தமிழ்த்தேனீ

நடை பயிலுங்கள் என்று அடிக்கடி மருத்துவர்கள் சொல்கின்றனர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவன் நான் அறுவை சிகிச்சை முடிந்து இரண்டாம் நாளிலிருந்தே மருத்துவ மனையிலேயே நடக்கத் தொடங்கினேன். ஒரு வாரம் சிறிது சிறிதாக வேகத்தை அதிகப்படுத்தி நடக்க தொடங்கினேன். உறவினர்கள் கேட்டனர் அறுவை சிகிச்சை முடிந்து இப்போதுதான் குணமாகி இருக்கிறீர்கள் அதற்குள் என்ன அவசரம் என்று
நான் அவர்களுக்கு பதில் கூறினேன் இங்கே மருத்துவ மனையில் நான் நடக்கத் தொடங்கி எனக்கு ஏதேனும் ஆகிவிட்டால் உடனடியாக மருத்துவர்கள் என்னை காப்பாற்றி விடுவார்கள்.

மாறாக நான் இங்கே நன்றாக ஓய்வெடுத்துவிட்டு வீட்டுக்குப் போனவுடன் நடக்க ஆரம்பித்து அங்கே என் உடல் நிலை சரியில்லாமல் போனால் சிகிச்சைக்கு என்னை எடுத்து வரவே தாமதமாகுமே. அதனால் இங்கேயே நடக்கிறேன் என்று நான் பதில் கூறியது நினைவுக்கு வருகிறது. அதன் பிறகும் வீட்டிற்கு சென்ற பின்னும் நடைப் பயிற்சியை விடாமல் தொடர்ந்தேன்.

இரண்டாம் வாரம் நான் சாலையில் நடக்கத் தொடங்கினேன் முதல் நாளே ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் என்னை மோதித் தள்ளிவிட்டு சென்றார்

மறுநாள் காரில் ஏறி அருகில் உள்ளபூங்காவுக்கு சென்று நடக்கத் தொடங்கினேன். அங்கே நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் நீங்கள் எழுத்தாளர்தானே இங்கே நடைப் பயிற்சி மேற்கொள்ளும் எங்களுக்கு ஊக்கம் தரும் வாசகம் ஏதேனும் எழுதிக் கொடுங்களேன் என்றார்கள்

“நடப்பது நல்லது, நேற்று நடந்ததும் இன்று நடப்பதும் நாளை நடக்க இருப்பதும் நன்மைக்கே ” என்று எழுதிக் கொடுத்தேன்

அப்படிப்பட்ட நான் சில நாட்களுக்கு முன் வேறு வீடு மாறினேன். இந்தப் பகுதியில் நடப்பதற்கு சரியான பூங்கா இல்லை. என் நடைப் பயிற்சி குறைந்தது. உண்ணுவது ,கணிணியில் வேலை செய்வது, தூங்குவது என்று இருக்க வேண்டிய நிலை.

மறுபடியும் உடல் பெருத்து வருகிறது. சரியென்று உணவைக் குறைத்தால் பலகீனமாகிறது. இப்படிப் பட்ட வேளையில் நான் கணிணியில் உட்கார்ந்து எழுதிக்கொண்டே இருப்பதால் இரவு தூங்க நேரம் ஆகிவிடுகிறது. காலையில் எழுந்திருக்கவும் தாமதமாகிறது. ஆனால் என் மனைவி தினமும் வேளைக்கு தூங்கி விடியற்காலையில் எழுந்து விடுவாள்

அவள் என்னிடம் நீங்க மறுபடியும் நடக்கத் தொடங்குங்கள் என்றால். எங்கே நடப்பது இங்கே சாலை சரியில்லை, தட்டுத் தடுமாறி நடக்க வேண்டியுள்ளது என்றேன்.

அவள் சொன்னாள் திருப்பதியில் இருப்போர் தினமும் வெங்கடாசலபதியை தரிசிப்பதில்லை, என்றாள். நாம் இருக்கும் சாலை நாற்பதடி அகலம், கிட்டத்தட்ட இரு பர்லாங் தூரம் நீண்ட சாலை , நல்ல சாலை இங்கேயே நடக்கலாமே, நான் தினமும் இந்தச் சாலையில்தான் நடந்துவிட்டு வருகிறேன் .அதைவிட்டுவிட்டு நடக்க நல்ல சாலை தேடிக்கொண்டிருக்கிறீர்களே என்றாள்

அப்போதுதான் உறைத்ததது நம் எல்லோருக்குமே அருகில் இருக்கும் எந்த உயர்வும் கண்ணில் படுவதில்லை என்று. ஆகவே கிட்டப் பார்வையை தொலைநோக்குப் பார்வையாய் மாற்றி அருகில் இருக்கும் உயர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று உறைத்தது.

தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி,
அக்கறைக்கு இக்கரை பச்சை என்னும் பழமொழிகள் நினைவுக்கு வந்தன

ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும். இப்போது சொல்லுங்கள் நான் எழுத்தாளனா இல்லை என் மனைவியா?

அன்புடன்
தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *