கனம் கோர்ட்டார் அவர்களே! – 12
இன்னம்பூரான்
இது வழக்கத்திற்கு மாறான வழக்கு. இன்றைய செய்தி. அமெரிக்க கோர்ட்டு. ஃபிலடெல்ஃபியா மாநிலத்தில், வணக்கத்துக்குரிய கத்தோலிக்க மத குருமஹராஜ் வில்லியம் லின்னுக்கு ஆறு வருட சிறை தண்டனை கொடுத்து இருக்கிறது. அந்த மதம் சார்ந்த 15 லக்ஷம் கத்தோலிக்கர்களுக்கான மாதாகோயில்/பள்ளி/ வளாகங்களில் 1992லிருந்து 2004 வரை, வணங்கப்பட்ட பூசாரி/மதகுரு/ சாமியார்/ ஊழியர் போன்ற கழிசடைகள் சிறார்களை துன்புறுத்திச் செய்த பாலின குற்றங்கள் எக்கச்சக்கம். 800 பூசாரிகளை மேற்பார்வை செய்யும் கடமையிலிருந்துத் தவறி, குற்றம் செய்த பூசாரிகளை வெள்ளந்தி மக்களிடம் உலவ விட்டும், ‘குழந்தைகளை கற்பழித்த ஈனர்களை பாதுகாத்தும், உலகை ஏமாற்றிய கயவன் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவருக்கு தண்டனை வழங்கிய ஜட்ஜ் தெரெஸா சர்மீனா, ‘நீ பூசாரி வேஷம் போட்ட இராக்கதர்களை ரக்ஷித்தாய். பிடி சாபம்.’ என்றார். லின், ‘ நான் ஆண்டவனுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய விழைந்தேன்.’ என்றார். அத்தனை திமிர்!
இந்த வழக்கைப் பற்றி வல்லமை வாசகர்கள் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? நமது சமூகத்தில் பல அவலங்களை பார்க்கிறோம். பாலியல் கொடுமைகள், சிறார்களை வேலை வாங்குவது, பொய்க்கணக்கு, கலப்படம், ஆயிரக்கணக்கான சட்ட விரோதங்கள், ஏழை வயிற்றில் மண் அடிப்பது, வகையறா. போலி சாமியார்களும், ஆஷாடபூதிகளும், லஞ்சாதிபதிகளும், ஓட்டு வாங்கிய மக்களுக்கே வேட்டு வகையறா நிறைந்த நம் நாட்டில், எத்தனை நாட்கள், நீங்கள் கண்மூடி கந்தசாமியாக இருக்கப்போகிறீர்கள்? நாக்கைப் பிடுங்கிக்கொள்ள வேண்டிய, இந்த கேள்விக்கு பதில் சொல்லத்தான், இந்த வழக்கை பற்றி வல்லமை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்னம்பூரான்
24 07 2012
மேலதிக விவரங்களுக்கு:
http://www.chicagotribune.com/sns-rt-usa-crimechurch–update-3l2e8io76t-20120724,0,6151192,full.story