சாந்தி மாரியப்பன்

தாள முடியாமற் போகிறது
உனதன்பைச்
சில சமயங்களில்..

மெல்லிய நீரோடையாய்ச் சலசலக்குமது
காட்டாறாய்ப் பொங்கிப் பிரவகிக்கும்போது
மூச்சுத்திணறி நிற்கும் பொழுதுகளில்
அருவியாய்ப்பொழிந்து
உருட்டிச்செல்கிறாய் என்னை..

பூனைப்பாதம் வைத்துப் பின் வந்து
மெல்லக் கண்பொத்தி
கன்னம் கடித்த தருணங்களில்
சீறிச்சினந்ததைப் பொருட்படுத்தாமல்
சில்லறையாய்ச் சிதற விடும் சிரிப்பால்
தண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்
அமிழ்த்தி விடுகிறாய் என் மனதை..

சுமக்க இயலாமல்
எங்கேனும் எவரிடமேனும்
இறக்கி வைக்க முயலுந்தோறும்
பேரன்பாய்ப் பல்கிப்பெருகுவதும்
ஓராயிரம் வலிகளையும்,
சுமைகள் தந்த காயங்களையும்
துடைத்துப்போடும் மாமருந்தாய்
இருப்பதுவும்
அந்த மந்திரச்சொல்லுக்கே சாத்தியமென்று
என்றுமே நிரூபிக்கிறாய்
என் தேவதையே..
என் வானிற் பூக்கச்செய்த வானவிற்களின் மூலம்..

 

படத்திற்கு நன்றி: http://thecrochetedferret.com/RainbowBridgeStory3.htm

3 thoughts on “மந்திரச்சொல்

 1. மென்மையான உணர்வை சொல்லும்
  தன்மையான கவிதை. நன்று
  வாழ்த்துக்கள்!

 2. வெல்வெட் கவிதைக்கு சாக்லேட் படம். அருமை.

 3. நல்ல கவிதை .. இதமாக இருந்தது ..

  “ஓராயிரம் வலிகளையும், 
  சுமைகள் தந்த காயங்களையும்
  துடைத்துப்போடும் மாமருந்தாய்
  இருப்பதுவும்
  அந்த மந்திரச்சொல்லுக்கே சாத்தியமென்று
  என்றுமே நிரூபிக்கிறாய்
  என் தேவதையே..
  என் வானிற் பூக்கச்செய்த வானவிற்களின் மூலம்.   .நல்ல வரிகள் 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க