சத்துணவும் ஜாதியும்
நாகேஸ்வரி அண்ணாமலை
இன்று பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்மாபட்டி என்ற ஊரில் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி ஒன்றில் சத்துணவு தயாரிக்கும் மாற்று சமூகப் பெண் தாழ்ந்த சாதி என்பதால் அவள் சமைத்த உணவை மாணவிகள் யாரும் சாப்பிடவில்லையாம். யாரும் சாப்பிடாததால் உணவை மாடுகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள்; கீழே கொட்டியிருக்கிறார்கள். இது என்ன கொடுமை.
கம்மாபட்டியில் இருப்பவர்களில் அதிகம் பேர் ஒரு உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமே பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. இவர்களுடைய பெண்கள் படிக்கும் பள்ளியில் இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையே சமைப்பதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இவர்கள் கோரிக்கை விடுத்தார்களாம். ஆனால் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண் சமைப்பதற்கு நியமிக்கப்பட்டதால் ‘மாற்று சமூகப் பெண் சமைத்ததை எங்கள் பெண்கள் உண்ண மாட்டார்கள். நாங்கள் எங்கள் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுகிறோம். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உணவைச் சமைத்தால்தான் எங்கள் பெண்கள் சாப்பிடுவார்கள்’ என்று கூறியிருக்கிறார் கம்மாபட்டி ஊர்த் தலைவர் சஞ்சீவி நாயக்கர். ஊரைக் கூட்டி அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணையே சமையலுக்கு நியமிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்களாம்.
இவர்கள் எந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாரதி பாடிக் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகப் போகிறது. இன்னும் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெண்ணுக்குச் சமைக்கத் தெரியவில்லை என்றால் அவர்கள் இந்தப் பெண்ணை மாற்றச் சொல்லும் கோரிக்கையில் நியாயமிருக்கிறது. அல்லது சுத்தமாகச் சமைக்கவில்லை என்றால் அப்போதும் அவர்கள் கோரிக்கையில் நியாயமிருக்கிறது. சுவையாகச் சமைக்கவில்லை என்றாலும் மாற்றச் சொல்வதில் நியாயம் இருக்கிறது. இவர் ஒரு தாழ்ந்த ஜாதி பெண் என்பதால் இவரை வேண்டாம் என்று சொல்வதா? என்ன மடமை.
அதிலும் இது அரசு இலவ்சமாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டம். இப்படி இலவசமாகக் கிடைப்பதில் யார் சமைக்க வேண்டும் என்று உத்தரவிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
எங்கள் ஊரில் உள்ள முருகன் கோவிலுக்குச் செல்லும்போது அங்கு பூசாரி கொடுக்கும் பிரசாதத்தை எல்லோரும் பிரியமாக வாங்கிக்கொள்வார்கள். நானும் வாங்கிக்கொள்வேன் என்றாலும் அவர் அந்தப் பிரசாதத்தைச் சமைக்கும் முன் (தினமும் இறைவனுக்குப் படைக்கும் பிரசாதத்தை கோவில் பூசாரிதான் சமைப்பார்.) கைகளை நன்றாகக் கழுவிவிட்டுச் சமைத்தாரா என்று எண்ணிப் பார்ப்பதுண்டு. என்னைப் பொறுத்த வரை சமைப்பது யார் என்பது பிரச்சனையில்லை. அவர்கள் சுத்தமாகச் சமைக்கிறார்களா என்பதுதான் என்னுடைய கவலை. எங்கள் தந்தையின் மரக் கடையில் செட்டியார் ஜாதியைச்சேர்ந்த ஒருவர் வேலை பார்த்தார். அவரை விட எங்கள் ஜாதி கீழ் நிலையில் உள்ளது என்பதால் எங்கள் வீட்டில் சாப்பிட மாட்டார். ஒரு முறை கடையில் வேலை அதிகம் இருந்ததால் அவர் வெளியே சென்று சாப்பிட்டுவிட்டு வரும் நேரத்தைக் குறைப்பதற்காக அவரை எங்கள் வீட்டிலேயே சாப்பிடச் சொன்னோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். பக்கத்து ஓட்டல் ஒன்றில் சாப்பிட விருப்பம் தெரிவித்ததால் அங்கு போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்தார். எங்கள் வீட்டு சுவை மிகுந்த உணவை வேண்டாம் என்று கூறிவிட்டு ஓட்டல் சாப்பாட்டைச் சாப்பிட்டவரின் அறியாமையை என்னவென்று சொல்வது? எங்கள் வீட்டுத் திருமணங்கள் வெளியூரில் நடந்தால் உதவிக்காக இவரையும் அழைத்துச் செல்வதுண்டு. அங்கு கல்யாண் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட மாட்டார். உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் அங்கு சமைக்கவில்லை என்பதால். எங்கள் கல்யாண் வீட்டுச் சாப்பாடு மிகவும் சுவையாக இருக்கும். இதை அவரால் சுவைக்க முடியவில்லையே என்று நான் நினைத்து வருத்தப்படுவதுண்டு.
இருபது வருடங்களுக்கு ஒரு தடவை எங்கள் பேராசிரியர் வீட்டிற்கு நானும் என் மகளும் போயிருந்தோம். அவர் மனைவி எங்களுக்குப் பால் கொடுத்து உபசரித்தார். நாங்கள் குடித்த பிறகு அந்த டம்ளர்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாமல் அவற்றைத் தரையில் வைக்கச் சொல்லிவிட்டுப் பின் அவற்றை ஒரு நீண்ட கம்பை வைத்து ஒரு ஓரமாகத் தள்ளினார், வேலைக்காரி வந்ததும் அதைக் கழுவதற்கு. இவர் தொடக் கூட விரும்பாத டம்ளர்களை இன்னொரு மனிதப் பிறவி கழுவப் போகிறார்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் என் தமக்கை குடியிருந்த காலனியில் சில பிராமணப் பெண்களும் குடியிருந்தார்கள். அவர்கள் காய்கறிகளை அவற்றை விற்பவரிடமிருந்து வாங்கி, பின் தாங்கள் ஒரு முறைக் கழுவிவிட்டு உள்ளே எடுத்து வருவார்களாம். வீட்டிற்கு உள்ளே எடுத்து வருவதற்குமுன்பு பாலை இவர்கள் எப்படிக் கழுவுவார்கள் என்று என் தமக்கை கேலிசெய்வாள்.
சிலருக்குக் காலம் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. சட்டம் இந்த மாதிரி நடத்தையைப் பொது இடங்களில் ஒப்புக்கொளவதில்லை. இருப்பினும் திருவில்லிபுத்தூர்ச் சம்பவம் இன்னும் நடக்கிறது. அதன் ஒன்றிய கமிஷனர் கம்மாபட்டி ஊர் ஜனங்களின் கோரிக்கையை அரசுக்கு அனுப்பியிருப்பதாகவும் அங்கிருந்து செய்தி வந்ததும் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் திருவில்லிபுத்தூர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் ‘மாற்று சமூகப் பெண்ணை நீக்கிவிட்டு அந்த ஊர் மக்கள் கோரும் விதமாக அவர்கள் ஜாதியைச் சேர்ந்த பெண்ணை நியமித்தால் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கை என்ன ஆவது? ஜாதிப் பாகுபாட்டை வளர்க்க அரசு துணை போகிறது என்றல்லவ்வா ஆகிறது? இதை எப்படி அனுமதிப்பது?’ என்று பேசியிருக்கிறார். இவரைப் போன்றவர்களைத்தான் எல்லா அரசு அலுவலகங்களிலும் நியமிக்க வேண்டும்.
தாழ்ந்த ஜாதிப் பெண் சமைத்த உணவை மாணவிகள் சாப்பிடாதபோது மறுபடி ஏன் சமைத்தார்? இப்படி உணவை வீணாக்குவதற்குப் பதில் வேறு யாருக்காவது கொடுத்திருக்கக்கூடாதா? அல்லது வேறு எப்படியாவது உபயோகித்திருக்கக் கூடாதா? என் தந்தை ஒரு பருக்கையைக் கூட வீணாக்கக் கூடாது என்பார். அந்தப் பாடத்தை சிறு வயதிலேயே கற்ற எனக்கு இப்படி இவர்கள் வீணாக்கிய செய்தி அளவு கடந்த வேதனையை அளித்தது.
இந்திய சமூகம் ஜாதி அடிப்படையில்தான் செயல்படுகிறது என்று பெயர் பெற்ற சமூகவியலாளர் எம். என். சீனிவாசன் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் கூறினார். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அது சரியென்று நிரூபிக்க வேண்டுமா? இந்தியாவில் எதை மாற்றினாலும் இந்த ஜாதி உணர்வை மாற்ற முடியாது போலும். என் தாய்த் திரு நாடே, உன்னை இந்த அவலத்திலிருந்து விடுவிக்கச் சட்டத்தாலும் முடியாதா?
அம்மா…
தங்கள் கட்டுரையை படித்ததும் நெஞ்சே வலித்து விட்டது.
ஹூம்….நுாறல்ல…ஆயிரமல்ல….லட்சம் பெரியார் வந்தாலும்…
கோடி பாரதிகள் பாடினாலும் திருந்தாதுக!..
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
தங்கள் கட்டுரையின் சாராம்சத்தைக் குறை கூற எதுவுமில்லை.
ஆனால், கட்டுரையில் தங்கள் தமக்கையின் பக்கத்து வீட்டு பெண்மணிகள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுக் கூறிய நீங்கள் தீண்டாமையை இன்னமும் பின்பற்றும் மற்ற நபர்களின் சாதியைக் குறிப்பிடாதது ஏன்? அது தான் அரசியல்.
தாங்கள் செய்யும் தீண்டாமையை மற்ற உயர்சாதியினர் எளிதாக பிராமணர்கள் மேல் திசைத் திருப்பி, இதற்கு பிராமணர்கள் மட்டுமே காரணம் என்று எண்ண வைத்து விட வழி வகுக்கும்.
எனவே தங்களுக்கு ஒரு வேண்டுகோள்! இனி இது போன்ற கட்டுரைகளை எழுதும் பொழுது ஒன்று அனைத்து ஜாதியையும் குறிப்பிடுங்கள்; இல்லையெனில் எதையும் குறிப்பிடாமல் விட்டு விடுங்கள்.
‘சிலருக்குக் காலம் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை.’
~ ஒரு அந்தக்காலத்து நிகழ்வு. ராஜாஜி என்ற ‘பிராமணன்’ சேலம் முனிசிபாலிட்டி சேர்மன். அவரிடம் அக்ரஹாரத்திலிருந்து ஒரு மனு, ‘ அக்ரஹாரத்துக்கு வரும் நீர்க்குழாய் வால்வு திறக்க ஒரு ஹரிஜனப்பையனை வேலைக்கு அமர்த்தியிருக்கிறீர். நீங்கள் ஒரு மேல்சாதிப்பையனை அமர்த்தாவிடின், நாங்கள் முனிசிபாலிட்டி நீரை தீண்டாமை செய்ய வேண்டியிருக்கும்.’
பதில், “ஆஹா! பகிஷ்காரம் செய்யுங்கள். நானும் உங்களுக்கு நீர் கொடுப்பதை நிறுத்தி, வழக்கு பதிவு செய்கிறேன்.’
வெங்கட் சீனிவாசனின் கருத்துச் சரியானதே. ஜாதி வேற்றுமை பாராட்டுபவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல். என் கட்டுரையிலேயே எங்கள் வீட்டில் சாப்பிடாத செட்டியாரைக் குறிப்பிட்டிருக்கிறேன். திருவில்லிபுத்துர் செய்தியில் ஊர் தலைவர் பெயரில் நாயக்கர் என்ற ஜாதிப் பெயர் இருக்கிறது.
உயர்ந்த ஜாதியிலும் அனைவரும் ஜாதி வேற்றுமை பாராட்டுவதில்லை. இராஜாஜி போன்ற விதிவிலக்குகளும் உண்டு. இதே இராஜாஜி சேரன்மாதேவி குருகுலத்தில் உணவு பரிமாறுவதில் வேறு வகையாக நடந்துகொண்டார்.
திருவில்லிபுத்தூர் – பள்ளிக்கூட “ஜாதி சமையல்” சம்பவம் கேட்கவே மனதுக்கு வேதனையாக உள்ளது. அனால் இது போன்ற நிகழ்வுகள் அரசின் கவனத்துக்கு கண்டிப்பாக வர வேண்டும். ஜாதிய ஒழிப்பு என்பது வெறும் பேச்சளவில்தான் உள்ளது என்பதற்க்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துகாட்டு. இந்த லட்சணத்தில் ஆறாம் வகுப்பில் படிக்கும் போதே “ஜாதி சான்றிதழ்” பள்ளியில் கொடுக்க போகிறார்களாம். இப்போதுள்ள தலை முறையுடன் இந்த சாதி கொடுமைகள் அகல வேண்டுமானால்…. அரசு ஜாதி வாரியான பிரிவுகளை தடை செய்ய வேண்டும். பள்ளி கல்வி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் போது ஜாதி என்ற கட்டத்தை அழித்து அவரவர்கள் பொருளாதார நிலையினை வைத்து பாகுபாடுகள் கொண்டுவர வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு… அவரவர்கள் செய்யும் தொழில்கள் அடிப்படையிலும் அவரவர்கள் குணம் செயல்கள் அடிப்படையில் இவன் சூத்திரன்… சத்திரியன்…..வைசியன்(வணிகன்)… என்ற வகையில் பொறுமையும் சாது குணமும் கொண்டவனே “அந்தணன்” என்று பிரிக்கப்பட்டதாக வரலாறுகள் உண்டு….! இன்றைய இளைய தலைமுறைகளிடம் இந்த ஜாதி கொடுமையை வளரவிடாமல் ஒழிக்க வேண்டுமானால் பள்ளிகளில் வழங்கப்படும் விண்ணப்பங்களில் உள்ள “ஜாதி” என்ற கட்டத்தை அகற்ற வேண்டும். கல்வி உதவிதொகைகள்….. மற்றுமுள்ள அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் மக்களின் வாழ்வாதாரமான அவர்களின் வசதி வாய்ப்புக்கள் போன்றவற்றை ஆராய்ந்து அவர்களின் பொருளாதார அடிப்படையில் வழங்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் இது போன்ற கொடுமைகள் நிகழாமல் தடுக்க முடியும். இருப்பினும் அரசாங்கம் இப்போது என்ன முடிவு எடுக்க போகிறது எனபது அனைவரும் அறிய வேண்டியதே…..! ஊர் மக்களின் வேண்டுகோளை ஏற்று உயர் ஜாதி பெண்ணை சமையலுக்கு அனுப்ப போகிறதா…? இல்லை இதே பெண்ணை கொண்டு சமையல் வேலை தொடரப் போகிறதா…? ( அரசியல்வாதிகள் ஓட்டுக்காகவாவது கண்டிப்பாக உயர் ஜாதி பெண்ணை சமையல் வேலைக்கு அனுப்பி தங்களது வாக்கு வங்கிகளை கட்டுக்குள் வைத்துகொள்ளும் என்பதே எனது எண்ணம்) இந்த பிரச்சனையின் முடிவாக உண்மை நிலையினை
தெரிந்தவர்கள் பகிர்ந்து “முடிவான” கொள்ளுங்கள்…! இதே இடத்தில…!