இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……………. (21)

சக்தி சக்திதாசன்
 
 

அன்பினியவர்களே !

இனிய வணக்கத்துடன் அடுத்த மடலுடன் உங்கள் முன்னே.

மனித வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம். இன்பம், துன்பம் மாறி, மாறி வாழ்க்கையில் வந்து போகின்றன. சில நேரங்களில் அழுகை, சில நேரங்களில் சிரிப்பு, சில நேரங்களில் கொதிப்பு, சில நேரங்களில் வெறுப்பு என எமது மனம் மாறி மாறி வித்தியாசமான உணர்வலைகளினால் பாதிக்கப்படுகின்றன.

எத்தனையோ விதமான சவால்களையும் சந்தித்து வாழ்கையில் வெற்றியடைவோர் பலருண்டு. ஆனால் வேறு சிலரோ காலம் தம்மீது வீசும் துன்பச்சுழலைத் தாங்க முடியாது தமது உயிரைத் தாமே பறித்துக் கொள்ளும் ஒரு பயங்கரமான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கடந்த வாரம் இங்கிலாந்தில் இத்தகைய ஒரு சூழல் காரசாரமான விவாதத்தைக் கிளப்பி விட்டிருக்கின்றது. அது என்ன என்பதுதானே உங்கள் கேள்வி ?

என்னுடைய உயிரை நானே எடுத்துக் கொள்ளும் தீர்மானத்திற்கு துணை போகிறவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கணிக்கப்பட வேண்டுமா? என்னும் வாதப் பிரதிவாதங்கள் கிளப்பி விட்ட சர்ச்சைதான் அது.

இப்படியான ஒரு சர்ச்சையைக் கிளப்புவதற்கு அடிப்படையாக ஒரு காரணம் இருக்க வேண்டுமே ஐயா, என்ன கதையளக்கிறீர் ? எனும் உங்கள் கேள்வியின் அர்த்தம் புரிகிறது. இருங்கள் வருகிறேன்.

“டானி நிக்கள்ஸன்”(Tony Nikilson) என்பவர் தொடுத்த ஒரு ஹைகோர்ட் வழக்கே இச்சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

அது என்ன வழக்கென்கிறீர்களா ?

இங்கிலாந்திலுள்ள “வில்ட்ஷையர்” (Wiltshire) எனும் இடத்தில் வசிக்கும் 58 வயதான டானி நிக்கள்ஸன் 7 வருடங்களுக்கு முன்னால் “ஏதன்ஸ்” நகருக்கு வியாபார சம்பந்தமாகச் சென்ற போது பாரீசவாதம் (ஸ்ரோக்) இனால் பாதிக்கபட்டார். இதன் காரணமாக ஆங்கிலத்தில் “Locked in syndrome” எனும் ஒருவகை பாதிப்புக்குள்ளாகி தனது கழுத்துப்பகுதிக்கு கீழான உடம்பின் அசைவுகள் அனைத்தையும் இழந்தார்.

இத்தாக்குதலுக்கு முன்னர் மிகவும் பரபரப்பான வாழ்வினை நடத்திய இவர் மிகவும் ஆரோக்கியமான உடல்நலத்தையே கொண்டிருந்தார்.  Rugby முதலிய விளையாட்டுக்களிலும், ஆகாயத்தில் பறக்கும் பயிற்சிகளையும் மேற்கொண்டிருந்த இவருக்குத் திருமணமாகி இரண்டு வளர்ந்த பெண் குழந்தைகள் உண்டு.

உடல் அங்க அசைவுகளை இழந்த இவர் கடந்த ஏழு வருடங்களாக மிகவும் கடுமையான உபாதைகளுக்குள்ளாகியுள்ளார். மற்றொருவரின் உதவியின்றி எதுவுமே செய்ய முடியாத இவருக்கு தன்னுடைய வாழ்க்கையே நரகவேதனையாக இருந்திருக்கிறது.

தன்னுடைய கணவரின் அன்றாடத் தவிப்புக்களைக் கண்ணுற்ற அவரது மனைவிக்கும், அவரது மகள்களுக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதே சரியெனப்பட்டது.

அவரால் எதுவுமே செய்ய முடியாது இருக்கும் போது எப்படி அவரால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடியும். அதற்கும் மற்றொருவர் உதவி வேண்டுமே! அப்படி உதவி செய்தவர்கள் கொலைக்குற்றத்திற்கு ஆளாக மாட்டார்களா ?

சிக்கலான விடயம் அல்லவா?

தனது வாழ்வை தான் எண்ணிய வேளையிலே முடித்துக்கொள்ள தனது டாக்டர் தனக்கு உதவி செய்யும் பட்சத்தில் அந்த டாக்டர் மீது எதுவிதமான குற்றமும் சுமத்தப்படலாகாது என்பதை வலியுறுத்தும் படியே இவர் தனது வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த மூன்று ஹைகோர்ட்டு நீதிபதிகள் இவரது இக்கோரிக்கைக்கு எதிராக வழக்காடிய அரசாங்கத் தரப்பு வக்கீலின் வாதத்தை ஏற்றுக் கொண்டு இவர் தனது வாழ்வை முடித்துக் கொள்ளும் உரிமையை எடுத்துக் கொள்ளச் சட்டமூலத்தில் இடமில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.

இது கடந்த கிழமை நடைபெற்றது. இத்தீர்ப்பைக் கேட்டதும் மனமுடைந்து குலுங்கிக் குலுங்கி இவர் அழுததை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

இவ்வழக்கின் தீர்ப்பிற்கு முன்னர் பி.பி.ஸி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இவர் தான் தனது வாழ்வில் படும் அவஸ்தைகளை மிகவும் மன உருக்கத்துடன் தெரிவித்தார்.

பேசவே முடியாத இவர் எப்படி பேட்டியளித்தார் ? உங்கள் கேள்வி புரிகிறது.

எதுவித அசைவுகளுமற்ற‌ இவருக்கு கழுத்துக்கு மேலேயுள்ள விழிகளின் அசைவுகள் இருந்தது. இவ்வேழு வருட காலத்தில் இவரது மனைவி இவரின் முகத்துக்கு நேரே ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைப் பிடித்துக் கொண்டு இவரது விழியசைவின் மூலம் தான் நினைப்பதை வெளிப்படுத்தும் வகையில் பயிற்சியளித்திருந்தார். இவரது பேட்டி இவ்வகையிலேயே அளிக்கப்பட்டது.

தனது குடும்பத்தின் உதவியுடன் தனது இந்த சட்டத்தினுடனான பலப்பரீட்சையை ட்வீட்டர் சமூக வலைத்தளம் (https://twitter.com/TonyNicklinson) மூலம் முன்னெடுத்திருந்தார்.

கடந்தவாரம் தனது கோரிக்கைக்கு எதிரான தீர்ப்புக்  கிடைத்ததையடுத்து உண்ணாமல் விட்ட இவர் நியூமோனியா எனும் ஜுரத்திற்குள்ளாகி கடந்த 22ம் திகதி காலை 10 மணியளவில் தனது இல்லத்தில் காலமானார்.

இவர் கண்மூடுவதற்கு முன்னர் தனது பிளைகளின் உதவியுடன் ட்வீட்டரில் “Goodbye world” என்று உலகினுடமிடருந்து விடைபெற்றுள்ளார்.

இவர் மட்டுமல்ல இவரைப் போன்ற நிலையிலிருக்கும் பலர் தாமே தமது வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில் சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் எனும் பலமான சட்டத்தினுடனான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது சரியா? தவறா ?  இதுவே இப்போ மீண்டும் ஊடகங்களில் கொழுந்து விட்டெரியும் சர்ச்சை.

எவ்வகையாயினும் இது ஒருவகை கொலையே என அரசாங்கமும், அவர்களைச் சார்ந்தவர்களும் வேறு சில சமூக அமைப்புக்களும் வாதிடுகின்றன.

இப்படியான ஒரு தரக்குறைவான சிக்கலான வாழ்வில் கிடந்து அல்லறுவது நியாயமா? அவர்களே தமது வாழ்வை முடித்துக் கொள்வது எவ்வகையில் தவறாகும் என மற்றொரு பிரிவினர் வாதிடுகிறார்கள்.

இத்தகையவகையில் சட்டத்தை மாற்றியமைத்தால் அதன் எல்லைக் கோடுதான் என்ன? இந்த வாதத்தைப் பாவித்து வயதானவர்களின் உயிரைக் கூட காப்பாற்ற‌ முடிந்தும் செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் காப்பாற்றாமல் விட்டு விடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்கிறார்கள் இதற்கு எதிரானவர்கள்.

வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம். சிலசமயங்களில் பாதகமான விடயங்கள் நடப்பதுண்டு இருப்பினும் எமது உயிரை நாமே பறித்துக் கொள்ளும் அதிகாரம் எமக்கு உண்டா?

அதற்காக எதற்குமே உபயோகமில்லாமல், கூட இருப்பவர்களுக்கு பாரமாக எத்தனை காலம் தான் வாழ முடியும்?

பலமான கேள்விகள். விடை ?

அனைத்திற்கும் மேலே ஒருவனடா ! அவன் நாலும் தெரிந்த தலைவனடா !

அடுத்த மடலில் சந்திக்கும்வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்

படங்களுக்கு நன்றி : பி.பி.ஸி இணையத்தளம்

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……………. (21)

 1. அன்பின் திரு சக்தி சக்திதாசன்,

  மிக நெகிழ்வான, உணர்வுப்பூர்வமானதொரு பிரச்சனையை கையெடுத்திருக்கிறீர்கள். மிக தேவையானதொரு வாதமும்கூட. ஆன்மீக அடிப்படையில் சிந்தித்தோமானால் உயிரைக் கொடுத்த அந்த இறைவனுக்குத் தவிர வேறு எவருக்கும் அற்புதமான அந்த உயிரைப் பறிப்பதற்கு உரிமையில்லை. ஆயினும் இதுபோன்று போராட்டமான வாழ்க்கையை மேற்கொள்பவர்களின் நிலையில் இருந்து சிந்திக்கும்போது அதன் பாதிப்பை உணர முடிகிறது. மிக மென்மையான உணர்வுப்பூர்வ்மாகச் செய்ல்பட வேண்டியதொரு பிரச்சனை இது….. மனம் கனக்கச் செய்த பதிவு…

  அன்புடன்
  பவள சங்கரி

 2. The sad demise of Tony Nikilson is pathgetic though he is thus relieved of his sufferings for the past 7 years. The subject of EUTHANASIA has been deliberated throught the world for years and yet no concrete solution has been arrived yet, though it is allowed in certain countries.
  Euthanasia in Greek means ‘ good death ” . It means intentionally ending life in order to relieve pain and suffering. In this case Tony Nikilson suffered from a condition known as ” locked in syndrome “. It is a condition in which a patient is aware and awake but cannot move or communicate verbally due to complete paralysis of nearly all voluntary muscles in the body except the eyes. Tony Nikilson was able to communicate to his wife through

  his eye movements. He wanted an end to his prolonged pain and suffering through voluntary death. But to do so he needed the help of another person. When the court rejected his request Nature came to his rescue in the form of pneumonia and fulfilled his desire! May his soul rest in peace…Thanks to SAKTHI SAKTHITHASAN for sharing this sad story in this forum…Dr.G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *