சட்டம் ஆலோசனைகள் (9)
மோகன் குமார்
கேள்வி: ஜெயகோபால், முகப்பேர்
விதிமுறைகளை மீறிக் கட்டிடம் கட்டியதாக, அண்மையில் சென்னை, தி.நகர் ரங்கநாதன் தெருவில் பல வணிக வளாகங்களுக்கு சீல் வைத்தார்கள். அங்கு மட்டுமில்லை, பல ஊர்களிலும், நகரங்களிலும், விதிமுறைகளை மீறித்தான் கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். இவை அனைத்தையும் இடிக்க வேண்டும் எனில் கோடிக்கணக்கான கட்டிடங்களை இடிக்க வேண்டியிருக்கும்.
இவை அனைத்தும் இதுநாள் வரை, எல்லா வரிகளையும் கட்டி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு அனைத்தும் பெற்றுள்ளன. இதில் அரசின் பத்திரப் பதிவுத் துறை, உள்ளாட்சி மன்றங்கள், குடிநீர் வாரியம், கழிநீர் அகற்று வாரியம், மின்சார வாரியம்…. எனப் பல துறைகளுக்கும் தொடர்புள்ளன. சட்ட மீறல், இவ்வளவு பெரிதாகியுள்ள நிலையில் இவற்றை எவ்வாறு வரன்முறைப்படுத்துவது?
பதில்:
நீங்கள் சொல்வது நிச்சயம் உண்மை தான்.
தற்சமயம் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏராளம் உள்ளன. அவை கட்டப்படும் போதே CMDA பார்த்து உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக பெரிய கட்டிடங்கள் கட்டும் போது CMDA அல்லது லோக்கல் அதாரிட்டி இன்ஸ்பெக்ஷன் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலும் செய்வது இல்லை.
கட்டி முடித்து பின் அதனால் யாருக்கும் பாதிப்பு வரும்போது, பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே நீதி மன்ற ஆணையின் பேரில் நடவடிக்கை எடுக்கின்றனர்.
அமெரிக்காவில் இது போன்ற விதிமீறல் நடந்தால், முதலில் ஒரு விளம்பரம் செய்வார்கள். குறிப்பிட்ட நபர் மீது வழக்கு தொடரப்போவதாகவும், இதில் யாரேனும் சேர்ந்து கொள்ள விரும்பினால் சேரலாம் என்றும். இப்படி, அந்த நபரால் பாதிக்கப்படும் பலரும் சேர்ந்து வழக்கு தொடரும் போது வழக்கு வலுப்பெறும். ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்த்து ஒருவர் போராடுவதைவிட, பலர் சேர்ந்து போராடுவது எளிது தானே?
தனி நபர் வழக்கு தொடர்ந்தால், அவரை முடக்குவது வலிமை உள்ளவர்களுக்கு எளிது. வழக்கு தொடர்ந்தோர் பலர் எனில் கஷ்டம்.
தனிப்பட்ட வீடுகள் எனும் போது குடிநீர் வரி, மின்சார பில் வசூலிக்கும் மின்சார வாரியம் யாரும் இதற்கு பொறுப்பாக முடியாது. அவர்களுக்கு விதிமுறை மீறல் பற்றி ஏதும் தெரியாது. உண்மையில் CMDA-வும் கட்டிடம் கட்டும் பில்டரும் தான் இதற்கு பொறுப்பு. ஆனால் துரதிஷ்ட வசமாய் காசு கொடுத்து வீடு வாங்குவோர் தலையில் அனைத்து கஷ்டங்களும் விடிகிறது.
வீடு கட்ட அனுமதி வழங்கும் நிறுவனம் கடைசி வரை கட்டிடம் கட்டும்போது பார்வையிடுவதும், எல்லாம் சரி என்ற பிறகே முழு அனுமதி தருவதும் மட்டுமே இதைத் தீர்க்க முடியும் ஆனால் அதற்குள்ளும் நம் நாட்டில் லஞ்சம் ஊடுருவி விடும் !