பண்ணையார்
எஸ். நாராயணன்
குமாரசாமிப் பண்ணையார் உறுதியாக இருந்தார். கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. தான் எடுத்த முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை என்பதை முகக் குறிப்பின் மூலமாகவும், உடல் அசைவு மூலமாகவும் மிகத் தெளிவாக அறிவித்துக்கொண்டிருந்தார்.
சுற்றியிருந்த தர்மகர்த்தாவும், கர்ணமும், கோயில் குருக்களும் செயலற்று அவர் முன் கை கட்டிக் கொண்டு நின்றனர்.
குருக்கள் மட்டும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “பண்ணையார்வாள்! நீங்க தான் ஊரிலேயே பெரியவர். இந்தக் கோயில் உங்களோடது. அம்மன் கோயில் தேர்த் திருவிழாவை நீங்க முன் நின்னு நடத்தலைன்னா இந்த ஊர் பொது ஜனமெல்லாம் என்ன நினைப்பா?. தேர் எப்படி ஓடும்? அம்மனுக்காகவும், எங்களுக்காகவும் உங்க மனசை மாத்திக்கணும்.” பணிவான குரலில் பண்ணையாரை வேண்டிக்கொண்டார்.
“இல்லை.. குருக்களையா! நான் கொடுத்த வாக்கு தவறிட்டேன்! என்னை அம்மன் மன்னிக்கவே மாட்டா! அன்னிக்கே உசுரை விட்டிருக்கணும். பொஞ்சாதி, ஊரு உறவுன்னு என் கையையும் காலையும் கட்டிப்போட்டுட்டாளே நம்ம ஊரு ஆத்தா! நமக்கு நேரம் வர வரைக்கும் மூச்சுக் காத்தை இழுத்தாகனுமில்ல! என்ன செய்ய!” பண்ணையாரின் இந்த வார்த்தைகளால் மேலும் அவரை வற்புறுத்த யாரும் விரும்பவில்லை.
“எனக்காக எந்தத் திருவிழாவும் நின்னு போகக் கூடாது. நீங்க எல்லாரும் சேர்ந்து விமரிசையாக நடத்துங்க. கிளம்புங்க.” பண்ணையார் மேல் துண்டை உதறி தோளில் போட்டவாறே திண்ணையிலிருந்து எழுந்து உள்ளே செல்ல ஆரம்பித்தார்.
வேறு வழியின்றி விடை பெற்றுக்கொண்டனர் மூவரும்.
அந்த ஊர் ஜனங்களைப் பொறுத்தமட்டில் பண்ணையார் ஒரு பெரிய மனிதர் மட்டுமல்ல. அவரை அவர்கள் தினமும் வணங்கும் அம்மனுக்கு அடுத்த தெய்வமாகவே போற்றினார்கள்.
அவர் சொல்லில் நேர்மை, சிந்தனையில் தெய்வீகம், செயலில் மனித நேயம் என்று அத்தனை நல்ல குணங்களும் நிரம்பி வழியும் ஒரு நிறை குடம்.
ஊரில் எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் முதலில் நிற்பவர் பண்ணையார். அவர் பேச்சை யாரும் மீறியதாக சரித்திரம் இல்லை. இந்தச் செல்வாக்கு ஐந்தாவது தலைமுறையாகத் தொடர்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன் ஊரே அல்லோலப்படும்படி மிக விமரிசையாக பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் அம்மன் கோயிலிலே நடத்தினார். தன் பெண்ணுக்கும் பக்கத்து ஊர் மிராசுதார் மகனுக்கும் திருமணம் செய்வதாக அம்மன் முன்னே, கோயிலின் உள் மண்டபத்தில் வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் அவருடைய மகள் அவருடைய வார்த்தையை மீறிவிட்டாள். மீறியது மட்டுமன்றி ஊரை விட்டும் ஓடிவிட்டாள், மனசுக்குப் பிடித்த ஒருவனுடன்.
ஒரு பக்கம் கோபம். ரொம்பவும் மனசு ஒடிந்து போய் உட்கார்ந்திருந்தார் பண்ணையார்.
மிராசுதாருக்கு தாராளமும் பெருந்தன்மையும் அதிகம் தான்.
“விட்டுத் தள்ளுங்க.. பண்ணையாரே.. எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கலை உங்க குடும்பத்தோட சேரணும்னு. ஒரு போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுங்க பொண்ணு காணோம்னு” ஆறுதல் கூறினார்.
“அவ கிடக்கறா சிறுக்கி. அம்மன் முன்னாடி நான் கொடுத்த வாக்குலேயிருந்து தவறிட்டேனே…என்னை நீங்க தாராள மனசு பண்ணி மன்னிச்சுடலாம்…ஆனா தெய்வம் மன்னிக்குமா? இது தெய்வ குத்தமாச்சே!”
பண்ணையார் ஆறவில்லை.
அதி காலை நேரத்திலேயே ஊர் மக்கள் அனைவரும் கீழ வீதியில் தேரின் முன் திரண்டிருந்தனர். தேர் புஷ்பங்களாலும், வண்ணத் துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தேரினுள் அம்மன் கொலுவீற்றிருந்தாள்.
குருக்கள் தேரின் இடது புறம் உள்ள மரத் தூணைப் பிடித்துக்கொண்டு வலது கையால் துண்டை சுழற்றி கீழே இருந்த மக்களை உற்சாகப்படுத்த, பின் புறம் சன்னக்கட்டையால் தேரை உந்த, தேர் மெதுவாக நகர்ந்தது.
மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்தடி தூரம் போயிருக்கும். கடக் முடக் என்ற ஒரு பெரிய சத்தத்துடன் தேர் கொஞ்சம் சாய்ந்து நின்றது.
எல்லோரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.
தேரின் அச்சாணி முறிந்திருந்தது. நல்ல வேளை. பெரியதாக ஒரு விபத்து நடந்திருக்க வேண்டும். அது தெய்வாதீனமாகத் தடுக்கப்பட்டதை எல்லோராலும் உணர முடிந்தது.
“இதற்கான இன்னொரு அச்சாணி பண்ணையார் வீட்டுல தான் இருக்கு. அதற்கு ஒரு வழக்கம் இருக்கு…” மேற்கொண்டு வார்த்தைகளை குருக்கள் தர்மகர்த்தாவின் காதுகளில் மெதுவாகத் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் தர்மகர்த்தாவும், குருக்களும் பண்ணையாரின் வீட்டின் முன் நின்றனர் மாலை, பரிவட்டத்துடன். நாதஸ்வரமும் மேளமும் தங்களின் இசை திறமையை காற்றில் மிதக்க விட்டனர்.
மேல் தளத்தில் பத்திரமாக இருந்த அச்சாணியை கீழே இறக்கி, மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து அலங்கரித்தனர்.
“நீங்க இல்லாமல் எப்படி தேர் ஓடும்? அம்மன் உங்களை மன்னிச்சது மட்டுமில்லே ! மாலை, பரிவட்டம், மரியாதையோட கூட்டி வர எங்களை அனுப்பி வைச்சிருக்கா.” தர்மகர்த்தா நா தழுதழுக்கப் பேசினார்.
பண்ணையார் தலையைக் குனிந்து பரிவட்டத்தையும், மாலையையும் ஏற்றுக்கொண்டு வேகமாக நடந்தார் தேரை நோக்கி.
புகைப்படத்துக்கு நன்றி:
சக்தி சக்திதாசன்
Very Good Story. Vazkha Valamudan.
From the beginning to end, the way handled the situation is Fantastic.
Ennuda Vazthukal to Thiru.Narayanan
Edhirpaarththa mudivu.
அம்மன் பெண் தெய்வம் அல்லவா. புரிந்து கொண்டு பெரிய மனசு என்பதை விளக்கினாள். இந்த அருமையான கதை ஒரு விதத்தில் பக்தி இலக்கியத்தில் நடந்து முடிந்தது தான். திருப்பாணாழ்வாரை, ஶ்ரீரங்கனின் ஆணைப்படி, லோகசாரங்கமுனி தோளில் ஏற்றிக்கொண்டு, மேளதாளத்துடன் பெருமாளிடம் அழைத்து வந்தாரல்லவா.
இன்னம்பூரான்
நம் முன்னோர்கள் கடை பிடித்து வரும் எல்லா முறைகளிலும் நிச்சயம் ஏதாவதொரு நன்மை இருக்கவே செய்யும். நல்ல நடை.
dharmathin vaazhvuthanai soodhu kavvum, pin dharmam vellum !!