வல்லமையாளர்!
சென்ற வார வல்லமையாளர் விருது!
(ஜூன் 25 ~ ஜூலை 01, 2012)
இன்னம்பூரான்
02 07 2012
எனக்கு நானே விதித்துக்கொண்ட ஆணை போல, இந்த வாரத்து வரவுகள் ‘வல்லமை’ இதழுக்கு பாத்தி கட்டி, கவனத்துடன் எழுதப்பட்டதாக எனக்கு தோன்றுகிறது. என் வேலையும் கடினமாயிற்று. பாருங்களேன். வரவுகளும் அதிகம். தரமும் கூடுகிறது. எழுத்தாளர்களின் பங்கேற்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதும் கண்கூடு. பின்னூட்டங்களின் மீது முதலில் கவனம் செலுத்தினேன். வாசகர்களின் ஆர்வம் சிறிதேனும் கூடிய மாதிரி தோன்றுகிறது. மடலாடும் தளத்திலோ ‘திக்குத் தெரியாத காட்டில்’ அலைவது போல மடலாடுவோர், இங்கும் அங்குமாக, கதைத்து வருகிறார்கள், யான் உள்பட. சில இழைகள் இலக்கிய பேழைகளாக அமைந்து விட்டால், தமிழுலகத்தை ஒரு கலக்கு கலக்கி விடலாம். உடனுக்குடன் ஓடோடி வரும் தக்ஷிணாமூர்த்தி போன்ற குருநாதராக உலா வர வாய்ப்பு உண்டு. மே 16, 2012 அன்று ‘வல்லமையின்’ மூன்றாவது ஆண்டு தளர் நடையை மோஹித்து, திரு.அண்ணாகண்ணன்,வருஷப்பிறப்பு அன்று வல்லமையின் சார்பில் துவக்கப்பட்ட புதிய மின் குழுமத்தில் நிகழ்ந்து வரும் ஆரோக்கியமான விவாதங்களை பற்றி கூறியிருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், நானோ இந்த வாரமும், வல்லமை மடலாடும் தளத்தின் தரம் பன்மடங்கு உயரவேண்டும் என்று மறுபடியும் பணிவன்புடன் பரிந்துரை செய்கிறேன். நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. அது இதழியல் இலக்கியத்தின் அணி. அது போதாது. ஒவ்வொரு நாளும் சுவை கூட்டி, மனதைக் குளிர்வித்து, புதிய தகவல்கள் அளித்து, சீரிய விவாதங்களை துவக்கினால், மின்னிதழ் உலகில், நமக்கு நல்ல பெயர் கிட்டும். விருது அளிக்கும் இழையில் இதெல்லாம் ஏன் எழுதுகிறேன்? அட! ஒரு விருது மின் குழுமத்திற்கு இன்றில்லையெனினும், வருங்காலத்தில் கிடைக்கட்டுமே என்ற ஆதங்கம் தான். வேறென்ன?
சரி. விஷயத்துக்கு வருவோம். எனக்கு எத்தனையோ பிரச்சனைகள். கவிதைகளை பலமுறை, பல கோணங்களில் படிக்க வேண்டிருக்கிறது. ஆங்கில வரவுகளை எடை போட வேண்டிருக்கிறது. கண்களில் விளக்கெண்ணேய் போட்டுக்கொண்டு ‘வெட்டொட்டும்’ வித்தை புகுந்து விளையாடிருக்கிறதா என்று பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. தொடர் கட்டுரைகளின் தரத்தை நிர்ணயிக்க, முந்தய இதழ்களை படிக்க வேண்டியிருக்கிறது. நான் வகுத்துக்கொண்ட ஆராய்ச்சி மணிகள் ஒலிக்கும்போது, சில சமயம் செவி சாய்க்காமல் இருந்து, நடுவுநிலையை நாட வேண்டியிருக்கிறது. தீர்ப்பு என்று வந்தாலே தனித்து விடப்படுகிறோம். தனிமை நாடுகிறோம். இன்னும் விஷயத்துக்கு வரவில்லை!
ஒரு கட்டுரை. ஒரு சொல்லாவது ஆக்ஷேபகரமானதாக இல்லை. சற்றே நீண்ட கட்டுரையாயினும், வீணாக ஒரு சொல் பிரயோகமில்லை. சொற்றொடர்களோ, ஒன்றன் பின் ஒன்று அணி வகுத்து, கருத்து வினியோகத்தை, கட்டமைத்து, நேர்த்தியாக அளிப்பதைக் கண்டு மனதிற்கு பூரிப்பு. வரலாறு, ஐதிகம் ஆகியவற்றை கலந்தளிக்கும்போது, அவை அவை உரிய இடத்தில் அமர்த்தப்பட்டுளன. இத்தனைக்கும் நடுவில் சிந்தனையைத் தூண்டும், ‘… ’அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பது பழமொழியானாலும், குடிமக்களின் மனநிலை கோலோச்சுபவனையும் தாக்கத்தானே செய்யும்….’ போன்ற வாக்கியங்கள், ‘[இன்னுமொரு வரலாற்றுக் குறிப்புப்படி, குலோத்துங்கன் தான் அரியணை ஏறியதும் பகவத் ராமானுஜரை சந்தித்து ஆசி பெற்றதாக ஒரு தகவல் உள்ளது.]’ போன்ற செய்திகளை அடைப்புக்குறிக்குள் அமைத்த நுட்பம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன.
இந்த வார வல்லமையாளர் விருது, ‘உறவேல் ஒழிக்க ஒழியாது (பகுதி-4)’ எழுதி எம்மை மகிழ்வித்த திரு. ராமஸ்வாமி ஸம்பத் அவர்களுக்கு என்று அறிவிப்பதில் நான் பெருமை படுகிறேன். இந்த அறிவிப்பை அவர் விரிவாக விமரிசனம் செய்வது சாலத்தகும். இதழியல் இலக்கணத்தில் அத்தகைய மரபுகள் நன்மை பயக்கும்; சுவை கூட்டும்; படைப்பாளருக்கும், வாசகருக்கும் உறவு கெட்டிக்கும். அதை எதிர்நோக்குகிறேன். வாசகர்களின் மனோநிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், மாற்றுக்கருத்துக்கள் வந்தால், வல்லமை அவற்றை புறக்கணிக்காது என்று நினைக்கிறேன். நான் என்றுமே விமரிசனத்துக்கு உட்பட்டவன். பொறுப்புடன் பதிலும் அளிப்பேன்.
நன்றி, வணக்கம்.
திருவாளர் ராமசாமி சம்பது, இந்தவார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
ஒருவர் மற்றொருவரைப் பாராட்டும்போது,
தான் எதற்காக அவரைப் பாரட்டுகிறொம் என்பதை பாராட்டுபவர் விரிவாகச் சொன்னால்தான், அது அவருக்கும், பாராட்டப்படுபவருக்கும் பெருமை சேர்க்கும்.
இன்னம்பூரான் அய்யா இந்த விஷயத்தில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் என்பது அவர் கொடுத்த விளக்கவுரையிலிருந்து அறியலாம். விருது கொடுப்பதற்கான காரணங்களையும், மின் இதழின் தரத்துக்கான அறிவுரைகளையும் அள்ளி அடுக்கும் விதமே அலாதி. குறிப்பாக ‘ஒரு விருது மின் குழுமத்திற்கு இன்றில்லையெனினும், வருங்காலத்தில் கிடைக்கட்டுமே’ என்ற அவரது ஆதங்கத்தை வரவேற்கிறேன்.
வல்லமை விருது வாங்கியவருக்கும், அதை வழங்கியவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
பெருவை பார்த்தசாரதி.
விருதுக்குரியவரையும், விருது அளித்தவரையும் வாழ்த்தி, வணங்குகிறேன்,