வார ராசி பலன் 16.07.2012 முதல் 22.07.2012
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: மாணவர்கள் சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்தால், வேலையில் அதிகக் கவனம் செலுத்தலாம். பெண்கள் மருத்துவச் செலவுகளைக் குறைக்க, பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருதல் நல்லது. வியாபாரிகள் வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருந்தால் கடன் தொல்லை இன்றி வாழ்க்கை ஓடும். கலைஞர்கள் தன் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியை மேற்கொண்டால், வெற்றியைத் தன் பக்கம் வைத்துக் கொள்ள முடியும். நிர்வாகத் திறமை கொண்ட பணியாளர்கள் மற்றவர்களோடு வீண் வாக்குவாதத்தில் இறங்காமலிருந்தால் தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வது எளிது.
ரிஷபம்: பெண்கள் பேச்சில் நிதானமாக இருந்தால், உடன் இருப்பவர்களின் உதவி எப்போதும் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நம்பகமான நிறுவனங்களை அணுகினால், பண நஷ்டம் மனக் கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிகமாகப் புகழ்பவர்களிடமிருந்து விலகி இருப்பது அவசியம். இந்த வாரம் கலைஞர்களுக்குப் பயணங்களால் அலைச்சலும், ஆயாசமும் அவ்வப்போது வந்து போகும். பணியில் இருப்பவர்களுக்கு வழக்கு விவாகாரங்களில் நேரடிக் கவனம் தேவை.
மிதுனம்: கர்ப்பிணிப் பெண்கள் சரியான உணவுப்பழக்கம், முறையான தூக்கம் இரண்டையும் மேற்கொண்டால், ஆரோக்கியம் பொலிவோடு திகழும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் மாணவர்களின் கனவுகள் நனவாகும். பணியில் இருப்பவர்கள் நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் குறைவாகவே இருக்கும். எனவே வேலைகளைத் தள்ளிப்போடாமல் உடன் செய்வது நல்லது. கலைஞர்கள் கடன் வாங்கி ஆடம்பரச் செலவுகள் செய்வதைக் குறைத்துக் கொண்டால், சேமிப்பு தானே உயரும். பொது வாழ்வில் இருப்பவர்கள், உடன் இருப்பவர்களிடம் கோபதாபங்களை வெளிபடுத்துவதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
கடகம்: பெண்கள் பிள்ளைகளைக் கண்டிக்கும் போது கனிவையும் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. மாணவர்கள் போட்டிகளைச் சவாலாக ஏற்றுக் கொண்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது முக்கியம். சுய தொழில் புரிபவர்கள் கொடுக்கல்- வாங்கல் ஆகியவற்றில் நம்பிக்கையோடு சிறிது புத்திசாலித் தனத்தையும் சேர்த்துக் கொள்வது முக்கியம். வியாபாரிகள் முக்கியமான பொறுப்புக்களைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ளுதல் நல்லது.
சிம்மம்: சுய தொழில் புரிபவர்கள் நன்கு உழைத்தால் வாழ்வை வளமான பாதைக்கு மாற்றிக் கொள்ளலாம். மாணவர்கள் விலை உயர்ந்த பொருள்களைத் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளைக் கட்டுக்குள் வைத்து விட முடியும். பெண்கள் நண்பர்களைக் கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம். பணியில் இருப்பவர்கள் தேவையான இடங்களில் பணிவைப் பயன்படுத்தினால், நல்ல பெயரோடு பெறும் லாபமும் அதிகரிக்கும். இந்த வாரம் கடன் தொல்லைகளினால் வியாபாரிகளின் மனதில் சிறிது சஞ்சலம் ஏற்படலாம்.
கன்னி: மாணவர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம். கலைஞர்கள் பிறரின் நிறை குறைகளை அலசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. பெண்கள் தேர்வு நேரங்களில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்துவது அவசியம். எவ்வளவு நெருக்கமான நண்பரென்றாலும், பணியில் இருப்பவர்கள் பண விஷயங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதை தவிர்த்தல் நலம். இந்த வாரம் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.
துலாம்: பெண்கள் பொறுமையாக நடந்து கொண்டால், குடும்பத்தில் சச்சரவு, கருத்து வேறுபாடு ஆகியவை நுழையாமல் இருக்கும். மாணவர்கள் பாடங்களைக் கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேரப் பதற்றத்தையும், பரபரப்பையும் குறைத்துக் கொள்ளலாம். சுய தொழில் புரிபவர்கள் சோம்பலையும், பணிகளைத் தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், வாய்ப்பும், அதிர்ஷ்டமும் உங்களைத் தேடி வரும். பொது வாழ்வில் இருப்பவர்கள் குற்றம் குறைகளைப் பெரிது படுத்தாமலிருந்தால், கூட்டு முயற்சிகள் மூலம் அதிக லாபமும், நல்ல பெயரும் பெற முடியும்.
விருச்சிகம்: பெண்கள் பிள்ளைகளின் போக்கை அவ்வப்போது கவனித்து வாருங்கள். அவர்களின் வாழ்க்கையும், கல்வியும் சீராக அமையும். மாணவர்கள் நண்பர்கள் நடுவே தோன்றும் கருத்து வேறுபாடுகளைப் பெரிது படுத்தாமலிருப்பது புத்திசாலித்தனம். இந்த வாரம் வீட்டை விரிவுபடுத்துவதில் அதிகப் பணம் முடங்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். சுய தொழில் புரிபவர்கள் வேண்டாத தொல்லைகளிலிருந்து விடுபட எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதோடு பணம் செலவு செய்வதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
தனுசு: இந்த வாரம் பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், பெண்கள் ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைப்பது அவசியம். இந்த வாரம் எவ்வளவு பாடுபட்டாலும், நல்ல பெயரைப் பெறுவது என்பது சற்றுக் கடினமாக இருக்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் தீருவதால் மாணவர்களின் நட்பு மீண்டும் பலம் பெறும். கலைஞர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். முதியவர்கள் உணவு, உரையாடல் இரண்டிலும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது
மகரம்: மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாய்ப் பணம் பெறுவது கொடுப்பது இரண்டையும் தவிர்த்தால் வீண் தலைவலி வராமலிருக்கும். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். பெண்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். பொறுப்பில் இருப்பவர்கள் வழக்கு விவகாரங்களை நேரடியாகக் கவனித்துக் கொண்டால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களையும், அதன் மூலம் வெற்றிகளையும் பெற்று மகிழ்வர்.
கும்பம்: பெண்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களைச் சரிவர செய்கிறார்களா என்று கவனித்துக் கொள்ளவும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம். பணியில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்களின் உயர்வுக்கு உரமாக இருக்கும். சரளமான பணப் புழக்கத்தால், வியாபாரிகள் மனதில் கூடாரமிட்டிருந்த சஞ்சலங்கள் குறைந்து உற்சாகம் கூடும்.
மீனம்: பெண்கள் அனுசரணையான போக்கை மேற் கொண்டால், குடும்பம் அமைதியாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணியில் இருப்பவர்கள் பல சலுகைகள் எதிர்பார்த்திருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நிறைவேறும். கலைத் துறையினர் புதிய முயற்சிகளுக்கு வரும் தடைகளைத் தங்கள் திறமையால் வென்று சாதனை படைப்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களைச் செம்மைப்படுத்துவதோடு தங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், அதிக லாபம் பெறலாம்.