ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 12)

வெங்கட் நாகராஜ்

வனப் பயணத்தில் புலிகளைப் பார்க்க முடியாததில் வருத்தம் உண்டென்றாலும், மற்ற விலங்குகளையும் பறவைகளையும் கண்ணாரக் காண முடிந்ததில் மகிழ்ச்சிதான். கானகத்திற்குள் பார்த்த இன்னொரு விஷயத்தினைச் சொல்ல மறந்து விட்டேன். அங்கே ஒரு சிறிய குளம் இருந்தது. அதன் பெயர் “லால் தலாப்”! ஹிந்தியில் லால் என்றால் சிகப்பு, தலாப் என்றால் குளம். ஏன் அதற்கு அந்த பெயர்? அந்தக் குளத்தின் தண்ணீரே சிகப்புதான்!

புலிகள் மனிதர்களுக்குச் சொன்ன செய்தியை பலகை மூலம் படித்து விட்டு தங்குமிடம் வந்தோம். முன்னொரு பகுதியில் சொன்னது போல நாங்கள் தங்கியிருந்தது மத்தியப் பிரதேசச் சுற்றுலாத் துறையின் ”White Tiger Forest Lodge” என்ற இடத்தில். அங்கே மதிய உணவு உண்டு விட்டு அடுத்த இலக்கை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். அதற்கு முன் தங்கும் விடுதியின் கட்டணங்கள் பற்றிச் சொல்லி விட்டால் அங்கு செல்லும் உங்களில் சிலருக்கு உதவும்.

இந்தத் தங்குமிடத்திற்கு இணையத்தின் மூலம் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். 26 AC அறைகளும், 12 ஏர் கூலர் பொருத்திய அறைகளும் ஆக மொத்தம் 38 அறைகள் இருக்கின்றன. கட்டணங்கள் சற்றே அதிகம் எனத் தோன்றினாலும் இயற்கையான சூழலில் அமைதியாக இருப்பதால் பரவாயில்லை எனத் தோன்றுகிறது. விவரம் கீழே:-

Category ———–No. of Rooms—–Tarrif [In Rs.](SingleDoubleExtra Bed)
AC———————— 26———————————-4090—– 4690——– 1490
Air Cooled—————12—————— —————-3090—— 3690——–1290

இந்த இடத்தினைத் தொடர்பு கொள்ள:Telfax : 07627-265366, 07627-265406

E-mail : [email protected] சரி தகவல்கள் கொடுத்தாயிற்று. அடுத்தது என்ன என்றால், பழங்குடி மக்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறேன். அந்த கிராமத்தின் பெயர் “குருவாஹி”. பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும், தீர்க்க வேண்டிய குறைகள் உள்ளதா என்பதையும் கேட்டு அறிந்து கொண்டோம்.

நிறையக் குழந்தைகள் வீடுகளின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் புகைப்படம் எடுத்தபோது எவ்வளவு மகிழ்ச்சி அவர்கள் முகத்தில்? மகிழ்ச்சி மட்டுமா – வெட்கமும் சேர்ந்துதானே இருந்தது! குழந்தைகள் அனைவருக்கும் எங்களிடம் இருந்த சில தின்பண்டங்களைக் கொடுத்து மேலும் மகிழ்வித்தோம்!

அவர்களுடைய வீடுகள் இருக்கும் பகுதியையும், பள்ளிக்கூடம், மருத்துவக் கூடம் முதலியவற்றையும் பார்த்து வந்தோம். அவர்களுக்கு எங்களால் முடிந்த சில உதவிகளைச் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

மீண்டும் தங்குமிடம் வந்து தில்லி திரும்பத் தயாரானோம். பாந்தவ்கர் பகுதியினை விட்டு விலக மனதில்லை. இருந்தாலும் கடமை அழைக்கிறதே. தில்லி சென்று தானே ஆகவேண்டும். மீண்டும் 80 கிலோமீட்டர் பேருந்து பயணம் “கட்னி” என்ற இடம் நோக்கி. கட்னி இரயில் நிலையத்திலிருந்து தில்லிக்கு ரயில் பிடிக்க வேண்டும். வரும் போது மஹாகௌஷல் திரும்பியது சம்பர்க் கிராந்தி!

ஜபல்பூரில் இருந்து தில்லி வரை செல்லும் எம்.பி. சம்பர்க் கிராந்தி, கட்னி ரயில் நிலையத்திற்கு இரவு எட்டு மணி இருபது நிமிடத்திற்கு வந்தடைந்தது. அடுத்த நாள் காலை 09.00 மணிக்கு தில்லி வந்தடைந்தோம். வீட்டிற்கு வந்து குளித்துக் கிளம்பியாச்சு – ”ஏன் ஓய்வெல்லாம் எடுக்கவில்லையா?” என்றால் இல்லை – வகுப்புகள் மீண்டும் துவங்கி விட்டன.

மூன்று நாட்களில் நாங்கள் சென்ற இடங்களைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அனைவரும் படித்து மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

மீண்டும் பயணம் சென்று வந்த பின் வேறொரு பயணத் தொடருடன் உங்களையெல்லாம் சந்திக்கிறேன்.

 

(பயணம் நிறைவடைந்தது).

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க