நிலவொளியில் ஒரு குளியல் – 20
ஸ்ரீஜா வெங்கடேஷ்
2011 மார்ச்சு 19ஆம் தேதி முழு நிலவு நாள். மற்ற முழு நிலவு நாளைப் போல இல்லாமல் அந்த நாள் ஒரு சிறப்பு பெற்றது. அது என்னவென்றால் அன்று நிலவு, நம் பூமிக்கு மிக அருகில் வருகிறது. அதனால் நிலவு சற்று பெரிதாகத் தெரியலாம் என நினைக்கிறேன். முழு நிலவின் அழகை வீட்டு மொட்டை மாடியில் பார்ப்பது என்பது உலகில் ஒரு அற்புதமான விஷயம். இவற்றுக்காகவே எங்கள் கிராமத்தில் நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது நிலாச் சோறு சாப்பிடுவோம். அந்தப் பழக்கம் எங்கள் வீட்டில் மட்டுமல்ல, என் தோழிகள் வீட்டிலும் இருந்தது.
முழு நிலவன்று வீட்டு முற்றத்திலோ, மொட்டை மாடியிலோ பாய் விரித்து அமர்ந்து, அம்மா கையில் தரும் சாத உருண்டைகளின் சுவை இன்றும் என் மனத்தை விட்டும், நாவை விட்டும் நீங்கவேயில்லை. அன்று குடும்பத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருப்போம். அம்மா, பல கதைகள் சொல்வார்கள். அப்பாவும் பேச்சில் கலந்துகொள்வார். அந்த நிலவொளியும் லேசாக வீசும் காற்றும் நிறைந்த வயிறும் எங்களுக்குச் சொர்க்கத்தில் இருப்பது போல் இருக்கும். அந்த நிலவொளியில் என் அம்மா பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் தெரிவாள். அவள் சொல்லுவதும் தேவதைக் கதைகளாகவே இருக்கும்.
ஆனால் நாம் நம் குழந்தைகளுக்கு அந்த சந்தோஷங்களைக் கொடுத்திருக்கிறோமா? எந்திரம் போல் ஒரு அவசரமான வாழ்க்கை. குளிப்பது, சாப்பிடுவது, எல்லாமே அவசரத்தில். எதையும் ரசித்துச் செய்ய நமக்கு நேரமோ, மனமோ இருப்பதில்லை. இதில் நாம் எங்கே நிலாச் சாப்பாடு சாப்பிட? நம் குழந்தைகளுக்குக் கதை சொல்ல? முழு நிலவு நாள் என்பதைக் காலண்டர் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பணத்தின் பின்னால் வெறி கொண்டு ஓடி, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம் நாம். ஆனால் நம் முன்னோர்கள் அப்படியல்ல. ஒவ்வொரு வேலையையும் அனுபவித்து ரசனையோடு செய்தார்கள். முழு நிலவை ரசிக்க, கிரிவலம் வந்தார்கள். ஆற்றின் அழகை ரசிக்க, ஆடிப்பெருக்கு நாள் ஏற்படுத்தினார்கள். காடுகளின் அழகைக் காண, சாஸ்தா பிரீதி போன்ற விழாக்களை ஏற்படுத்தினார்கள். மார்கழிப் பனியை அனுபவித்தவர்கள், சித்திரைக் கோடையிலும் கோயிலில் விழாக்களை ஏற்படுத்தி அந்தந்தப் பருவ நிலையை ரசிக்கக் கற்றுத் தந்தார்கள்.
ஆனால் நாம் இவற்றையெல்லாம் ஒரு சடங்கு போல் செய்கிறோமே தவிர, அவற்றின் ஆழ்பொருளை அறிந்துகொள்ளவே இல்லை. நம்முடைய ரசனைகள், தொலைக்காட்சியோடு நின்றுவிட்டன. சினிமாவில் பெயர் தெரியாத ஏதோ ஒரு தேசத்தின் காடுகளையும் அதன் அழகையும் ரசிக்கத் தெரிந்த நமக்கு, நம்மைச் சுற்றி இருக்கும் அழகு, கண்ணுக்குத் தெரியாமல் போனது தான் வியப்பு. நிலவு காணாமல் போனது போலவே, நாம் கவனிக்காமல் விட்ட மற்றொரு அதிசயம் வானவில்.
கடைசியாக நீங்கள் எப்போது வானவில் பார்த்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? எவ்வளவு தான் யோசித்தலாலும் குறைந்தது 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னால்தான் பார்த்திருக்க முடியும் என நினைக்கிறேன். ஏனென்றால் நம்முடைய வளி மண்டலத்தில் அத்தனை மாசு. வானவில் தோன்றும் விதம் குறித்து நாம் ஆறாம் வகுப்பிலேயே படித்திருக்கிறோம். இருந்தாலும் ஒரு முறை நினைவூட்டுகிறேன். வானம் குளிரும்போது மேகங்களில் நீர்த்துளிகள் சேரும். அப்படிச் சேரும் நீர்த்துளிகள் ஒரு முக்கோணப் பட்டகமாக (Prism) மாறி, தன்னுள் நுழையும் சூரியக் கதிரை நிறப்பிரிகை (dispersion) செய்து, நிறமாலையாக (spectrum) அதாவது வானவில்லாக வெளியேற்றும். இதுதான் வானவில் தோன்றும் முறை.
இப்படி நிகழ்வதற்கு முதலில் மாசுகளற்ற வளி மண்டலம் தேவை, இரண்டாவது வானம் குளிர வேண்டும். இன்றைய சூழ்நிலையில் இவை இரண்டுமே சாத்தியமில்லை. ஏனென்றால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, குளிர்சாதன இயந்திரங்களிலிருந்து வெளியேறும் சில வாயுக்கள், குப்பைகளை எரிப்பதால் உண்டாகும் புகை போன்ற பல காரணிகள் வளி மண்டலத்தை சூடேற்றுவதாகவே இருக்கின்றன. போதாததற்கு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் உண்டாகும் மாசு வேறு, வளி மண்டலத்தைச் சென்று சேர்கிறது. இந்தக் காரணங்களால்தான் பெரு நகரங்களில் நமக்கு வானவில் காணக் கிடைப்பதில்லை. ஒரு சில கிராமங்களில் இன்னும் இயற்கை அழிவு படாமல் இருப்பதால் இன்றும் வானவில் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.
நம் குழந்தைகளுக்கு இயற்கையை அறிமுகப்படுத்துங்கள். அதன் அழகை ஆராதிக்கக் கற்றுக் கொடுங்கள். பெரிதும் விரும்பும் ஒரு பொருளைப் பாதுகாப்பதில் அவர்கள் அக்கறை காட்டுவார்கள். இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கை அழகை ரசிக்க, நம் குழந்தைகள் கற்றுக் கொள்வார்களேயானால் அது அவர்களுக்குத்தான் நல்லது. மனம் அமைதி பெறும், எப்போதும் பதற்றமாயிருக்கும் மன நிலை மாறும், ஒருவர் மீது ஒருவர் கொண்ட தேவையற்ற காழ்ப்புணர்ச்சிகள் மறையும். இயற்கையோடு இணைந்த வாழ்வு ஒன்றுதான் அமைதிக்கு வழி.
இதை நான் எழுதும் போது ஜப்பானில் நில நடுக்கமும் சுனாமியும் சேர்ந்து ஒரு கோர தாண்டவம் ஆடிவிட்டுப் போயிருக்கிறது. பல உயிர்களையும் பொருட்களையும் சேதப்படுத்தியிருக்கிறது. பல கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சியைத் தொலைக்காட்சியில் நானே பார்த்தேன். இவையெல்லாம் இயற்கை நமக்கு விடுக்கும் எச்சரிக்கை. ஜப்பான் எங்கோ இருக்கிறது என்று நாம் நம் இஷ்டத்திற்கு மேலும் இயற்கையை அழித்துக்கொண்டிருக்க முடியாது. இயற்கை எல்லாம் ஒன்றிணைந்தது.
நியூட்டனின் மூன்றாவது விதி, இயற்கைக்கும் பொருந்தும். நாம் இயற்கை அழிக்கிறோம். அதன் சமன்பாட்டைச் சீர் குலைக்கிறோம் அதன் எதிர் வினைதான் இந்த நில நடுக்கங்கள், சுனாமிகள் எல்லாம். நம்மை விட எவ்வளவோ முன்னேறிய நாடு ஜப்பான். அவர்களாலேயே நடந்த அழிவை முன்கூட்டியே அறியவோ, மாற்று ஏற்பாடுகள் செய்யவோ முடியவில்லை. அப்படியென்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு? இதிலிருந்து தெரியவில்லையா இயற்கை எவ்வளவு பலம் வாய்ந்ததென்று?
இப்படி இயற்கை மாசு படவும், அழியவும் யார் காரணம்? கண்டிப்பாக, பேராசை பிடித்த மனித இனம்தான் காரணம். வீடுகளுக்காகவும் அலங்காரப் பொருட்களுக்காகவும் தான் மிக அதிகமான அளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. மரங்களை வெட்டாமல் இருக்க முடியாது . ஏனென்றால் காகிதம், தீக்குச்சி இப்படி சில அத்தியாவசியப் பொருட்களுக்கு நாம் மரங்களைத்தான் நம்பியிருக்கிறோம் அப்படி வெட்டுபவர்கள் ஒரு மரம் வெட்டும் போது குறைந்தது 10 மரக் கன்றுகளையாவது நட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படி நடக்கிறதா? அப்படி நடந்திருந்தால் காடுகள் இப்படி மொட்டைப் பாறைகளாக ஆகியிருக்காதே.
அடுத்தது மாசு. தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் புகைகளை அரசாங்கத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அங்கேயும் பணம் விளையாடுகிறது. எந்த விதமான கழிவு சுத்திகரிப்பு ஆயத்தங்களும் இல்லாத தொழிற்சாலைகள் புகையால் வானத்தையும் கழிவு நீரை ஆற்றில் விடுவதன் மூலம் தண்ணீரையும் விஷமாக்கிக் கொண்டிருக்கின்றன. நாம் இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல், கேட்டும் கேட்காதது போல் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடித்துக்கொண்டிருக்கிறோம்.
இயற்கையை மீண்டும் நிலைநிறுத்தவும் மாசு படுவதைக் குறைக்கவும் கூடுமானவரை நாமும் முயற்சி செய்யலாமே. அதற்காக நாம் ஒன்றும் பெரிய போராட்டங்களோ, கோஷங்களோ எழுப்ப வேண்டியதில்லை. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பழக்க வழக்கங்களில் சின்னச் சின்ன மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலே போதும். அருகிலிருக்கும் இடங்களுக்குச் செல்வதற்கு வாகனங்களைத் தவிர்த்துவிட்டு நடந்து செல்வது, நம் உடலுக்கும் ஆரோக்கியம். புகையினால் ஏற்படும் மாசையும் சிறிது தவிர்க்கலாம். பெண்கள் சமைக்கும் போது கேஸ் பயன்பாட்டைச் சரியான அளவில் உபயோகித்தால் சிக்கனத்துக்குச் சிக்கனம், இயற்கை எரிவாயுவும் மிச்சப்படும். தேவையில்லாத மரச் சாமான்கள் வாங்குவதைத் தவிர்த்து விட்டால் ஒரு மரம் காப்பாற்றப்படும். முக்கியமானது காகிதப் பயன்பாடு. காகிதங்கள், குறிப்பாக எழுது பொருளாகப் பயன்படும் காகிதப் பயன்பாட்டை நாம் சிக்கனப்படுத்தி விட்டோமானால் நம்மால் பல மரங்கள் காக்கப்படும்.
நான் ஒருவன் அல்லது ஒருத்தி இப்படிச் செய்வதால் என்ன பெரிய மாற்றம் நிகழப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறு துளி பெரு வெள்ளம். நாம் ஒவ்வொருவரும் நம் குழந்தைகளுக்கும் இதைக் கற்றுக் கொடுத்தால் நிச்சயமாக இயற்கையைக் காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது. வானவில் தெரியும் ஒரு ஆகாயம், இரவில் அழகான ஒரு முழு நிலவில் குடும்பத்தோடு நிலாச் சோறு சாப்பிடும் இன்பம், இவை நம் குழந்தைகளும் அவர்களின் குழந்தைகளும் அதன் பிறகு வரப் போகும் தலைமுறையினரும் அனுபவிக்க வேண்டாமா?
மாசற்ற வளி மண்டலம், மரங்கள் அடர்ந்த காடுகள் ஆகியவற்றை உருவாக்கப் பாடுபடுவோம் என்று உறுதி எடுத்துக்கொண்டு நிலவொளியில் ஒரு குளியல்.
(மேலும் நனைவோம்…
========================
படங்களுக்கு நன்றி: விக்கிப்பீடியா | http://techisandeep.blogspot.com
நன்றாக எழுதியுள்ளீர்கள் . இயற்கையை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். அப்பொழுதுதான் பேரழிவில் இருந்து தப்ப முடியும்.
கட்டுரை மிகவும் அருமை. மாசற்ற பூமியை உருவாக்குவது ஒவ்வொரு இந்தியனின் கடமை. இயற்கையை மீண்டும் நிலைநிறுத்தவும் மாசு படுவதைக் குறைக்கவும் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். என் நண்பர்களுக்கும் தெரிவிப்பேன் .
நன்றி
திருச்சி ஸ்ரீதரன்
Very nice article if every individual takes a pledge of protecting the environment, surely our mother Earth will be saved. And there won’t be so many natural calamities as before. Romba unnmaiyana katturai. Thodarnthu ezuthungal.
Congrats to you once again for taking up a very serious global issue.
Madam, I really appreciate the way in which you have explained the serious problems presently we are facing against global warming issue. We have to preserve natural wealth and natural environment.
Thank you
S SARADHA SRIDHARAN
தற்போழுதைய தேவையை நம் குழந்தைகளுக்கு உணர்த்துவது நம் கடமையாகும். பேரழிவில் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது. — ( உங்கள் வடிவில்)
நன்றி.
During my childhood age we will sit around my mother ,she will provide food at the size of tennis ball. we will eat more food than other days. That was a good memories
We not only loss the forest, we are losing cultivating land also. now a days most of the agricultural lands are converted in to plots.
if this situation extends, we have to import food grains from foreign countries in future . so we have to teach our children about the benefits of forest and agriculture.
Government should not give approval to the building which was constructed in place of agricultural land and forest.
now also we can save the earth such that all house, wast land and agricultural land should implement rain water harvesting and all the citizen should plant two trees every year.
Now It is absoulutely necessary for our children to learn about nature. Mami, You have rightly said and and it is every one’s responsibility to do the same. I am amazing that, the next generation will ask ” Mummy how paddy is manufatured” that day is not far away. Mami, try to write these kind of articles and so that we cannot forget the old events. At lease, we can just recollect, and tell the same to our next generations.
Super and for you periya “O” Podu.
regads
k.ramesh