மும்பையில் தாய்லாந்து வர்த்தகக் கண்காட்சி

1

சாந்தி மாரியப்பன்

தாய்லாந்து நாட்டிற்கும் இந்தியாவுக்குமிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துமுகமாக கடந்த ஜூன் 28ம் தேதியிலிருந்து ஜூலை 1-ம் தேதி வரை  நடைபெற்றது.

மும்பையின் கஃப பரேட் பகுதியிலிருக்கும் உலக வர்த்தக வளாகத்தில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. வருடந்தோறும் நடக்கும் இந்தக் கண்காட்சியில் அழகு சாதனங்கள், கைவினைப் பொருட்கள், செயற்கை மலர்கள், மூலிகைத்தைலங்கள், தாய்லாந்து மசாலா வகைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், பழச்சாறு வகைகள், விளையாட்டுப்பொருட்கள் போன்றவை தாய்லாந்திலிருந்து கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டு கண்காட்சி மற்றும் வியாபாரத்திற்காக வைக்கப்படுகின்றன. அதில் சின்னச்சின்ன மரக்குச்சிகளைக் குடைந்து உருவாக்கியிருந்த பென்சில்கள் மிகவும் கவனத்தைக் கவர்ந்தன.

இந்தியாவின் பொருளாதாரக்கொள்கையின்படி, உலக நாடுகளுக்கும் இந்தியச்சந்தையைத் திறந்திருப்பதால் இரு நாடுகளுக்குமிடையேயான பொருளாதார மற்றும் வியாபார நல்லிணைவுகளை வளர்ப்பதற்காக தாய்லாந்து அரசின் நிதித்துறையே இந்தக் கண்காட்சியை நடத்துகிறது. இந்தியாவைத்தவிர கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது நடத்தப்படுகிறது என்று கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரான க்வாங் தெரிவித்தார்.

நான்கு நாட்களாக நடந்த இந்தக்கண்காட்சியின் போது தினமும் மதியம் இரண்டு மணிக்கு தாய்லாந்து உணவுகளை சமைத்துக் காட்டும் நிகழ்ச்சியும், மாலை ஐந்து மணியளவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. லோட்டஸ் ப்ளாஸம் என்ற ஹோட்டல் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் இதை நடத்தினர். ஆர்டரின் பேரில் விருந்துகளுக்குத் தேவையான தாய்லாந்து உணவைச் சமைத்துத் தரும் பிரிவை இப்போது மும்பையில் புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள்.

காய்கறிகளைப் பூக்கள், பூக்கூடை போன்று அழகிய முறையில் செதுக்கிக் காட்சிக்கு வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை எவ்வாறு செய்யவேண்டும் என்பதையும் நேரிடையாகச் செய்து காண்பித்து அசத்தினார் செஃப் குமரேசன். ஒவ்வொரு பொருளையும் தர்பூசணி, பூசணிக்காய் போன்றவற்றில் செதுக்கியிருந்தது மிகவும் அழகாக இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் பிடிக்குமாம் ஒவ்வொரு பொருளையும் கலைப்பொருளாக்க. இந்த நிகழ்ச்சியை தாய்லாந்து கவுன்ஸ்லேட் ஜெனரல் பார்வையிட்டுப் பாராட்டினார்.

இந்தக் கண்காட்சி மும்பையைத்தொடர்ந்து,

ஜூலை 5-ம் தேதியிலிருந்து 8-ம் தேதி வரை சென்னையிலும், 12-ம் தேதியிலிருந்து 15-ம் தேதி வரை பெங்களூரிலும் நடைபெற இருப்பதாகவும் க்வாங் தெரிவித்தார்.

ஒரு சில கடைகளில் மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கிறார்கள். தாய் சாஸ் வகைகளும், வீட்டு அலங்காரப் பொருட்களும்தான் அன்று அதிகமாக விற்பனையாகின. அதுவும் கடைசி நாள் என்பதால் நாங்கள் சென்ற அன்று சில கடைகளில் பேரம் பேசவும் முடிந்தது. கடைசி நாளன்று போய்ப் பார்வையிடுவதாக இருந்தால் கொஞ்சம் சீக்கிரமே செல்லவும். பாதி நாள் முடிந்ததுமே கடைகளைக் கட்ட ஆரம்பித்து விடுவார்கள். விலை கொஞ்சம் கூடுதல்தான். எதுவும் வாங்காவிட்டாலும் சும்மாவேனும் பார்வையிடலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மும்பையில் தாய்லாந்து வர்த்தகக் கண்காட்சி

  1. காய்கறிகளை அழகாக வெட்டியது…அதைத் துல்லியமாய்ப் படம் பிடித்தது, இரண்டுமே அற்புதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *