Featuredஇலக்கியம்பத்திகள்

இதமற்ற அனுபவங்கள்

 

நாகேஸ்வரி அண்ணாமலை

இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்காவைப் பற்றி எழுதும்போது ஆஸ்பத்திரியில் ஒரு இதமான அனுபவம் என்று எழுதியிருந்தேன். அமெரிக்காவில் ஜ்னத்தொகையில் ஆறில் ஒரு பங்கு பேருக்கு மருத்துவ இன்சூரன்ஸ் இல்லையென்பது உண்மை. திடீரென்று உடல்நலம் குன்றினால் நாம் பார்க்க விரும்பும் டாக்டரைப் பார்க்க முடியாது. முதல்நிலை டாக்டரைப் பார்த்து அவர் நமக்கு ஸ்பெஷலிஸ்ட் உதவி தேவையென்று முடிவு செய்தால் அவரைப் பார்க்க அனுமதி அளிப்பார். பிறகு ஸ்பெஷலிஸ்டிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். அவர் எவ்வளவு ‘பிஸி’ என்பதைப் பொறுத்து ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ அவரைப் போய்ப் பார்க்கலாம். சில சமயங்களில் நாம் அவரைப் பார்க்கும் நாள் வருவதற்குள் நமக்குப் பூரணகுணம் கிடைத்துவிடலாம். அமெரிக்க மருத்துவத் துறையில் இப்படிச் சில குறைகள் இருந்தாலும் மருத்துவ மனைக்குள் நுழைந்துவிட்டால் – அது அவசர சிகிச்சைப் பிரிவு என்றாலும் சரி, வழக்கமாகச் செயல்படும் மருத்துவ மனை என்றாலும் சரி – நம்மை மிகவும் இதமாக நடத்துவார்கள். நாம் போக வேண்டிய பகுதிக்குள் சென்றவுடனேயே முதலில் அமர்ந்திருக்கும் ரிசப்ஷனிஸ்ட் நம்மிடமிருந்து பெற வேண்டிய விபரங்களைப் பெற்று அன்று நமக்கு அப்பாயிண்மெண்ட் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு நம்மை அங்கிருக்கும் ஆசனங்களில் அமருமாறு கூறுவார். பின் நர்ஸ் வந்து நம்மை டாக்டரிடம் அழைத்துச் செல்வார். டாக்டரும் நம்மிடம் பிரியமாக நடந்துகொள்வார். சில சமயங்களில் டாக்டர் நம்மைப் பார்த்து முடித்ததும் அறைக் கதவைத் திறந்துவிட்டு நம்மை வழியனுப்பி வைப்பார். ஏதாவது மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டுமென்றால் ரிசப்ஷனிஸ்ட்டிற்கு அருகில் இருப்பவரிடம் நமக்கு வசதியான தேதிகளைக் குறித்துக்கொண்டு வந்துவிடலாம். நாம் எதற்காக டாக்டரிடம் போனோம், நம் வியாதி என்ன என்பது போன்றவற்றை டாக்டரையும் நர்ஸையும் தவிர வேறு யாருக்கும் தெரியாதவாறு பார்த்துக்கொள்வார்கள். பல மருத்துவ மனைகளில் ‘தயவுசெய்து நோயாளிகள் பற்றி வெளியில் எதுவும் விவாதிக்காதீர்கள்’ என்ற அறிவிப்பு இருக்கும். ஒவ்வொருவருடைய அந்தரங்கத்தைக் காப்பதிலும் அமெரிக்கர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கது.

ஒன்று முதல் நூறு வரையிலான ஒரு அளவுகோலில் மேலே குறிப்பிட்ட அனுபவம் நூறாவது இடத்தைப் பிடிக்கிறதென்றால் இந்தியாவில் நேற்று ஏற்பட்ட அனுபவம் முதல் இடத்தைக் கூட பிடிக்காதுபோல் தெரிகிறது.

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் எங்களுக்கு உதவும் ஒரு தோட்டக்காரனுக்கு மரத்திலிருந்து விழுந்து காலில் எலும்பு முறிவும் தண்டுவடத்தில் சிறிது காயமும் ஏற்பட்டிருந்தன. நாங்கள் அமெரிக்காவிலிருந்து வருவதற்கு முன்பே எங்கள் பக்கத்து வீட்டு நண்பர் உதவியால் ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தான். சிகிச்சை முடிவதற்கு முன்பே அரசு மருத்துவ மனைக்குச் செல்ல ஆரம்பித்தான். நாங்கள் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு மறுபடி பழைய மருத்துவ மனைக்கே அவனை அழைத்துச் செல்வதென்று முடிவுசெய்தோம். அவனுக்குப் படிப்பே கிடையாது. இந்த ஊர் மொழியான கன்னடம் ஓரளவிற்கு எங்களுக்குப் பேச வரும் என்பதால் நாங்களும் உடன் செல்வதென்று முடிவு செய்தோம். மைசூரில் எல்லா இடங்களிலும் கன்னடம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்குத் தமிழ் தெரியும் என்றாலும் டாக்டர் கூறுவதையெல்லாம் புரிந்துகொள்ள நமக்குக் கன்னடம் தெரிந்திருந்தால் நல்லது.

மருத்துவ மனைக்குள் நுழைந்தவுடனேயே அங்குள்ள ஜனவெள்ளம் எங்களை அசத்தியது. ஒரு நோயாளியோடு பத்துப் பேராவது வந்திருப்பது போன்ற கூட்டம். எங்கும் எதிலும் ஒழுங்கு இல்லை. மருத்துவரைப் பார்க்கச் செல்லுமுன் நோயாளிகள் வரிசை என்ற ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு மருத்துவரைப் பார்க்கப் போகிறார்கள். ஹவுஸ் சர்ஜன்களோடு அமர்ந்திருக்கும் டாக்டர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நோயாளிகளைக் கவனிக்கிறார். ஒருவரை பரிசோதனை அறைக்குள் அனுப்பிவிட்டு இன்னொருவரைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்.

அமெரிக்காவில் டாக்டர் அறையில் ஒருவர் இருக்கும்போது இன்னொருவர் உள்ளே வரும் பேச்சே இல்லை. ஒருவரின் நோய் என்னவென்று மற்றவர்க்குத் தெரியக் கூடாது என்னும் ஒரு கட்டுப்பாடு. இந்தியாவில் என்னடாவென்றால் ஒரே நேரத்தில் பல நோயாளிகளைப் பார்க்கிறார்கள்.

இந்த டாக்டர்களும் நர்ஸுகளும் நோயாளிகளுக்கு எதையும் விளக்குவதில்லை. நாங்கள் கூட்டிச் சென்ற நோயாளி மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவன். யாரிடமும் எதையும் கேட்பதில்லை. அதுவும் நாங்கள் உடன் இருந்ததால் அவனாக எதையும் கேட்கவில்லை. அவன் சார்பில் நாங்கள் கேட்டால் அதன் பிறகு ஏதாவது சொல்கிறார்கள். எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் என்று சொல்கிறார்கள். அது எங்கே இருக்கிறது என்று சொல்வதில்லை. இவன் படிக்காதவன். இவனால் எப்படி குறியீடுகளைப் படிக்க முடியும்? அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இன்னொன்று. இவர்கள் எழுதியிருக்கும் நோய் பற்றிய குறிப்புகளை டாக்டர்களுக்கே புரியக் கூடிய மொழியில் எழுதுகிறார்கள். மருந்துகளின் பெயரையும் மருந்துக் கடைக்காரகளால் மட்டும்தான் படிக்கமுடியும். சரி போகட்டும். நோயாளிக்கு அவனுடைய நோய் பற்றிக் கூறவாவது வேண்டுமல்லவா? இன்னும் எத்தனை நாட்களுக்குப் பிறகு அவனுக்கு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கலாம் என்பது பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. எதற்காவது அவன் சரியாகப் பதில் சொல்லாவிட்டால் திட்ட மட்டும் செய்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். நேரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. டாக்டர் வருகிறார், வருகிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் வந்த பாடில்லை. டாக்டர் வந்து செய்ய வேண்டிய ஒரு பரிசோதனைக்காக டெக்னீஷியன் காத்துக்கொண்டிருக்கிறார். இன்ன நேரத்தில் டாக்டர் வருவார், இன்ன நேரத்தில் பரிசோதனை நடக்கும் என்று முன் கூட்டியே வரையறுத்துக்கொள்வது அவ்வளவு கஷ்டமா என்ன. இந்தியாவில் நேரம் எவ்வளவு முக்கியமானது என்று யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இத்தனைக்கும் இது அரசு மருத்துவமனை இல்லை. அரசு மருத்துவமனையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இது தனியார் நடத்தும் மருத்துவ கல்லூரிக்காக நடத்தப்படும் மருத்துவ மனை. மாணவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்குக் கல்லூரியில் இடம் கொடுக்கிறார்கள். இப்படி வாங்கிய பணத்தில் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செலவழித்து நோயாளிகளுக்கு வசதிகள் செய்து தரக் கூடாதா? மாணவர்களுக்கும் சரியான பயிற்சி இல்லை என்று கேள்விப்பட்டேன். அது மட்டுமல்ல, மாணவர்களின் தேர்வு வினாத்தாள்களை படிக்காமலே அவர்களுக்கு மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கொடுத்து அவர்களைத் தேர்வில் வெற்றி பெறச் செய்வது, மற்ற மாணவர்களை வேண்டுமென்றே பெயில் ஆக்குவது போன்ற செயல்கள் எல்லாம் இந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளுக்குக் கை வந்த கலை. இவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இதில் கூட்டு ஒப்பந்தம் இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த மருத்துவமனையில் கட்டணம் அதிகம் இல்லைதான். ஆனால் அதற்காக இந்த அளவிற்குச் சேவை மோசமாக இருக்க வேண்டுமா?

இப்போது இந்தியாவில் நிறைய மருத்துவ பரிசோதனை இடங்கள் தோன்றியிருக்கின்றன. மருத்துவர்கள் நிறையப் பேருக்கு பல சோதனைகள் செய்துகொள்ளச் சொல்கிறார்களா? அல்லது ஜனத்தொகை அதிகரித்திருப்பதின் எதிரொலியா? அல்லது பலருக்கு இப்போது நிறைய வியாதிகள் வருகின்றனவா? என்ன காரணம் என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் மருத்துவர்கள் சோதனைகளுக்கு எழுதிக் கொடுப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அவர்களுக்கு இதில் பணமும் கிடைக்கிறது. அமெரிக்காவில் பணம் பண்ணுங்கள் என்ற மந்திரத்தை எங்கும் கேட்கலாம். இங்கும் அது கேட்க ஆரம்பித்துவிட்டதா?

படத்திற்கு நன்றி :

http://www.yelp.com/biz_photos/7c-8eIGHbw7vLO1oh_vmyg?select=VgOk3hKrSlg7mPVlyn_AIg#VgOk3hKrSlg7mPVlyn_AIg

 

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    தக்கதொரு தருணத்தில் பிரசுரிக்கப்பட்ட இந்த விழிப்புணர்ச்சி கட்டுரையை வரவேற்கிறேன். அநேக அமெரிக்க விஷயங்கள் உண்மையென்றாலும், காசையும் தொலைத்து விட்டு, உகந்த கிகிச்சை கிடைக்காமல் அவதிப்படும் அமெரிக்கர்களையும், அமெரிக்காவில் தற்காலம் இருக்கும் நான் அறிவேன். காப்புரிமை இல்லையெனில் உடல் நலம் போச்சு. அது இருப்பின் காசும் போச்சு. இது நிற்க.

    திருமதி.நாகேஸ்வரி அண்ணாமலையும், இதழாசிரியரும் சம்மதித்தால், மற்றவர்களையும் எழுத வைத்து, இந்த கட்டுரையை முத்தாய்ப்பாக வைத்து, ஒரு ‘ஆரோக்கிய மாதா’ தொகுப்புத் தொடங்கலாம். ஆலோசனைக்குழு அங்கத்தினர் என்ற தகுதியின் பொறுப்பாக, அந்தத் தொடரின் பொறுப்பை ஏற்க நான் தயார். பின்னர், அதை நூல் வடிவில் பதிப்பிக்கலாம். ஆங்கில கட்டுரைகள் இரும்மும். தடை வேண்டாம். இனி ஆசிரியர் தீர்வு.

  2. Avatar

    .இரும்மும்’ அல்ல. ‘இருக்கும்.’

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க