நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-5)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

கல்யாணி கம்ப்யூட்டர் படிப்பை முடித்து விட்டாள். நிறைய மார்க்குகள் வாங்கி முதல் வகுப்பில் பாஸ் செய்திருந்தாள். அதில் அவளுக்கு மட்டுமல்ல சுந்தரத்துக்கும், நிகிலுக்கும் பெருமைதான். ஆனால் அவள் அடுத்துச் சொன்ன திட்டம்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

“நல்லபடியாக் கம்ப்யூட்டர் கிளாஸ் முடிச்சுட்டேன். இனிமே சம்பாதிக்க வேண்டியதுதான்”

“என்ன சொல்றே? இந்த வயசுக்கு மேல வேலைல சேரப் போறியா?”

“இல்லைங்க! என் ஃப்ரெண்ட் சுஜாதா இருக்காள்ல அவ ஒரு ஆபீஸ்ல வேலை பாக்கறா. அங்க என்னை மாதிரி ஹவுஸ் வைவ்ஸுக்கு வீட்டுல இருந்தே சம்பாதிக்கறா மாதிரி வேலை தராங்களாம். வர திங்கக்கிழமை அவ என்னை வரச் சொல்லியிருக்கா”.

“எல்லாமே நீயே முடிவு பண்ணிட்டியா? அந்தப் பொண்ணு சொல்றதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மைன்னு நமக்கு என்ன தெரியும்? காலம் கெட்டுக் கெடக்கு. நீ வேலைக்குப் போயிச் சம்பாதிச்சுத்தான் இந்தக் குடும்பத்தைக் காப்பாத்தணும்கறது இல்ல. நான்தான் இருக்கேனே.”

“நான் அப்டிச் சொல்லலங்க! காலையிலேயே நீங்க ரெண்டு பேரும் கிளம்பிப் போயிடறீங்க. எவ்ளோ நேரம்தான் நான் சும்மாயிருக்கறது? மதிய நேரத்துல தூங்கறதுக்குப் பதிலா இந்த வேலை செஞ்சா நாலு காசு கிடைக்குமுல்ல? நீங்களும் கொஞ்சம் சீக்கிரமாவே வி.ஆர்.எஸ் குடுக்கலாம் இல்ல?”

“ஓஹோ! அப்போ எனக்காகத்தான் இந்த வேலையைச் செய்யறேன்னு சொல்றியா?”

“அம்மா! நான் சொல்றதைக் கேளுங்கம்மா. நீங்க சொல்ற இண்டெர்நெட் வேலையிலெல்லாம் இப்போ ரொம்ப ஃப்ராடு நடக்குது. வேலை வாங்கிக்குவாங்க பணம் குடுக்க மாட்டாங்க!”

“அது மட்டும் இல்ல நிகில். பெண்களைத் தவறான வழியில கூட பயன்படுத்தறாங்கன்னு கேள்வி. உங்கம்மா இத்தனை வ்ருஷமா வீட்டுக்குள்லயே இருந்துட்டா. அவளுக்கு வெளி உலகமே தெரியல. எனக்கு என்ன சொல்லி அவளுக்குப் புரிய வெக்கறதுன்னு தெரியல”

“எனக்கு யாரும் எதையும் புரிய வெக்க வேண்டாம். நான் ஒண்ணும் குழந்தையில்ல. அவங்க சொல்ற எல்லாத்துக்கும் தலயாட்ட. நீங்க சொன்னா மாதிரி இத்தனை வருஷமா வீட்டுக்குள்ள வெளி உலகமே தெரியாம அடஞ்சு கெடந்துட்டேன். இனிமேயும் நான் அப்டி இருக்கப் போறது இல்லை. எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.”

“இப்போ நீ என்ன சொல்ல வர?”

“ஒண்ணுமில்ல! நான் திங்கக் கிழமை போயி அந்த ஆபீசைப் பாக்குறேன். ஏதாவது ஏடாகூடமா தெரிஞ்சதுன்ன ஒடன்னே ஒங்க சங்காத்தமே வேண்டாம்னு வந்துடறேன். அப்டி இல்ல. அவங்க நம்பகமானவங்களா இருந்தா நமக்கு நல்லது தானே?”

“சரி! உன் இஷ்டம். போயிட்டு வந்து விவரம் சொல்லு”. என்று அந்த விஷயத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தான் சுந்தரம்.

கல்யாணி சொன்னபடியே அந்த அலுவலகம் சென்றாள். மிகவும் சுத்தமாக, அலங்காரத்தோடு இருந்தது. சுஜாதா அங்கு வேலை செய்வதால் கல்யாணிக்கு நிம்மதியாக இருந்தது. ரிசப்ஷன் அறையில் காத்திருந்தாள். அங்கே உட்கார்ந்திருந்த பெண்ணின் விரல்கள் கப்யூட்டரில் கலை நயத்துடன் நடனமாடியதை ரசித்தாள். “நாம கம்ப்யூட்டர்ல வேலை செய்யும் போது நம்ம விரலும் இப்டித்தான் இருக்குமோ? ஆனா யாருமே அதைச் சொன்னதே இல்லையே? ம்ஹூம்! எல்லாம் என் தலை விதி. நான் முன்னொக்கி ஒரு எட்டு எடுத்து வெச்சால் அவரும், நிகிலும் என்னைப் பின்னால் ரெண்டு எட்டு இழுக்கறாங்க என்ன செய்ய?” என்று மனதுள் நினைத்துக் கொண்டாள்.

சுஜாதா வந்து மேனேஜரிடம் அழைத்துப் போனாள்.

மேனேஜருக்கும் இள வயதுதான். ஆனால் பொறுப்பாகப் பேசினார்.

“மேடம்! சுஜாதா சொன்னாங்க உங்களைப் பத்தி. நேச்சர் ஆஃப் ஜாப் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?”

கல்யாணி தெரியாது என்று தலையசைத்தாள்.

“சரி பரவாயில்லை. ஆனா அதைச் சொல்றதுக்கு முன்னாடி நீங்க ஆபீசைச் சுத்திப் பாருங்க. கம்ப்யூட்டர் ரூம் எல்லாம் பாருங்க. அப்புறமா நான் சொல்றேன்” என்றார்.

சுஜாதா அழைத்துச் சென்றாள். கல்யாணிக்கு உள்ளூர திக் திக்கென்றிருந்தது. இது வரை சுந்தரமோ, நிகிலோ இல்லாமல் எங்கும் வெளியில் சென்றதில்லை. அந்த எண்ணத்தை உதறி விட்டு சுஜாதாவோடு நடந்தாள். நீண்ட ஹால். அதுதான் அக்கவுண்ட்ஸ் செக்க்ஷன், அதன் முடிவில்தான் மேனேஜருடைய ரூம். சுஜாதாவின் சீட்டும் அந்த ஹாலில்தான். அதை அடுத்து ஒரு தடுப்புச் சுவர் சுமார் நான்கடிக்குப் போடப்பட்டு சதுரமாக ஒரு ரூம். அதுதான் கம்ப்யூட்டர் செக்க்ஷன். அது கம்ப்யூட்டர் செக்க்ஷன் என்று சொல்லப்பட்டாலும் அக்கவுண்ட்ஸ் செக்க்ஷனிலும் எல்லாரிடமும் கம்ப்யூட்டர் இருந்தது. கம்ப்யூட்டர் செக்க்ஷனில் எல்லாரும் சீரியசாக உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேவையில்லாத அரட்டையோ சத்தமோ அந்த ஆபீசில் இல்லை. “இந்த ஆபீசைப் போயி சந்தேகப் பட்டாங்களே” என்று நினைத்துக் கொண்டாள். எல்லாவற்றையும் பார்த்து விட்டு மீண்டும் மேனேஜர் ரூமிற்குப் போனார்கள்.

“வாங்க மேடம்! ஆபீசை நல்லா சுத்திப் பாத்தீங்களா? உங்க மனசுக்குள்ள எந்த சந்தேகமும் இப்போ இல்லையே? நீங்க ரொம்பப் பயப்படறதா சுஜாதா சொன்னாங்க அதான் உங்களை சுத்திப் பாத்துட்டு வரச் சொன்னேன். இப்போ உங்களுக்கு பயம் இல்லேல்ல?” என்றார்.

கல்யாணிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. “சே! இந்த சுஜாதா எதுக்கு எல்லாத்தையும் மேனேஜர் கிட்ட சொல்றா? வெளியில வரட்டும் பேசிக்கலாம்” என்று நினைத்தவள். மேனேஜரைப் பார்த்து

“அப்டியெல்லாம் இல்ல சார்! உங்களைப் பாத்த ஒடனே எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு” என்று ஐஸ் வைத்தாள்.

“ரொம்ப சந்தோஷம் மேடம். இப்போ நாங்க உங்களுக்கு சில ஃபைல்ஸ் குடுப்போம். அந்த ஃபைல்ஸ்ல சில விவரங்கள் கேக்கப்பட்டிருக்கும். அந்த விவரங்களை நீங்க இன்டர்நெட்டைப் பாத்துத் தேடி எடுத்து நீட்டா டைப் பண்ணி எங்களுக்குத் தரணும். ஒரு ஃபைலுக்கு ரெண்டாயிர ரூவா நாங்க இப்போ குடுத்துக்கிட்டு இருக்கோம். ஒரு மாசத்துல எத்தனை ஃபைல் வேணும்னாலும் முடிக்கலாம். அது உங்க திறமையைப் பொறுத்து இருக்கு. என்ன சொல்றீங்க மேடம்?”

“சரி சார். நான் செஞ்சு பாக்கறேன். எதாவது சந்தேகம் இருந்தா சுஜாதா கிட்டக் கேட்டுக்கறேன்”.

“முக்கியமான விஷயம் மேடம், நீங்க எங்களுக்கு குடுக்கற ரிப்போர்ட்டுல எந்த மிஸ்டேக்கும் இருக்கக் கூடாது”

“கண்டிப்பா சார்”

“நீங்க ஒரு ஃபைல் முடிஞ்ச ஒடனேயும் பேமெண்ட் வாங்கிக்கலாம். இல்ல மொத்தமா மாசாமாசமும் வாங்கிக்கலாம்! அப்போ நாளைக்கே வேலையை ஆரம்பிச்சுடுங்க! பெஸ்ட் விஷஸ்” என்று கூறி அவளை அனுப்பி வைத்தார்.

சுஜாதா, கல்யாணியை அழைத்துக் கொண்டு போய்ச் சில ஃபைல்களைக் கொடுத்தாள்.

“இன்னிக்கு ஒரே ஒரு ஃபைல் குடு சுஜா! இத முடிச்சுட்டு நான் அப்புறமா வாங்கிக்கறேன்!” என்றவள் சுஜாதாவுக்கு நன்றி சொல்லி வீடு வந்தாள். அவள் நினைத்தது போல வேலை அத்தனைக் கடினமாக இல்லை. அவர்கள் கேட்ட விவரங்கள் எளிதில் நெட்டில் கிடைத்தன. முதலில் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் அவற்றைத் தொகுத்து அழகாக ரிப்போர்ட் தயாரித்தாள். ஃபைல் வாங்கி வந்த ஒரே வாரத்தில் முடித்து விட்டாள். பரீட்சை எழுதும் மாணவனின் மன நிலையோடு ஃபைலையும், ரிப்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு அந்த ஆபீசுக்குள் நுழைந்தாள்.

“சார் என்னோட முதல் ரிப்போர்ட்” என்று நீட்டினாள்.

“வாட்? அதுக்குள்ள முடிச்சிட்டீங்களா? யார் கிட்டயும் எதுவும் சந்தேகம் கூடக் கேக்கல்ல போலிருக்கு? ரொம்ப ஸ்பீடா இருக்கீங்களே?” என்று பாராட்டியவர், ரிப்போர்ட்டில் கண்களை ஓட்டினார்.

“வெரி குட்! ரொம்ப நல்லாப் பண்ணியிருக்கீங்க! கங்கிராஜுலேஷன்ஸ்! ஒவ்வொரு ரிப்போர்ட்டையும் இதே கவனத்தோட செய்யுங்க! இப்போ சுஜாதாகிட்டப் போயி வேற ஃபைல்ஸ் வாங்கிட்டுப் போங்க!” என்றார்.

சுஜாதாவும் மிகவும் பாராட்டினாள். அவளிடம் மேலும் சில ஃபைல்களைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினாள்.

மாதம் ஒன்று ஓடி விட்டது. இந்த முதல் மாதத்திலேயே ஆறு ஃபைல்கள் முடித்து விட்டாள் கல்யாணி. 12,000 ரூபாய் சுளையாகக் கையில் கிடைத்தது. பல வருடம் கழித்து தான் சம்பாதித்தது என்று ஒரே பெருமை கல்யாணிக்கு. பணத்தை எடுத்துக் கொண்டு நேரே ஆரெம்கேவி போனாள். மகனுக்கும், கணவனுக்கும் நல்லதாக பேண்ட், ஷர்ட் வாங்கினாள். தனக்கு ஆயிர ரூபாயில் ஒரு சேலை ரொம்ப நாளாக ஆசைப்பட்டது எடுத்துக் கொண்டாள்.

சுந்தரமும், நிகிலும் வந்த உடன் அவர்களிடம் இவற்றையெல்லாம் காட்டினாள்.

“என்னவோ நீங்க இண்டெர்நெட் வேலை எல்லாமே ஃப்ராடுன்னீங்களே? பணம் தர மாட்டாங்கன்னீங்களே? பாத்தீங்களா?ஒரே மாசத்துல 12,000 சம்பாதிச்சுட்டேன். உங்களுக்கு பேண்ட்,ஷர்ட் நிகிலுக்கு டி ஷர்ட் ஜீன்ஸ், எனக்குப் பொடவ எல்லாம் வாங்கினது போக 8,000 மிச்சமிருக்கு. இந்தாங்க. ” என்று கொடுத்தாள்.

சுந்தரத்துக்கும் மகிழ்ச்சி.

“பரவாயில்ல கல்யாணி! நீ ரொம்ப கிரேட்தான். இவ்ளோ சீக்கிரம் கத்துக்கிட்டு பணமும் சம்பாதிச்சுட்டியே? இந்தப் பணத்தை ஒன் பேருல பேங்குல போட்டு வெச்சுக்கோ நமக்குச் சமயத்துக்கு உதவும்.” என்றான்.

மாதாமாதம் கல்யாணி மொத்தமாக ஃபைல்களை வீட்டுக்கு எடுத்து வந்து விடுவாள். ஒவ்வொன்றாக முடிப்பாள். சில சமயம் ஃபைல்களில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்கள் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். நிறையத் தேட வேண்டியிருக்கும். சில சமயம் ஏகப்பட்ட விவரங்கள் கிடைக்கும். எதை எடுக்க? எதை விட? என்று தெரியாது. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சுஜாதாவின் உதவியை நாடுவாள் கல்யாணி. சுஜாதாவும் மறுக்காமல் உதவுவாள். இப்படியே ஆறு மாதங்கள் ஓடி விட்டன.

கல்யாணி இப்போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். தன் ஓய்வு நேரம் மிகச் சிறந்த முறையில் பயன்படுவது பற்றி அவளுக்கு மகிழ்ச்சி. ஓய்வாக இருக்கும் போது மட்டுமே வேலை செய்வது என்று இல்லை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேலை செய்வது என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.

அந்தக் குடும்பத்தில் சந்தோஷம் பொங்கியது. நினைத்த போது ஹோட்டலில் சென்று சாப்பிட்டார்கள். கல்யணி தன் சம்பாத்தியத்திலிருந்து மகனுக்கு நிறைய உடைகள் வாங்கிக் கொடுத்தாள். மகனுக்கு பைக் வாங்க வேண்டும் என்று தனியாகப் பணம் சேர்த்தாள். நிகில் இன்னும் ஒரு வருடத்தில் அமெரிக்கா போய் விடுவான் என்றாலும் அந்தப் பைக்கை சுந்தரம் ஓட்டலாமே. பாவம் அவருடைய பைக் வாங்கியும் பத்து வருடங்களாகி விட்டதே. என்று நினைத்தவள் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தாள். 30,000 சேர்ந்து விட்டது. இனியும் ஒரு 40,000 சேர்த்தால் போதும் நிகில் விரும்பும் பைக்கை அவளால் வாங்கிதர முடியும்.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் எப்படியும் இன்னும் எட்டே மாதத்தில் அந்தப் பணம் சேர்ந்து விடும். நிகிலின் பிறந்த நாளன்று அந்தப் பைக்கைப் பரிசளிக்கலாம் என்று திட்டம் போட்டார்கள் இருவரும்.

இதனிடையில் சுமதி அக்காவும் அவள் கணவரும் வந்து போனார்கள். கல்யாணி இம்முறை தலை நிமிர்ந்து நின்றாள். தான் செய்யும் பார்ட் டைம் வேலையைப் பற்றிக் கூறினாள். சுமதி அக்காவுக்கும் சந்தோஷம்தான். அவளும் கல்யாணியை மிகவும் ஊக்குவித்தாள்.

கல்யாணியின் வேலை செய்யும் திறமை குறித்துச் சுந்தரமும் மிகவும் பாராட்டினான். அவள் ஏற்கனவே டைப் படித்திருந்ததால் அவளால் வேகமாக டைப் செய்ய முடிந்தது. அத்தோடு ஆங்கில அறிவும் சேரவே கல்யாணியால் எல்லா ஃபைல்களையும் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது. நடு நடுவே சுஜாதாவோடு பேசினாள்.

“மேடம்! நீங்க சம்பாதிக்கற பணமெல்லாத்தையும் உங்க கணவர்ட்ட குடுத்து வெச்சுடாதீங்க!”

“ஏன் சுஜா அப்டி சொல்றே?”

“நம்ம கையில பணம் இருந்தாத்தான் மேடம் இந்த ஆம்பிளைங்க நம்மளை மதிப்பாங்க! இல்லேன்னா கால் தூசியா நெனச்சு மிதிப்பாங்க!

“சுஜா நான் ஒண்ணு சொல்றேன் தப்பா நெனச்சிக்காதே! நீ ஏன் ஆம்பிளைங்க எல்லார் மேலயும் இப்படி ஒரு அபிப்பிராயம் வெச்சுருக்க?”

பெருமூச்செறிந்தாள் சுஜாதா. சொல்ல ஆரம்பித்தாள்.

“மேடம்! நான் எங்கப்பாவை பாத்துத்தான் வளந்தேன். அவரு குடிக்கறதுக்கும் ஜாலியா இருக்கறதுக்கும் எங்கம்மா கிட்ட இருந்த காசைக் கொண்டு போயிச் செலவழிச்சுட்டு, கொஞ்ச நாள் கழிச்சு எங்கம்மாகிட்ட இருந்த காசெல்லாம் தீர்ந்திடுச்சுன்னு தெரிஞ்சப்புறம் கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாம வேற கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டாரு”

“அடப்பாவி!”

“அது கூடப் பராவாயில்ல மேடம், அதுக்கப்புறமும் எங்கம்மாவை அப்பப்போ பணம் கேட்டுக் கஷ்டப் படுத்துவாரு. குடுக்கலைன்னா போட்டு அடிப்பாரு. எங்கம்மா நல்ல டிரெஸ் பண்ணிக்கிட்டு வெளிய கெளம்பினா ஒடனே சந்தேகம் வந்துரும் அவருக்கு. யாரை மயக்கப் போறேடிம்பாரு”

“சீ.. பாவம் உங்கம்மா! “

“ஆமாம்! பாவம்தான் ஆனா கோழை! எங்கப்பாவைத் தைரியமா எதுத்து நிக்க முடியாம என்னைப் பத்தி யோசிச்சுக் கூடப் பாக்காம நான் காலேஜ் படிக்கும்போது தற்கொலை பண்ணிச் செத்துப் போயிட்டாங்க. இன்னும் கொஞ்ச வருஷம் தாக்குப் பிடிச்சிருந்தாங்கன்னா நான் சம்பாதிச்சு அவங்களை ராசாத்தி மாதிரி வெச்சுக் காப்பாத்தியிருப்பேன். லீகலா எங்கம்மாவுக்கு விடுதலை வாங்கிக் குடுத்திருப்பேன்”

“ஆமாம் சுஜா! உங்கம்மா கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்”

“அவங்கள அப்டி இருக்க விடல அந்தப் பாவி எங்கப்பன். அதனாலேயே எனக்கு எந்த ஆம்பிளைங்களைக் கண்டாலும் சந்தேகமாவே இருக்கு மேடம்”

“சுஜா! எல்லா ஆம்பிளைங்களும் உங்கப்பா மாதிரி இல்லம்மா! குடும்பம் மேல பாசமா இருக்கற ஆம்பிளைங்க இருக்கத்தான் செய்யறாங்க”

“எங்கே மேடம் இருக்காங்க? எல்லாருக்கும் பணத்து மேலதான் குறி”

“நானும் உன்னை மாதிரித் தப்பாதான் நினைச்சேன். ஆனா என் வீட்டுக்காரரையே எடுத்துக்கோ! முதல்ல நான் வேலை செய்யறதுக்கு தடை போட்டாரு. அது கூட என் சேஃப்டிக்காகத்தான். இப்போப் பாரு நான் சம்பாதிக்கற பணத்துலருந்து ஒரு காசு தொடறது கிடையாது. எல்லாத்தையும் என் பேர்ல பேங்குல போட்டுக்க சொல்லிட்டாரு, அது மட்டுமில்ல நான் அதை எப்டி செலவழிச்சாலும் கேக்கக் கூட மாட்டாரு. இப்போ புரியுதா எல்லா ஆம்பிளைங்களும் அப்டி இல்லன்னு?”

“ஆமா மேடம்! சில ஆம்பிளைங்க இப்டியும் இருக்காங்க போல இருக்கு”

“எப்டியோ நீ புரிஞ்சுக்கிட்டியே! அது போதும். இனியாவது நல்ல பையனாப் பாத்து கல்யாணம் செஞ்சிக்கோ”

“சீ! போங்க ஆன்ட்டி! எனக்கு வெக்கமா இருக்கு!”

“அடடே நீ கூட வெக்கப் பட ஆரம்பிச்சிட்டியே! நானே உனக்கு நல்ல பையனாப் பாக்கறேன்” என்று ஃபோனை வைத்தாள். அந்தப் பெண் சுஜாதாவுக்குத் தங்கள் உறவிலேயே நல்ல பையனாகப் பார்த்துக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள்.

எல்லாம் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று கல்யாணி சந்தோஷப் பட்ட அதே நேரம் விதி வேறு ஒரு பிரச்சனை வடிவத்தில் இவளைப் பார்த்துச் சிரித்தது.

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி: http://www.masterfile.com/stock-photography/image/700-00476544/Woman-at-Computer-Using-Telephone-Headset-while-Writing

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *