Featuredஇலக்கியம்கட்டுரைகள்

இழுத்தடிப்பதற்கு எல்லை இல்லை

 

நாகேஸ்வரிஅண்ணாமலை

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்தால், அதனால் சில பாதகங்கள் ஏற்படலாம் என்று வழக்கை இன்னொரு மாநிலமான கர்நாடகாவிற்கு மாற்றினார்கள்.  இதற்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. இப்படி மாற்றி ஏழு வருடங்கள் ஆகியும் எந்த வித முன்னேற்றமும் வழக்கில் ஏற்படவில்லை.

இதற்கு முக்கிய காரணம் பிரதிவாதி ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தடை எழுப்பி அதன் தீர்ப்பு ஒவ்வொரு நீதிமன்றமாகப் போய் உச்சநீதி மன்றம்வரை போனது. சில உதாரணங்கள். கர்நாடக மாநிலத்தில் வழக்கு நடந்ததால் எல்லாத் தமிழ் ஆவணங்களையும் மொழிபெயர்க்க வேண்டும் என்று ஒரு மனு. இதற்கு எல்லா ஆவணங்களையும் மொத்தமாக ஒரே நேரத்தில் கொடுப்பதில்லை. பிரதிவாதி வழக்குமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி ஒரு மனு.  வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் நியமனம் அரசிதழில் வெளியிடப்படாததால் நியமனம் செல்லாது என்று ஒரு மனு.

இப்படி ஏகப்பட்ட மனுக்கள். இவற்றில் சில பாரபட்சமற்ற நீதிவிசாரணைக்குத் தேவையானவை. பெரும்பாலானவை நீதி விசாரணையை முடக்குவதற்காகப் போடுவது. இந்த வழக்கில் அற்பக் காரணங்களுக்காக மனுக்கள் உச்சநீதிமன்றம் வரை சென்றன. இந்த இழுப்படிப்பு பிரதிவாதியின் வக்கீல்கள் செய்வது.  நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

இந்த வழக்கில் இழுத்தடிப்புக்கு மேல் சிறப்பு பிராசிக்யூட்டருக்கு அரசியல்வாதிகளால் மிரட்டலும், ஆசைகாட்டலும். எல்லாவற்றுக்கும் மேல் அவர் மீது பொய் வழக்கு. இதையெல்லாம் காரணம் காட்டி, சிறப்பு பிராசிக்யூட்டர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசு சிறப்பு பிராசிக்யூட்டருக்கே இந்தக் கதி என்றால் சாதாரணமானவர்களைப் பற்றி என்ன சொல்வது?

வழக்கை இழுத்தடித்துகொண்டே போவது நம் வழக்கறிஞர்களுக்குக் கை வந்த கலை.  நான் 1996-இல் ராமநாதபுரத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது!  இப்போது இந்த வழக்கு முறையீட்டு நீதிமன்றத்தில் இருக்கிறது.  எங்களுக்குச் சொந்தமான கடைகளைக் காலிசெய்து கொடுக்கும்படி கேட்ட வழக்கு இது.  இந்த நீதிமன்றத்தில் கடைகளைக் காலிசெய்து கொடுக்கும்படி தீர்ப்பானது, 16 வருடங்களுக்குப் பிறகு.  மேல் முறையீட்டிலும் இதே தீர்ப்பு. அற்ப காரணங்களைச் சொல்லி எதிர்தரப்பு வக்கீல் இன்னும் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்.  இதற்குப் பல  சால்ஜாப்புகள். ஒன்று, பல தவணைகளுக்குப் பிறகு தாங்கள் தாக்கல் செய்த மனுவில் தவறு நேர்ந்துவிட்டதாகக் கூறி வேறொரு மனு கொடுப்பதாகக் கூறுவது.  அல்லது எங்கள் வழக்கறிஞர் கொடுக்கும் மனுவில் தவறு இருப்பதாகக் கூறிக் காலம் தாழ்த்துவது.  அடிக்கடி வக்கீலுக்கு உடம்பு சரியில்லை என்று கூறுவது. ஒரு முறை தன் மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்றார் எதிர் வக்கீல். அவர் ஆஜர் ஆகாமல் வழக்கில் தீர்ப்பானால், அதைச் சொல்லி மறு விசாரணைக்கு மனு கொடுப்பது. இப்படியெல்லாச் சாக்குகளுக்கும் பிறகு வழக்கு விசாரணைக்கு வந்து மூன்று மாதங்களில் கடைகளைக் காலிபண்ணச் சொல்லித் தீர்ப்பு வந்தது. . தீர்ப்புச் சொல்லி ஒரு வருடத்திற்குப் பிறகு அமீனா கடைகளுக்குச் சென்று கடைகளைக் காலிசெய்து கொடுக்கும்படி கேட்டபோது திடீரென்று காலிசெய்து கொடுக்கும்படி கேட்பதால் தங்களால் காலிசெய்ய முடியாதென்றும், இன்னும் அவகாசம் வேண்டும் என்றும் ம்னு கொடுக்கிறார்கள். கொடுத்த அவகாசம் போதாதா?  இந்த மனுவை விசாரித்துத் தள்ளுபடி செய்த பின்னும் காலிபண்ணாமல் இருந்ததால் போலிஸைக் கூட்டிவர நாங்கள் ஒரு மனு கொடுத்தோம். இதற்கு ஒரு விசாரணை. இப்படி இழுத்துக்கொண்டே போனால் நீதிபதிகளுக்கு மற்ற வழக்குகளை விசாரிக்க எப்படி நேரம் கிடைக்கும்? ஏன் நீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகாது?

குற்றம் சாட்டப்பட்டவரின் கட்சியைக் கேட்க எந்த வாய்ப்பும் மறுக்கப்படக் கூடாது என்னும் ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே இப்படி மனுக் கொடுக்கச் சட்டம் இடம் கொடுக்கிறது. ஆனால் இதை வழக்கை முடிக்காமல் இருப்பதற்குப் பயன்படுத்துபவர்கள் வக்கீல்கள்.

ஒரு முறை எங்கள் வழக்கறிஞரிடம் ‘இனி தலைமுறைக்கும் நீதிமன்றத்திற்கே நான் போகப் போவதில்லை.  என் சந்ததிகள் யாரும் போக வேண்டாம் என்று அறிவுரை கூறப் போகிறேன்’ என்று சொன்ன போது அவர், ‘நீங்களாகப் போகாவிட்டாலும் மற்றவர்கள் உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கலாமே’ என்றார்.  இதற்கு என்ன செய்வது?

நீதிமன்றத்தில் இப்படி இழுத்தடிக்கிறார்கள் என்றால் அரசு அலுவலகங்களில் இழுத்தடிப்பது இதை விடக் கொடுமையாக இருக்கிறது.  நாட்டின் ஜனத்தொகையை விட அதிக ரேஷன் கார்டுகள் இருந்ததால் போலிக் குடும்ப அட்டைகளை அகற்றுவதற்காக மத்திய அரசு ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் கொடுப்பதற்காக ஆதார் அட்டை வழங்குவது என்று முடிவு செய்தது.  ஆதார் அட்டைகளின் பல குறிக்கோள்களில் ஒன்று போலிக் குடும்ப அட்டைகளை அகற்றுவது.  பழைய குடும்ப அட்டைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு புது அட்டைகள் வழங்குதென்று முடிவுசெய்தார்கள்.

நாங்கள் இப்போது வருடத்தில் பல மாதங்கள் அமெரிக்காவில் இருப்பதால் இந்தியாவிற்கு வரும்போது இந்த வேலையை ஆரம்பித்தோம்.  புது தற்காலிக அட்டை வாங்குவதற்குள் பல முறை இழுத்தடித்தார்கள்.  அதன் பிறகு எங்கள் போட்டோவும் அங்க அடையாளங்களும் அடங்கிய விபரங்களைக் கொடுப்பதற்கும் அமெரிக்காவில் உள்ள எங்கள் பெண்கள் இருவரை அதிலிருந்து அகற்றுவதற்கும் பல மாதங்கள் ஆயின.  எல்லா வேலையும் முடிந்து தற்காலிக அட்டை கிடைப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆயின.  இனி அசல் அட்டை வாங்கும் வேலைதான் பாக்கி இருந்தது.  இனி இந்த வேலை முடிந்தது என்று  நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.  ஆனால் அதன் பிறகும் பல இன்னல்கள் ஏற்பட்டன.  முதலில் அசல் அட்டைகளை விநியோகிப்பதற்கு அரசு ஆணை இன்னும் வரவில்லை என்றார்கள். அது வந்த பிறகு அது எந்த அலுவலகத்தில் கிடைக்கும் என்று சரியாகச் சொல்லவில்லை.  ஒவ்வொரு அலுவலகமாகப் போக வேண்டியிருந்தது.  ஒரு முறை என் கணவர் அங்கிருந்த இரண்டு வரிசைகளில் ஒன்றில் நின்றிருந்தார்.  எந்த வரிசையில் நிற்க வேண்டும் என்று யாரும் சரியாகக் கூறவில்லை.  கடைசியாக அவர் முறை வந்ததும் அவர் நிற்க வேண்டிய வரிசை அது அல்ல என்று கூறி அவ் அவரை மறுபடி இன்னொரு வரிசையில் நிற்க வைத்தார்கள்.  இப்படி எத்தனையோ முறை அலைச்சல்.  கடைசியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக அட்டையின் அசல் வேண்டும் என்றார்கள்.  அதை ஒரு நண்பரிடம் கொடுத்து வைத்திருந்தோம்.  அவர் அதைத் தொலைத்துவிட்டதால் மறுபடி போட்டோ வேண்டும் என்றார்கள்.  அதையும் முடித்த பிறகு மறுபடி போய்க் கேட்டால் தற்காலிக அட்டையின் அசல் வேண்டும் என்று மறுபடி கூறினார்கள். இதற்கு மேல் பொறுக்க முடியவில்லையாதலால் நேரே மாவட்ட ஆட்சியரையே போய்ப் பார்த்தோம்.  அவர் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியதால் ரேஷன் அட்டையை கடைசியாகக் கொடுத்தார்கள்.

லஞ்சம் கொடுக்கக் கூடாது என்னும் கொள்கையால் இத்தனை இடர்ப்பாடுகள்.  இதற்கென்று உள்ள தரகர்களைப் பிடித்துப் பணத்தையும் கொடுத்திருந்தால் வேலை சுலபமாக முடிந்திருக்கும்.

இதை விடக் கண்ணியத்தை இழக்கவைத்த இன்னொரு சம்பவம்.  சில வருடங்களுக்கு முன் மைசூரிலிருந்து 15 மைல் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தன் விவசாய நிலத்தை அரசின் அனுமதி பெற்று ஒரு சொந்தக்காரர் பல வீட்டு மனைகளாக்கி விற்றார்.  நாங்களும் அதில் ஒன்றை எங்கள் மகளுக்கு வாங்கினோம்.  அதைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும்போதே ஊழல் ஆரம்பித்துவிட்டது.  நிலத்தை விற்றவர் தரகர் வைத்திருந்தார். தரகர் துணைப் பதிவாளர் அறைக்குள், வெளியே நின்றுகொண்டிருந்த வரிசையைத் தாண்டி உள்ளே போய்க் கொடுக்க வேண்டியதைக் கொடுத்ததும் வேலை வேகமாக முடிந்தது. இது எங்கள் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும் நிலத்தை விற்பவர் செய்யும்போது ஜீரணித்துக்கொண்டோம்.

வேலை முடிந்த பிறகு நாங்கள் அமெரிக்கா சென்றுவிட்டோம்.  நாங்கள் வாங்கியிருந்த நிலத்தையும் மற்ற நிலத்தையும் சேர்த்து மத்திய அரசு அணு உலைக்குத் தேவையான எரிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை விஸ்தரிக்க எடுத்துக்கொண்டது. நிலத்திற்கு எவ்வளவு நஷடஈடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு  அரசு இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.  பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு மூன்று மாதத் தவணை கொடுத்தது.  நாங்கள் அமெரிக்காவில் இருந்ததால் சம்பந்தப்பட்ட அலுவலரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை நாங்கள் இந்தியாவிற்குத் திரும்ப வரும் வரை வைத்திருப்பதற்கு அனுமதி வாங்கினோம்.

இந்தத் தடவை இந்தியாவிற்குத் திரும்பி வந்து சில நாட்களிலேயே அந்த வேலையை ஆரம்பித்தோம்.  அந்தக் கிராமம் மைசூரிலிருந்து 25 மைல் தூரத்திலுள்ள ஹுன்சூர் என்னும் ஊரின் தாலுகா ஆபீஸின் கீழ் வருகிறது.  ஹுன்சூர் தாலுகா ஆபீஸில் போய்க் கேட்ட போது நாங்கள்தான் அந்த நிலத்திற்கு உரிமையாளர் என்பதற்கு விற்பனைப் பத்திரத்திற்கு மேலாக இன்னும் சில ஆவணங்கள் வேண்டும் என்றார்கள்.   அவற்றை எல்லாம் சேகரித்துக்கொண்டு போனபோது வம்ச விருட்சம் என்னும் குடும்பப் பரம்பரை பற்றி இன்னொரு ஆவணம் வேண்டும் என்றார்கள்.  இது எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை. அதை மைசூர் தாலுகா ஆபீசில் கிராமக் கணக்கரிடம் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்தக் கணக்கர் தவறான சான்றிதழ் கொடுத்தற்காகத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்ய்ப்பட்டிருக்கிறார். அவர் இருந்தாலும் எங்கள் குடுபத்தைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் பிறந்தது தமிழ்நாட்டில். நாஙக்ள் சொல்வதை வைத்துதான் அவர் இந்தச் சான்றிதழைத் தர முடியும். அதனால், நாங்களே பிரமாணப் பத்திரம் எழுதி நோட்டரியின் கையெழுத்ததையும் வாங்கினோம். ஆனால் தாசில்தார் அலுவல்கத்திற்கு இரண்டு முறை இருபத்தைந்து மைல் பஸ்ஸில் பிரயாணம் செய்து வாதாடியும் ஒத்துக்கொள்ளவில்லை.

மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சரியில்லை என்றார்கள். எல்லாக் குறைகளையும் ஒரே நேரத்திலும் சொல்லவில்லை; ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒன்று இல்லை என்றார்கள். கடைசியில் அலுத்துப்போய் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட பிறகே ஆவணங்களை ஒத்துக்கொண்டனர்.

எங்கள் நிலத்தை எடுத்துக்கொண்ட பிறகு அத்ன் விலையில் பாதியை நஷ்ட ஈடாகக் கொடுப்பதில் இவ்வளவு இடர்ப்பாடுகள். தன்னுடைய குடிமக்களை நம்பாத அரசு ஊழலில் ஊறிய தன் அலுவலர்களை நம்புகிறது. தங்கள்  அதிகாரத்தைக் காட்டவும் லஞ்சம் வாஙகவும் அவர்கள் குடிமக்களை அலைய வைக்கிறார்கள்; கண்ணியத்தை இழக்க வைக்கிறார்கள். குடிமக்களும் உண்மையாக நடந்துகொள்வதில்லை என்பதும் உண்மை. இதனால் உணமையாக நடந்துகொள்பவர்களும் இழுத்தடிக்கப்படுகிறார்கள்.

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. Avatar

    என்னம்மா இது? ‘இந்த நீதிமன்றத்தில் கடைகளைக் காலிசெய்து கொடுக்கும்படி தீர்ப்பானது, 16 வருடங்களுக்குப் பிறகு.  மேல் முறையீட்டிலும் இதே தீர்ப்பு. அற்ப காரணங்களைச் சொல்லி எதிர்தரப்பு வக்கீல் இன்னும் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார். ‘
    ~ இவற்றில் இருந்து தப்ப, சரியான சட்டப்பூர்வமான வழிமுறைகள் உண்டு. அவை நடக்கும். தேவையானால், தனி மடலில் தொடர்பு கொள்க. 
    மற்றபடி இன்னல்கள் பல அனுபவித்து விட்டீர்கள். பெங்களுரிலேயே மக்கள் ஆலோசனை மன்றம் ஒன்றை அமைக்க மிகவும் பிரயாசைப்பட்டேன்.அது இருந்தால், பிரச்னைகள் எழாது, இங்கிலாந்து போல. ஆனால், இந்தியர்களுக்கு அது அப்பீல் ஆகவில்லை. இத்தனைக்கும் பொறுப்பான ஆலோசனை இலவசம்.
    இன்னம்பூரான்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க