கருகத் திருவுளமோ…..

1

 

பவள சங்கரி

தலையங்கம்

 

அரசர்கள் நம் நாட்டை ஆண்ட காலத்தில், சேவகர்களைக் கூட நம்பாமல் தாமே மாறுவேடம் தரித்து, மக்களின் நிறை குறைகளை அறியும் பொருட்டு நகர்வலம் வருவார்களாம்.. அரசரை மக்கள் தெய்வமாகக் கொண்டாடிய காலம் அது. இன்றோ அவரவர் வாழ்க்கையை அவரவர்களே காத்துககொள்ள வேண்டிய நிலை. பாதுகாப்பற்ற சூழ்நிலை.

நம் நாட்டில் தனிப்பட்ட முறையில் குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வே மிக சமீப காலங்களில்தான் ஏற்பட்டுள்ளது. பெற்றோருடன் குழந்தையையும் சேர்த்து கொத்தடிமைகளாக ஆக்கிவிடும் நிலை இன்று கூட தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் ஈரோட்டில் குழந்தையுடன் சேர்த்தே ஒரு தாயை மீட்டிருக்கிறார்கள். இந்தியாவில் காணாமல் போன கிட்டத்தட்ட 55,000 குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அளிக்குமாறு மாநில அரசுகளுக்கும், மற்றைய அரசு சார்ந்த பொது மன்றங்களுக்கும் சமீபத்தில் உச்சநீதி மன்றம் கட்டளையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் குழந்தை கடத்தல் மற்றும் துன்புறுத்தும் செய்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இத்தகைய கட்டளை அளிக்கப்பட்டுள்ளது.  இது போன்று  குழந்தைகள் பெரும்பாலும் ஊனமாக்கப்பட்டு பிச்சை எடுப்பதற்கும், அல்லது கண்கள், இருதயம், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் பெற வேண்டியும் கடத்தப்படுகிறார்கள். இது மட்டுமன்றி மும்பை போன்ற பெருநகரங்களில் சிறார்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காகவும் கடத்தப்படுகிறார்கள். குறிப்பாக 14 வயதிற்குட்பட்ட கடத்தப்பட்ட பெண் குழந்தைகள இதுபோன்று விபச்சாரத் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகிறார்கள். மும்பையில் மட்டும் 250,000 பாலியல் தொழிலாளிகள் இருக்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு 12 வயதிலான குழந்தைகள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல். இது அனைத்திற்கும் மேலாக குழந்தைகளை கடத்திக் கொண்டுபோய் கொத்தடிமைகளாகவும் ஆக்கிவிடுகிறார்கள்.

சமீபத்தில் மத்திய அமைச்சரவை 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த வகை தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது என்பதை பரிந்துரைக்கும் வகையில்  சிறார் தொழில்முறை (தடை மற்றும் ஒழுங்காற்று) சட்டம்-1986”க்கு ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்துபவர்கள மூன்று வருட சிறைத் தண்டனையும், ரூபாய் 20,000 முதல் 50,000 வரை அபராதமாகவும் செலுத்த வேண்டும். தற்போது 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆபத்தான தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்படுவதிலிருந்து மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. 14 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்கள் ஆபத்தில்லாத தொழிற்சாலைகளிலும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைத்து தொழிற்சாலைகளிலும் பணியமர்த்தப்படலாம். 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவே இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததோடு, இலவச கல்வியும் வழங்கியிருப்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இருப்பினும், இதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் குடும்பங்கள் எந்த அளவிற்கு பயனடையப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காரணம் பொதுவாக குடும்பத்தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தி பழக்கம் ஏற்படுத்துவது நம் நாட்டில் பெரும்பாலான குடும்பங்களில் வழமையாக இருந்து வருவது. பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு உதவியாக சிறு குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பொருட்டு மூத்த குழந்தைகளை வீட்டில் இருக்கச் செய்வதும் பழக்கத்தில் உள்ளது. இதனால் இக்குழந்தைகளின் கல்வி பாதிக்கபடுவதும் கண்கூடு. இதற்கு இச்ச்ட்டத்தினால் எந்த பயனும் இல்லை. ஒரு வேளை உணவாவது தங்கள் குழந்தை வயிராற சாப்பிட முடியும் என்பதற்காகவாவது சில பெற்றோர் மதிய உணவு போடுகிற பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். அதுவும் கிராமப்புறங்களில் பள்ளி தொலைவாக இருக்கும்பட்சத்தில் அதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளது. இலவசக் கல்வி பெரும் வ்ரையிலாவது குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதோடு தங்கள் இளமைக் காலங்களை சுமையில்லாமல் குதூகலாமாக கழிக்க வழிவகுக்கும் என்று நம்புவோமாக.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கருகத் திருவுளமோ…..

  1. எதற்குமே ஒரு விழிப்புணர்வு இல்லாத நிலைமையில், இன்று நமது தேசத்தில், எதையாவது தடுக்க வேண்டுமென்றால், அதற்கென ஒரு சட்டத்தை ஏற்படுத்தித்தான் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் தற்போது நிலவுகின்ற சூழ்நிலையில், சிறார் தொழில்முறை தடைச் சட்டம் புதிதல்ல. இதைப்போல இதற்கு முன் வந்த இன்னும் பல சட்டங்கள் (dowry, child marriage) முழுவதுமாக நிறைவேற்றப் படாமலேயே (Full Implementation) உள்ளது என்பதை அனைவரும் அறிவர். சட்டத்தைப் பார்த்து யாரும் பயப்படுவதாகத் தெரியவில்லை. அதி விரைவில் குற்றத்திற்காக தண்டனை பெற்றதாகவும் சரித்திரமில்லை.

    சட்டத்தை விட அதிக சக்தி விழிப்புணர்வுக்கு உண்டு என்பதே என் கருத்து. இதற்கு ஒரு உதாரணம்:- நமது வாகனங்களைப் பழுது பார்க்கும் மெக்கானிக் ஷெட்டில் எவ்வளவு குழந்தைத் தொழிளாளர்கள் வேலை செய்வதை நாம் பார்க்கிறோம். என்றைக்காவது ஒரு நாள் நாம் அவர்களின் வயதைக் கேட்டறிந்து கொண்டோமா?..வீட்டுக்கு அருகாமையில் உள்ள மளிகைக் கடையில் சிறார்கள்தான் அத்துணை சாமான்களையும் எடுத்துக் கொடுக்கிறார்கள், ‘சின்ன பையன், சுத்திச் சுத்திப் பம்பரமா வேலை செய்கிறான்’ என்று பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறோமே தவிர, அந்தப் பையனின் வயதைக் கணக்கிடத் தவறி விடுகிறோம். நமது வீட்டில் வேலைக்காரப் பெண்மணி வரமுடியாத பட்சத்தில், அவர்களின் குழந்தைகளை வீட்டு வேலைக்கு அனுப்பும் போது, ‘பள்ளி செல்லும் பருவத்தில் ஏன்? வேலைக்கு வருகிறாய் என்று இது வரை கேட்டதுண்டா?..நமது குழந்தைகளின் பள்ளிச் சீருடைகளை இன்னொரு பள்ளி செல்லும் குழந்தை துவைப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் அல்லவா?…எத்துணை சட்டங்கள் வந்தென்ன, விழிப்புணர்வு ஒன்றே இம்மாதிரி ஆதங்கத்திற்கெல்லாம் முடிவாக அமையும் என்பதை தனிமனிதன் உணர்வேண்டும்.

    இப்போதும் கூட பட்டாசுத் தொழிற்சாலைகளில் மறைமுகமாக குழந்தைத் தொழிளார்கள் அமர்த்தப் படுவதை அரசு அறியும். ‘குழந்தைத் தொழில் ஒழிப்பு முறை’ என்பது ஒவ்வொரு வருடமும் வைபவம் போலக் கொண்டாடப்படுகிறதே தவிர, மற்றபடி இன்றளவும் இது வெறும் விவாதமாகவே உள்ளது என்பதற்கு, நம் நாட்டில் இயங்கும் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளே சான்று. உணவகம் மற்றொன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *