நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்: தொடர்-13

0

பெருவை பார்த்தசாரதி

தினமும் ஒரு மணிநேரமாவது, படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள சென்ற இதழில் அறிஞர்களின் அறிவுரைகளை மேற்கோள்களாகப் பல சந்தர்ப்பங்களில் பார்த்தோம். இந்த இதழில் நூலகங்கள் நம் நல்வாழ்வுக்கு வழிகாட்ட உதவுகின்றன. இன்று நூலகம் என்பது நமது வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கின்ற அளவு முன்னேறியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். பண்டைக் காலத்திலேயே சுவடிகளில் எழுதியவை நீண்ட நெடுங்காலம் மங்காதிருக்க அரிய வகை ‘மை’ கொண்டு எழுதி அவற்றைப் பூச்சிகளிகள் அழிக்காமலிருக்க பல வழி வகைகளைக் கண்டுபிடித்து, அரிய பொக்கிஷங்களாகிய எழுத்துக்களைப் பாதுகாத்து வந்தனர். பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னால் அறிஞர் பெருமக்கள் எழுதிய பனையோலைச் சுவடிகள் இன்று கூட தஞ்சாவூர் ‘சரஸ்வதி மஹாலில்’ இன்றும் புதுப் பொலிவுடன் பாதுகாக்கப் பட்டு வருவதைப் பார்வையாளர்கள் அனைவரும் அறிவோம்.

அன்று நடை முறைப் படுத்தப்பட்ட இந்த எழுத்துக்களைப் பாதுகாக்கும் வழிதான் இன்றய “நூலகம்” பிறக்க அடிக்கோல் நாட்டியது என்று சொல்லலாம். நூலகத்தின் பயன்பாட்டினை உணர்ந்து, அதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, ‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது, பல சிறைச்சாலைகள் மூடப்படுகிறது’ என்று ஸ்வாமி விவேகானந்தர் பொன்மொழியாக உதிர்த்தார் அல்லவா?….

இன்றைய காலக்கட்டத்தில், தனியாரும், அரசாங்கமும் நூலகம் அமைத்து மக்களுக்காக அரும்பணி ஆற்றுகின்றன. இதற்கான கட்டணமும் மிகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அரசாங்கத்துக்குச் சொந்தமான நூலகத்துக்குச் சென்றால் அங்கே, துறை வாரியாக எண்ணற்ற நூல்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். ஆனால் நல்ல எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுக்கு இன்றும் பற்றாக்குறை இருப்பதையும் உணர முடிகிறது. அரசுடைமையாக்கப் பட்ட நூல்கள் எல்லாம், அனைத்து நூலகங்களுக்கும் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்படுவதும் இதற்கு ஒரு காரணம்.

நிறையப் புத்தகங்களைப் படிக்கும் போது, எழுத்தாளர்களைப் பற்றிய எண்ணத்தையும் நாம் அறிந்து கொள்ள முடியும். எழுத்தாளர்களின் எழுத்து முறையை மூன்று வகையாக நாம் இனம் கண்டு கொள்ளவும் முடியும்………அவை

1.நான் இப்படித்தான் எழுதுவேன், படிப்பது வாசகர்களின் தலைவிதி என்று எழுதுபவர்கள் ஒருவகை.

2.எழுதுவதால் ஊதியம் கிடைக்கிறது, பொழுது போகிறது என்று எழுதுபவர்கள் இன்னொரு வகை.

3.எழுத்து என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் கைவரப் பெறாது. கடவுளின் அருள் இருந்தால் மட்டும்தான் எழுத வரும். எழுதுகின்ற ஒவ்வொரு வார்த்தையும், படிக்கின்ற வாசகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்று, நன்மை பயக்குமாறு எழுதுபவர்கள் மூன்றாவது வகை எழுத்தாளர்கள்.

நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அனைவரும் அதிகம் விரும்புவது இந்த மூன்றாவது வகையைச் சேர்ந்த எழுத்தாளர்களைத்தான். இப்படிப்பட்ட எழுத்தாளர்களின் நூல்களைத்தான் நாம் நூலகங்களில் தேட வேண்டும். சில சந்தர்ப்பங்களில், அடிக்கடி நம் கவனத்தை ஈர்க்கின்ற நூல்களேயே திரும்பத் திரும்பப் படிக்க நேரிடும். ஒரு சிறந்த நூலை அடிக்கடி மனனம் செய்வதால் வாழ்க்கையின் வெற்றிப் படிக்குச் செல்லவும் காரணமாகி விடும் என்பதை டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் “வங்கக்கவி தாகூரின் கீதாஞ்சலியை நான் நூறு முறைக்கு மேல் படித்திருக்கிறேன்” என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

நம் எல்லோருக்குமே ஏதாவதொரு பொழுதுபோக்குகளில் நாட்டம் இருக்கும். அனுதினமும் நமக்கு ஓய்வு நேரம் கிடைக்க வாய்ப்பு இருக்கும். விடுமுறை நாட்களில் முழுவதும் ஓய்வுதான். இச்சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் நாம் டீவிக்குள் ஐக்கியமாகி விடுகிறோம். கிரிக்கெட் மேட்ச் என்றால் நாள் முழுவதும் நேரம் போவது தெரியவில்லை. காசு பணம் செலவில்லாத ஒரு பொழுதுபோக்கு என்றாலும், நமது பொன்னான நேரத்தை அதிக அளவில் வீணடித்து விடுகிறது. ஓய்வு கிடைக்கும் போது, அதைப் பயனுள்ள வகையில் நூலகங்களுக்குச் சென்று புத்தகம் படிக்கச் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டால், நமது ‘சிந்தனைவளம்’ பெருக அந்த எண்ணம் வழிவகுக்கும் அல்லவா!…

எல்லாவற்றையும் நாம் பழக்கிக் கொள்ளுவதுபோல், அறிவுக்கு வேலை கொடுக்கும் படிக்கும் பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வங்கக் கவி, குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் சொல்லுகிறார். படிக்கத் தகுந்த புத்தகங்களை விட, படிக்கத் தகாத புத்தகங்களே இவ்வுலகில் ஏராளம் என்றும். முதுகின் மீது விளக்கை வைத்துக் கொண்டு இருட்டில் நடக்கிறவன், விளக்கினால் என்ன பயன் பெற முடியும் என்று வினா எழுப்புகிறார். விளக்கை முன்னால் பிடித்தால் அல்லவா வெளிச்சம் பயன் தரும். அது போலப் புத்தகங்கள் மூலம் பெறும் அறிவு என்னும் விளக்கை இவ்வாறு பயன்படுத்த முற்பட்டால், தொல்லைகள் விலகும் என்று அறிவுரை சொல்லுகிறார்.

“நல்ல நூல்களைப் படியுங்கள், உற்சாகம் ஊட்டக்கூடிய நூல்களைப் படியுங்கள், கவலைகள் மறந்து போகும்” என்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். கவலைகளை மறப்பதற்காக நூலகத்துக்குச் செல்லுகின்ற வழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். அன்றாடம் நூலகத்துக்குச் செல்பவர்கள், ஒன்றைக் கவனித்து இருப்பார்கள், நூலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடம் சிறுகதைகள், நாவல்கள் அடங்கிய பகுதி மட்டுமே. மற்ற பகுதிகளில் அதாவது இலக்கியம், திறனாய்வு, மருத்துவம், ஆய்வுக் கட்டுரைகள் போன்ற மற்ற நூல்கள் இருக்கும் இடத்தில் வாசகர்கள் அதிகமாகத் தென்பட மாட்டார்கள். சங்க காலத்தில் படைக்கப்பட்ட நாலடியார், திரிகடுகம், திருக்குறள், திருமந்திரம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, புறநானூறு, பழமொழி நானூறு, நான்மணிக்கடிகை, நீதிவெண்பா போன்ற அறநெறிகளைப் போதிக்கின்ற நூல்களை யாரும் சீண்டாமல் கேட்பாரற்று அடுக்கி வைத்தபடி கலையாமலும், கிழியாமலும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஒரு மொழி அறிந்தவன் ஊமை, பல மொழி அறிந்தவன் பண்டிதன், பல நூல் கற்றவன் மேலவன், படிப்பில்லாதவன் உடைகள் அணிந்த கால்நடைகள், கல்லாதவன் கண்ணில்லாதவன் என்ற பழமொழிகளும் படிக்கும் பழக்கத்தைத் வைத்தே உருவானவை. இந்தப் பழக்கம் பற்றிய விபரங்களைச் சென்ற இதழில் விரிவாகப் படித்து விட்டோம்!…. இந்த நல்ல பழக்கத்துக்கு உறுதுணையாக இருப்பவர் நூலகர் என்று சொன்னால் சரியாகப் பொருந்துமல்லவா?…. பல தகவல்களைப் புத்தக வடிவில் தன்னுள் அடக்கிய நூலகங்களிலிருந்து படிப்பவர்களின் தேவைக்கு ஏற்பப் புத்தகங்களை எடுத்துக் கொடுத்து உதவுவதுதான் நூலகரின் பணி.

‘நூலகம் பல்கலைக் கழகத்தின் இதயம்’ என்பது போல எல்லாப் பள்ளிகளிலும் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் தரமான நூல்கள் பாதுகாக்கப் பட்டு மாணவர்களின் படிப்புத் திறனை மேம்படுத்த உதவுகிறது. சிறப்பான ஒரு நூலகம், இன்று பல விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சியாளர்களையும், கல்வியாளர்களையும், பேச்சாளர்களையும் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நூலகமும், இதைப் பாதுகாத்து மக்களுக்குப் பயன்படுகின்ற வகையில் பணி புரியும் நூலகரும்தான் ஒருவருடைய நண்பராகவும், நல் வாழ்க்கைக்கு வழிகாட்ட முடியும். இவர்தான் படிப்பவர்களை ஊக்குவிக்கும் மகத்தான பணியைத் தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டிருப்பவர். இதன் செயல்பாடுகளுக்கு, முக்கிய பங்கு வகிப்பவர் நூலகத்தின் பயனை நன்குணர்ந்த ஒரு நூலகர்தான்.

இந்த இதழில் முக்கியமாக ஒரு நூலகத்தின் வளர்ச்சிக்காகவே வாழ்ந்த ஒரு நூலகரைப் பற்றியும், ஒரு பழமை வாய்ந்த நூலகத்தைப் பற்றியும், கட்டுரைத் தலைப்புக்கு மட்டுமே பொருந்துகின்ற தகவல்களை, அதிகம் சொல்ல விரும்பவில்லை, மிகச் சுருக்கமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் இவற்றைப் பற்றிய ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கிறது.

1892 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 9 ஆம் தேதி, தமிழ்நாட்டில் பிறந்த இவர், மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில், முதல் நூலகராகப் பணியேற்று, நூலகங்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு, தனது வாழ்நாளின் பாதியை, நூலகத்தோடு இணைத்துக் கொண்டு, சிறந்த “நூலகர்” என்ற புகழோடு வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நூலகப் பணியில் இருக்கும்போது, ஒரு வருடப் பயணமாக இங்கிலாந்திற்குச் சென்ற இவர், நூலகத்தை எவ்வாறு பராமரிப்பது, நூலக வளர்ச்சிக்கு உதவும் செயல்பாடுகள் போன்ற அரிய தகவல்களையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து, மெட்ராஸ் பல்கலைக்கழக நூலகத்தை அனைவருக்கும் பயன்படும் வகையில் முற்றிலும் செயல்படுத்திக் காட்டினார். அப்பொதிருந்த அரசாங்கமும் இவரது முயற்சிகளுக்குப் பெரிதும் கை கொடுத்தது. 50 வருடங்களுக்கு முன்னால் இவர் ஊன்றிய “நூலகம்” என்ற விதை, இன்று பெரிய விருட்சமாகித் தழைத்து, “நூலகங்களின் அபரிமிதமான வளர்ச்சி” என்ற கனிகளை இன்று தந்து கொண்டிருகிறது. நூலகங்களின் திறமான செயல்பாட்டுக்கு அன்றே அடிக்கல் நாட்டியவர். இவர் நூலகங்களின் செயல்பாடுகளைப் பற்றி இவர் வகுத்த “ஐந்து கோட்பாடுகள்” (five laws of library science), “கோலோன் பகுப்பு முறை” (colon classification), “நூல்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல்” (classified catalogue code) போன்றவை இன்றும் நூலகராகப் பணி புரிகின்றவர்களுக்குப் பெரிதும் உதவிக்கொண்டு இருக்கின்றன. தனது வாழ்நாளில் 200 புத்தகங்களையும், 2000 கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட பல விருதுகளை அள்ளிக் குவித்து “இந்திய நூலகத் தந்தை” என்று போற்றப்பட்ட “சீர்காழி ராமாமிர்த ரங்கநாதன்” (Ranganathan (SR)) அவர்கள். இவர் வகுத்த ஐந்து கோட்பாடுகள், இவர் பெயரிலேயே (Ranganathan’s libraray code) வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்நாளில் சேமித்த ஒரு லட்ச ரூபாயையும், பணி ஊதியத்தையும் மற்றும் அவர் எழுதிய புத்தகங்களின் விற்பனையின் மூலம் கிடைத்த வருமானங்களையெல்லாம், தனது மனைவியின் பெயரால் நிறுவப்பட்ட “சாரதா ரங்கநாதன் நூலகவியல் அறக்கட்டளை” என்ற அறக்கட்டளைக்கு அளித்தார். இவரைப் பற்றிய வாழ்க்கை விபரங்களை மேலும் அறிய ஆவலாய் இருப்பவர்கள், விக்கிபீடியா இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அவர் அடிக்கடி தனது உரையாடலில் குறிப்பிடும் ஒரு வாசகம் ஒன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்::

“God has chosen me as an instrument, the honour done to me should act as an incentive to the younger generation to devote their lives whole heartedly to library science and service”

அரசாங்கத்தால் எளிய வாழ்க்கை வாழ்ந்த இவர், தன்னுடன் பணிபுரிந்த ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல் வழி காட்டினார். நூலகத் தந்தை ரங்கநாதன் தன் வாழ்நாளை நூலகத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டது போல, ஒரு மிகவும் பழமை வாய்ந்த நூலகம் ஒன்றும் படிப்பவர்களை மேம்படுத்த தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில், நிறுவப்பட்ட மிகப் பழமையான “அலெக்ஸாண்டிரியா” என்ற ஒரு நூலகத்தைப் பற்றிய ஒரு சில செய்திகளை மட்டும் இங்கே தெரிந்து கொள்வோம். ஆர்கிமிடிஸ் (Archimidis), அரிஸ்டார்கஸ் (Aristarchus), ஸினொடோட்டஸ் (zinodotus), காலிமக்கஸ் (Callimachus), ரோட்ஸ் (Rhodes), அரிஸ்டோபேன்ஸ் (Aristophanes), இராட்டாஸ்தீன்ஸ் (Eratosthenes), யூக்லிட் (Euclid), போன்ற எண்ணற்ற மேதாவிகள் பலர் பணியாற்றியுள்ளனர். இந்த நூலகம் விலை மதிக்க முடியாத பத்து லட்சம் புத்தகங்களை அப்போதே தன்னுள் கொண்டிருந்தது. இதற்குக் காரணமாக இருந்தது, அப்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறையே, அதாவது இந்நூலகம் அமைந்துள்ள இடத்திற்கு வருகை புரிபவர்கள், தங்கள் வசமுள்ள எழுத்தேடுகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். அரசாங்கம் அதைப் பிரதி எடுத்து ஒரு பிரதியை நூலகத்துக்கும், மற்றொரு நகலை உரிமையாளரிடமும் வழங்கி விடும். இந்த அற்புதமான திட்டத்தை அன்றைய அரசாங்கம் கடைப்பிடித்து வந்தது. இன்று அதுபோல் இல்லையே?… என்று ஏங்குபவர்களும், வருத்தப்படுபவர்களும் நம்மிடையே உண்டு.

இப்படிப்பட்ட புகழையெல்லாம் தன்னுள் அடக்கிய மிகப் பழமைவாய்ந்த அந்த நூலகம் நான்கு முறை சீரழிக்கப்பட்டது. பல சமயங்களில், அந்நியர் படையெடுப்பின் போது போரினால் தீக்கு இரையாக்கப்பட்டது. ஜூலியஸ் ஸீஸரின் அலெக்ஸாண்டிரியா படையெடுப்பாலும், ஆரிலியன் மற்றும் தியோஃபிலஸ் மற்றும் முகலாயப் படையெடுப்பின் போதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகிய எழுத்தேடுகளெல்லாம் அதிக அளவில் தீக்கிரையாகிச் சாம்பலாகி விட்டன. இந்த நூலகத்தைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அறிந்து கொள்ள விரும்பினால், உங்களுக்கு http://www.bede.org.uk/library.htm என்ற உசாத்துணை உதவும்.

முழு ஈடுபாட்டுடன் யார் ஒருவர் எங்கு பணி புரிந்தாலும், அந்தப் பணிக்கு ஒரு மகத்துவம் உண்டு. அந்த ஈடுபாடு தன்னுள் வர வேண்டுமானால், தன்னலம் என்ற ஒன்றை அறவே ஒதுக்கி விட வேண்டும். அதே போல, எந்த ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதில் கவனம் இருந்தால்தான் செய்கின்ற செயல் சிறப்பாக அமைகிறது. புகழ் பெற்ற நூல்களைப் படிக்கும்போது கூட, ஏனோ, தானோ என்று மேலோட்டமாகப் படிக்காமல், மனதில் பதியுமாறு ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள். நூலகம் மட்டும் இருந்தால் போதாது, அதை ஈடுபாட்டோடு பராமரிக்கின்ற நூலகரும், அவரது பணியும் மிகவும் அவசியம் என்பதற்கு நான் எனது பகுதியில் இயங்கும் நூலகத்தைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். நான் வசிக்கும் சென்னை, கலைஞர் நகர் பகுதியில் இயங்கி வருகின்ற தமிழ்நாடு அரசாங்க கிளை நூலகத்துக்கு தற்போது பொறுப்பு வகிக்கும், அரசாங்கத்தால் “சிறந்த நூலகர்” என்று கெளரவிக்கப்பட்ட நூலகரைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். அரசாங்கத்தின் உதவியை எதிர்பாராமல், பொதுமக்களின் ஆதரவோடு நூலகத்திற்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் ஒவ்வொன்றாகப் பூர்த்தி செய்து வருகிறார். குறிப்பாக அரசாங்கப் பள்ளி மாணவர்களை நூலக உறுப்பினர்களாகச் சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார். நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் எளிதில் கையாளுகின்ற வகையில் மிக நேர்த்தியாக, துறை வாரியாக அடுக்கி வைத்திருப்பது வாசகர்களுக்குப் பெரிதும் உதவியாக உள்ளது. அனைத்து நூலகப் பணியாளருக்கும் பயிற்சி அளித்து, இன்முகத்தோடு வாசகர்களின் தேவை அறிந்து செயல்படுவது நூலகரின் மற்றொரு சிறப்பு.

எந்த ஒரு நூலகமும் வாசகர்களின் தேவை அறிந்து செயல்படா விட்டால், அந்த நூலகத்துக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்க வாய்ப்பில்லை. அதேபோல, ஒரு நூலகத்துக்குப் படிக்கும் பழக்கம் இல்லாத வாசகர்கள் அமைந்து விட்டாலும், நூலகங்களில் செயல்பாடுகளில் குறைகள் தோன்ற வாய்ப்புள்ளது. பொழுது போகாமல், நாட்டு நடப்பைப் பற்றி பேசுவதற்கும், ஊர் வம்பிற்காக நூலகத்தைப் பயன்படுத்துவோரையும் அடையாளம் கண்டு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நூலகர் முயற்சி எடுக்கா விட்டால் நூலகம் அருகில் இருந்தும் வாசகர்களுக்கு ஒரு பயனும் இல்லை. புத்தகங்கள் படிப்பதில் அதிக நாட்டமுள்ள எனக்கு, நான் வசிக்கும் இடத்தில் ஒரு நல்ல நூலகமும், அரசு விருது பெற்ற நூலகரும் அமைந்தது, இவ்வகையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

வாசித்தல்’ என்று வரும்போது, நமது வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற நன்னூல்களை எல்லாம் நமக்கு வழங்கும் ‘நூலகங்களும்’ அதைப் பேணிக்காத்து, வாசகர்களுக்காக அரும்பணியாற்றுகின்ற ‘நூலகரும்’ நம்முடன் சேர்ந்து கொள்கிறார் அல்லவா!….ஆராய்ச்சி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், புலவர்களுக்கும், வாசகர்களுக்கும் இவர்தான் நண்பராக இருந்து வாழ்வியலுக்கு வழிகாட்டுபவர் ஆவார்.

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *