முகில் தினகரன்

‘அம்மா…வர்ற வெள்ளிக்கிழமை நம்ம சுந்தர மாமா பொண்ணு கல்யாணம் வருதல்ல சீர்காழில…அதுக்கு வியாழக்கிழமையே மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்ல கௌம்பறோம்…..காலைல ஏழு மணிக்கு டிரெய்ன்…டிக்கெட்டெல்லாம் புக் பண்ணியாச்சு!…’ ராகவன் எங்கோ பார்த்தபடி பொத்தாம் பொதுவாய்ச் சொல்ல,

‘நானுமா வர்றேன்…உங்க கூட?’ அவன் தாய் லட்சுமி தணிவான குரலில் கேட்டாள்.

‘அதைத்தானே சொல்லிக்கிட்டிருக்கேன்?…அப்புறமென்ன ஒரு கேள்வி வேண்டிக் கெடக்கு?..’நானுமா வர்றேன்?’னுட்டு…’ எரிந்து விழுந்தான்.

பெத்த மகன் வாயிலிருந்து வரும் அந்த வார்த்தைக் கங்குகளை மௌனமாய் விழுங்கிக் கொண்ட லட்சுமி, ‘இல்லப்பா….எப்பவும் என்னைய விட்டு;ட்டு நீங்க மட்டும்தானே எல்லா இடங்களுக்கும் போவீங்க…வருவீங்க…அதான் கேட்டேன்!’

‘ப்ச்..என்னது திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கிட்டு….ச்சை!’ என்று கடூர முகம் காட்டிய ராகவன், தாயின் மகத்துக்கு நேரெதிரே வந்து, ‘த பாரு உனக்கும் சேர்த்துத்தான் டிக்கெட் புக் பண்ணியிருக்கு!…நீயும் கௌம்பத் தயாராயிரு!…என்ன புரிஞ்சுதா?’ என்று மிரட்டல் பாணியில் சொன்னான்.

லட்சுமி வாயைத் திறந்து எதுவும் பேசாமல், தலையை மட்டும் ‘சரி’யென்று ஆட்டினாள்.

அவன் அங்கிருந்து நகர்ந்ததும் லட்சுமியின் மனம், சென்னையில் மூத்த மகன் முரளியின் வீட்டில் இருக்கும் தன் கணவனை நினைத்துப் பார்த்தது.

‘ஒரு வேளை….சுந்தர மாமா வீட்டுக் கல்யாணத்துக்கு முரளி குடும்பத்தாரோட அவரும் வருவாரோ?’ அந்த வயோதிக மனதிற்குள் நப்பாசை எட்டிப் பார்த்தது.

‘யாரைக் கேட்டால் தெரியும்?…ம்ம்ம்…ராகவனிடம் கேட்டால் முறைப்பான்!…மருமகளிடம் கேட்டால்….நொடிப்பாள்!….எப்படித் தெரிந்து கொள்வது?’ தவிப்பாய்த் தவித்தாள் லட்சுமி.

ஒரு வருஷம்…ரெண்டு வருஷமல்ல?….கிட்டத்தட்ட மூணு வருடங்களுக்கும் மேலாச்சு…லட்சுமி தன் கணவரைப் பார்த்து!….மூத்த மகனுடன் தந்தையும்….இளைய மகனுடன் தாயும் வாழ்வது என்கிற ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ…அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ…அவர்களிருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்…என்றும்…பண்டிகைக் காலங்களில் அவர்களிருவரும் சேர்ந்து கொண்டாட வகை செய்ய வேண்டும் என்றும் கன்டிஷன்கள் போடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால்….அந்தக் கன்டிஷன்கள் ஆரம்ப காலங்களில் மட்டுமே கடைப் பிடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு அண்ணன் தம்பிகளுக்கிடையில் ஒரு பனிப் போர் உருவாகிட, பெருசுகளின் சந்திப்பு என்பது சகாராவில் சந்தன மரமாகிப் போனது.

வயோதிக உள்;ளங்களிரண்டும் ஒன்றையொன்று பாரக்கத் தவித்தன…துடித்தன…அவ்வப்போது தங்கள் ஆசையை மகன்களிடம் கேட்டு வசைகளை வாங்கிக் கட்டிக் கொண்டன.

சிந்தனையில் ஆழ்ந்து கிடந்த லட்சுமி மருமகளின் கனைப்புச் சத்தத்தி;ல் சிந்தனை கலைந்து நிமிர,

‘சீர்காழி கல்யாணத்திற்குப் போறதைப் பத்தி உங்க மகன் ஏதாச்சும் சொன்னாரா?’ அதிகாரத் தோரணையில் கேட்டாள் மருமகள்.

‘ஆமாம்மா…சொன்னான்…சொன்னான்!’

‘அப்பச் சரி…என்னைய உயிரை வாங்காம உங்களுக்கு வேண்டியதையெல்லாம் நீங்களே எடுத்து வெச்சுக்கங்க!…தயாராகிக்கங்க!…முக்கியமா அந்த மருந்து மாத்திரை எழவையெல்லாம் மறக்காம எடுத்து வெச்சுக்கங்க!’

‘ச்சே!…என்னம்மா…கல்யாணத்துக்குப் போறோம்…இப்படி அபசகுனமாப் பேசறியே!’

‘பின்னே?…நீங்க பாட்டுக்கு மருந்து மாத்திரைகளை மறந்துட்டு வநதுட்டீங்கன்னு வெச்சுக்கங்க…உண்மையிலேய எழவாயிடுமா…இல்லையா?’

ஷவெடுக்ஷகென்று சொல்லி விட்டு ஷவிருட்ஷடென்று நடந்தவளைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் லட்சுமி.

அந்த விநாடியில் அவள் மனம் மீண்டும் சென்னைக்குப் போனது. ‘கடவுளே!…அந்தக் கல்யாணத்துல என்னோட புருஷனை என் கண்ணுல காட்டுப்பா!’

ஆண்டவன் அருளால் தன் கணவனை அங்கு சந்திக்க நேர்ந்தால் அவரிடம் என்னென்ன பேசுவது…எதையெல்லாம் சொல்லுவது…என்று தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்தாள் லட்சுமி.

‘சொல்லிடணும்…எல்லாத்தையும் சொல்லிடணும்,..எனக்கு இங்க நடக்கற கொடுமைகளை…மகனும்…மருமகளும் ஏற்படுத்தற அவமானங்களை…ஒண்ணு விடாமச் சொல்லிடணும்!…வருஷக் கணக்குல இந்த மனசுக்குள்ளாரவே அடக்கி வெச்சிருக்கற என்னோட ஆதங்கங்களையெல்லாம் கொட்டித் தீர்த்துடணும்!’

‘அடிப்பாவி…மூணு…மூணரை வருஷத்துக்கப்புறம் பார்க்கற புருஷன்கிட்ட இதையெல்லாமா சொல்லுவே?…பாவம்!…நீ இங்க சந்தோஷமா…எந்தக் குறையுமில்லாம இருக்கறேங்கற நெனப்புலதான் அந்த மனுஷன் அங்க…அமைதியா இருந்துக்கிட்டிருக்காரு!…இதையெல்லாம் சொல்லி அந்த ஜீவனோட அந்த அமைதியைக் கெடுக்கப் போறியா?…வேண்டாம்!…உன்னோட கஷ்டங்கள் உன்னோடவே இருக்கட்டும்….அதைச் சொல்லி அவரையும் ஏன் வேதனைப் படுத்தறே?…அதனால…நீயும் இங்க ரொம்பச் சந்தோஷமா இருக்கறதாச் சொல்லிடு!…பாவம்…அந்தப் பெரிய மனசு அந்த நிம்மதியிலேயே இருக்கட்டும்!’ அவள் மனதின் இன்னொரு மூலையிலிருந்து மாற்றுக் கருத்து கொப்பளித்தது.

நீண்ட குழப்பங்களுக்குப் பிறகு, லட்சுமி முடிவு செய்தாள்….தன் வேதனைகளையெல்லாம் மூடி மறைத்துக் கொண்டு, தான் மிகவும் சந்தோஷமாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்வதென்று.

அன்றிலிருந்து தினமும் இருபத்தி நாலு மணி நேரமும் அவள் எல்லாக் கடவுளர்களிடமும் வேண்டிக் கொண்டேயிருந்தாள், மூத்த மகன் குடும்பத்தோடு சீர்காழி கல்யாணத்திற்கு வர வேண்டுமென்று.

அவளின் அந்த வேண்டுதல் ஏதோவொரு தெய்வத்திற்குக் கேட்டு விட, அத்தெய்வமும், ‘ம்….அப்படியே ஆகட்டும்!’ என்று வரம் அருளி விட,

சீர்காழி திருமணத்தில் அந்த பாச ஜீவன்களிரண்டும் சந்தித்தன.

தழுதழுத்த குரலில் எதுவும் பேச இயலாது அந்த இரு உள்ளங்களும் உள்ளுக்குள் அழுது…துடித்தது அந்த மண்டபத்தில் விரவி நின்ற மகிழ்ச்சி ஆரவாரத்தில் அமுங்கிப் போனது.

இரவு,

ஆரவாரங்கள் சற்று அடங்கிப் போயிருந்த நிலையில் கணவனுடன் மனம் விட்டுப் பேசினாள் லட்சுமி. தான் ஏற்கனவே தீர்மானித்து வைத்திருந்தபடி தான் மிகவும் மகிழ்ச்சியுடனும்…எந்தக் குறையுமின்றி இருப்கதாகவும் கூறி பொய்யான சந்தோஷ பாவத்தை முகத்தில் தேக்கிக் காட்டினாள்.

‘அப்பாடா…இப்பத்தான் லட்சுமி எனக்கு நிம்மதியாயிருக்கு…எங்கே நீ கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கியோ?ன்னு நினைச்சு தெனமும் துடியாய்த் துடிப்பேன்!…இது போதும்மா!’

உறைந்த புன்னகையுடன் தலையை ஆட்டினாள் லட்சுமி.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவளே கேட்டாள், ‘ஏங்க…நீங்க எப்படி இருக்கீங்க?’

‘ஹா…ஹா..ஹா…’என்று வாய் விட்டுச் சிரித்தவர், ‘இந்தச் சிரிப்பே சொல்லியிருக்குமே….நான் எப்படியிருக்கேன்னு?’

லட்சுமி நெற்றியைச் சுருக்க,

‘போடி டியூப் லைட்டு!….நான் ரொம்பவே சந்தோஷமா..திருப்தியா இருக்கேன்டி!’ சத்தமாகச் சொன்னார்.

லட்சுமி கன்னத்தில் போட்டுக் கொண்டு, மேலே பார்த்துக் கும்பிட்டுக் கொண்டாள்.

மறுநாள்,

சீர்காழியிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த லட்சுமியின் கணவன் கண்களில் நீர். ‘லட்சுமி…என்னைய மன்னிச்சிடு லட்சுமி….எங்க நான் படுற கஷ்டங்களையும்…கொடுமைகளையும்…அவமானங்களையும்…உன்கிட்டச் சொன்னா…நீ அதை நினைச்சு வேதனைப்படுவியேன்னுதான் நான் அதையெல்லாம் மறைச்சிட்டு சந்தோஷமா இருக்கறதா பொய் சொல்லிட்டேன்!….பரவாயில்லை லட்சுமி…நீயாவது சந்தோஷமா இருக்கியே…அது போதும் லட்சுமி!…அதுதான் எனக்கு சந்தோஷம்!’

எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி இவரைப் பார்த்துக் கொண்டே தன் தாயிடம் கேட்டது, ‘ம்மா…எனக்கு ஒரு கதை சொல்லும்மா!’

‘ம்ம்ம்ம்’ யோசித்த தாய், சொல்ல ஆரம்பித்தாள்.

‘ஒரு ஆண் மானும்…ஒரு பெண் மானும் காட்டுக்குள்ளார….கொதிக்கற வெய்யில்ல…ரொம்ப தாகத்தோட தண்ணி தேடி அலைஞ்சதுகளாம்!…ஒரு இடத்துல கொஞ்சமா தண்ணி தேங்கியிருக்க…இரண்டும் குடிக்க ஆரம்பிச்சதுகளாம்…ரொம்ப நேரமாகியும் அந்தத் தண்ணி கொஞ்சமும் குறையாம அப்படியே இருந்திச்சாம்!…திடீர்னு அந்தப் பெண் மான் மயங்கி விழுந்து செத்திடுச்சாம்!…..அது செத்த சில விநாடிகள்ல அந்த ஆண் மானும் சுருண்டு விழுந்து செத்திடுச்சாம்!…தண்ணி மட்டும் அப்படியே இருந்திச்சாம்!’

‘ஏம்மா…அதான் தண்ணி கெடைச்சிடுச்சில்ல?…அப்புறம் ஏன் ரெண்டும் செத்திச்சுக?’ விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு அந்தச் சிறுமி ஆர்வமாய்க் கேட்க,

‘தண்ணி கொஞ்சமா இருந்ததால…ஆண் மான் குடிக்கட்டும்னு பெண் மான் குடிக்காம சும்மாவே வாயை தண்ணிக்குள்ளார வெச்சிட்டிருந்திச்சாம்!…அதே மாதிரியே ஆண் மானும் பெண் மான் குடிக்கட்டும்னு தான் குடிக்காம குடிக்கற மாதிரி பாவ்லா பண்ணிச்சாம்!…இதுக்காக அது விட்டுக் குடுத்து…அதுக்காக இது விட்டுக் குடுத்து….கடைசில ரெண்டுமே…செத்தே போயிடுச்சுக!’

‘த்சொ…த்சொ!’ சிறுமி பரிதாபப்பட்டாள்.

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *