நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-3)
ஸ்ரீஜா வெங்கடேஷ்
அந்த ஞாயிற்றுக் கிழமை பிளான் செய்தபடி சுமதி அக்கா வீட்டிற்குப் போனார்கள். புறப்படும்முன் கல்யாணி சுந்தரத்தைப் படாத பாடு படுத்தி எடுத்து விட்டாள். “என்னங்க இந்தச் சேலையைக் கட்டட்டுமா?” என்று கேட்பாள், அவன் ஏதோ ஒரு நினைவில் ‘சரி’ என்பான். இவளும் கட்டிக் கொண்டு வந்து கண்ணாடி முன்னால் நின்று “சே! என்னங்க இது? என் கலருக்கு இது நல்லாவேயில்லையே? நீங்களும் சொல்லவே இல்லையே!” என்று சொல்லி விட்டு வேறு ஒரு புடவையைச் சுற்றிக் கொண்டு வருவாள். இப்படியே கிட்டத்தட்ட மூன்று நான்கு புடவைகள் மாற்றி விட்டாள். சுந்தரத்துக்கானால் எரிச்சலான எரிச்சல்.
“கல்யாணி நாம சினிமாவுக்குப் போகணும், வெளியில போகணும்னா நொடியில டிரெஸ் பண்ணிக்கிட்டு வந்து நிப்பே? ஏன் இப்போ இப்படிப் பண்றே? உனக்கு என்ன மூளை கழண்டு போச்சா? உங்க அக்கா வீட்டுக்குத்தானே போறோம்? ப்ரைம் மினிஸ்டரையா பாக்கப் போறோம்?”
“என்னங்க இவ்ளோ சாதாரணமாச் சொல்லிட்டீங்க? அவங்க எவ்ளோ பெரியவங்க தெரியுமா? சின்ன வயசுலர்ந்தே எனக்கு அந்த அக்கான்னா ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நல்லாப் படிப்பாங்க. நீட்டா டிரெஸ் பண்ணுவாங்க. அவங்க முன்னாடி நாம அச்சு பிச்சுன்னு போயி நிக்க முடியுமா?”
“என்னவோ போ. நீ ரொம்பத்தான் அலட்டிக்கறே? காலையில என் சட்டை பேண்டை நீதான் பாத்து எடுத்து வெப்பேன்னு மீட்டிங்குக்கு நான் போட்டுக்கற சட்டைய எடுத்து வெச்சே. அதுக்கே நான் ஒண்ணும் சொல்லல்ல. நீ ரொம்ப ஓவராப் பண்ணா எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா கோவம் வருது, ஆமாம்.. சொல்லிட்டேன்”
“கோச்சுக்காதீங்க! அந்த அக்கா ஐ.டி கம்பெனியில சீஃப் மேனேஜரா இருக்காங்க தெரியுமா? அது எவ்ளோ பெரிய பதவி? நாமளும் அதுக்குத் தக்கபடி போகணும் இல்லே?”
“அவங்க பெரிய ஆபீசர்னா அது அவங்களோட. நாமும் எந்த வகையிலயும் அவங்களுக்குத் தாழ்ந்துடல. அதை நெனச்சிக்கோ”.
இருவரும் ஒரு வழியாகக் கிளம்பி அடையார் வந்து சேர்ந்தனர். கல்யாணி சொன்னபடி அவர்கள் வீட்டைப் பார்த்தாலே பணம் நன்கு தெரிந்தது. ஆனால் அவர்கள் எந்த பந்தாவும் இல்லாமல் நன்றாகப் பழகினார்கள். அது சுந்தரத்துக்குச் சந்தோஷமாக இருந்தது. சுமதி அக்காவின் கணவர் ஒரு லாயர் என்பதால் நன்றாகப் பேசினார். சுந்தரத்துக்கும் அவருக்கும் அறிமுகம் செய்து வைத்து விட்டு அவர்கள் பாட்டுக்கு உள்ளே போய் விட்டார்கள். சுமதியின் கணவர் கலகலப்பான சுபாவம் உள்ளவர் என்பதால் அவர் பேச்சுக் கொடுத்தார். பொதுவான விஷயங்கள் பேச ஆரம்பித்து நீண்டு கொண்டே போனது பேச்சு.
“ஏன் சார்! நீங்க போபால்ல பெரிய கம்பெனில லீகல் அட்வைசரா இருந்துருக்கீங்க! சென்னை வந்தும் அதே ஜாபைக் கண்டின்யூ பண்ணியிருக்கலாமே, ஏன் வேலையை விட்டுட்டீங்க? என்றான் சுந்தரம்.
“அட போங்க சார்! என்ன ஆபீஸ் வேண்டிக் கெடக்கு? எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவளும் கல்யாணமாகிக் கனடாவுல இருக்கா. என் ஒய்ஃபும் நிறையச் சம்பாதிக்கறாங்க. எனக்கு எதுக்கு சார் இந்த ஆபீஸ் டென்ஷன்? இத்தனை வருஷம் ஓடி ஓடிச் சம்பாதிச்சாச்சு. நிம்மதியா நாலு எடம் போகணும்னா ஆபீஸ் வேலையில முடியுதா? லீவு குடுக்க மாட்டேன்பான். பத்து நாள் லீவு கேட்டா மூணு நாள் குடுப்பான். எதுக்கு அதெல்லாம்னுதான் வேலையை விட்டுட்டேன்.”
“அப்போ எப்படி சார் பொழுது போகுது?”
“நான்தான் தமிழ் நாடு பார் கவுன்சில் மெம்பராயிட்டேனே. கோர்ட்டுக்குப் போவேன். சின்னச் சின்னக் கேசஸ் அட்டெண்ட் பண்ணுவேன். வீட்டு வந்து நிம்மதியா டிவி பாப்பேன். அவ்ளோதான் சார். என்ன பணம் இருந்தாலும் வாழ்க்கையை அனுபவிக்கறதுக்கு டயம் வேணும் சார். என்ன சொல்றீங்க?”
“ஆமாமா! கரெக்டுதான் சார். எனக்கும் உங்களை மாதிரி வேலையை ரிசைன் பண்ணிட்டு என்னிக்குடா வீட்டுல உக்காருவோம்னுதான் இருக்கு. ஆனா என்ன செய்ய? எனக்கு நிறைய கமிட்மெண்ட் இருக்கே”
“ஆமாமா! கமிட்மெண்ட் எல்லாம் முடிச்சுட்டுத்தான் வி.ஆர்.எஸ் குடுக்க முடியும். ஆனா உங்களை மாதிரி பேங்குல வேலை பாக்கறவங்களுக்கு என்ன சார் டென்ஷன்?”
“என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க? நான் லோன் புராசசிங் செக்க்ஷன்ல இருக்கேன். எனக்குக் கீழ இருக்கறவங்கள்லாம் லஞ்சம் வாங்கிக்கிட்டு டாக்குமெண்ட்ஸ் சரியா இல்லாத பார்ட்டிங்களுக்கெல்லாம் லோனைக் குடுத்துத் தொலைச்சிடறாங்க. அதனால கலக்க்ஷன் ரேட் குறையுது. அது மட்டுமில்ல ஆடிட்டுல மேல் அதிகாரிங்க என்னைப் போட்டுக் குடைவாங்க. நான் அங்கயும் சொல்ல முடியாம இங்கயும் பேச முடியாம முழிக்க வேண்டியதுதான்”
“ஏன் சார்? உங்களுக்குக் கீழ இருக்கறவங்க லஞ்சம் வாங்கினா நீங்க உங்க மேலதிகாரிங்க கிட்ட புகார் பண்ண வேண்டியது தானே? இதையெல்லாம் வளர விடக் கூடாது சார்.”
“நீங்க சொல்றது சரிதான். ஆனா புரூஃப் இல்லாம எப்படிப் புகார் சொல்ல முடியும்? அப்படியே சொன்னாலும் கிணத்துல போட்ட கல்லு மாதிரிதான் கெடக்கும். வீணா நமக்கு அவங்களோட விரோதம்தான் வளரும். அதுதான் எல்லாத்தையும் அட்ஜஸ்ட் செய்துக்கிட்டு போய்க்கிட்டு இருக்கேன்.”
“என்ன சார் நம்ம பாட்டுக்குப் பேசிக்கிட்டேயிருக்கோம். லேடீஸ் ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு தெரியலையே? என்றார் சுமதி அக்காவின் கணவர்.
உள்ளே கல்யாணியும் சுமதி அக்காவும் பழைய நினைவுகளை அசைபோட்டு முடித்து விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்துக்கு அப்போதுதான் திரும்பிக் கொண்டிருந்தனர்.
“கல்யாணி! உன் கூட பேசிக்கிட்டு இருந்தா நாம பழையபடி ஸ்கூல் டேஸுக்கே போயிட்ட மாதிரி இருக்கு. அதுதான் எவ்ளோ சந்தோஷமான காலம்.இல்ல?”
“ஆமாங்க்கா! என்ன சொன்னாலும் அந்த நாட்கள் மாதிரி வராது”
“கல்யாணி! நீ என் பொண்ணோட கல்யாண ஃபோட்டோ பாக்கவேயில்லேல்ல? இரு காட்டறேன்” என்ற சுமதி நேரே கம்ப்யூட்டரை நோக்கிச் சென்றாள்.
“என்னக்கா ஃபோட்டோ காட்டறேன்னு கம்ப்யூட்டர் கிட்ட போறீங்க? “
“இதுலதான் எல்லா ஃபோட்டோவும் ஸ்டோர் பண்ணி வெச்சுருக்கேன். சிடியில இருந்து இதுக்குக் காபி பண்ணி வெச்சுக்கிட்டேன். இரு காட்டறேன்” என்றவள் கம்ப்யூட்டரை இயக்கினாள். அதை ஒரு அதிசயம் போல் பார்த்துக் கொண்டிருந்த கல்யாணி, எல்லா ஃபோட்டோக்களையும் பொறுமையாகப் பார்த்தாள்.
“கல்யாணி! உன்னோட இ-மெயில் ஐடி குடு. என் பொண்ணு கேட்டுக்கிட்டே இருக்கா. உனக்கும் மெயில் அனுப்புவா”
“எனக்கு அதெல்லாம் என்னன்னே தெரியாதுக்கா”
“என்ன? உனக்கு இ-மெயில் ஆபரேட் பண்ணத் தெரியாதா? என்ன கல்யாணி இப்படி இருக்க? படிக்கற நாள்ல எவ்ளோ புத்திசாலியா இருந்த? ஏன் இப்போ இப்டி மாறிப்போயிட்ட? இவ்ளோ படிச்சும் வேலைக்குப் போகாமே வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிக்கிட்ட. இப்போ லேட்டஸ்ட் டெவலப்மெண்ட் தெரியாம இருக்க?”
கல்யாணிக்கு முகம் சாம்பிப் போனது. “சே! அக்கா முன்னாடி இப்டித் தலை குனியும்படியா ஆயிடிச்சே? நா சமயக்கட்டே கதின்னு கேடந்துட்டேன். நிகிலும் அதுதான் ஃபீல் பண்றான். எல்லாம் இவரு பண்ற வேலை. என்னடா நம்ம பொண்டாட்டி படிச்சவளாச்சே! வீட்டுல கம்ப்யூட்டர் இருக்கே அவளுக்குக் கொஞ்சம் கத்துக் குடுப்போம்னு தோணுச்சா அவருக்கு?” என்று மனதுள் பொருமியவாறு உட்கார்ந்திருந்தாள்.
“என்ன யோசிக்கற? கவலைப் படாதே! படிப்புக்கு வயசே கெடையாது. நீ இனிமே கூடக் கத்துக்கலாம். இப்ப எவ்ளோ ஹவுஸ் ஒய்ஃப்ஸ் கம்ப்யூட்டர் எல்லாம் கத்துக்கிட்டு புராஜெக்ட் பண்ணிக் குடுக்கறாங்க தெரியுமா? காசுக்குக் காசு. பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்கு. நானே உனக்கு சொல்லித் தருவேன், ஆனா எனக்கு டயம் இல்ல. அதான் யோசிக்கறேன்”
“நீங்க இவ்ளோ சொன்னதுக்கப்புறமும் நான் கம்ப்யூட்டர் கத்துக்காம இருப்பேனாக்கா? உடனே கத்துக்கறேன்.”
“சரி சரி! நாம பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருக்கோம். அவங்களுக்குக் குடிக்கக்கூட ஒண்ணும் குடுக்கல” என்றபடி சுமதி சமையலறையை நோக்கி நடந்தாள்.
மேலும் சிறிது நேரம் பேசிவிட்டுப் புறப்பட்டு விட்டார்கள்.
“கல்யாணி! உங்க அத்தான் செம ஜாலியா இருக்காரு.”
“ம்”
“என்னன்னு கேக்க மாட்டியா? சரி நானே சொல்றேன். பொண்டாட்டி சம்பாதிக்கற தைரியத்துல அந்த மனுஷன் வேலையை விட்டுட்டு உக்காந்துருக்காரு. நான் நெனச்சா அந்த மாதிரிப் பண்ண முடியுமா? அதுக்கெல்லாம் யோகம் வேணும்.” என்றான் சிரித்துக் கொண்டே.
“இப்போ என்ன? என்னைக் கட்டிகிட்டு நீங்க அவஸ்தைப் படுறீங்க. அதானே? எனக்கு எதுவுமே தெரியாது. வேலைக்குப் போய்ச் சம்பாதிச்சுப் போடத் துப்பில்லாதவ. அதானே சொல்ல வர்றீங்க?”
அதிர்ந்து விட்டான் சுந்தரம். தான் ஏதோ சாதாரணமாகக் கிண்டல் செய்தது ஏன் இவளை இவ்வளவு தூரம் பாதிக்க வேண்டும்? ஏதோ நடந்திருக்கிறது” என்று ஊகித்துக் கொண்டவன்
“ஏம்மா! நான் சாதாரணமாச் சொன்னதை ஏன் இவ்ளோ தப்பா நெனச்சுக்கறே? என்ன நடந்தது? உங்கக்கா எதுவும் சொன்னாங்களா?”
அவ்வளவுதான். அந்தக் கேள்விக்காகவே காத்திருந்ததது போலக் கொட்டித் தீர்த்து விட்டாள். ஆட்டோ என்று கூடப் பார்க்கவில்லை.
“அக்கா என்ன சொல்றது? எனக்காத் தெரியாதா? உன் இ- மெயில் ஐடி என்னங்குறா? நான் என்ன சொல்ல? கம்ப்யூட்டரே தெரியாதான்னு கேக்குறா? வீட்டுல கம்ப்யூட்டர் இருந்தும் நீங்க ஒரு நாளாவது என்னைக் கத்துக்கோன்னு சொல்லியிருக்கீங்களா? என்னை கிச்சன்லயே போட்டுப் பூட்டி வெச்சுட்டீங்க. உங்களுக்கும் உங்க பையனுக்கும் வித விதமாச் சமச்சிப் போடுற சமயக்காரியா என்னை ஆக்கிட்டீங்க. என் படிப்பே எனக்கு மறந்து போச்சு. என்னை வளர விடாமப் பண்ணிட்டீங்களே”
“இத பாரு கல்யாணி! மனசாட்சியோட பேசு. கல்யாணத்துக்கு அப்புறமும் வேலை பாத்துக்கிட்டுருந்த நீ, நிகில் பொறந்ததும் அவனைப் பாத்துக்க ஆளில்ல. குழந்தையைக் கிரஷ்ல விட்டுட்டு என்னால நிம்மதியா வேலை பாக்க முடியாது, அவனைப் பிரிஞ்சும் இருக்க முடியாது அதனால வேலைக்குப் போக மாட்டேன்னு சொன்ன. நான் அப்பவே நல்லா யோசிச்சுக்கோன்னு சொன்னேயில்ல? இப்ப என்னைப் போயி உருட்டற? இதப்பாரு கல்யாணி! மத்தவங்களோட நாம நம்ம வாழ்க்கையை கம்பேர் பண்ண ஆரம்பிச்சோம்னா நமக்கு நிம்மதியே இருக்காது. நீ வீணாப் போட்டு மனசைக் குழப்பிக்காத!”
“சரி! வேலை விஷயத்தை விடுங்க! நானும் படிச்சவ தானே. கம்ப்யூட்டர் கத்துக்கச் சொல்லி நீங்க என்னை என்கரேஜ் பண்ணியிருக்கலாம்ல? இப்போ நெட்டெல்லாம் கத்துக்கிட்டு பொம்பளைங்க வீட்டுல இருந்தே சம்பாதிக்கலாமாமே? அதப் பத்தியெல்லாம் எனக்கு என்னிக்காவது சொல்லியிருக்கீங்களா?
“இப்போ என்ன சொல்ல வர? நான் உன்னை அடக்கி வெச்சுட்டேன்னா? உனக்கு என்னதான் வேணும்? அதைச் சொல்லேன்”
“நான் கப்யூட்டர் கத்துக்கணும். நீங்க எதுவும் சொல்ல வேணாம். நானும் கப்யூட்டர் கத்துக்கிட்டு சம்பாதிச்சுக் காட்டுறேன். அப்பத்தான் என் அருமை உங்களுக்குத் தெரியும்.”
“நீ தாராளமா கம்ப்யூட்டர் கத்துக்கோ, ஆனா சம்பாதிக்கறதெல்லாம் வேணாம். இப்போ கம்ப்யூட்டர் வேர்ல்டுல ஏகப்பட்ட ஏமாத்து வேலை நடக்குது. கத்துக்கோ அது மட்டும் போதும்.”
“மறுபடியும் பாத்தீங்களா? நான் சம்பாதிச்சா உங்களுக்கு என்ன? நம்ம வீட்டுக்குத்தானே வருமானம் வரப் போகுது? ஏங்க அதை நீங்க புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்க?”
“சரி சரி! இங்க வெச்சு நம்ம சண்டையை ஆரம்பிக்க வேணாம். நீ என்ன வேணுமனாலும் பண்ணு. உன் இஷ்டம். பிரச்சனையில எதுவும் மாட்டிக்காமே இருந்தா சரிதான். எனக்கென்ன நீ நெறய சம்பாதிச்சேன்னா உங்க அத்தான் மாதிரி நானும் வேலைக்கு வி.அர்.எஸ் குடுத்துட்டு ஜம்முன்னு வீட்டுல உக்காந்து ரெஸ்ட் எடுப்பேன். அவ்ளோதான்.”
“இந்தக் கிண்டல் பண்ற வேலையெல்லாம் வேணாம். இதுக்காகவாவது நான் கஷ்டப்பட்டுப் படிச்சு வீட்டுல இருந்தே உங்களை விட ஜாஸ்தி சம்பாதிச்சுக் காட்டல, என் பேரு கல்யாணி இல்ல. என்னப் பாத்தா உங்களுக்கெல்லாம் கிண்டாலா இருக்கா? நிகில் என்னடான்னா எங்கம்மாவுக்குக் கம்ப்யூட்டர் தெரியாததால அவங்க கூட சில விஷயங்களை ஷேர் பண்ண முடியல்லன்னு சொல்றான். சுமதி அக்கா என்னன்னா, ஏன் இப்டி மக்கு மாதிரி இருக்கேன்னு கேக்காமக் கேக்கறாங்க? நீங்க இப்படிப் பேசுறீங்க? உங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லியே தீருவேன்.”
“கல்யாணி! கம்ப்யூட்டர் படிக்கறதுங்கறது ஒரு நல்ல விஷயம். அதை ஏன் இப்படி பழி வாங்குற உணர்ச்சியோட செய்யற? நீ நல்லாப் படிச்சா எனக்கு சந்தோஷம்தான்.” என்றான் சுந்தரம்.
யார் என்ன சொன்னாலும் சரி. அடுத்த நாளே நல்ல கம்ப்யூட்டர் செண்டராகப் பார்த்துச் சேர வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள் கல்யாணி. அந்தத் தீர்மானத்தால் சுந்தரத்தின் வேலைக்கே ஆபத்து வரும் என்று தெரியாமல் ஒரு வேகத்தோடு இருந்தாள்.
(தொடரும்)
படத்திற்கு நன்றி:http://www.imagesource.com/stock-image/Two-women-talking-IS572-004.html