சென்ற வார வல்லமையாளர் விருது!

(ஜூலை 02, 2012 ~ ஜூலை 08, 2012)
இன்னம்பூரான்
09 07 2012

தமிழ் மொழியில் இதழியல் உருவானதும், சில வருடங்களாக இணைய தள சஞ்சிகைகள் ஊர்வலம் வரத்தொடங்கியதும் நல் வரவேயாயினும், ஆழ்ந்து ஆராயப்பட்ட இதழியல் ஆய்வுகள் மிகக்குறைவு. ஆகவே, பாத்தி கட்டி பராமரித்தாலும், இலக்கியத்தின் வரப்பு , குறிப்பாக கவிதை இலக்கியத்தின் வரப்பு, உயர்ந்ததாக புலப்படவில்லை. (‘பதிப்பாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றிய அறிவு சார்ந்த விவாதங்களின்மை ஒருபுறமிருக்க…’ -ஈவா வில்டன்:2007). பல பழைய கவிதைகளின் வசீகரத்தையும், ஆகர்ஷணத்தையும் தற்காலம் காண இயலவில்லை. மஹாகவி பாரதி, விமர்சனத்தையும்,தேசபக்தி பிரசாரத்தையும், ஆன்மீக அழுத்தங்களை கூட கவிதை வடிவில் படைத்தான்; கத்ய பத்யத்தில் (வசனக்கவிதை) இலக்கிய வீணை மீட்டினான். கவிமணியும், நாமக்கல் கவிஞரும்,பாவேந்தரும், கண்ணதாசனும் அலாதி பாணிகளை தனதாக்கிக்கொண்டனர். தற்கால தமிழ் கவிதை உலகுக்கு அணிகள் அணிவித்தனர். இடைக்கால தமிழ் என்றால், கம்பராமாயணம் கவிதைகளாலான காப்பியமாக திகழ்கிறது. தொன்மை நாடினால், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும், சங்கத்தமிழ் தொகுப்புகளும், செய்யுள் இலக்கியத்தை அழகுற அமைத்து, எழிலூட்டி, கவின் பதுமைகளாக, திகட்டும் சுவையுடன், நம்மை நனவுலகத்திலிருந்து கனவுலகத்திற்கும், கனவுலகத்திலிருந்து நனவுலகத்திற்கும், எடுத்து சென்றன, செல்கின்றன, என்றென்றும் செல்லும் என்பது தமிழறிஞர்களின் ஏகோபித்த முடிபு. புதுக்கவிதையாயினும், நவீனத்துவக்கவிதை என்று சொல்லிக்கொள்ளப்படுவது ஆயினும், கண்ணதாசனுக்குப் பிறகு அவை மங்கலமாயினும் மங்கலான ஒலியும், ஒளியும் தான். இந்த மனஸ்தாபத்தை நான் நீட்டி முழக்கி, விருது கட்டுரையை அமைப்பதின் நோக்கம், அந்தந்த வார ‘வல்லமை’ வரவுகளை பரிசீலிக்கும்போது, எனது மனநிறைவு அதிகம் பாதிக்கப்பட்டது என்ற உண்மை. இந்த வாரம் என்னால் விருது அறிவிக்க இயலவில்லை என்று சொல்லிவிடலாமோ என்று கூட வியாகூலம் அடைந்தேன்.

உரை நடையை தவிர்த்து கவிதை வடிப்பதின் நோக்கம் தான் சொல்லவந்ததை ~ கருத்தோ, சொல்லாட்சியோ, சொல்லாமல் சொல்வதோ, சொல்லியும் மறைக்கும் மர்மமோ, ஒன்றை சொல்லி பலவற்றை பகர்வதோ, வள வள என்றெழுதி ஒன்றை மட்டும் குறிப்பால் உணர்த்துவதோ! ~ எனவும், மேலும் பலவும் அடுக்கிச்சொல்லலாம். இவை ஒன்றையும் அளிக்காமல் சொற்களின் கும்பல்களும் கவிதா தரணியில், சருகு இறகு அடித்துப் பறக்க விழையும் தட்டான் பூச்சிகளைப் போல், தோன்றி மறைகின்றன. சில வண்ணத்துப்பூச்சிகள் போல் அழகுடன் தோன்றி, அதையும் அழித்துக்கொண்டு மறைந்து விடுகின்றன. மனத்தைத்தொட்டு தங்கிவிடும் தன்மையை காணமுடியவில்லை. அப்படியானால், கவிஞர்கள் என்ன செய்யவேண்டும் என்ற வினாவுக்கு விடை தேடி உங்கள் முன் அதை வைக்கவேண்டிய பணியும் எனக்கு கொடுக்கப்பட்டதாக உணருகிறேன். அதில் குற்றம் காண, திருத்தி அமைக்க, வழி மொழிய வாசகர்களுக்கு இல்லாத தகுதி வேறு யாருக்கு உண்டு?

உத்திகள் பல வேண்டும், கவிஞர்களே. மொழி,பொருளை உரைக்க, சொல்லை பயன்படுத்துகிறது. அந்த சொல்லை, ஒரு பெண்ணரசியாக பாவித்து சர்வாலங்காரபூஷிதையாக அவளுக்கு பொன்னகைகள் அணிவித்தால், அவளுடைய புன்னகை ஒரு லாகிரி. அது தான் கவிதையின் ரஹஸ்யம். உரை பேசும். கவிதை உணர்த்தும். அந்த மென்மையான திறனை மரபுக்கவிதைகளில் தாராளமாக கண்டு களிக்கிறோம்.(‘…குறுமகள்/ கைகவர் முயக்க மெய்யுறத் திருகி/ யேன்குயிர்ப் பட்ட வீங்குமுலை யாகந்/துயிலிடைப் படூஉந் தன்மைய தாயினும்..’ ~நற்றிணை 240) அவற்றிக்கான உத்தி முறைகளைத் தண்டியலங்காரம் போன்ற அணியிலக்கண நூல்களிலிருந்து கற்றுக்கொள்கிறோம். புதுக்கவிதைக்காக அத்தகைய வழிகாட்டி நூல்கள் இல்லை என்றாலும், உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை போன்ற உத்திமுறைகளை அங்கே காண்பதால், மங்கலான ஒளியும், புத்தொளி பெற்று பட்டொளி வீச இயலும்.

முதல் பாடம். மரபுக்கவிதைகளை அனுபவித்துப்படிப்பது. மேலோர் அளித்த உரைகளை திரும்பத்திரும்ப படித்து, தெளிவும், சுவையும் காண்பது. அடுத்தது, உத்திகளை கற்பது. மூன்றாவது, ஒரே கவிதையை பல தடவை, பல வகைகளில் படைத்து அழகு பார்ப்பது. சில உதாரணங்கள்:
இலையுதிர்காலம் இல்லாமலேயே

உதிருகின்ற உயர்திணை மரங்கள்

(தமிழன்பன்)

அஃறிணை மரங்களில் காலத்தை அனுசரித்து, இலைகள் துளிர்க்கும், உதிரும். உயர்திணை மரமாகிய ஏழைக்கு பட்டினிச்சாவு என்றும் வரலாம். இது அதை உணர்த்தும் குறியீடு.

இந்த வார ‘வல்லமையில்’:

‘…தண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்
அமிழ்த்தி விடுகிறாய் என் மனதை…’

(மந்திரச்சொல்)

உவமை அணி/ குறீயிடு/ பாவனை என்றெல்லாம் நான் விவாதிக்கபோவதில்லை. என் மனதை கவர்ந்த அணி, இது. ஏனெனில், ஒரு சொல் குறிப்பிட்ட பொருளை உணர்த்துகிறது. தன்னோடு நெருக்கமான தொடர்புடைய பொருளைக் குறித்த உணர்வு என்ற நுட்பம் போற்றத்தக்கது.

அங்கதமானது அதி நுட்பமானது. இந்த நகைச்சுவை வல்லமை மடலாடும் குழுவில் படும் துன்பம் யாவரும் அறிந்ததே. விருதாவாகக்கூட அதற்கு விருது அளிக்கும் காலம் வெகு தூரம் என்ற தோற்றம். ஆனால் பாருங்கள், இந்த அங்கதம் அதி நாகரீக எள்ளல். எதிரிடை பதிவு நகைச்சுவையுடன்தான்!

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை !

(ஞானக்கூத்தன்)

இந்த வார ‘வல்லமையில்’ அங்கதம்:

‘தாள முடியாமற் போகிறது
உனதன்பைச்
சில சமயங்களில்…’

(மந்திரச்சொல்)

‘முரண்’ என்றைக்கும் முரண்டு பிடிக்காத அருமையான சொல்லணி. ஒன்றுக்கு ஒன்று எதிரானவைகளைக் கொண்டு அமைப்பது முரண் என்னும் உத்தியாகும். மரபுக் கவிதைகளில் முரண்தொடை எனக் கூறப்படும். மாறுபட்ட இரு பொருள்களை அடுத்தடுத்து இணைத்துப் பார்ப்பதில் சுவை கூடும்; நினைவிலும் நிற்கும்.

நாங்கள்
சேற்றில்
கால் வைக்காவிட்டால்
நீங்கள்
சோற்றில்
கைவைக்கமுடியாது !

‘…சீறிச்சினந்ததைப் பொருட்படுத்தாமல்
சில்லறையாய்ச் சிதற விடும் சிரிப்பால்…”

(மந்திரச்சொல்)

 

இந்த வாரத்து ‘வல்லமையாளர் சாந்தி மாரியப்பன் என்று மட்டில்லா மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

இன்னம்பூரான்

ஜூலை 9, 2012

பி.கு. 2007ம் வருடத்து மேற்கோள், ஈவா வில்டன் (2007): நற்றிணை: A Critical Edition and an Annotated Translation of the Narrinai:தமிழ்மண் பதிப்பகம். அவர் இந்த மாதம் சென்னை ரோஜா முத்தையா ஆய்வு மையத்தில் பேசுகிறார். அங்கு சென்று நல்வரவு கூறுங்களேன்.

நான் பல நூல்களையும், இணைய தளங்களையும் படித்த பின் எழுதிய கட்டுரை, இது. உசாத்துணை பட்டியல் நீண்டது. அவை யாவற்றிற்கும் என்ன்னுடைய நன்றி நவில்கிறேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “வல்லமையாளர்

 1. வல்லமையாளர் விருது பெற்ற “மந்திரச் சொல் மகாலட்சுமி”யை…அதாவது கவிதாயினி சாந்தி மாரியப்பன் அவர்களை வாழ்த்துகிறேன்.

 2. இந்தக் கவிதைக்கு பென் சாரின் பாராட்டையும் சேர்த்து கிடைக்கும் இரண்டாவது விருது இது. வாழ்த்துக்கள் சாந்தி!

 3. வல்லமையாளர் சாந்தி மாரியப்பனுக்கு வாழ்த்துகள் !

 4. மந்திரச் சொல் என்ற இந்தக் கவிதை, நுணுக்கமான உணர்வுகளைக் கூர்மையாக வெளிப்படுத்துகிறது. வல்லமையாளர் சாந்திக்கு வாழ்த்துகள்.  உங்கள் ஆற்றலுக்கும் உழைப்புக்கும் இன்னும் பல சிகரங்கள், உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

 5. வல்லமையாளர்,
  நற்கவி நாஞ்சில் சாந்திக்கும்,
  அதன்
  தேர்வுரையில் ஜொலிக்கும்
  ‘எண்டிசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய’
  இன்னம்பூரான் அவர்களுக்கும் 
  என்னினிய வாழ்த்துக்கள்…!
         -செண்பக ஜெகதீசன்…

 6. வாழ்த்துரை வழங்கிய,
  திரு. முகில் தினகரன்,
  திரு. இளங்கோ,
  திரு. மோகன் குமார்,
  திரு. அண்ணா கண்ணன்,
  திரு. செண்பக ஜெகதீசன்..
  உங்கள் அனைவரின் உற்சாக வாழ்த்துரைகள் மேலும் ஊக்கமளிக்கின்றன. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

 7. மனதை வருடும் கவிதைகளுக்குச் சொந்தக்காரரான அமைதிச்சாரலுக்கு அன்பான வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *