திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-11)

0

விஜயகுமார்

திடீரென ஒரு அழைப்பு. ஐரோப்பாப் பயணம். அது சரி எத்தனைக் காலம்தான் இதே கோபால் பல்பொடி விளம்பரம் போல தெற்கு ஆசியாவையே சுற்றிச் சுற்றி வருவது.

சினிமாக்காரனுக்கும் அரசியல்வாதிக்கும் மிகவும் பிடித்த நாடு-கடந்த பல நூற்றாண்டுகளாகப் போருக்குச் செல்லாத ஒரே நாடு – ஆம்..  சுவிட்சர்லாந்த் தலைமைச் செயலகத்தில் மீட்டிங் என்றவுடன் – ஆஹா கரும்பு தின்னக் கூலியா என்று மளமளவெனப் பயண வேலையில் இறங்கி விட்டேன்.

முதலில் செங்கண் விசா – கோ செங்கட் சோழருக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை – ஒருங்கிணைந்த ஐரோப்பிய யூனியன் நுழையும் விசாதான் செங்கண் விசா. அதை வாங்க ரொம்பக் கெடுபிடி! இருந்தும் முடிவில் கிடைத்தது. சிங்கையில் இருந்து பாங்காக் சென்று அங்கே இருந்து பதினான்கு மணி நேரம் ஜுரிக்! அங்கிருந்து மூன்று மணி நேரம் ரயில் பயணம் -ஜெனீவா!!

’தாய் ஏர்’ பிசினஸ் கிளாஸ் என்பதால் ராஜ மரியாதை – முழுவதுமாகச் சாயும் ஸ்லீப்பர் படுக்கை. நன்றாகத் தூக்கம் போடப் போர்வை, கண்களை மறைக்கப் பட்டி, காலுக்கு வுல்லன் சாக்ஸ் – தூங்கி எழுந்தவுடன் உபயோகம் செய்ய டூத் பேஸ்ட், பிரஷ், சீப்பு, கோலோன் என்று அனைத்தையும் ஒரு அழகிய டாய்லெட் பையில் போட்டுக் கொடுத்தார்கள்.

எனினும் கண்ணெதிரே இருந்த அழகிய திரையில் நமது விருப்பத்துக்கு நல்ல புதுப் படங்கள் பல ஓடியதால் தூங்க மனம் வரவில்லை – ஒரு காலத்தில், அதுதான் தூர்தர்ஷனில் ஒரே சானல் வரும் காலம், பள்ளி விடுமுறைகளில் ‘டெக்’ வாடகைக்கு எடுத்து எதிர் வீடு, பக்கத்து வீடு, மாடிவீடு என்று அனைவரும் ஒரே ரூமுக்குள் வேள்வி நடத்துவது போல அடுத்தடுத்துப் படங்களைப் பார்த்துத் தள்ளிய விட்ட குறையோ என்னமோ! ஒரு வழியாக ஜுரிக் வந்தவுடன்தான் தூங்காமல் வந்ததன் அலுப்பு தெரிந்தது.

விமான நிலையத்தில் கீழ்ப்பக்கத்திலேயே ரயில் நிலையம் இருந்தது. எனினும் அங்குமே ஆங்கிலத்தில் பலகைகள் இல்லை. பிரெஞ்சு, இட்டாலியன், ஜேர்மன் மட்டுமே. கடையில் சென்று பசிக்கு ஒரு பிஸ்கட் வாங்கலாம் என்றால் – அங்கும் அதே கதி தான்! ரயில் டிக்கெட் வாங்கச் சென்றால் கவுன்டரில் இருந்த பெண்மணிக்கு சுத்தமாக ஆங்கிலம் பேசத் தெரியவில்லை. எப்படியோ டிக்கெட் வாங்கி விட்டு அடுத்த ரயில் எத்தனை மணிக்கு என்று கேட்க முயற்சி செய்தேன் – அவள் திரும்பத் திரும்ப டிக்கெட் சீட்டைப் படிக்கச் சைகை செய்தாள் – அதிலும் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் இல்லை. இங்கே ஒன்றும் தெரியப் போவதில்லை என்று வெளியில் வந்தேன். அங்கே பலரிடம் ஆங்கிலத்தில் வழி கேட்டேன் – ரயில் படம் போட்ட பலகையாவது வைத்து இருக்க வேண்டும் இவர்கள் . முடிவில் ஒரு வழியாக ஒரு ஜப்பானியர் படிக்கட்டைக் காட்டினார் – சூட்கேஸ், லேப்டாப் பை என்று இரண்டையும் தூக்கிக் கொண்டு இறங்கினேன். அங்கே மீண்டும் குழப்பம் – ஜெனீவா செல்ல எந்தப் பக்கம் செல்லும் ரயிலில் ஏற வேண்டும்? நல்லபடியாக அங்கே ஒரு அம்மணி நான் திருவிழாவில் காணாமல் போன மாதிரி நிற்பதைப் பார்த்து விட்டு கையில் உள்ள சீட்டைப் பார்த்துத் தலையைப் பலமாக ஆட்டி அடுத்த பக்கம் இருந்த பிளாட்பார்மைக் காட்டினாள். மீண்டும் பொட்டியைத் தூக்கிக் கொண்டு படிகளில் ஏறிப் பக்கத்து பிளாட்பாரம் வந்து இறங்கினேன்.

இரண்டு நிமிடத்தில் ரயில் வந்தது. ஏறி அமர்ந்தேன் – கம்பர்ட்மென்ட்டில் நாலு ஐந்து பேர் தான் இருந்தனர். வெளியில் இருந்த பொதுக் கூட்டம் அதிகமாக இருந்ததே என்று யோசிக்கும் போதே – கோட் போட்ட டி.டி.ஆர் வந்தார். என் சீட்டைப் பார்த்து விட்டுத் தலையை ஆட்டி மேலே உள்ள போர்டைக் காட்டினார் – ஒன்லி இங்கிலீஷ் என்று சொன்னவுடன், அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் இது பர்ஸ்ட் கிளாஸ் என்று சொன்னவுடன் – ஆஹா, நம்மை அனைவரும் சரியான மாக்கான் என்று நினைப்பார்களே என்ற தயக்கத்துடன் பொட்டியை எடுத்துக்கொண்டு அடுத்த பெட்டிக்குச் சென்றேன். அங்கே சரியான கூட்டம். ஒரு இடம் கிடைத்தது. அமர்ந்தவுடன் பின்னால் நான்கு பேர் வருவதைப் பார்த்து மனசு கொஞ்சம் சமாதானம் ஆகியது – இவர்களும் நம்மைப் போல “மாக்கான்”தான்! வெளியில் புகழ் பெற்ற சுவிஸ் காட்சிகள் – எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேர் என்று புல் வெளி. மூன்று மணி நேரம் பறந்ததே தெரியவில்லை.

லேக் ஜெனீவா என்றவுடன் எதோ நம்ம ஊரு செட்பெட் அல்லது ஊட்டி கொடைக்கானல் லேக் என்று நினைத்திருந்தேன். ஆல்ப்ஸ் மலைச்சாரலில் சுமார் 350 கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் இதை எதிர் பார்க்கவில்லை. அதுவும் அதனை ஒட்டிய பூங்காவில் துலிப் மலர்களின் ஸ்பெஷல் கண்காட்சி நடந்துக் கொண்டு இருந்தது. இந்த வண்ணங்களில் இப்படிப் பூத்துக் குலுங்கும் துலிப் மலர்களை இது வரை பார்த்ததே கிடையாது. அப்போது தொலைவில் வெள்ளிப் பனிக்கட்டிகளைத் தலையில் சுமந்த ஆல்ப்ஸ் மலை தெரிய நீரில் ஒரு அன்னம். இப்போது புரிகிறது எதற்கு நம்ம படங்களில் ஹீரோ மெக்கானிக் வேலை பார்த்தாலும் டூயட் பாட இங்கே வந்து விடுகிறார்கள் என்று.

இந்த அன்னம் மீண்டும் ஒரு இடத்தில் பார்த்தோம். ஒரு கோட்டை மாளிகை – காசில் – சாட்டூ டி சில்லான் – அய்யோ இது அடுத்த ஹன்சிகா பாட்டில்லை – Château de Chillon (Chillon Castle)!

அந்தக் கோட்டையின் சுவர்களின் அடியில் இந்தப் பெரிய அன்னத்தின் கூடு – அதில் அது ஓணானை அடித்து மதிய உணவுக்குப் பார்சல் கட்டிக்கொண்டு வந்துள்ளது போல.

அருமையான இந்தக் கோட்டை மாளிகையைப் பற்றிப் படிக்கப் பிரமிப்பாய் இருந்தது. பொதுவாகத் தமிழகத்தில் மாமன்னர்கள் பலர் இருந்தும் ஒரு சில கோட்டைகள் மட்டுமே காணப்படுகின்றன. அப்படியும் பெரிய அரண்மனை எதுவும் பிழைத்ததாகத் தெரியவில்லை. இந்த அரண்மனை சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை என்று சொல்கிறார்கள்.

இந்தக் கோட்டை அரண்மனையில் எனக்கு மிகவும் பிடித்தவை மூன்று. ஒன்று நமது மன்னர்களின் சின்னங்கள் கொண்ட கொடிகளைப் போல – இவர்களின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் – கொண்ட கொடிகள். முக்கிய அறையில் பெரிய டைனிங் டேபிள் – அருகில் அறை சூடாக இருக்கக் கட்டை எரிக்கும் கூடம், அடுத்த அறையில் சென்றால் பெரிய கரடி ஒன்று – சந்திரமுகி படத்தில் பேய் பங்களாவில் பயப்பட்ட வடிவேலுதான் நினைவுக்கு வருவார். – அந்த அறையில் பல இடங்களில் அழகிய ஓவியங்கள் இருந்தன .அப்படியே பல நூற்றாண்டுகள் நம்மைப் பின்னோக்கித் தூக்கிச் சென்றது அந்தக் காட்சி.

அடுத்து, அரசாங்கக் கைதிகளை அடைத்து வைக்கும் நிலவறைச்சிறை. வந்தியதேவனும் குந்தவையும் ஒரு பக்கம் நினைவில் வர மறுபக்கம் அலெக்சாண்டர் டுமாசின் கவுன்ட் ஆஃப் மொண்டே கிறிஸ்டோ! வெளிச்சமே வராமல் இங்கே அடைக்கப்பட்ட கைதிகளைப் பற்றி நினைக்கையில் மனதில் ஒரு விதத் திகில் பரவியது. அப்படி அடைக்கப்பட்ட ஒருவர் தனது உள்ளக் குமுறல்களையும் தனது நம்பிக்கையையும் அந்தச் சுவர்களில் கரிக்கட்டியைக் கொண்டு தீட்டி இருப்பது மனித இனத்தின் சரி, தவறு என்ற கோட்பாடு, தண்டனை போன்ற பலவற்றைப் பற்றிய பார்வையை மாற்றியது.

முடிவில் மேல் தளத்தில் ஒரு நூதன சாதனம் என்னைக் குழப்பியது. படுக்கை அறைக்கு அடுத்து இருந்த அறையில், அதுவும் கரைப் பக்கம் இல்லாமல் லேக் பக்கம், அந்தரத்தில் வெளியில் நீட்டிக்கொண்டிருந்த அந்த அறையில் ஒரு பக்கத்தில் இந்தச் சதுர ஓட்டைகள் இருந்தன. அவை என்ன என்று அருகில் இருந்த ’கைட்’ இடம் கேட்டபோது – அவர் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். மீண்டும் அருகில் சென்று எட்டிப் பார்த்தால் – கீழே வெகு தொலைவில் தண்ணீர் தெரிந்தது! அடடே, இது நவீனக் கழிவறை! அலம்பி விடவோ அள்ளிப் போடவோ தேவையில்லை.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *