தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-2)

முகில் தினகரன்

முந்தைய பகுதியை வாசிக்க..
‘வாங்க!.. வாங்க!” வாயெல்லாம் பல்லாக வரவேற்றான் சுந்தர்.

மாப்பிள்ளையின் தாயாரும் தந்தையும் முன்னே வர, அவர்களுக்குப் பின்னே வந்தான் மாப்பிள்ளை. ஆவர்களைத் தொடந்து கல்யாணத் தரகருடன் ‘கிசு..கிசு”வென்று ஏதோ பேசிக் கொண்டே வந்த பெண்மணி, அநேகமாய் மாப்பிள்ளைப் பையனின் அக்காவாயிருக்க வேண்டும். அதே முக ஜாடை.

முன்னறையில் எல்லோரும் அமர்ந்ததும், சமையலறையிலிருந்து, கையைத் துடைத்துக் கொண்டே ஓடி வந்து வரவேற்றாள் லட்சுமி.

மைதிலி, தேவியின் அறைக்குள் புகுந்து கடைசி நேர மேக்கப் டச்சப் செய்தாள்.

வழக்கமான பேச்சு வார்த்தைகளும், பலகாரப் பரிமாற்றங்களும் முடிந்ததும், தேவி காபி டம்ளருடன் தட்டுத் தடுமாறி வந்து எல்லோருக்கும் விநியோகித்து விட்டுச் சென்றாள்.

அதற்குப் பிறகு அங்கு நிலவிய அவஸ்தையான அமைதியைத் தரகரே உடைத்தார். ‘ம்.. சும்மாவே உட்கார்ந்திட்டிருந்தா எப்படி?.. மாப்பிள்ளைப் பையன் எதையோ சொல்லத் துடிக்கறாப்புலத் தெரியுது.. கேளுங்க!”

மாப்பிள்ளையின் தாயார் குனிந்து மகனிடம் எதையோ பேசினார்.

அக்காக்காரியும் எழுந்து வந்து தம்பியிடம் எதையோ கேட்டாள்.

தந்தையோ எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்கிற பாணியில் பதவிசாக அமர்ந்திருந்தார்.

‘ம்.. பையனுக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்காம்!.. இனி மேற்படி விஷயங்களைப் பேசிட வேண்டியதுதான்” மாப்பிள்ளைப் பையனின் தாயார் சொல்ல,

லௌகீக விஷயங்கள் பற்றிய பேச்சு ஆரம்பமானது.

அந்தப் பேச்சு வார்த்தை வளர.. வளர.. சுந்தரின் அடி வயிற்றில் அமிலம் உற்பத்தியாகிக் கொண்டேயிருந்தது.

ஆரம்பத்தில் சுந்தருக்கு சாதகமாய்ப் பேசிக் கொண்டிருந்த தரகர், போகப் போக தடம் மாறி சுந்தரின் தலையில் பாரத்தை ஏற்றிக் கொண்டே போனார்.

தர்ம சங்கடத்தில் நெளிந்தான் அவன்.

கடைசியில்.

‘ஆக.. நாங்க எப்ப வேணாலும் ரெடி!.. உங்க சைடுல பேசினபடி பதினஞ்சு பவுன் நகையும்.. பத்தாயிரம் ரெக்கமும் ரெடியானதும் சொல்லியனுப்புங்க.. அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வெச்சுக்கலாம்!..” பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் மாப்பிள்ளையின் தாயார்.

‘தம்பியும் ரெடிதான்!.. என்ன?.. காசெல்லாம் வெளிய குடுத்திருக்கு.. அதெல்லாம் கைக்கு வந்து சேர வேண்டாமா?.. அதுக்குத்தான் கொஞ்சம் டைம் ஆகும்!.. அதனால பரவாயில்லை.. தம்பி சீக்கிரமே ஏற்பாடு பண்ணிடுவாரு!.. என்ன தம்பி.. நான் சொல்றது சரிதானே?” தரகர் அசடு வழியக் கேட்க,

‘சரி‘யென்று தயக்கமாய்த் தலையாட்டி வைத்தான். அந்தச் சூழ்நிலையில் ‘இல்லை.. என்னால முடியாது‘ என்றா சொல்ல முடியும்?

‘அப்ப.. நாங்க கௌம்பறோம்.. சீக்கிரமே சொல்லியனுப்புங்க!”

அந்தக் கூட்டம் கிளம்பி, டாக்ஸியில் ஏறிப் பறந்தது. தரகர் மட்டும் அவர்களுடன் போகாமல் அங்கேயே தங்கினார்.

‘என்ன தம்பி.. திருப்திதானே?” பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டிருந்த ஏதோவொன்றை நோண்டியபடியே கேட்ட தரகரை எரித்து விடுவது போல் பார்த்தான் சுந்தர்.

‘என்னப்பா.. நான் கேட்டுட்டே இருக்கேன்.. ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறே?”

‘என்னத்தைச் சொல்லுறது?.. நீங்க பாட்டுக்குப் பதினஞ்சு பவுனுக்கும்.. பத்தாயிரம் ரொக்கத்திற்கும்.. ஒத்துக்கிட்டீங்க.. நான் எங்க போறது?”

‘என்ன தம்பி இப்படிப் பேசறீங்க.. அருமையான இடம் தம்பி.. விட்டா நமக்குத்தான் நட்டம்!”

‘அதெல்லாம் சரிதான், நான் இல்லேங்கலை.. ஆனா நம்மால முடியணுமே!”

‘முடியும் தம்பி.. எல்லாம் முடியும்!”

‘இங்க பாருங்க தரகரய்யா.. என்னோட நிலைமை உங்களுக்கு நல்லாத் தெரியும்.. தறிக ஓடியே ஆறு மாசத்துக்கும் மேலாச்சு!.. சொஸைட்டிக்காரன் எப்பப் போய்க் கேட்டாலும் ‘நூல் இல்லை‘ன்னு கைய விரிக்கறான்!.. ஜீவனத்துக்கே பெரும்பாடா இருக்கு.. இந்த நிலைமைல.. .எப்படி.. ”

‘அட.. உன் நிலைமை மட்டுமா இப்படி இருக்கு?.. இந்த நாமக்கல் மாவட்டம் மொத்தமுமே.. தறித் தொழில் நசிஞ்சு போய்க் கெடக்கு!.. அதுக்காக எந்த வீட்டிலேயும் விஷேச காரியங்கள் நடக்காமலா இருக்கு?.. எதையாவது செய்ய வேண்டியதுதான்.. இதைத்தூக்கி அதுல போடணும்.. அதைத் தூக்கி இதுல போடணும்..”

‘என்கிட்ட தூக்கிப் போடுறதுக்கெல்லாம் எதுவும் இல்லைங்கய்யா.. என்னோட சொத்தே.. அந்த நாலு தறிகதான்!.. அதைத்தான் விக்கணும்!”

‘வித்துரு!” ஒரே வார்த்தையில் தரகர் ‘வெடுக்‘கென்று சொல்ல,

‘அப்புறம்?.. புவாவுக்கு எங்க போறது?”

‘தம்பி.. இப்ப மட்டும் என்ன அந்தத் தறிக ஓடிக்கிட்டா இருக்கு?.. நின்னுதானே கெடக்கு?.. அதனால இப்போதைக்கு அதுகளை வித்துக் காரியத்தைச் செய்!.. அப்புறம் தொழில் சரியாகட்டும்.. லோன் கீன் போட்டு நாலு தறிக வாங்கிட்டாப் போச்சு!”

யோசித்தான் சுந்தர். ‘இவர் சொல்றதும் ஒரு விதத்துல சரிதான்!.. தறிகளை வித்துட்டா என்ன?..ம்.. அப்படியே அதுகளை வித்தாலும் கல்யாணச் செலவுக்கும், கொஞ்சமா நகைக வாங்கத்தான் பத்தும்.. மீதிக்கு?”

சிந்தனையில் இருந்தவனின் தோள்களில் ஒரு கை வந்து விழ, நிமிர்ந்தான்.

அம்மா!

‘என்னம்மா.. நீ என்ன சொல்றே?”

‘தரகர் சொல்றதுதான் சரின்னு படுதுப்பா.. மொதல்ல பொட்டப் புள்ளைய வெளியில் அனுப்புற வழியப் பார்ப்போம்!.. அப்புறமா தினக் கூலிக்குத் தறி ஓட்டியாவது.. நம்ம வயத்தைக் கழுவுவோம்!.. நல்ல காலம் ஒண்ணு வராமலா போய்டும்?”

அம்மாவும் அதையே சொல்ல, தறிகளை விற்கும் முடிவில் தெளிவானான். ஆனால், மீதித் தொகைக்கு என்ன செய்வது என்பதில் மட்டும் குழப்பமாகவே இருந்தான்.

தேவியின் அறைக்குள்ளிருந்து வெளியில் வந்த மைதிலி, ‘தேவிக்கு மாப்பிள்ளைப் பையனை ரொம்பப் பிடிச்சிருச்சாம்.. உள்ளார போய்ப் பாருங்க இப்பவே கனவு காண ஆரம்பிச்சுட்டா!” என்றாள் மலர்ந்த முகத்துடன். அந்த மலர்ச்சியின் பின்புலத்தில் இன்னொரு காரணமும் இருப்பது சுந்தருக்குத் தெரியும்.

‘இவர்கள் எல்லோரின் சந்தோஷத்தையும் நிரந்தரமாக்கும் பொறுப்பு இப்ப என் கையில் இருக்கு.. எப்படி?.. எப்படி?.. அதைச் செய்யப் போறேன்?” தலையில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு குனிந்து அமர்ந்தான்.

(தொடரும்..)

படத்திற்கு நன்றி: http://www.eegarai.net/t19630-topic

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *