உறவேல் ஒழிக்க ஒழியாது (பகுதி-7)
ராமஸ்வாமி ஸம்பத்காழி திரும்பிய மாலடியான் மணிவண்ண நம்பியிடம் நடந்ததை விளக்கினான். அவர் மனம் நொந்து, “அதனாலென்ன, நீவிர் எம்முடனே தாடாளன் சேவையில் ஈடுபடலாம்” என்றார்.
குமுதவல்லிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இனி தன் மணாளன் ஊர் ஊராக அலைய வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? எப்பொழுதும் தன்கூடவே இருப்பார் அல்லவா?
“என்னது? என்னைப் பணி நீக்கம் செய்தது உனக்கு மகிழ்வைத் தருகிறதா?” என்று ஒரு செல்லமான முறைப்புடன் குமுதாவைக் கேட்டான்.
“நான் தங்கள் வாரிசினைச் சுமந்திருக்கும் இத்தருணத்தில் நீங்கள் என்னுடன் இருப்பது மகிழ்ச்சியைத்தானே தரும்” என்றாள் அவள்.
”அடிக் கள்ளி! இதை ஏன் இந்நாள் வரை என்னிடம் சொல்லவில்லை?” என்ற மாலடியான் அவளை வாரி அணைத்துக் கொண்டான். இருவரும் ஆனந்தத்தில் திளைத்தனர்.
ஆனால் அம்மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை. ஒரு வார நாட்கள் கழிந்தபின், ஒரு ராஜாங்கச் சேவகன் காழிக்கு வந்து, மாலடியானிடம் மன்னன் கொடுத்த ஒரு ஓலையை அளித்து “தங்களை அரசர் கையோடு அழைத்து வரச்சொன்னார்” என்றான்.
நம்பியிடம் குமுதவல்லியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு மாலடியான் விடைபெற்றுக் கொண்டான்.
அரச மாளிகையை அடைந்த அவனை, “நண்பா! என்னை மன்னித்து விடு. ஏதோ கோபத்தில் உன்னிடம் தாறுமாறாகப் பேசி விட்டேன். நாடு இன்றுள்ள நிலையில் உன் போன்ற ராஜவிசுவாசியை நான் இழக்க விரும்பவில்லை. என் தில்லைக் கோவில் திட்டத்தைச் சில காலம் ஒத்தி வைக்கிறேன். நீ எனக்கு அந்தரங்க ஒற்றனாகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்” என்றான் அச்சிற்றரசன்.
“அரசே! மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகளைச் சொல்லி எனக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்த வேண்டாம். நான் என்றென்றும் உங்கள் நம்பிக்கைக்குரிய சேவகனாகத்தான் திகழ்வேன். ஆனால் உள்ளதை உள்ளபடி உரைக்கும்போது, தாங்கள் என்மீது சினம் கொள்ளக்கூடாது” என்ற மாலடியானை அவ்வரசன் அணைத்துக் கொண்டான்.
மாலடியானுக்கு வேலை அதிகமாகியது. குலோத்துங்கனிற்குப் பிறகு யார் முடிசூடப் போவது என்ற கேள்விக்கான விடையைக் கண்டுபிடிப்பதில் தன் ஒற்றுத்திறனை நன்கு பயன்படுத்தித் தன் மன்னன் யாருக்குத் துணை போக வேண்டும் என்பதையும் அவ்வரசனுக்கு ஆலோசனை வழங்கினான். சோழர்கள் மீது பகை கொண்டிருந்த மேலைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன் தான் வெகுநாளாக எதிர்பார்த்திருந்த வேளை வந்து விட்டது எனக்கருதி தனக்குக் கப்பம் செலுத்தும் ஹொய்சள மன்னன் விஷ்ணுவர்த்தனனை சோழநாட்டின்மீது படைஎடுக்க ஆணையிட்டிருப்பதையும் மாலடியான் உளவு மூலம் அறிந்து அரசனுக்குத் தெரிவித்தான். இதைத்தவிர ஏனைய சிற்றரசர்களின் மனப்போக்கினையும் அவர்கள் ஆயத்தங்களையும் கண்காணிக்க வேண்டிய கடினமான பணியினால் அவன் அடிக்கடி காழிக்குச் செல்ல முடியவில்லை. தன் கீழ் பணிபுரியும் இன்னொரு ஒற்றனை அவ்வப்போது காழிக்கு அனுப்பி குமுதவல்லியின் உடல்நலத்தைப் பற்றி அறிந்து கொண்டான்.
நாட்டு நடப்பினால் கவலை கொண்ட மாலடியான் தன் தாய்மாமனுக்கு ஒரு ஓலையை அனுப்பினான். “சோழநாட்டின் பாதுகாப்பு நிலை சரியில்லை. தாங்கள் உடனே காழிக்குச் சென்று மணிவண்ண நம்பியையும் குமுதவல்லியையும் அழைத்துக்கொண்டு எதேனும் ஒரு அண்டை நாட்டில் அச்சமின்றிக் குடியிருக்க ஏற்பாடு செய்யவும். நிலைமை சரியானதும் நான் தங்களிடமிருந்து அவர்கள் வசிக்கும் இடத்தைத் தெரிந்து கொள்கிறேன்” என்பதே அவ்வோலையின் செய்தி. மணிவண்ண நம்பிக்கும் ஒரு ஓலையை அனுப்பித் தன் தாய் மாமனோடு சோழ நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டிக்கொண்டான். ஓலை கிடைத்தவுடன் தாயுமானவரும் மட்டுவார்குழலியும் காழிக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்னர் மணிவண்ண நம்பியையும் குமுதவல்லியையும் அழைத்துக் கொண்டு பாண்டியநாட்டுக்குச் சென்று மாலிருஞ்சோலை அருகில் உள்ள கள்ளந்திரியில் குடி வைத்தனர். அவர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துச் சில மாதங்கள் அவர்களுடன் இருந்து விட்டு விடைபெற்றுக் கொண்டனர்.
விதிவசத்தால், திருமுல்லைவாயில் திரும்பும் வழியில் அவர்கள் பூட்டி வந்த காளைமாட்டு வண்டி ஒரு பள்ளத்தில் குடை சாய்ந்து தலத்திலேயே அவர்களும் அவ்வண்டி ஓட்டுனனும் மாண்டனர். இத்துயரமான சம்பவம் நம்பிக்கும் தெரியவில்லை. இவ்விபத்து பாண்டி நாட்டிலேயே நேர்ந்ததால் மாலடியானுக்கும் இது பற்றிய தகவல் சேரவில்லை.
ராஜாங்க அலுவலில் மூழ்கியிருந்த மாலடியானுக்குத் தன் மாமனிடமிருந்து ஒரு தகவலும் வராதது மனக்கவலையை அதிகரித்தது. நம்பகமான ஒரு உதவியாளனை முல்லைவாயிலுக்கும் காழிநகருக்கும் அனுப்பி நிலைமையை அறிந்து வரச் சொன்னான். அவனாலும் எந்த தகவலையும் திரட்ட முடியவில்லை. தாயுமானவர் தன் மனைவியுடன் காழிக்குச் சென்றதாகவும் அதன் பின் அவர் முல்லைவாயில் திரும்பவில்லை என்றும், காழியில் அவர், மட்டுவார்குழலி, மணிவண்ண நம்பி, குமுதவல்லி இந்நால்வரும் இரண்டு மாட்டுவண்டிகளில் புறப்பட்டுச் சென்றதாகவும் ஆனால் அவர்கள் எங்கு சென்றிருப்பார்கள் என்று எவர்க்கும் தெரியவில்லை என்பதனையும் அவன் தெரிவித்தான். இது மாலடியானுக்கு மேலும் கவலையை அளித்தது.
இதற்கிடையில், ஹொய்சள விஷ்ணுவர்த்தனன் சோழநாட்டின் மீது போர் தொடுத்தான். குலோத்துங்கன் தன் மகன் விக்ரமனை வேங்கியிலிருந்து உடனே புறப்பட்டு வருமாறு பணித்து, கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த அவனை ஹொய்சளனுக்குப் பாடம் புகட்டச்சொன்னான். விக்கிரமன் ஒரு பெரிய படையோடு விஷ்ணுவர்த்தனனை கோலலாவில் (இந்நாளைய கோலாரில்) எதிர்கொண்டு தோல்வியடைந்த அவனைத் துங்கபத்திரை கிருஷ்ணை நதிகளுக்கு மத்தியில் (Raichur doab) இருந்த கங்கவதி நகர்வரைத் துரத்தியடித்தான். இந்த வெற்றியின் பயனாக குலோத்துங்கன் விக்கிரமனைத் தன் வாரிசாக (ராஜகேசரியாக) நியமித்தான்.
கங்கவதிப் போரில், விக்கிரமனுக்கு உளவு தவிர மற்ற வகையிலும் உதவி புரிய மாலடியான் அனுப்பப்பட்டிருந்தான். இவ்வேலை மும்முரத்தில் அவனுக்கு மாதங்கள் பல உருண்டோடியதுகூட தெரியவில்லை. விக்கிரமனும் மாலடியானின் செயல்திறனை வெகுவாகப் பாராட்டினான்.
கங்கவதிப் போர் முடியும் தருவாயில் நடுநாட்டுக்குத் திரும்பிய மாலடியானுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவன் மன்னன், தில்லை கோவிந்தராஜரின் மூர்த்தத்தினைக் கடலிலிடுவதற்கான ஆயத்தங்களை ஆரம்பித்து விட்டான் என்பதே அந்த அதிர்ச்சி.
மாலடியானிடம் கங்கவதி போர் விவரங்களைக் கேட்டறிந்த குறுநில மன்னன் அவனை மகிழ்ச்சியுடன் தழுவிக்கொண்டு, “உன்னை எப்படிப் பாராட்டிப் பரிசில் வழங்குவது எனக்குத் தோன்றவில்லை. உன்னால் விக்கிரமனுக்கு என் மீது அபிமானம் கட்டாயம் கூடும். விக்கிரமன் சோழ அரியணை ஏறியதும் என்னைக் கட்டாயம் பெருமைப் படுத்துவான். ஆனால் ஒரே ஒரு சிக்கல். அவன் உன்னை என்னிடமிருந்து கவர்ந்து கொள்வது நிச்சயம். உன்னை அப்போது பிரிய வேண்டுமே என்பதை நினைக்கும்போது மனம் சற்று ஏக்கமடைகிறது. அதனாலென்ன! உன் ஏற்றம் எனது ஏற்றமுமல்லவா!” எனக்கூறி, “உனக்கு ஒரு வரம் தர என் மனம் துடிக்கிறது. நீ வேண்டுவதைக் கேள்” என்றான்.
மன்னனின் இக்கூற்றைக் கேட்ட மாலடியான், இந்த நல்ல அவகாசத்தைப் பயன்படுத்தி கோவிந்தராஜர் கடலில் எறியப்படுவதைத் தடுக்க முயன்றான்.
“அரசே, நாட்டுக்குழப்பங்கள் மெள்ள மெள்ள தீர்ந்து வரும் நிலையில் கோவிந்தராஜரைக் கடலில் சேர்த்து புது குழப்பத்தை உண்டு பண்ணுவது நல்லதல்ல என்று என் மனத்தில் தோன்றுகிறது. ஆகவே அந்த எண்ணத்தைக் கை விட வேண்டுகிறேன். இதுவே நான் கோரும் வரம்.”
“நண்பா! நான் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதனை ஒருக்காலும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்பது உனக்குத் தெரியாததல்ல. ஆகையால், என்னைக் குழப்பாதே இப்படிப்பட்ட கோரிக்கைகள் மூலம். வேறு எந்த வரமானாலும் கேள் இதைத்தவிர.”
“அரசே! என்னை மன்னித்து விடுங்கள். இப்போதைக்கு எனக்கு எந்த வரமும் வேண்டாம். பின்னர் பார்த்துக் கொள்ளலாம்,” என்ற மாலடியான், “மன்னவா, என் உறவினரைப் பிரிந்து மாதங்கள் உருண்டோடி விட்டன. சில நாட்கள் அலுவலிலிருந்து விடுப்பு கொடுத்தால், அவர்களைப் பார்த்துப் பேசி விட்டு வந்து விடுவேன்,” என்றான். அவ்வரசனும் அதற்குச் சம்மதிக்க, மாலடியான் விடைபெற்றுக் கொண்டான்.
திருமுல்லைவாயிலிலும் காழியிலும் சல்லடை போட்டுச் சலிக்காத குறை ஒன்றுதான். அவனால் தன் மாமன்களைப் பற்றிய எந்த விவரமும் சேகரிக்க முடியவில்லை. மன உளைச்சலில் பித்துப் பிடித்தவன் போல் என் செய்வது என்பது தெரியாமல் தவித்த அவன் தாடாளன் கோயிலுக்குச் சென்று தன் கவலையினை முறையிட்டான். அவன் மனத்தில் ஓரு தெளிவு பிறந்தது. அதன்படி திருவரங்கத்துக்குப் புறப்பட்டான்.
திருவரங்கத்தில் ராமானுஜர் மடத்துக்குச் சென்று அமுதனாரை சந்தித்தான். தன் மன்னனின் பிடிவாதத்தை அவரிடம் விளக்கியதோடு தன் மனக்கவலை பற்றியும் அவருக்குத் தெரிவித்தான். அவன் முறையீட்டுக்குச் செவிசாய்த்த அமுதனார், மாலடியானைத் தேற்றினார். “அரங்கன் அருளால் கட்டாயம் உங்கள் மாமனை நீவிர் சந்திப்பீர். கவலையைத் தவிர்ப்பீர். இப்போது நீங்கள் எப்பாடுபட்டாயினும் திருச்சித்திரக்கூடத்து அண்ணலைக் கடலில் எறியப் படாமல் காக்க வேண்டும். அம்முயற்சியில் உங்கள் கவனத்தைச் செலுத்தவும். விக்கிரம சோழனுக்குத் தாங்கள் நெருக்கமானவர் ஆகி விட்டதால் உங்களால் இந்த பாபத்தைத் தடுக்க முடியும். எம்பெருமானாரை மனத்தில் தியானித்துக் கொண்டு செயல்பட்டால் நல்லதே நடக்கும்,” என்றார்.
அமுதனார் ஆசியோடு மாலடியான் விக்கிரமனைச் சந்திக்க விழைந்தான். ஆனால், விக்கிரமன் விஷ்ணுவர்த்தனனுடன் போரிட்ட சமயத்தில் விக்கிரமாதித்தன் வேங்கியைக் கைப்பற்ற முயன்ற செய்தி கேட்டு அவன் வேங்கிக்குப் பெரிய படையுடன் அந்த முயற்சியைத் தோற்கடிக்கச் சென்று விட்டான். ஆகையால் மாலடியானால் விக்கிரமனைச் சந்திக்க முடியாமல் தன் மன்னனிடம் திரும்பினான். அச்சமயம் கோவிந்தராஜரைக் கடலில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகவும் தீவிரமாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
“அரசே! தாங்கள் என் வேண்டுகோளை நிராகரிக்கக் கூடாது. தங்கள் திட்டத்துக்குப் புறம்பாக நான் எதையும் கோரவில்லை. திருச்சித்திரக்கூடத்து அண்ணலைக் கடலில் சேர்க்கும் முன் என் கிராமமான திருமுல்லைவாயிலில் அவர்க்கு வைணவ மரபினை ஒட்டி ‘இயற்பா சாற்றுமுறை’ (திவ்யப்ரபந்த பாராயணம் மற்றும் அமுது சேவித்தல்) செய்ய ஆசைப்படுகிறேன். தாங்கள் அனுமதி அளித்தால் அதனை என் வீட்டிலேயே நடத்தலாம். அதன்பின் அவரது மூர்த்தத்தைக் கடலில் சேர்த்து விடலாம்” என்றான் மாலடியான்.
“உன் விருப்பப்படியே செய்வோம்,” என்றான் அக்குறுநில மன்னன்.
சகல மரியாதைகளுடன் கோவிந்தராஜரின் சிலையை ஒரு பல்லக்கில் ஏற்றி திவ்யப்ரபந்தம் இசைப்போர் முன்னே செல்ல தொடர்ந்து ஆரணம் முழங்க அந்த ஊர்வலம் திருமுல்லைவாயிலை அடைந்தது. மாலடியான் தன் வீட்டில் சாற்றுமுறைக்கான ஏற்பாடுகளை விமரிசையாகச் செய்திருந்தான்.
மன்னனும் கலந்துகொண்ட அச்சாற்றுமுறை வைபவமாக நடந்தேறியது. அதன் பின்னே அனைவருக்கும் ப்ரஸாதம் விநியோகம் செய்யப்பட்டது.
கோவிந்தராஜரும் (பாற்)கடலுக்கு ஏகினார்.
இந்நிகழ்வுக்குப் பின் மாலடியான், மன்னனை நோக்கி, “அரசே! எனக்கு இப்போது ஓய்வு தேவை. இனி எஞ்சியுள்ள என் வாழ்நாட்களை மாலவன் சேவையில் அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்றான்.
ஒரு நல்ல நம்பகமான நண்பனுக்குச் சமமான சேவகனை இழக்கிறோமே என்ற நினைவு வாட்டினாலும், அச்சிற்றரசன் மாலடியானின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவனுக்குப் பாராட்டுகளுடன் பரிசும் அளித்துப் பிரியா விடை கொடுத்தான்.
(தொடரும்)
படத்திற்கு நன்றி: http://hindugodphoto.blogspot.in/2008/05/lord-vishnu-photo.html
சாற்றுமுறையில் எல்லாம் கலந்து கொள்ளும் மன்னனுக்கு விக்ரஹம் அங்கே கோயிலிலேயே இருப்பதில் என்ன பிரச்னை? புரியவில்லை.