ஹாஹோ 

“ஸ்ரீ பகவான் உவாச”, ஹாஹோ தனது தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார். திண்ணையிலும் தெருவிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடவுள் துகள் (Godly Particle) போட்டால் (இன்னும் எத்தனை காலம் தான் எள்ளை உபயோகிப்பது?) கடவுள் துகள் எடுக்க முடியாது.

“என்றைக்குமில்லாமல் இன்றைக்கு இவ்வளவு கூட்டம் எப்படி வந்தது?”, என்று யோசித்துகொண்டே தொடர்ந்தார் ஹாஹோ. “இன்னிக்கு நாம 551வது ஸ்லோகத்தைப் பார்க்க போறோம். இது மிகவும் முக்கியமான ஸ்லோகம்!”

“அப்ப பாக்கியெல்லாம் முக்கியமில்லாத ஸ்லோகங்களா?”, என்று கேட்டுவிட்டு கெக்கே பொக்கே என்று சிரிக்க ஆரம்பித்தார் எடக்கு மடக்கு.

“அப்படியில்லை எல்லாமே முக்கியமானதுதான் ஆனா இது முக்கிய, முக்கிய ஸ்லோகம்!”, என்று ஹாஹோவுக்கு ஆதரவாகத் தலையை நீட்டினாள் சாதாரணீ.

“கொஞ்சம் பார்த்து முக்கச் சொல்லுங்க அப்புறம் டாக்டர்கிட்ட போக வேண்டியதாகி விடும்!”, இப்படிச் சொன்னது தமாசு. தான் எதை சொன்னாலும் அது ஜோக்தான் என்று நம்பி விடுகிற ரகம்தான் இந்த தமாசு. அதுவே சொல்லி விட்டு அதுவே விழுந்து விழுந்து சிரிக்கும்.

“கொஞ்சம் அவரைச் சொல்ல விடுறீங்களா?”, என்று ஒரு அதட்டு போட்டார், புதிதாய் வந்த பழனியப்பன்.

“மேலே வேர் உள்ளதும், கீழே கிளைகள் உள்ளதுமாகிய அரச மரத்தை அழிவற்றதாகக் கூறுகின்றனர்”, ஹாஹோ இப்படிக் கூறிய உடனேயே ஆமாம்பிரபு எழுந்து, “ஆஹா…! பிரமாதம்! அற்புதம்!”, என்று மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தார். நாத்திக்சாமி இது பொறுக்காமல், “இங்க இருக்கிற யாராவது இப்படி ஒரு மரத்தைப் பார்த்திருக்கீங்களா? இல்லாததையும் பொல்லாததையும் சொல்லறதே இவங்க பொழப்பாப் போச்சி, இதுக்கு ஆமாம் சாமி போட ஆயிரம் பேர் வேற! ”, என்று அங்கலாய்த்தார்.

“நாத்திக், எடுத்த எடுப்புல எல்லாம் பொய்யாத்தான் தெரியும், இப்படி ஒரு மரம் இருக்கிறதை இப்போ ஒனக்குப் புரிய வைக்கப் போறேன்!”, என்று ஹாஹோ சொன்னதும் பேரறிவு எழுந்து, “இந்த ஊர்த்வ மூலத்தைப் பற்றிக் கட உபநிடதமும் சொல்லுது, இதெல்லாம் இவங்களுக்குப் புரியாது, நீ மேலே சொல்லுப்பா”, என்றார்.

“புரியாததைப் புரிய வைக்க முயற்சிக்கணும், இல்லைன்னா தோல்வியை ஒத்துக்கணும், அவங்களுக்குப் புரியாது, இவங்களுக்குக் கிடையாதுன்னு ஒதுக்கி, ‘மறை’ச்சு வச்சதாலதான், கண்ணை மூடிக்கிட்டு நல்ல விஷயங்களையெல்லாம் எதிர்க்கக் கிளம்பிடறாங்க, என்ன சரிதானே நாத்திக்?”, ஹாஹோவின் கேள்விக்குப் பதில் அளிக்காமலேயே நாத்திக்சாமி, “என்னவோ புரிய வைக்கறதா சொன்னீங்களே, அதைச் செய்யுங்க மொதல்ல!”, என்றார்.

“மரமுன்னு ஒன்னு இருக்கறதாவும், அதுக்கு வேருன்னு ஒன்னு இருக்கறதாவும், நாத்திக்சாமி ஒத்துக்கிறாரான்னு முதல்ல கேளுங்க”, பக்திப்பழுத்தான் கேலி பேசினார்.

“நானும் நீங்களும் ஒரு ராக்கெட் ஏறி நிலாவுக்குப் போறோமுன்னு வச்சிக்குங்க!”, நாத்திக்சாமியைப் பார்த்து சொல்ல, “அவரு ரெங்காராட்டனத்துல ஏறுவதுக்கே விழி பிதுங்கிப் போயிடுவாரு. அவரப்போயி ராக்கெட்டுல கூப்புடறீங்களே!”, நாத்திக்சாமியின் மனைவி சரியான நேரத்தில் வீட்டில் போட்ட சண்டைக்குப் பதிலடி கொடுத்தாள். “அட கற்பனையிலதாம்மா, அங்கிருந்து நம் பூமியை, கீழே பார்ப்பியா, மேலே பார்ப்பியா?”, என்று கேட்டதும், “மேலதான் பூமியைப் பார்க்க முடியும், இதிலென்ன சந்தேகம்?”, என்று திரும்பக் கேட்டார். “ம்..சரியாச் சொன்ன, அப்ப இதோ இங்க இருக்கிற அரச மரத்தை நல்ல தொலைமானி வச்சு பார்த்தா அது எப்படித் தெரியும்?”, இப்படி ஹாஹோ கேட்டதும் நாத்திக்சாமி பதில் சொல்லக் கூச்சப் பட்டுக்கிட்டு மௌனமானார். “மரம் தலைகீழாத் தொங்கிக்கிட்டிருக்கற மாதிரி தெரியும்!”, சாதாரணீதான் பதில் சொன்னாள்.

“அப்போ நாமெல்லாம்கூட தொங்கிக்கிட்டுதான் இருக்கோமா?”, மக்கான் இப்படி கேட்டுவிட்டு முகம் வெளிறிப் போய் திண்ணையில் இருந்த தூணை இறுக்கப் பற்றி கொண்டான். பின் கீழே (!) விழும்போது தலை அடிபட்டால் என்னாகும் என்று நினைத்து ஒரு கையால் தூணைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் டர்க்கித் துண்டெடுத்துத் தலையில் சுற்றிக் கொண்டான்.

“இதத்தான் நாங்க ‘மாத்தியோசி’ன்னு விளம்பரத்துறையில சொல்லிக்கிட்டு இருக்கோம்”, இப்படிச் சொன்னது சமூகன். “சமூகன், நீங்க சொல்லறது வியாபாரம், இதுல சொல்லியிருக்கிறது வாழ்க்கை, நாம வாழ்க்கையில எதெல்லாம் நேர்ன்னு நெனச்சுக்கிட்டு இருக்கோமோ அதெல்லாம் தலைகீழா இருக்கு, நாம எதெல்லாம் தலைகீழ்ன்னு நெனச்சுக்கிட்டு இருக்கோமோ அதெல்லாம் நேரா இருக்கு, உண்மைதானே ஹாஹோ?”, இப்படிக் கேட்டார் பேரறிவு.

“ஆமாமாம் எங்க ஊர்த் திருவிழாவுல கோணங்கி வேஷம் கட்டி ஒருத்தர் வருவாரு, வாழைப்பழத் தோலச் சாப்பிட்டிட்டு பழத்தைக் குப்பைத் தொட்டில போடுவாரு, கால்ல விழச்சொன்னா தலை வெளிப் பக்கமும் கால் அம்மன் பக்கமும் இருக்கிற மாதிரி விழுவார். பின் பக்கமாவே நடந்து போவாரு, அதெல்லாம் பார்த்து அப்ப நாங்களெல்லாம் சிரிப்போம், அதுக்கு இப்பத்தான் அர்த்தம் புரியுது!”, என்று கோவில் பக்கம் திரும்பிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார் பக்திப்பழுத்தான்.

“இப்படிப்பட்ட இந்த தலைகீழ் மரமானது அழிவற்றது என்கிறார், பகவான். அதாவது இந்த மரம் காலத்தை விஞ்சி என்றென்றைக்கும் இருக்கக் கூடியது!”, என்றார் ஹாஹோ.

“ஓ அப்புடீன்னா 2012 டிசம்பர்ல உலகம் அழிஞ்சிடாதா, நான் ரொம்ப பயந்து போயிட்டேன், ஹை ஜாலி!”, என்றபடி பிடித்திருந்த தூணை விட்டுவிட்டு குதிக்கத் தொடங்கினான் மக்கான்.

“ஹாஹோ, ‘அழிவற்றது’, என்று பகவான் சொல்லவில்லை, ‘அப்படிக் கூறுகிறார்கள்’, என்று சொல்கிறார். யார் அப்படிக் கூறுவது, அது உண்மைதானா என்பது பற்றியெல்லாம் இந்த ஸ்லோகத்தில் அவர் ஒன்றும் சொல்லவில்லை”, இப்படிச் சொல்லித் தான் பகவத் கீதையை வார்த்தையெண்ணிப் படித்திருந்ததைப் பறை சாற்றிக் கொண்டார் பேரறிவு.

“அப்படின்னா இப்படி வச்சுப்போம், தலைகீழ் வாழ்க்கை மரம், அழியும் ஆனா அழியாது!”, இப்படி தமாசு சொன்னதும் கூட்டமே வாய் விட்டுச் சிரித்தது.

 

படத்திற்கு நன்றி:http://www.jaxa.jp/press/2008/04/20080411_kaguya_e.html

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சிரிக்கச் சிரிக்க கீதை – பகுதி 1

  1. பாத்திரங்களின் பெயர்களும் உரையாடலும் அருமை. 

    /புரியாததைப் புரிய வைக்க முயற்சிக்கணும், இல்லைன்னா தோல்வியை ஒத்துக்கணும்/

    நீங்க சொல்றதை நான் ஒத்துக்கிறேன்.

  2. உயர்திரு அண்ணா கண்ணன் எழுதியபடி பாத்திர’ங்களின் பெயர்கள் மிக நன்று நேரே இருப்பதெல்லாம் தலைகீழ் … என்ற வரிக்ள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *