இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (03) வண்ணாத்திக் குருவி

1

நடராஜன் கல்பட்டு

ஆங்கிலத்தில், ‘Oriental Magpie Robin (Copsychus saularis) என்றழைக்கப்படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி. வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்? வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளாற் போன்ற நிறம் உடையதால் தான் இக்குருவிக்கு இப்பெயரோ? அல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ? இரண்டே வண்ணங்கள் கொண்ட குருவியினை வண்ணத்துக் குருவி என்றழைப்பது பொருத்தமாய் இருக்காது என நினைக்கிறேன். ஆகவே முன்னதுதான் சரியாக இருக்க வேண்டும்,

(கருப்பு வெள்ளைப் படம் பங்களூரில் 1965ல் எடுத்தது)

வண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்களில் காணப்படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும். மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்று விடும். பிப்ரவரி மாதம் பிரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும். முதலில் ஸ்ருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் ஸ்வரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும். ஸ்ருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள். ராதை வேறு யாரும் இல்லை. சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவிதான். இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும்.

(என் குரல் எப்படி இருக்கு?)
Oriental Magpie Robin (Copsychus saularis)- Male (படம் விக்கிபீடியாவில் இருந்து)

இருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காது அல்லவா? எங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும். இரு ஆண்களுக்கு இடையே சண்டை நடக்கும். வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும்.

வில்லன் மற்றொறு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நீங்களாகக் கூட இருக்கலாம். ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள்.

அது உங்களையும் தாக்கும். நாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்து விட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். சொந்த அனுபவத்தில்தான் இதைச் சொல்கிறேன்.

(கேலிச் சித்திரம் – சேகர்)

வண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும். கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும். செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும். குஞ்சுகள் வெளி வந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டு வந்து அவற்றுக்கு அளிக்கும்.

வண்ணாத்திக் குருவியை 1965 ல் படம் பிடித்த போது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ.

பங்களூரில் விதானசௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினக் கண்டு நானும் எனது இரண்டு சகாக்களுமாகப் படம் பிடிக்க ஆரம்பித்தோம். அலுவகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், “என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?” என்று கேட்டனர். நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம். மூன்றாவது நாள் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க மற்றொருவர், “விடுப்பா. அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன். அந்த மரப் பொந்தையே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க” என்றாரே பார்க்க வேண்டும்!

வண்ணாத்திக் குருவியைக் கண்டால் கவனமாகப் பாருங்கள். அதன் ஆடை அழகிலும், குரலிலும் நீங்களும் மயங்கிப் போய் இவற்றை அளித்த ஆண்டவனைக் கட்டாயம் காண்பீர்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (03) வண்ணாத்திக் குருவி

  1. கல்பட்டாரே! செளக்யமா திவ்யதம்பதிகள்? இத்தனை நாட்களாக எழுதுகிறீர்கள். நானும் என் மகனிடன் சொல்லி வருகிறேன். ஆனால், பின்னூட்டம் போடுவதில் தள்ளாட்டம்! வண்ணாத்திக்குருவி தான். இறைவனின் வாசஸ்தலம் தான்.
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *