பிரான்சு தமிழ் இலக்கிய மாநாட்டு நேரடி வருணனை (முதல் பகுதி)

நேரடி வருணனை : புதுவை எழில் 

முதல் நாள் : சனிக்கிழமை 07.07.2012

பிரான்சில் உள்ள திரான்சி நகர். இது பரி நகரின் (Paris) வடகிழக்கே 30 கி .மீ தொலைவில் உள்ளது. 2 -ஆம் உலகப் பெரும் போர் நடந்த நேரம். செருமனி நாட்டுக் கொலைக் களத்துக்கு அனுப்பப்படுமுன் பிரஞ்சு, போலந்து, செருமானிய யூதர்களை இட்லரின் நாசிப் படைகள் சிறைப்படுத்தி வைத்து இருந்த நகரம். அந்தக் கொடுமைக்குக் கண்ணீர் வடிக்கலாமா என்பது போல் மழை முகில்கள் கூடிக் கலங்கிக்கொண்டு இருந்தன, விழா அமைப்பாளர்கள் மனங்களும் அவை போலவே கலங்கி இருந்தன – மாநாட்டுக்கு மக்கள் வருவார்களா என்று! காலம் யாருக்காகவும் காத்திருப்பது இல்லையே. அமைப்பாளர்கள், உதவும் நண்பர்கள், வெளிநாட்டுத் தமிழ் ஆர்வலர்கள்… எனப் பலரும் வந்து விட்டனர். மக்கள்? ஒருவர் இருவராக வந்து சேர, மாநாட்டு விழா வழக்கம் போல் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

பிரஞ்சுப் பெண் திருமதி கைலாசம், தமிழ்ப் பெண்மணி திருமதி சாவித்திரி குத்துவிளக்குகளுக்கு ஒளி ஊட்டினர். மாநாட்டுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. புதுச்சேரி, தமிழக ஓவியர்கள் இருபதின்மரின் அருமையான ஓவியங்கள் இடம் பெற்று இருந்தன. இதற்கான ஏற்பாடுகளை முன் நின்று செய்த கலை விமரிசகர் திரு. இந்திரன் (சென்னை), ஓவியர்கள், அவர்கள் வரைந்த ஓவியங்களைப் பற்றி விளக்கினார். திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள பத்துக் குறள்களையும் கடவுள் வாழ்த்தாகப் பாடியவர் திருமதி. வாசுகி செயபாலன் அவர்கள். நார்வே பல்கலைக் கழகத்தில் இசைப் பேராசிரியர். இவர் கணவர், புலம் பெயர் ஈழத் தமிழருள் புகழ் பெற்ற கவிஞர் வ. ஐ. ச. செயபாலன். மாநாட்டுக்கென இக்கவிஞர் எழுதி அளித்த எழுச்சிப் பாடலை இனிய இசையோடு பேராசிரியர். திருமதி. வாசுகி செயபாலன் பாட, கைதட்டித் தாளம் போட்டு ரசித்தது அவை. இந்த இன்னிசை விருந்துக்குப் பின்னணியாகக் கிதார் இசைத்தவர் நார்வே நாட்டு இசைக் கலைஞர் திரு. Svend Berg. திருக்குறளுக்குப் பின்னணி கித்தார்! தொடக்கமே புதுமையாக இருந்தது. நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வந்த, மாநாட்டு அமைப்பின் தலைவர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, “திருமதி வாசுகி, பேராசிரியர் அல்லர்” என்று கூறிய போது அவையினர் திகைத்தனர். ஒரு நிமிட இடைவெளிக்குப் பின், “அவர், இசைப் பேராசிரியர் அல்லர்; இசைப் பேரரசி” என்று சொன்னபோது அவை கைதட்டி ஆரவாரித்தது; விழா களை கட்டத் தொடங்கியது.

பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய மலேசியப் பெரு வணிகர் உயர்திரு டத்தோ தஸ்லீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்; இவர் மலேசியத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடி வருபவர். திரு&திருமதி. கோதண்டம் இணையர்களின் செல்விகள் சாரா, ழுலியா நல்லதொரு பரத நாட்டியம் வழங்கினர். மாநாட்டு அமைப்பாளர் திரு. கோவிந்தசாமி செயராமன் அனைவரையும் வரவேற்றார்; இடை இடையே நன்றியும் நவின்றார். விழாவுக்குத் தலைமை தாங்கிய உயர்திரு டத்தோ தஸ்லீம் அவர்கள் தம் தலைமை உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து மலேசிய முன்னாள் துணை அமைச்சர் மாண்புமிகு டான் ஸ்ரீ டத்தோ குமரன் அவர்கள் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்கள். முதுபெரும் எழுத்தாளரும் சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் தலைவருமான உயர்திரு சின்னப்ப பாரதி, சென்னை அரிமா சங்க உறுப்பினர் சதாசிவ மாணிக்கம், பிரான்சு சிவன் கோவில் தலைவர் உயர்திரு சுகுமாறன் முருகையன், திரான்சி நகர மன்ற உறுப்பினர் உயர்திரு அலன் ஆனந்தன் (விழா நடந்த நகரசபை மண்டபத்தை வாடகைக்கு எடுக்க உதவியவர் இவர்), மலேசியக் கவிஞர் உயர்திரு பீர் முகமது… தத்தம் உரைகளை ஆற்றினர். காலம் இறக்கை கட்டிப் பறந்த காரணத்தால், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தம் தலைமை உரையை நிகழ்த்தாமல் விட்டுக்கொடுத்து விட்டதை அவை பெரிதும் ரசித்தது- பின்னே, சாப்பாட்டு நேரமும் கடந்துகொண்டு இருந்ததே! காலை நிகழ்ச்சியின் இறுதியாக மாநாட்டு அமைப்பின் செயலர் பேராசிரியர். தேவகுமாரன் (தமிழ் இயக்கன்) நன்றி கூறினார். மதிய உணவுக்கு அனைவரும் அணிவகுத்தனர். அன்றைய உணவு, மாலை, இரவுச் சிற்றுண்டிகளை அளித்தவர்கள் பிரான்சு சிவன் கோவில் தலைவர் உயர்திரு. சுகுமாறன் முருகையன் அவர்களும் கோவில் நிர்வாகத்தினரும்.

மதிய உணவுக்குப் பின் முதல் அமர்வு: சங்க இலக்கியம், திருக்குறள். ‘திருக்குறளில் உடல் சார்ந்த கருத்துகள்’ என்ற தலைப்பில் மிக அருமையாக உரை ஆற்றினார் முனைவர் மருத்துவர் செம்மல். இவர் உயர்திரு. மணவை முஸ்தபா அவர்களின் திருமகன். தமிழ் அறிஞர்கள் பிற துறை அறிஞர்கள் ஒன்று கூடித் தமிழில் உள்ள அறிவியல் கலைகளை ஆய்தல் வேண்டும் என்பதே இவர் உரையின் அருமையான மையக் கருத்து. ‘அவ்வையும் அதியமானும்’ என்னும் தலைப்பில் பேசினார் திரு செய பாலகிருட்டிணன். அடுத்துப் பேச வந்த திருமதி எலிசபெத் அமல்ராஜ் அவர்களின் தலைப்பு : ‘சங்க இலக்கியத்தில் பெண்ணியம்’ சங்க காலப் பெண்களுக்கு இருந்த நெஞ்சுரம், வீரம், துணிவு இக்காலப் பெண்களுக்கு இல்லை என்பதே இவர் ஆய்வின் முடிவு.

‘காவியங்கள்’ அமர்வுக்குத் தலைமை தாங்கினார் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. அமர்வின் முதல் தலைப்பு: ‘சேக்கிழார் காட்டும் சிறப்புடை நால்வர்’ .பன்னிரு திருமுறைகளில் முதலில் இடம் பெறும் மூவரைப் பற்றிச் சிறப்பாக உரை ஆற்றியவர் யோகானந்த அடிகள் என்னும் பற்குண ராசா அவர்கள். அகில உலகச் சைவச் சங்கத் தலைவர். மாணிக்கவாசகரைச் சேக்கிழார் பாடவில்லை; ஆகவே அவரை விட்டுவிட்டேன் என்று தம் உரையை இவர் முடித்தார். அமர்வின் தலைவரும் தொகுப்பாளருமான பேராசிரியர் அதற்கு விளக்கம் அளித்தார்: “சேக்கிழார் பாடிய 63 நாயன்மார்களுள் முதல் மூவர் யாவர் என்பதை யாவரும் அறிவர்; யாரை நாலாமவர் என்று சேக்கிழார் கருதி இருக்கக் கூடும் என்பதே தலைப்பின் பொருள். தன் உடலுக்கு ஊறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை என்று தன் கண்ணையே எடுத்து அப்பிய கண்ணப்ப நாயனாரே அந்த நாலாமவராக இருக்கக் கூடும்”. விளக்கத்தைக் கைதட்டி மக்கள் ஏற்றனர்.

அடுத்துப் பேசிய புலவர் பொன்னரசு (கனகராசு) அவர்கள், தற்கால நாடகக் கூறுகள் அக்காலச் சிலம்பில் எப்படி இடம் பெற்று உள்ளன என்பதைத் தெளிவாக்கினார். மூன்றாம் உரையை வழங்கியவர் போலந்து நாட்டுப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தில்லிப் பேராசிரியர் முனைவர் கோவிந்தசுவாமி இராசகோபால் அவர்கள். சைவத்தின் மூதின் மகள் காரைக்கால் அம்மையார், கருநாடகத்தின் அக்கமகா தேவி, காசுமீரத்தின் லல்லேசுவரி (‘தொப்பைப் பாட்டி’) என்னும் மூவருக்கும் உள்ள தொடர்புகளை விளக்கிப் புதிய கருத்துகளைப் பதியம் இட்டார். இவர் தலைப்பு: ‘சைவம்: காரைக்காலில் இருந்து காஷ்மீருக்கு – பெண்-இறை அநுபூதிகள் வழியே’.

காவிய அரங்கினை நிறைவு செய்து பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தம் உரையை ஆற்றினார். எதிர்ப்புகளுக்கு இடையிலும் கம்பன் காவியம் அன்றும் வாழ்ந்தது, இன்றும் வாழ்கிறது, இனி என்றும் வாழும் என்பதே அவர் உரையின் அடிப்படைக் கருத்து. இக்கட்டுரையை ‘வல்லமை’ இதழில் காணலாம் : https://www.vallamai.com/literature/articles/23304

பின், கலைமாமணி அருள்மோகன், அவர் தலை மாணவி தீபிகா மித்திரன் இருவரும் தனித்தனியாகவும் இணைந்தும் மிக அருமையான பரத நாட்டிய விருந்து அளித்தனர். இரவு உணவோடு விழாவின் முதல் நாள் இனிதே நிறைவு பெற்றது.

மறு நாள் …

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பிரான்சு தமிழ் இலக்கிய மாநாட்டு நேரடி வருணனை (முதல் பகுதி)

 1. திரு சீவக்குமரன் அவர்களுக்கு
  தங்கள் கருத்துகளுக்கும்
  அறிவுரைகளுக்கும் நன்றிகள்.

  அன்புடன்
  பெஞ்சமின்

 2. ஓர் ஈழப் பார்வையாளர் – ஓர் உலகத் தமிழ் மகாநாடு

  முதன்முதலாக…
  உலகத் தமிழ் வரலாற்றில்…
  வருகின்ற சனிக்கிழமை…
  என கலைஞர் தொலைக்காட்சியில் கீழ்ஸ்தாயியில் ஆரம்பித்து மேல்ஸ்தாயியில் குரல் உயர்ந்து செல்லும் பொழுது சோபாவின் பின்னால் இருந்து நான் முன்னால் வருவதும், பின்பு அடுத்த வசனமாக விஜய் நடித்த வேலாயுதம் திரைப்பபடம் என்னும் பொழுது மீண்டும் சோபாவின் பின்னால் செல்வதும் அடிக்கடி நடப்பதுண்டு. இதே நிகழ்வை அண்மைக் காலங்களில் உலகத் தமிழ் மாகாநாடுகள் என்னும் வார்த்தைகளைக் கேட்கும் பொழுது நான் நினைப்பதுண்டு.
  இந்த மாதம் பாரிஸில் 7ம் 8ம் திகதி நடைபெற்ற உலக இலக்கியத் தமிழ் விழாக்கு மலேசியா, இந்தியா, சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும்; ஐரோப்பிய நாடுகளில் இருந்து கலந்;து கொண்ட பேராளர்களில் ஒருவனாக நானும் கலந்து கொண்டேன். குறிப்பாக மலேசியாவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் இருவர், இந்தியாவில் இருந்து மொழிபெயர்ப்பிற்காக சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற இருவர், மூத்த எழுத்தாளர் சின்னப்பபாரதி, போலந்தில் இருந்து இரு தமிழ்ப் பேராசிரியர்கள் என அனைவரும் தமிழிற்காக தங்கள் சொந்த பணத்தில் விமானச்சீட்டு எடுத்து வந்திருந்தார்கள்.
  9.30 மணிக்கு ஆரம்பமாக இருந்த விழாவுக்கு நான் 9.15 மணிக்கு மண்டபத்துக்கு சென்ற பொழுது நிகழ்ச்சி அமைப்பாளர்களில் நால்வர் மட்டும் நின்றிருந்தனர். ”எத்தனை மணிக்கு சார் ஆரம்பம்” என்று கேட்ட பொழுது…”, ”10 மணிக்கு ஆட்கள் வந்த பின்பு தொடங்குவோம்” எனப் பதில் வந்தது.
  பின்பு மீண்டும் ஒரு தடவை அழைப்பிதழைப் பார்த்தேன். அதில் 9.30 மணியளவில் என்றிருந்தது.
  அப்பொழுது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ”காலையில் சந்திப்போம் என ஒரு தோட்டக்காரனுக்கு சொன்னால் அது நிலம் வெளிக்கும் அதிகாலையாக இருக்கும். அதனை கந்தோர் வேலைக்;கு செல்லும் ஒருவனுக்கு சொன்னால் அது காலை 8 மணியாக இருக்கும். அது போலத்தான் பாரீஸ் இலக்கிய அமைப்பின் கலாச்சாரம் என நான் கோப்பியை மெசினில் வேண்டிக் கொண்டு மற்றவர்களின் வரவுக்காக அமர்ந்திருந்தேன். 10…10½…11…என தொடர்ந்து இறுதியாக 11.30க்கு சுமார் 20 பேரார்களுடனும் 40 பார்வையாளர்களுடன் உலகத் தமிழ் இலக்கிய விழா ஆரம்பித்தது.
  நோர்வேயில் இருந்து வந்த திருமதி. வாசுகி ஜெயபாலனின் இனிய இறைவணக்கம் கிற்றார் இசையுடனும் இரு நடனத்துனும் இணைந்து மகிழ்வாக அமைய விழா ஆரம்பித்தது.
  வழமையான அல்லது அளவுக்கு அதிகமான புகழுரைகள், நிகழ்ச்சி தொகுப்பாளரின் நீ…ண்…ட…அறிமுகங்கள்… சில தரம் குறைந்த இரண்டாம் தர ஜோக்குகள், மேலாக அதிக பொன்னாடைகளுடன் விழா இரண்டு மணியளவில் மதிய இடைவேளையை அடைந்தது.
  அதுவரை விழாவில் பேசப்பட்ட ஒரே பொருள் அதிகமாக மக்கள் வரவில்லையே என்பதுதான். அப்பொழுது ஒரேயொரு விடயம் என் கவனத்தில் பட்டது. சுமார் ஒரு இலட்சம் இலங்கைத் தமிழர் வசிக்கின்ற பாரீஸ் நகரில் இருந்து இருவர் மட்டும் வந்திருந்தனர். அதில் ஒருவர் எனக்கு பாரீஸில் பாதைகாட்ட வந்தவர். அங்கிருந்த மற்ற இலங்கைத் தமிழர்கள் மொத்தம் 5பேர் – என்போல் நிகழ்ச்சியில் கட்டுரை வாசிக்கவோ அல்லது புதுக்கவிதை வாசிக்க வந்தவர்கள்.
  இந்த உலகத் தமிழ் இலக்கிய விழாவுக்கு நான் அறிந்தவரை எந்த பகிஸ்கரிப்புகளோ எதிர்ப்புக் கையெழுத்து வேட்டை ஏதும் இல்லை. அதிக தமிழர்கள் கூடும் லாச்சப்பல் கடைகளில் இது பற்றி எந்த விளம்பர அறிப்புகளும் இருந்திருக்கவில்லை.
  அடுத்த நாள் நிகழ்ச்சியும் ஒரு மணிநேரம் பிந்தி தொடங்கியது – முதல்நாள் வந்த கூட்டத்தில் அரைப்பங்குடன்.
  அதிக பேரார்களுக்கு தாம் எந்த தினத்தில் எந்த நேரத்தில் பேசப்;போகின்;றோம் எனத் தெரியாமல் நின்றிருந்தனர். இந்த விடயத்தில் இலங்கை, சிங்கப்பூரில் நடைபெற்ற மகாநாடுககளின் பொழுது தயார்செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி நிரல்களையும் அவை பின்பற்றப்பட்ட வகைகளையும் பாராட்ட வேண்டும்.
  அடுத்த நாள் நிகழ்விலும் நடனம், புதுக்விதைகள் அவற்றிற்கான நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளரின் விளக்கவுரை மேலும் தனது இலக்கிய அனுபவம் சில என போய்க் கொண்டு இருந்தது.
  நிச்சயம் இரண்டு நாட்களிலும் தரமான சுமார் பத்துக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன என்பதையும் திரு. சின்னப்பாரதியின் சங்கம்; நாவல் பிரான்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதனை ஒரு பிரான்சு எழுத்தாளர் நல்ல விதமாக விமர்சித்ததையும் இங்கு கட்டாயம் குறிப்பிடவேண்டும். ஆனால் அதனைக் கேட்பவர்கள்தான் மிக மிகக் குறைவு என்பது வேதனை.
  இவ்வாறு உலகத்தமில் மகாநாடு என்ற அறிவித்தல்களுடன் நடைபெற்றுக் கொண்டு போகுமாயின் ஓநாய் வருகிறது ஓநாய் வருகின்றது என்ற கதைபோல அடுத்த அடுத்த மகாநாடுகளில் இதற்கும் குறைவான மக்களே வருவார்கள் என்ற எனது ஆதங்கத்தை எனது கட்டுரை வாசிக்க முன்பாக மேடையில் சொல்லியிருந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர்களை விட அனைவரும் பாராட்டினார்கள்.
  ஒரு விழாவிற்கு சென்று வந்த பின்பு Highlight ஆக சில விடயங்கள் இருப்பது போல மனதுள் குடைந்து கொண்டிருக்கும் சில கேள்விகள் இருக்கும். அது போல கீழ்வருவனவும் சில:
  1.ஏன் உலகத் தமிழர் மகாநாட்டிற்கு இலங்கைத் தமிழர்கள் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டிருக்கவில்லை?
  2. எதற்காக அடிக்கடி புகைப்படமோ அன்றில் வீடியோவோ எடுக்க வேண்டாம் என ஒலிபரப்பிக் கொண்டு இருந்தார்கள்?
  3. ஒரு விழாமலரோ அல்லது விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்போ இல்லாது கூடிக்கலையும் இதுபோன்ற இந்த விழாக்களின் மொத்தப் பயன்பாடு என்ன?
  மேலாக ஆங்காங்கே கேட்ட கொசுறுச் செய்திகள்:
  1. ”நாங்கள் இங்கு வர முதல் எங்கள் நாட்டில் பத்திரிகையாளர்கள் விமான நிலையத்தில் போட்டோ எல்லாம் பிடித்து வழி அனுப்பி வைத்தார்கள். ஆகவே வேறு ஏதாவது கூட்டத்தில் எடுத்த பெருந்தொகையான மக்களின் படங்களையும் இந்த விழாவுடன் இணைத்து விடுங்கள்.”

  2. ”உங்க புதுக்கவிதை சுப்பர் சார்! ர்p. ஆர். ராஜேந்திரர் கவிதை வாசித்தது போல இருந்தது”

  3. ”ஏன் சார் யாரும் யாரையும் பார்த்து புன்னகைக்கின்றார்கள் இல்லை. வாருங்கள் என்பதையும் வந்தமைக்கு நன்றி என்பதையும் மேடையில் மட்டும் சொல்லுகிறார்கள். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்கள் நேரில் யாரையும் பார்த்து புன்னகைக்கின்றார்கள் இல்லை.”

  இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். இந்த நிகழ்ச்சியை தரம் தாழ்த்தி எழுதுவது இந்தக் கட்டுரையின் நோக்கமும் இல்லை. ஆனால் இனிவரும் காலங்களில் உலக தமிழ் அல்லது சர்வதேச தமிழ் என்ற அடைமொமிகளுடன் இவ்வாறு நிகழ்ச்சிகளை நடாத்தாமல்; இருப்தே தமிழுக்குச் செய்யும் மிகப் பெரிய தொண்டாகும்.

  அன்புடன்
  வி. ஜீவகுமாரன்
  – நினைவு நல்லது வேண்டும் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *