கிருஷ்ணர் பிறந்த மதுரா கோவில்- ஒரு அனுபவம்
மோகன் குமார்

ஆக்ரா௦- டில்லி இரு ஊர்களுக்கும் நடுவே உள்ளது மதுரா. டில்லி- ஆக்ரா நேஷனல் ஹைவேயில் இருந்து உள்ளே இறங்கி சில கிலோ மீட்டர்கள் சென்றால் வரும் சிறிய ஊர் தான் மதுரா.
மதுரா கோயிலை ஒட்டி ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தில் தான் கம்சன் கிருஷ்ணனுக்கு முன் பிறந்த குழந்தைகளை போட்டு கொன்றதாக ஐதீகம். அதனால் இந்த குளத்தை யாரும் பார்ப்பதோ, செல்வதோ இல்லை என்கிறார்கள்.
கடைகள் இங்கு மிக குறைவு. இருப்பனவும் மிக சிறிய கடைகள் தான்.
கோயிலில் சூடம் காட்டுவதோ, குங்குமம் போன்றவை தருவதோ இல்லை. ஆரத்தி என்கிற ஆராதனை ஒரு நாளைக்கு குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே செய்வார்கள். அப்போது தான் தீபாராதனை காட்டுவார்களாம்.
கோயிலுக்கு செல்லவோ, செருப்பு வைக்கவோ எதற்கும் பணமில்லை. கோயிலுக்கு அருகே உள்ள கடைகளில் பொதுவாய் தண்ணீர், பிஸ்கட் போன்றவை விலை சற்று அதிகம் விற்பார்கள். ஆனால் இங்குள்ள தனியார் கடைகளில் தண்ணீர் பாட்டில் ஐந்து ரூபாய் கம்மியாய் விற்கிறார்கள் .. இது ஆச்சரியமாய் இருந்தது.
மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்துக்கு அருகிலேயே ஒரு மசூதி உள்ளது. இப்படி அடுத்தடுத்து இந்து மற்றும் முஸ்லீம் மசூதி இருப்பதால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இவை இரண்டுக்கும் மிக அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளே நுழையும் போது செம செக்கிங் நடக்கிறது.

இந்த கோவில் பற்றி படிக்கும்போது சில தகவல்கள் மனதை தைக்கிறது. அவுரங்கசீப் இந்த கோவிலின் பெரும்பகுதியை இடித்து விட்டு அதன் அருகிலயே மசூதி கட்டினார் என்பதும் பின் 1965-ல் மீண்டும் இந்த இடம் இந்துக்களின் புனித இடம் என கிருஷ்ணர் கோவில் கட்டப்பட்டதாகவும் தெரிகிறது.
பகல் நேரத்தில் சென்றால் இங்குள்ள பிரகாரங்களில் நடக்க ஏதுவாக திக் சாக்ஸ் போட்டு செல்வது நல்லது.
பூசாரிகள் மஞ்சள் சட்டை, மஞ்சள் வேஷ்டி அணிந்து பேசாமல் அமர்ந்துள்ளனர். ஆரத்தியில் போது மட்டுமா தான் இவர்களுக்கு வேலை போலும்.
கிருஷ்ணர் பிறந்த இடத்தை “பால கிருஷ்ணா ” இடம் என்கின்றனர். பின் மனைவியுடன் உள்ளதை ராதா-கிருஷ்ணா இடம் என்கின்றனர். இவை தவிர இன்னொரு கிருஷ்ணாவும் உண்டு. எங்கள் பஸ்ஸில் வந்த கைடு இது பற்றி ஆங்கிலத்தில் சொன்னதை அப்படியே தருகிறேன்:
“Krishna borning this place. Here three Krishna. First Krishna Bala Krishna. Second Krishna Birth Krishna. Third Krishna Radha Krishna. Birth of Krishna only here”
இப்படி “தெளிவாக” விளக்கினார் கைடு :))
கிருஷ்ணர் பிறந்த இடத்துக்கு மிக குறுகலாக உள்ள இடம் வழியே செல்கிறோம். கிருஷ்ணர் பிறந்தது ஒரு சிறையின் அறைக்குள்அல்லவா? அதனால் தான் அந்த இடம் மிக குறுகலாக உள்ளது. சுவற்றில் கிருஷ்ணர் பிறந்த போது நிகழ்ந்த சம்பவங்கள் படம் வடிவில் உள்ளன. கிருஷ்ணர் பிறந்த தொட்டில் போன்றவை அங்கு உள்ளன.அதை அனைவரும் பக்தியுடன் தொட்டு வணங்குகின்றனர். ” கிருஷ்ண பகவான்க்கி ஜே” ” கிருஷ்ண பரமாத்மாக்கி ஜே ” என்று மக்கள் உரக்க குரல் கொடுக்கின்றனர்.
கிருஷ்ணர் தன் துணையுடன் கவுன் போன்ற பெரிய உடை அணிந்து காட்சி தருகிறார்.
மதுராவில் நிறைய மாடுகள் இன்றும் பலரும் வளர்ப்பதை காண முடிகிறது. பால் கோவா இங்கு மிக அருமையாய் இருக்குமாம்.

மதுராவில் லஸ்ஸி மிக பாப்புலராம். தேவா குடிக்கலாம் என்றபோதும் நான் பஸ்ஸில் செல்வதால் வயிறு புரட்டும் என வேண்டாம் என்று சொல்லி விட்டேன். மதுரா போய் விட்டு லஸ்ஸி குடிக்கலையா என சில நண்பர்கள் ஆச்சரியமாய் கேட்டனர்.
நாங்கள் பனிக்கர் டிராவல்ஸ் மூலம் ஆக்ரா கோட்டை, தாஜ் மஹால் மற்றும் மதுரா சுற்றி பார்த்தோம்.
நாற்பது பேர் அமரும்பேருந்தில் மூன்று தொலைக்காட்சிப் பெட்டிகள், கொஞ்சம் கொஞ்சம் தூரம் விட்டு வைத்திருந்தனர். ஹிந்தி சினிமா மட்டுமல்லாது, டிவி இணைப்பும் உள்ளது. மாலை ஐ.பி. எல் மேட்ச் பார்த்துக் கொண்டே வந்தோம்.
ஆக்ரா கோட்டை, மதுரா ஆகிய இடங்களுக்கு கைடு வந்தார். தாஜ் உள்ளே கைடு அனுமதி இல்லை என்பதால் அவர் உள்ளே வரவில்லை. அவர்கள் வந்த இடங்களில் எல்லாம் உள்ளே செல்வதற்கான டிக்கெட் நம்மிடம் பணம் வாங்கி மொத்தமாய் வாங்கி தந்து விடுகிறார்கள். இதனால் அதற்கு கியூவில் நிற்கும் தொந்தரவும் இல்லை.
பனிக்கர் மூலம் பயணிப்போர் பெரும்பாலும் தென் இந்தியர்கள் என்பதால் காலை மற்றும் மதியம் இரண்டு வேளையும் தென்னிந்திய உணவு ஏற்பாடு செய்தது பாராட்ட வேண்டிய விஷயம் !
புகைப்படங்களுக்கு நன்றி:
http://interestingindianravi.wordpress.com/madura/