண்டுவிட்ட அமெரிக்க சமூகம், எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வியைத்தான் மறுபடி கேட்க வேண்டியிருக்கிறது.

======================================

படங்களுக்கு நன்றி: http://jerrybrice.wordpress.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *