இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (13)

0

சக்தி சக்திதாசன்

முந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும்

அன்பினியவர்களே !

இனிய வாழ்த்துக்களுடன் இம்மடலில்.

2012 ம் ஆண்டு யூலை மாதம் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட காலம். ஆமாம், “2012”,  “லண்டன் “,  “ஒலிம்பிக் போட்டி” இவை மூன்றையும் ஒன்றே இணைக்கும் காலம் தான் அது.

2005ம் ஆண்டு யூலை மாதம் சிங்கப்பூரில் 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கும் இடத்துக்கான தெரிவுகளின் இறுதிக்கட்டம் நடைபெற்றது.

லண்டன் நகரும், பாரீஸ் நகரும் இத்தெரிவுகளுக்கான இடங்களில் முன்னனியில் நின்றன. அப்போது இங்கிலாந்து அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்த லேபர் கட்சியும், அதன் தலைவரும் அப்போதைய பிரதமருமான டோனி பிளேயரும் லண்டனில் 2012 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான தமது ஆதரவினை முழுதாக வழங்கி அதற்கான பிரசாரங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

அத்தோடு அப்போதைய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும், மற்றுமொரு பிரதான கட்சியாகிய லிபரல் டெமகிரட்ஸ் கட்சியும் இவ்விண்ணப்பத்திற்கு தமது பெரும்பான்மையான் ஆதரவை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கவை.

ஆனால் அதே நேரம் சிலமுனைகளில் இருந்து இப்போட்டியை லண்டனில் நடத்துவதற்கான ஆட்சேபணைகள் எழாமலில்லை.

அச்சமயம் சிறிது சிறிதாக பொருளாதாரச் சிக்கல்கள் இங்கிலாந்தில் நிலைகொள்ளத் தொடங்கின. இத்தகைய ஒரு இக்கட்டான நிலையில், இவ்வளவு செலவில், இப்படியான ஒரு ஆடம்பரமான விளையாட்டுப் போட்டிகள் எமது நாட்டில் நடப்பது அவசியமா? எனும் கேள்வி சிலரிடமிருந்து தலைதூக்கியது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக அமைக்கப்படும் விளையாட்டுக் கூடங்கள் அனைத்தும் அப்போட்டிகள் முடிந்த பின்னால் கவனிப்பாரற்ற நிலையில் இருக்கப்போகிறது. அதற்காக செலவழிக்கப்படும் பணம் விரயமே! எனும் வாதமும் முன்வைக்கப்பட்டது.

ஆனால் இப்போட்டிகள் லண்டனில் நடத்தப்படவேண்டும் என்று இங்கிலாந்தினால் உத்தியோகபூர்வமாக அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆதரித்தவர்களோ, இந்நிகழ்வு இங்கிலாந்தில் நடாத்தப்படுவதினால் பல பொருளாதார நன்மைகள் இங்கிலாந்துக்குக் கிடைக்கும் என்பதை வலியுறுத்தினார்கள்.

கடும் போட்டியின் பின்னால் சிங்கப்பூரில் உலக ஒலிம்பிக் போட்டி நிர்வாகக் குழுவினரினால், 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடமாக லண்டன் தெரிவு செய்யப்பட்டது.

பெரும்பான்மையான இங்கிலாந்து மக்களினால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்ட இவ்வெற்றிக்கு விழுந்த பேரிடியாக 2005ம் ஆண்டு ஜூலை மாதம் 7ம் திகதி லண்டன் மாநகர் பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியது. குற்றமற்ற 52 பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள்.

சரி இந்த ஒலிம்பிக் போட்டிகள் கடைசியாக இங்கிலாந்தில் எப்போது நடைபெற்றது ?

1944 ம் ஆண்டு இரண்டாம் உலகமகாயுத்தம் தொடங்கி 1948ம் ஆண்டு முடிவுற்றது. இவ்விரண்டாம் உலக மகாயுத்தத்தின் முடிவினைக் கொண்டாடுவதுடன், இந்த யுத்தத்தினால் சீர்குலைந்த நாடுகளின் உறவுகளையும் சீர்படுத்தும் முகமாக 1948ம் ஆண்டு கோடைகால மாதங்களில் லண்டனில் குறுகிய அளவிலான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் ஜப்பான், ஜெர்மனி தவிர்ந்த 59 நாடுகள் கலந்து கொண்டன.

அந்நிகழ்விற்குப் பின்னர் இப்போட்டி நடைபெரும் சந்தர்ப்பம் 64 ஆண்டுகளின் பின்னர் லண்டனுக்கு கிடைத்துள்ளது.

அறுபத்திநாலு வருடங்கள் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படையில் ஒரு தலைமுறையைக் குறிக்கக்கூடிய வல்லமை கொண்டது. அப்படியாகில் இத்தகைய ஒரு போட்டியை இலண்டன் மாநகரில் இத்தலைமுறை காண்பது என்பது நடைபெறமுடியாத விடயம்.

இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை எமது குழந்தைகள், குடும்பத்தினர் தம் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் கண்டு களிக்கக்கூடிய ஒரு நிகழ்விற்கு, இந்நாட்டுப் பிரஜைகளான நாம் எத்தகைய வரவேற்பைக் கொடுக்கிறோம்? ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு வினா.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை ஒழுங்கான முறையில் நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னால் லண்டன் முன்னனி ஓட்டப்பந்தய வீரரும், முன்னால் ஒலிம்பிக் சாம்பியனும், முன்னாள் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவுமிருந்த லார்ட்(Lord) செபஸ்தியான் கோ (Sebastian Coe) நியமிக்கப்பட்டார். இப்போட்டிகளின் செலவிற்காக பலகோடி பவுண்ஸ் ஸ்ரெலிங் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ஒருபகுதி மக்களின் வரிப்பணத்திலிருந்து அரசாங்கத்தினாலும், ஒரு பகுதி பல முன்னணித் தனியார் நிறுவனங்களினாலும், ஒரு பகுதி தேசிய லொத்தர் சபையினரிடமிருந்தும் கொடுக்கப்பட்டது.

இப்போட்டிகளை லண்டனில் நடத்த விண்ணப்பித்த போது விண்ணப்பத்தைப் பரிசீலித்த உலக ஒலிம்பிக் கமிட்டியின் நிபந்தனைகளில் ஒன்று, எந்த நாடு போட்டிகளை நடத்துகிறதோ அந்நாடு நடத்தப்படும் நகரின் பின் தங்கிய பகுதியை புனரமைப்பதைத் தமது முக்கிய நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்பதுவே.

அவ்வகையில் லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள “ஸ்ரட்வோர்டு” (Stratford) எனும் பகுதியில் புதியதோர் ஒலிம்பிக் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வீடு பற்றாக்குறை, வேலை பற்றாக்குறை, பொதுவான பொருளாதார நிலையில் பின் தங்கிய தன்மை இவைகளுக்கு உதாரணமாக விளங்கிய இப்பகுதியில் இவ்வொலிம்பிக் மைதானம் அமைக்கப்ட்டதினால் இப்பகுதி மக்களுக்கு கிடைத்த நன்மைகள்,

பலருக்கு வேலை வாய்ப்பு,
பலருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டு வசதிகள்,
பின் தங்கிய நிலையில் இருந்த இப்பகுதிக்குக் கிடைத்த வெளித்தோற்ற புனரமைப்பு,

என்பன என்கிறார்கள் லண்டன் ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகள்.

அது மட்டுமல்ல நாட்டில் நடக்கும் இவ்விளையாட்டுப் போட்டிகளைக் கண்ணுறும் இளம் சிறார்கள் தாமும் இத்தகைய முன்னணி வீரர்களாக வர வேண்டும் எனும் இலட்சியக் கனவுகளை வளர்ப்பதன் மூலம் அவர்களின் எதிர்கால வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும் என்கிறார்கள்.

மேலும் இப்போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் தடாகங்கள், பட்மிண்டன் தளம், கூடைப்பந்து மைதானம் போன்ற பல விளையாட்டுத் தளங்கள் தொடர்ந்தும் இயங்குவதனால் இளையோரின் சமூக மேம்பாட்டுக்கு உதவும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இவ்வாதங்கள் எல்லாம் பிரயோஜனமற்ற வாதங்கள். இப்போட்டிகளை ஒருமுறை நடத்துவதற்காக செலவழிக்கபட்ட கோடிக்கணக்கான பணத்தை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்குச் செலவு செய்திருந்தால் அது நல்ல பலனை அளித்திருக்கும் என வாதிடும் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அது மட்டுமா இப்போட்டிகள் நடைபெறும் வேளையில் இங்கு வரவிருக்கும் இலட்சணக் கணக்கான வெளிநாட்டு விருந்தினர்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்காக தாம் அன்றாடம் பார்க்கும் பணியை அக்காலகட்டத்தில் செய்வதற்கு தமக்கு விசேட போனஸ் அளிக்கப்பட வெண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து ரயில் ஊழியர்கள் வெற்றி கண்டதை அடுத்து தமக்கும் அதேபோல் போனஸ் வேண்டும் எனப் பேருந்து ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை நடத்தியிருந்தார்கள்.

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், இப்போட்டிகள் நடைபெறும் காலப்பகுதியில் தாம் வேலைநிறுத்தத்தில் குதிக்கப் போவதாக வேறு பயமுறுத்தியிருக்கிறார்கள்.

என்ன இது? அவர்கள் சாதாரணமாகச் செய்யும் பணியைத் தானே செய்யப் போகிறார்கள், அதற்குப் போய் அவர்களுக்கு போனஸா ! என முக்கில் கையை வைக்கிறார்கள் சில பொதுமக்கள்.

இவ்வொலிம்பிக் போட்டிகளின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒலிம்பிக் சுவாலையானது, கிரீஸ் நகரில் ஏற்றப்பட்டு லண்டனின் ஒரு கோடியான “லாண்ட்ஸ் எண்ட்” (Lands end) எனப்படும் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

பின்பு அங்கிருந்து மே மாதம் 19ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜூலை மாதம் 27ம் வரை இங்கிலாந்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஊர்வலமாக பிரபல்யமானவர்களும், சாதாரண மக்களும் இணைந்து எடுத்துச் செல்கிறார்கள்.

இப்போட்டியின் வெற்றிக்குத் தாம்தான் காரணம் என லண்டன் மேயர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பலபேரும் முன்னணியில் குதித்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது.

அரசாங்கமும், பிரதமரும் பார்த்தார்கள். நாடோ பொருளாதார சிக்கலுக்குள் மூழ்கித் தத்தளித்துக் கொண்டுள்ளது. மக்களோ அரசாங்கத்தின் மீது மிகுந்த ஆத்திரம் கொண்டுள்ளார்கள். கூட்டரசாங்கமும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் செல்வாக்கிழந்து கொண்டு செல்கின்றன. இந்த சூறாவளி ஆழியைக் கடக்க, கெட்டியாக ஒலிம்பிக் போட்டிகள் எனும் படகைப் பற்றிக் கொள்ள வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டு செயல்படுவது போல் தோன்றுகிறது.

சரி எதுவாகினும், எவராகினும் எதற்காகவேனும் இப்போட்டிகளை ஆதரிக்கட்டும். ஆனால் நாம் எமது வாழ்நாளில் நாம் வாழும் நாட்டிற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் எனும் வகையிலும்,

எம் நாட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமது நாட்டில் தமது நாட்டு மக்களின் முன்னே தாம் இத்தகைய ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்கிறோம் எனும் மகிழ்ச்சியில் இருக்கும் போது, அவர்களுக்கு எம்மாலான ஆதரவை நல்க வேண்டும் எனும் வகையிலும், 

பல்வேறு பொருளாதாரக் கட்டமைப்புகளுக்குள் சிக்கி பிரிந்து அல்லல் படும் எமது நாட்டின் சமூகத்தினர் அனைவரையும் ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வை ஆதரிக்கிறோம் எனும் வகையிலும்,

எத்தனையோ கோடி செலவில் நடத்தப்படும் இப்போட்டிகளுக்குச் செலவிடப்பட்ட எமது வரிப்பணம் வீணாகிவிடக்கூடாது எனும் வகையிலும்,

இப்போட்டிகளுக்கு இந்நாட்டுப் பிரஜைகளான நாம் நம்மாலான முழுஆதரவினையும் நல்கி இப்போட்டிகளை நாம் வாழும் இந்நாட்டிற்காகவும், உலக நாடுகளின் தொடரும் நற்புணர்வைப் பேணுவதற்காகவும் ஆதரிக்க வேண்டும் என்பதுவே உண்மை.

மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *