திவாகர்

ஐம்பெருங்காப்பியங்களில் மிகச் சிறந்த காப்பியம் என்றால் நான் உடனடியாக கண்ணை மூடிக்கொண்டே சொல்லி விடுவேன் சிலப்பதிகாரம்தான் என்று. மணிமேகலையும் எனக்குப் பிடிக்கும். அதுவும் பேராசிரியை ராஜம் அவர்களின் பாடத்துக்குப் பிறகு காவிய நாயகியான மணிமேகலையின் மேல் எனக்கு சிறப்பான பிடிப்பே எற்பட்டது கூட. ஆனாலும் சிலம்பு சிலம்புதான்.

காரணம் ஏராளமான சரித்திரக் குறிப்புகளை தன்னகத்தேக் கொண்டது சிலப்பதிகாரம்தான். இன்றும் நாம் குமரிக்கண்டம் என ஒரு தமிழ் முன்னோடி நாடு கடல் கொண்டதைப் பற்றிப் பேசிக்கொண்டும், சிலர் மிக சீரியஸாகத் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இளங்கோ அடிகளின் பஃருளி ஆறு பற்றியும் குமரிக்கண்டத்தைப் பற்றியும் கொடுத்த ஒரு சிறு குறிப்பினால்தான்.

இன்றைய திருவரங்கத்தைப் பற்றியும் திருவேங்கடத்தைப் பற்றியும் முதன்முதலாக குறிப்பு கொடுத்தது கூட இளங்கோதான். திருமலையில் நெடுமால் சூரியன் சந்திரன் தன் இரண்டு பக்கங்களிலும் நிற்க, வானமே கூரையாக தன்னந்தனியனாய் நின்ற திருக்கோலத்தை இளங்கோ வர்ணிக்கும் அழகே அழகு.

சிலம்பு தரும் சரித்திரக் குறிப்புகள் எத்தனையோ.. தமிழகத்தின் அந்த சங்க காலக் கட்டத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து வழங்கும் பாங்கும் அழகு. சேர சோழ பாண்டிய மும்மண்டலங்களையும் அதன் வளங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் நமக்கு விவரித்துச் சொல்கையில், வேறு எந்த மொழியிலாவது இப்படிப்பட்ட சரித்திர ஆதாரக் குறிப்புகள் கிடைத்துள்ளனவா என்று ஆராயத் தோன்றும். சிலம்பு சரித்திரக் குறிப்புகளையும் மட்டுமல்ல, தமிழன் வாழ்வையும், நாகரீகத்தையும் விவரித்து சொல்லிய காவியம். கலைகளை விவரிக்கும்போது கூட, அதுவும் நாட்டியக் கலையில் எத்தனையெத்தனை பிரிவுகள் காண்பித்ததோ..

இளங்கோ அடிகள் சமயங்கள் கடந்து தனக்கென ஒரு சமயமும் சேராதவர். சமயங்களைப் பற்றியும் சிலம்பு பேசுகிறது.. அப்படி இளங்கோ ஒவ்வொரு சமயத்தைப் பற்றியும் எழுதுகையில் அந்தந்த மதத்தில் தானும் இருப்பதைப் போல நமக்குத் தோன்றும். சிவனையும் கொற்றவையையும், ராமனைப் பற்றியும் கண்ணனைப் பற்றியும் அவர் எழுதுகையில் அவர் வேதமதத்தவர் என்று படிப்போர் சொல்வர். சமணக் கடவுளான அருகக்கடவுளைப் பற்றிப் பேசுகையில் அவர் சமணர்தான் என்றும் கூறுவர்.. எல்லாக் கடவுளர்களைப் பற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைத்து அவரவர்க்கு வேண்டிய கடவுளர்களை பூசித்துக்கொள்ளுங்கள் என ‘தெய்வம் தெளிமின், தெளிந்தோர் பேணுமின்’ என அவர் இறுதியாகவும் முத்தாய்ப்பாகவும் சொல்வது மிகவும் சிறப்பான கருத்தாகும்.

சிலம்பு அந்தக் கால தமிழிசையைப் பற்றிப் பேசுகிறது. இசையில் எத்தனை வகை இருந்தது என்பதையும் பேசுகிறது.. செய்யும் தொழில்கள் பற்றியும் பேசியது. எத்தனைவிதமான தொழில்கள்.. எத்தனைவிதமான வணிகர்கள்.. இதோ பன்முக நாயகியான மலர்சபா இனிமையான தமிழில் விவரிப்பதைப் படியுங்களேன்.

பிட்டு வணிகர்
அப்ப வணிகர்
கள் வணிகராம் வலைச்சியர்
மீன் வணிகராம் பரதவர்
வெள்ளை உப்பு வணிகராம்
உமணர் உமட்டியர்

கயிறு திரித்து விற்கும் பாசவர்
வெற்றிலை வணிகர்
வாசனைப் பொருள் வணிகர்
பல வகை மாமிச வணிகர்
எண்ணெய் வணிகர்
நிறைந்து காணப்படும்
ஊன்மிக்க வாழிடங்கள் இருந்தன.

வெண்கலத்தில் பாத்திரம் செய்யும் கன்னார்
செப்பு வேலை செய்யும் கொட்டிகள்
மரவேலை செய்யும் தச்சர்
வலிமை மிக்க கைகளுடைய கொல்லர்
ஓவிய வினைஞர்
மண்பாண்டம் செய்யும் குயவர்
பொன் வேலை செய்யும் கொல்லர்
இரத்தின வேலை செய்பவர்

துணிவேலை செய்யும் தையற்காரர்
தோல்பொருள் செய்யும் செம்மார்
துணிகள் கொண்டு
படம் முதலியன செய்வோர்
நெட்டிக் கோரைகள் கொண்டு
விலங்கு பறவை பூங்கொத்து முதலிய
கலைப்பொருள் செய்வோர்
என்று பலவாகக்
குற்றமற்ற கைத்தொழில்
செய்திடுவோர் பலரும்
வாழும் இடங்கள் இருந்தன.

இவையெல்லாம் குற்றமின்றி அமைந்து விளங்கப் பரந்து கிடந்தது அந்த மருவூர்ப்பாக்கம் எனும் புகார் நகரத்தின் ஒரு பகுதியாக இளங்கோ அடிகள் கூறியதை தன் எளிய தமிழில் மலர் சபா அவர்கள் எடுத்துக்கூறுகிறார்கள்.. எத்தனையெத்தனை தொழில்கள், எத்தனைவிதமான விளக்கங்கள்…. மலர் சபா எழுதும் இந்த பெருங்காவிய விளக்கத்தை, உரையை நான் விருப்பத்துடன் படிக்கிறேன். விருப்பத்துக்குக் காரணம் சரித்திரத்தில் எனக்குள்ள தீரா ஆர்வம்தான். அடுத்து இவர் எழுதப் போகும் பட்டினப்பாக்கம் பற்றியும் எப்படி விவரிக்கப் போகிறார் என்று ஆசை கூட வந்து விடுகிறது. அதுவும் இளங்கோ அடிகளின் அமுதத்தை மேலும் இனிமை கூட்டி இவ்வளவு எளிமையாக வழங்கும்போது என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு ஒரு வரம் என்று கூட சொல்லலாம்.

மலர்சபா அவர்களின் இந்தப் பணி மென்மேலும் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்களோடு, அவருக்கு வல்லமை குழுவினரின் இந்த வார விருதினையும் மன மகிழ்ச்சியோடு வழங்குகிறோம். அவரின் தமிழ்த் தொண்டு வாழ்க, வளர்க!!

www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “வல்லமையாளர்!

 1. மலர்சபாவுக்கு வாழ்த்துக்கள்! அவரின் தமிழ்த் தொண்டு வாழ்க, வளர்க!! திவாகர் நேர்த்தியாக எடுத்து கூறியிருக்கிறார். அவரின் தமிழ்த் தொண்டும் வாழ்க, வளர்க!!
  இன்னம்பூரான் 

 2. மலர் சபா தனது வலைப்பூவில் இந்த உரையை ஆரம்பித்த போதிலிருந்து தொடர்ந்து விரும்பி வாசித்து வருகிறேன். வல்லமையாளர் விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள் மலர்!

  சிறப்பான தேர்வு. தங்களுக்கும் நன்றி.

 3. தேர்வு செய்த வல்லமை குழுவினருக்கும், பாராட்டிய தோழமைக்கும் நன்றிகள்.

 4. சிறப்பான தேர்வு. செவ்விலக்கியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எளிய தமிழில் வழங்கும் பணியை மலர்சபா சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். நாம் வேகமாக மறக்கும் நம் பண்டைய வரலாற்றை லேசாகவேனும் நினைவுகூர, இது உதவுகிறது. மலர்சபாவுக்கு நம் வாழ்த்துகள்.

 5. வல்லமை வார விருது பெற்ற ‘மலர்சபா’ அவர்களுக்கு மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய திவாகர் அவர்கள் வாழ்த்தியது போல் ‘அவர் தமிழுக்குச் செய்யும் தொண்டு’ வளர்க என வாழ்த்துகிறேன்.

  நான் கிராமத்தில் பள்ளியில் பயிலும் போது, பள்ளிப் பாடங்களைத் தவிர, ஒரு சில கைவினைப் பொருள் செய்வதையும் ஒரு பாடமாக நடத்துவார்கள். பள்ளி மாணவர்களுக்கு விதவிதமான கைவினைப் பொருள் செய்து கொண்டுவருமாறு சொல்லுவார்கள். பனை மற்றும் தென்னை ஓலை, சணல், மண்பாண்டம், நெட்டி, இவற்றால் மாணவர்கள் செய்து கொண்டு வரும் கைவினைப் பொருள்களை, பள்ளி மாணவர்களிடத்திலேயே, ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை பள்ளிக்கூடங்களின் வளர்ச்சிப் பணிக்காக நன்கொடையாக எடுத்துக் கொள்வார்கள். சிறந்த கைவினைப் பொருட்களுக்கு ஆசிரியர் தேர்வு வைத்து, அதற்குப் பரிசு வழங்குவதும் உண்டு. 

  இந்த நிலை மாறி, இன்று ஒன்றுக்கும் உதவாத ‘தெர்மோக்கோல்’ என்று சொல்லப் படுகிற பொருளில் அழகுப் பொருள் செய்து கொண்டுவருமாறு, இன்றய பள்ளிக்கூடங்களில் வலியுறுத்தப்படுவது வருத்தப்படக்கூடியது. மலர் சபாவின் எழுத்துக்கள் எனது இளைமைக்கால (பள்ளிப் பருவம்)  நினைவுகளை எழுப்புகிறது. செய்யும் தொழில்களில் எத்தனை விதமான கைத்தொழில்கள் என்பதைப் படிக்கும் போது “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்” என்ற கவிமணியின் வார்த்தைகளை நினைவு கூர்ந்திருக்கிறார் மலர்சபா.

  பெருவை பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published.