சு.கோதண்டராமன்

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

 பொறுத்தானோடு ஊர்ந்தானிடை                             என்றார் வள்ளுவர்.

 

           தர்மம் இத்தன்மையது என்பதைத் தெரிந்து கொள்ள நீ வேறு எங்கும் போக வேண்டாம். இதோ பார் ஒருவன் சிவிகையில் போகிறான். இன்னொருவன் அதைச் சுமந்து செல்கிறான். இதிலிருந்து தெரிந்து கொள். தர்மம் செய்தவன் சிவிகை ஊர்கிறான், செய்யாதவன் சுமக்கிறான் என்று இக்குறளுக்குப் பொருள் சொல்வார்கள்.

 
              சற்றே சிந்தியுங்கள். ஒரு ஊரில் சிவிகை சுமப்பவர்களே இல்லை என்றால், அங்கு ஊர்பவனும் இல்லாது போகிறான். இது போல ஒரு ஊரில் சிவிகையில் ஊர்ந்து செல்வதற்கு விருப்பமுள்ளோரே இல்லை என்றால் சுமப்போரும் இல்லாது போகின்றனர்.

              இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்று நலமாக வாழ மற்றொன்று அவசியம்.

              பிச்சை எடுப்போர் இல்லை எனின் பிச்சை இடுவாரும் இல்லை. இடுவார் இல்லை எனின் ஏற்போரும் இல்லை.

 
              குற்றவாளிகள் இல்லை எனில்  காவல் துறைக்கு வேலை இல்லை. காவல் துறை இல்லை எனின் குற்றங்களும் இல்லை. (நம்புவதற்குக் கடினமாக இருக்கும். காவல் துறை மிகுந்த நகரங்களில்தான் குற்றங்களும் மிகுதி. காவல்துறை இல்லாத கிராமங்களில் குற்றங்களும் குறைவு.)

              காட்டு விலங்குகளில் சில வேட்டை ஆடுபவை, சில வேட்டையாடப்படுபவை. உதாரணம் முறையே புலி, மான். இதில் மான் இனம் அழிந்தால் உணவின்றிப் புலி இனம் அழியும். புலி இனம் இன்றேல் மானினம் அழியும். எப்படி? புலி இன்றேல் மானினம் கட்டுக்கடங்காமல் பெருகிக் காட்டை அழித்து விடும். அவை அழிக்கும் வேகத்திற்குக் காடு வளர்வதில்லை. எனவே உணவின்றி மான் இனமே அழிந்துவிடும்.

              இவை ஒன்றுக் கொன்று பகை என்று நாம் கருதுகிறோம். உண்மையில் ஒன்று உயிர் வாழ மற்றொன்று உதவுகிறது. பகைமை மாயத் தோற்றமே. இதை விளக்கும் ஒரு கதை உள்ளது.

              நக்கீரர் சிவனை எதிர்த்து வாதாடிய கதை நாம் அறிவோம். சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க அதனால் வெப்பு நோய்க்கு ஆளான நக்கீரர் தன் நோய் நீங்க இறைவனை வேண்டித் தல யாத்திரை செல்லும் வழியில் ஒருநாள் ஒரு குளத்தில் நீராடித் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த ஒரு அரச மரத்திலிருந்து ஒரு பழுத்த இலை கீழே விழுந்தது. அது ஒரு பாதி கரையிலும் மறுபாதி தண்ணீரிலுமாக விழுந்தது. நீரில் விழுந்த பகுதி மீனாகவும் மற்றது பறவையாகவும் மாறியது. இரண்டு உடல்களும் ஒட்டி இருந்தன. பறவை கரையை நோக்கி இழுக்க, மீன் நீருக்குள் இழுக்க இரண்டுக்கும நடந்த போராட்ட அமளியில் நக்கீரரின் தியானம் கலைந்தது. அதனால் அவர் ஒரு பூதத்திடம் சிறைப்பட்டதும் திருமுருகாற்றுப்படை பாடி முருகன் அருள் பெற்று விடுதலை பெற்றதும் கதையின் பின் பகுதி. நாம் இந்தப் பறவை மீன் போராட்டத்தைக் கவனிப்போம்.

              பறவை, மீன், இரு பொருளாக நமக்குத் தோன்றினாலும், அதன் மூலத்தைக் கவனித்தால் அது ஒரே இலை என்பது தெரிகிறது. நாம் போராட்டத்தைத் தான் கவனிக்கிறோம். அடிப்படையில் அமைந்துள்ள ஒருமைப்பாட்டைக் கவனிப்பதில்லை.

              இப்படித்தான் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு அமைப்பிலும், இவ்வுலகைப் படைத்துக் காக்கும் மகா சக்தி, இரண்டாகப் பிரிந்து ஒரு போராட்ட மாயையைத் தோற்றுவிக்கிறது. முதலாளி, தொழிலாளி என்றும் புலி, மான் என்றும் சிவிகை சுமப்பவன், ஊர்பவன் என்றும் இரண்டாகப் பிரிந்து ஒன்றை ஒன்று பகைப்பது போலத் தோற்றம் காட்டி ஆனால் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் விந்தையைக் கவனியுங்கள். இது தான் உலக நியதி.

              பாரதி கூறுகிறார்- அர்ஜுனன் பக்கத்தில் இருந்து அவனுக்குத் தேரோட்டியது மட்டும் கண்ணன் அல்ல. எதிர்த் தரப்பில் நின்று துரியோதனன் என்ற பெயரில் போரிட்டதும் கண்ணனே.

போருக்கு வந்தங்கெதிர்த்த கவுரவர் போல வந்தானுமவன்

நேருக் கருச்சனன் தேரிற் கசை கொண்டு நின்றதும் கண்ணனன்றோ.

              இந்த உலக நியதியைத்தான் வள்ளுவர் அறம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

              இப்பொழுது மீண்டும் அந்தக் குறளைப் பார்ப்போம். அறத்தின் தன்மை – உலக நியதி – எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ள நீ எங்கும் போக வேண்டாம். இதோ பார் ஒருவன் சிவிகை ஊர்வதையும் மற்றவன் சிவிகை பொறுப்பதையும். இதிலிருந்தே தெரிந்துகொள். உலகை ஆளும் பேராற்றல் தான் இதுபோன்று ஒவ்வொரு அமைப்பிலும் இரண்டாகப் பிரிந்து பகைமைத் தோற்றம் காட்டி ஆனால் உண்மையில் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இந்த உண்மையைத் தெரிந்துகொள் என்கிறார் வள்ளுவர்.

படத்திற்கு நன்றி:

http://www.kolkatatamilsangam.org/thiru.htm
 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அறத்தாறு

  1. தெளிவான குறள் விளக்கம். நன்றி அய்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *