ஜெயஸ்ரீ ஷங்கர்
 

அதிகாலை நேரம்…சூரியன் சோம்பல் முறித்து எழுந்து நிமிர்ந்து மூடிய கண்களைத் திறக்கிறான். மெல்ல மெல்ல ஒளிக்கீற்றுகள் கதவைத் தட்ட பூமியும் கண் விழிக்கிறது.

நித்யா…நித்யா…. நித்யா !  எத்தனை தடவை கேட்கிறேன்…..சரின்னு ஒரு வார்த்தை  சொல்லேன்….ப்ளீஸ்… படுக்கையை விட்டு எழுந்திருக்காமலே…நேற்று ராத்திரி தான் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் ஆரம்பித்து தேன்மொழி கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

இப்பவே ஆரம்பிச்சுட்டியா…..சும்மா நை…நை…ன்னு என்னை தொல்லை பண்ணாதே…!  கொஞ்ச நேரம் அமைதியா இரேன்..நான் முக்கிய வேலையா இருக்கேன்…இப்போ.. புரிஞ்சுக்கோ. தங்கையை கெஞ்ச விட்டுக் கொண்டே  கவனம் சிதறாமல் விரல்களுக்கு மெல்ல மெல்ல  நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தாள் டாக்டர் நித்யா.

தேன்மொழி இன்னும்  கொஞ்ச நேரம்  கெஞ்சட்டும் என்று மனம் எதிர் பார்த்து நேரம் கடத்திக் கொண்டிருந்தது. இருந்தாலும் சொன்னாள், காலையில  எழுந்து போய் பல்லைத் தேய்…என்னைப் பார்த்தியா, நான் அதுக்குள்ளே குளிச்சிட்டேன.

அதனால் என்ன…? நீ என்ன சமையலாப்  பண்றே? அம்மா தானே பண்றாங்க…காலேல நீ பண்ற வேலையப் பாரு..  நகத்துக்கு கலர் அடிச்சுக்கிட்டு…! பெரிய பீத்தல்….குளிச்சிட்டேன்… என்று அழகு காமித்தாள்…தேன்மொழி.

நித்யா தேன்மொழியின் பொய் கோபத்தைக் கண்டு சிரித்தாள்.

நித்யா ..நித்யா ..ப்ளீஸ் நித்யா ….இந்த ஒரு தடவை  மட்டும் உன்னோட கனடா நாட்டு மாப்பிள்ளை எப்படித் தான் இருக்கார்னு ஏர்போர்ட்லயே போய் நின்னு பார்த்துடறேன்….இதுல எனக்கு  ஒரு திரில் தெரியுமா? இதை நான் மிஸ் பண்ண மாட்டேன். என்னோட செல்ல அக்கா நீ..உனக்கு வரப் போற அந்த புண்ணியவானை நான்  தான் மொத மொதல்லப்  பார்க்கணும்…பிறகு தான் அவரோட அப்பா அம்மாவே அவ்ளோ ஏன்….நீயே….பார்க்கணும்..புரிஞ்சுதா..?  

எப்பிடி  என் ஐடியா..?   குழந்தைத்தனமாகக்  கேட்டாள் தேன்மொழி.

நல்லா…. இருக்கு… உன் நினைப்பு…!அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா நாம ரெண்டு பேரும் அவ்ளோ தான். தொலைஞ்சோம். ஆமா…அதென்ன…இந்த ஒரு தடவை மட்டும்..ன்னு  அழுத்திக் கேட்கிற நீ…அப்போ அடிக்கடி இது மாதிரி நடக்குமா என்ன..? நீ நினைக்கிறது சரியில்லை..அப்பா அம்மா கிட்ட ஒரு வார்த்தை கேளு…தேன்மொழி..! என் மனசுக்கு இது  சரியின்னு தோணலை…இது தப்பு தெரியுமா?  வரப் போற என் கணவனை நீ முதலாய்ப் பார்க்கணும்னு ஏன் இப்படித் துடிக்கிறே..?

என்ன தப்பு…? என்ன பெரிய  தப்பு…? யாருக்கும் தெரியாமப் போகப் போறேன்…பார்த்துட்டு உனக்கு ஒரு ஃபோனைப் போட்டு ரன்னிங் கமெண்ட்டரி  தரப் போறேன்…அப்டியே ஜூட்..ன்னு  திரும்பிப்  பார்க்காமல் வரப் போறேன்…நானென்ன உன் கனடா மாப்பிள்ளையை இழுத்துக் கொண்டு “கல்யாணம் தான்  கட்டிக்கிட்டு ஓடிப்  போலாமான்னு” ஓடப் போறேனா..?

“நீ செய்தாலும் செய்வ… !  என்னைவிட நீ தான் சாமர்த்தியக்காரி. இந்த இன்ட்ரெஸ்டை  நீ படிப்பில் காமி..அப்பாக்கு எப்பவும் உன் கவலை தான். எம்.பி.எ படிக்கிறான்னு தான் பேரு…ஒரு நாளாச்சும் நீ புக்கைத் தொட்டுருக்கியா..?

எனக்கு இப்போ உன் மாப்பிள்ளை கவலை…! எப்போ பாரு அட்வைஸ் பண்ணாதே..நித்யா…எல்லாம் படிச்சுக்கலாம்.

தேன்மொழி….ஆனாலும் உனக்கு இவ்ளோ வாய் ஆகாது…தப்புன்னா அதுக்கு வேற மாதிரி  அர்த்தம் இல்லை…அவர் எப்படியும் பெண் பார்க்க இன்னும் ரெண்டு நாளில்  இங்க தான் வரணும்….அன்னிக்கே பார்த்துக்கலாமே..அதுக்குள்ளே உனக்கும் எனக்கும் என்ன அவசரம்.? உனக்கு தான் இது மாதிரி வேண்டாத ஆசை….  இதெல்லாம் எப்படித் தான் தோணுதோ? நான் சொல்றது சரிதானே….நீ சொன்னாக் கேட்க  மாட்டே..!

சரி….சரி எனக்கு கிளினிக் போகணும்..உன்னோட பேசிகிட்டு  இருந்தா, இன்னைக்கு அவ்ளோ தான். பேஷன்ட்ஸ்  வந்து காத்திட்டு இருப்பாங்க. நான் லேட்டாப் போனா சாபம் போடுவாங்க…வருமானமும் கோவிந்தா!  நான் கிளம்பறேன்பா…உன்னோட உட்கார்ந்து நேரம் போக்க என்னால முடியாதுடா சாமி என்று கையைக் கூப்பி..பிறகு விரல்களை திருப்பித் திருப்பி தான் போட்ட பாலீஷ் அழகா இருக்கான்னு ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கிளம்புகிறாள்  நித்யா.

நித்யா  ஒரு மகளிர் மருத்துவர். படிப்பு முடிந்து, ப்ராக்டிஸ் முடிந்து தனியாக ஒரு கிளினிக்கும் வைத்துக் கொண்டு கைராசியான டாக்டர் என்று பெயரும் எடுத்து விட்டு…இப்போது எடுத்த பெயரைக் காப்பாற்ற கழுத்தில் ஸ்டெதெஸ்கோப்பும்  காலில் சக்கரமும் கட்டிக் கொண்டு ஓடுபவள் .

சரி நித்யா நீ கிளினிக் போ….நான் இப்போ….உன் மாப்பிள்ளையைப் பார்க்கப் போவேன்..போவேன்..போவேன்… அதுவும் உன் ஸ்கூட்டரில் தான் .! இப்பவே சொல்லிட்டேன்…பிறகு என் வண்டியை எடுக்காதேன்னு நீ புதுசா ஒரு சட்டம் போடக் கூடாது…ஆமாம்…

எப்டியோ போ….! நீ சொன்னாலும் கேட்க மாட்டே…சுயமாவும் புரிஞ்சுக்க மாட்டே…..உனக்கு புத்தி வரதுக்குள்ளே நான் கிழவியாயிடுவேன். என்னை நீ எந்த வம்பிலும் மாட்டாம இருந்தால் சரி. உனக்குச் செல்லம் கொடுத்து உன் இஷ்டப் படி விட்டு விட்டு உன்னை ரொம்ப கெடுத்து வெச்சாச்சு….இப்போ உன்னோட பிடிவாத குணம் தான் உன்னை ஆளுது. இது உன்னை எங்கே கொண்டு போயி நிறுத்தப் போகுதோ தெரியலை.  ஓட்டும் போது ரோட்டைப் பார்த்து ஓட்டு, சினிமா போஸ்டர் விஜய் சிரிப்பில் மயங்கி எங்கியாச்சும் விழுந்து வைக்காதே.. மறக்காம ஹெல்மெட் மாட்டிட்டுப் போ. என்ன…?

நிறுத்து…..நித்யா..இப்போ நீ உன் அட்வைஸைக் கொஞ்சம் ..நிறுத்து…! என்னை என் பிடிவாதம் கொண்டு நிறுத்தும் வரை கொஞ்சம் ஆடிக்கிறேன்…! அப்போ…இன்னைக்கு மதியம் மூணு மணிக்கு வரப் போற ஏர் இண்டியா விமானத்தில் உனக்காக தரை இறங்கப் போற மாப்பிள்ளை…முதல்ல என் கண்ணில் தான் படப்போறார்… படுக்கையை விட்டுத் துள்ளிக் குதித்தபடி எழுந்தவள்… ஜெயித்து விட்டதாகச் சிரித்துக் கொண்டே அறையை விட்டு வெளியே செல்கிறாள்.

இன்னும் இவளுக்கு கொஞ்சம் கூடப் பொறுப்பே வரலை….இவள் வயசில் நான் டாக்டர் படிச்சு முடிச்சாச்சு…எனக்கும் இவளுக்கும் தான் நடவடிக்கைகளில்.எத்தனை இடைவெளி…அக்கா தங்கை என்றால் எனக்கே சமயத்தில் சங்கடமாத் தான் இருக்கு. வெகுளிப் பெண். .கடைசி பெண் என்று எல்லாம் அம்மா தந்த இடம் தான் இவளை இன்னும் குழந்தையாகவே இருக்க வெச்சிருக்கு. இவளுக்கு இவளைப் புரிஞ்சுக்கற புருஷனா வந்தால் தான் உண்டு…இல்லையின்னா  ரொம்ப கஷ்டம்.

நினைத்துக் கொண்டே தனது கிளினிக்குக்கு கிளம்பிச் சென்றாள் நித்யா.

அம்மா, அப்பாவிடம் ஒன்றுமே சொல்லாமல் வழக்கம் போலவே காலேஜ் போவது போலக் கிளம்புகிறாள் தேன்மொழி. ஸ்கூட்டரைக் கிளப்பியவள் அதே திரில்லோடு ஏர்போர்ட்டை நோக்கிப்  பறக்கிறாள் .  ஜிவ்வென்று இளவெயிலும் ஹை-வேயின் குளிர்காற்றும் முகத்தில் அடித்துச் செல்ல, அவளது துப்பட்டா காற்றில் சுழன்று சுழன்று பறக்க, தன் மனதின் தேடலுக்கு, அல்ப ஆசைக்கு… தீனி போட்டுக் கொண்டு எதிர்பார்ப்புடன் விரைகிறாள்.   

அவளது அழகியமேனி ஸ்கூட்டரில் நெளிந்தாலும், மனம் விமானத்தில் இறங்கப் போகும் கனடா வாலிபனையே வட்ட மிட்டது !   எப்படி இருப்பார் அக்கா மாப்பிள்ளை ? சிவப்பா, கருப்பா இல்லை  மாநிறமா ?    கடவுளே !  அவர் சிவப்பா இருக்கணும்….நித்யா நல்ல சிகப்பாச்சே..அவளுக்கு பொருத்தமா இருக்கணுமே.

நான் ஏன் கவலைப் படுகிறேன்….? அவளையே கேள்வி கேட்டுக் கொள்கிறாள்.

பிளேன் சீக்கிரமா வந்து இறங்காதா ? மணியைப் பார்த்துக் கொண்டே….தவிப்புடன் மின் அறிவிப்பைப்   பார்த்துக் கொண்டு இடையிடையே தொலைபேசியில் நித்யாவுடன் “இப்போ தான் ஃ பிளைட் வந்து இறங்கிக் கொண்டிருக்கு….இரு இரு இன்னும் கொஞ்ச நேரம் தான்…பார்த்துடுவேன்…பாத்துடுவேன்…என்று குதூகலித்தாள்..

சரி..சரி…ஜாக்கிரதையா வீடு வந்து சேரு..ஹெல்மெட் போட்டுக்கிட்டு தானே வண்டி ஓட்டுறே…என்றதும்..

ஆமாம்..ஆமாம்…நான் எத்தனை ஆவலா இங்கே இருக்கேன் நீ என்னடான்னா…..ஹெல்மெட்..ஹெல்மெட் ன்னு…என்று தேன்மொழி சலித்துக் கொள்ள…!

என்ன பொண்ணுடி நீ…! என்று அங்கலாய்த்தபடியே இணைப்பை துண்டித்தாள் நித்யா. இருவரும் அக்கா தங்கை என்றாலும் அதையும் மீறி நல்ல தோழமை இருக்கும் இருவருக்குள்ளும்.
 
சற்று நேரத்தில் வந்திறங்கும்  விமானத்திற்காக வந்திருக்கும் கூட்டம் விழிகளில் எதிர்பார்ப்பை ஏந்திக் கொண்டு…சளைக்காமல் ஒரே இடத்தை நோக்கி தவமிருக்கிறது. கூட்டத்தில் தேன்மொழியும் ஒற்றைக் காலில் தவமிருப்பது போல கையோடு கொண்டு வந்திருந்த மாப்பிள்ளையின் விபரங்களை மேலும் ஒருமுறை படித்து விட்டு….அலை பாயும் கண்களோடு காத்திருந்தாள்.

தூரத்தில் இவளைப் போலவே தன் மகனைக் காண ஆவலோடு காத்திருக்கும் அவர்களைப் பார்த்ததும்…புரிந்து போனது இவர்கள் தான் ” மாப்பிள்ளையின் அம்மா ,அப்பாவாக ” இருக்க வேண்டும்…  கையில் மலர்க்கொத்தோடு  காத்திருந்தார்கள்.

அவர்களையும் கவனித்துக் கொண்டே நின்றாள் தேன்மொழி. நித்யாவின் வருங்கால மாமியார்…மாமனார்.. என்று மனதோடு சொல்லிக் கொண்டாள். அவர்கள் இருவரின் மந்தகாசப் புன்னகையும் , தெய்வீகப் பார்வையும் பார்த்ததும்  “நித்யா அதிர்ஷ்டக்காரி தான் என்று சொல்லிக் கொண்டாள்.

ஏர் இண்டியா  விமானம் வந்து சேரவும்,  மின்சாரப் பலகையில் புள்ளிப் புள்ளியாக செய்தி சொல்ல, எல்லோரிடமும் ஒரு இறுதி நேர பரபரப்பு..கூடையிலிருந்து கொட்டிய ரோஜா மலர்களாக அந்த விமானத்திலிருந்து ராஜ ரோஜாக்களாக இறங்கிக் கொண்டிருந்தனர்.

அவரவர் தங்களின்  லக்கேஜுடன் ஒவ்வொருவராக உருட்டிக் கொண்டும் தள்ளிக் கொண்டும் உறவுகளைத் தேடியபடியே , சந்தோஷப் புன்னகையோடு கையசைத்த வண்ணம்..வெளியேற…..”தேடவே வேண்டாம்…இதோ இருக்கிறேன்” என்பது போல கடைசியாக அமைதியான நடையில் ஒரு பெரிய பெட்டியை இழுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான் சண்முகப்பிரியன். பெயருக்கேற்ற கம்பீரம்..அழகன் என்று மனம் பெயர் கொடுத்தது.

அவனது தேடும் விழிகள்  இவளைத் தடவி விட்டுச் சென்றதும்….ஒரு நொடியில் இவளது கண்கள் அவளையுமறியாமல் அவனை உள்வாங்கிக் கொண்டு கிளிக் செய்து சேமித்துக் கொண்டது. கூடவே…செல்லமாகப் “பிரியன்” என்று சொல்லி மனசுக்குள் புன்முறுவல் பூத்தது,

உடனே கைபேசியை தட்டி… ஹே…நித்யா…என் கண்ணே பட்ரும் போலிருக்கு…உன் மன்மதன் வந்தானடி !   எனக்கு ஒகே..அப்போ உனக்கு?..என்று கலகலத்தாள்.

எனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம் இருக்கே…அதுக்கு பிறகு தான் ஒகே..நானும் பார்க்கணுமே..சரி சரி…பார்த்தது போதும்…சீக்கிரமா கிளம்பி வா,..வண்டில பறக்காதே..,,பத்துக்  கிலோமீட்டர் தாண்டி இருக்கே…ஞாபகம்  வெச்சுக்கோ…வந்ததும் பேசலாம் நான் கொஞ்சம் பிஸியா… இருக்கேன் என்று பேச்சை முடித்து  மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்தாள் டாக்டர் நித்யா.

இந்த அதிர்வில் இருந்து தேன்மொழி மீள்வதற்குள் அவன் அப்பா அம்மாவைக் கட்டிக்கொண்டு வெளியே நடந்து கொண்டிருந்தது தெரிந்தது. அவனது கரங்களில் மலர்கொத்து தலையாட்டிக் கொண்டிருந்தது.

விடு விடுவென்று  தன்னை மறைத்த படியே அவர்களை அவர்களுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தாள். இது நிஜமாவே திரில்லு தான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அதே சமயம்…

சண்முகப்ரியன் திரும்பித் திரும்பி தயக்கத்தோடு பார்த்தவனை, என்னப்பா சண்முகா…யாரையோ  எதிர்பார்க்கிறாப்பல தெரியுதே…யாரையாவது கூட கூட்டிகிட்டு  வந்திருக்கியா… என்ன…? என்ற அப்பா அவரும்  ஒரு தடவைத் திரும்பிப் பார்க்கிறார்..

என்னப்பா நீங்க….நான் யாரையும் கூட்டிட்டு வரலை…நீங்க எனக்கு முன்னாடியே பச்சைக் கொடி காமிச்சு அனுப்பியிருந்தா…இப்போ நீங்க தேடிட்டு இருந்திருக்க வேண்டாம்….அதான் அம்மா, சிகப்புக் கொடியை நெஞ்சில் குத்தி அனுப்பிச்சாங்களே அதான்…உடம்பு கடலைத் தாண்டினாலும் கண்ணும் மனசும் இங்கியே கிடந்து தவிக்குது.. என்றதும் மூவருமே வாய்விட்டுச் சிரித்துக் கொண்டார்கள்.

ஆனால்…இப்போ இங்கே யாரோ நம்மையே பார்க்கிறார்போல ஒரு ஃபீலிங்…! .அதான் திரும்பிப் பார்த்தேன் என்றவன் இன்னொரு முறை திரும்பி பார்த்துவிட்டு ஏர்போர்ட் ரொம்ப நல்லா  மாறியிருக்குல்ல என்று சொல்லிக் கொண்டே அவர்கள் காரை நோக்கி நடந்தார்கள்.

நான் டிரைவ் பண்ணட்டாப்பா…!

நோ…நோ…இப்போதானே வந்து இறங்கியிருக்கே…யு டேக் ரெஸ்ட்….இருக்கவே இருக்கு….இன்னும்..இப்போ ரிலாக்ஸ்டா வா…நானே ஓட்டறேன்.

ம்ம்..சரி…அப்போ வேடிக்கை பார்த்துண்டே வரலாம்….அம்மா நீங்க எப்டி இருக்கீங்க…சொல்லுங்க என்று அம்மா பக்கம் திரும்பினான்.

கார் தரையை விட்டு நழுவி மெதுவாய் வீதியில் வழுக்கிக் கொண்டு ஓடியது.

காரின் பின்னாடியே தேன்மொழியும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். அவள் மனசு பூரா பொங்கி நினைத்தை முடித்து விட்ட பெருமை இருந்தது.. இன்னைக்கு போனதும் அம்மாவிடமும், அப்பாவிடமும் சொல்ல வேண்டும்.  இதைக் கேட்டதும் அம்மா நிச்சயம் சந்தோஷப் படுவாள்.  நினைத்தவள் காரைத் தொடர்ந்து இன்னும் வேகமாக வண்டியை செலுத்த ஒரு கட்டத்தில் காரையும் மீறிக் கொண்டு “சரக்”கென்று இவர்கள் காரை முந்திக் கொண்டு முன்னுக்குப் பறந்தது  இவளின் ஸ்கூட்டர்.

டாடி…லுக்…..அந்தப் பொண்ணு என்ன ஸ்பீடாப் போகுது பாரேன்…கொஞ்சம் கூட பயமே இல்லாமல்..சொன்னவன்…இவளைத்  தான் ஏர்போர்ட்டில் நாம் முதலில் பார்த்தோம் என்று நினைத்துக் கொண்டான்.

ஆமா சண்முகம், இந்தக் காலத்துப்  பெண்கள் யாருக்குமே எதிலும் ஒரு பயமே இல்லை. எல்லாத்திலும் வேகம்…எல்லாத்துக்கும் மோகம்.!  எதிலும் தீராத தாகம்! என்று பெரிய ஜோக் அடித்து விட்டதாக நினைத்துப் பெரிதாகச் சிரித்தார். அந்தக் காருக்குள் சந்தோஷ அலைகள் பொங்கி வழிந்தது.

உனக்கு நாங்க பார்த்திருக்கிற பெண் ஒரு டாக்டர். நித்யான்னு பேரு. அவங்க அம்மா உன் அம்மாவைப் போலத் தான். வேலைக்கெல்லாம் போகாதவங்க. அப்பா   சதர்ன் ரயில்வேயில்  வேலையா இருக்காராம்.  ரிடயர்ட் ஆக இன்னும் ஐஞ்சு வருஷம் இருக்காம். நல்ல குடும்பம் ரெண்டே பெண்ணுங்க தான் அவங்களுக்கு. மூத்தது டாக்டர், ரெண்டாவது எம்.பி.ஏ  படிக்கிறாளாம். இவளுக்கு முடிச்சதும் அவளுக்கும் பார்த்து முடிச்சிடுவாங்களாம். நாம இந்த வெள்ளிக் கிழமைதான் அவங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க போறோம். பொண்ணு நல்ல லக்ஷணமா, தங்கச் சிலைபோல் இருக்கா..

இவ்ளோ காஸ்டிலி பெண் எனக்கு எதுக்கம்மா ?   சாதாரணப் பெண் போதும். எதுக்கும்மா டாக்டர் ? அவ்ளோ படிச்சிட்டு பல பேர் உயிரைக் காப்பாற்றும் உன்னதமான தொழில். அது பலருக்கும் உபயோகப் படணும். அதைவிட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு கனடா வந்து சும்மா இருக்க முடியுமா? சரி  அதைப் பத்தி பிறகு பார்த்துக்கலாம்.
 
அவ தனியா  ஒரு கிளினிக் கூட வெச்சுருக்கா. நல்ல வசதியான குடும்பம் தான். நம்ம வீட்டில் குடியிருக்காங்க இல்லையா அவங்க தான் இந்த வரனை பார்க்கச் சொல்லி ஜாதகம் கொடுத்தாங்க. நாங்க  ஃபோனில் அவங்க அப்பா அம்மாவிடம் பேசி வர்ற வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரோம்னு சொல்லி உன் ஜாதகத்தை அனுப்பி வெச்சிருக்கோம்.போய்த் தான்  பார்ப்போம்….பெறகு உன் இஷ்டம் சண்முகம்… அம்மா பேசிக் கொண்டே வந்தாள்.  கார் திருப்பத்தில் வேகம் குறையாமல் ….. !

அப்போ தான் நடந்தது அந்த அதிர்ச்சி விபத்து !

திடீரென்று , டாடி நோ….என்ற சண்முகத்தின் அலறலும் உடனே அப்பா காருக்கு பிரேக் போட…அது “க்ரீஈஈஈஈஈஈஈச” என்று கதறியபடி நின்றது. தூக்கிவாரிப் போட அம்மா…என்னாச்சு…என்னாச்சு என்று பதற….!

அம்மாவுக்கு இருதயம் ஒரு வினாடி நின்று அதிர்ச்சியில் தலை சுற்றியது

இவர்கள் காரின் பக்கவாட்டில் அந்தப் பெண் வேகமாக உருண்டு விழுந்தவள் தலையிலிருந்த ஹெல்மெட் இன்னும் உருண்டு கொண்டிருந்தது.   ஸ்கூட்டர் பாதை தவறி வழுக்கி நீண்ட தூரம் சென்று  சரிந்தது. அங்கங்கு ரத்தம் வழிந்து பயமுறுத்தியது.

காரை ஓரங்கட்டி நிறுத்தி அவளருகில் வந்து ஸ்கூட்டரைத் தூக்கி நிறுத்தி மயங்கிக் கிடந்தவளை எழுப்பி உட்கார வைத்து முகத்தில் தண்ணீர் அடிக்கவும்…அப்பா உடனடியாக ஆம்புலன்சுக்கு  ஃபோன் பண்ணிச் சொல்லவும்….அம்மா..விழித்துக் கொண்டு .எப்டி ஆச்சு? இவரு தான் அந்த வண்டிய இடிச்சாரா? என்று கேட்க…

நான் நினைச்சேன்…அந்தப் பொண்ணா வந்து திடீர்னு பிரேக் போட்டு தூக்கி அடிச்சி விழுந்துச்சு….இப்போ பாரு…நீயே நான் தான் இடிச்சேன்னு  சொல்றே…இது பெரிய பிரச்சனையில் கொண்டு போயி விடும். கடைசீல உபகாரம் பண்ணப் போயி நமக்குத் தான் கஷ்டம் வரும்…வா போகலாம்…யாராவது பார்த்துப்பாங்க என்று பயத்தில் கை கால்கள் நடுங்க ஒதுங்கிப் போயிருக்கலாம் இந்தப் பொண்ணு…கூடவே வந்து தானே ப்ரேக் போட்டு தடால்னு விழுந்துச்சு. இப்போ யார் பார்த்தாலும் நான் தான் இந்த விபத்துக்குக் காரணம்னு நினைக்க மாட்டாங்களா வாங்க நாம போயிறலாம்…ஆம்புலன்சுக்கு சொல்லியாச்சு..என்றவரை சண்முகம் முறைக்கிறான்…

என்னப்பா நீங்க…? இவ்ளோ பயந்தா எப்படி..? இருங்கோ.நாம காரில் கூட ஏற்றிக் கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்க்கலாம்..என்றவனை..

வேற வினையே வேண்டாம்…நீ எல்லாம் இந்தியாவுக்கு லாயக்குப் படமாட்டே….!   உதவி செய்தவனைத் தான் குற்றவாளியாய் கூண்டுல நிறுத்துவாங்க…..தெரிஞ்சுக்கோ….!

அம்மா தன் மடியில் அவளைக் கடத்தி தன் புடவைத் தலைப்பால் வீசிக்கொண்டிருக்க…தார் ரோட்டில் ஐந்து மணி வெய்யில் இறங்கிக் கொண்டிருக்க…யாராச்சும் வராங்களாப் பாருங்க…எனக்கு ஒரே படபடப்பா இருக்கு….என்று சொல்லிக் கொண்டே சிறிது நேரத்தில் சண்முகம்..எனக்கு மயக்கம் வருதுடா….என்று சொல்லியபடியே மயங்கி விழுந்த அம்மாவைப் பார்த்தான்.  கடவுளே !   ஒரே சமயத்தில் எனக்கிரு பிரச்சனைகளா ?  

அச்சச்சோ….இப்போ நம்ம அம்மா….என்று அப்பா…வண்டிய எடுங்கப்பா….ரெண்டு போரையும் தூக்கி போட்டுட்டு பக்கத்து ஹாஸ்பிடலுக்குப் போயிறலாம் என்று அம்மா மடியில் இருந்த அந்தப் பெண்ணைத் தூக்க, அப்பா ஒரு பாட்டில் தண்ணீரை இருவர் முகத்திலும் தெளித்து மயக்கம் தெளிவிக்க, அதற்குள் ஆம்புலன்ஸ்  ஹார்ன் அடித்தபடியே வந்து நின்றது. இருவருக்கும் பெருமூச்சு எழுந்து  உயிர் வந்தது…

அடுத்த சில நொடிகளில், அம்மாவையும் அந்தப் பெண்ணையும் ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் கிளம்பியது.அப்பா, அம்மாவோடு ஆம்புலன்சில் தொத்திக் கொண்டார்.

இப்போ அடுத்து என்ன பண்ணுவது?  என்ற சிந்தனையில் ஆழ்ந்தபடியே காரில் வேகமாக ஆம்புலன்சைப் பின்தொடர்ந்தான் சண்முகம்.

நேராக ஆம்புலன்ஸ்  ஃபோர்டிஸ் மருத்துவமனைக்குள் நின்று மூச்சு விட்டது. துரித கதியில் அடுத்த சில நொடிகளில் இருவரையும் ஹாஸ்பிடல் அவசரப் பிரிவில் கிடத்தி சிகிச்சை  ஆரம்பிக்க.

கவலை தோய்ந்த முகத்தில்…” என்னடா இது நேரம்…இப்படியாகிப் போச்சு…! உன்னை நேரா வீட்டுக்கு கூட கூட்டிட்டுப் போக முடியாம இந்தப் பிள்ளையால இங்கன வந்து மாட்டிக்கிட்டுக்  கெடக்கும் படியா ஆகிப்போச்சே…! நாம பாட்டுக்கு வந்துக்கிட்டு இருந்தோம்..இந்தப் பொண்ணுதான் குறுக்கக் குறுக்க நம்ம வண்டிய தொரத்திக்கிட்டே வந்த மாதிரி இருந்துச்சு.

அந்த டாக்டர்  பொண்ணு வீட்டு ஜாதகம் வந்த வேளை  நேரமே சரியில்லைன்னு தோணுதுடா.எனக்கு.  நல்லா… இருந்தா.. அம்மா..இப்போ பாரு சண்முகம் வரான்னு ஆசையாசையா இட்டிலிக்கு அரைச்சு வைச்சு சந்தோஷமா இருந்தா..அவளை  இப்போ படுக்கையில் போட்டுருச்சே  இந்த ஜாதகம்.. 

எனக்கு வருத்தமா இருக்கு. நாம அந்தப் பொண்ணப் பார்க்கப் போக வேண்டாம் சண்முகம். வேற இடம் நல்லதாப் பார்த்துக்கலாம். சகுனமே சரியில்லை என்று என்று அந்த வரனுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அப்பா.

என்னப்பா நீங்க…ஒரேயடியா அந்தப் பொண்ணு மேல பழியைப்  போட்டா எப்படி.? நீங்க இப்படி மூட நம்பிக்கையோட இருப்பீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.. நாம் இப்படிச் செய்தால் அவர்களுக்குப் பேரிடியா விழும், பாவம் அந்த டாக்டர் பெண்.  வீதி விபத்தால் நாம் அவளைத் தண்டிக்க வேண்டாம் அப்பா !

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தாத் தான் தெரியும்பாங்க….அது தான் எனக்கும் இப்ப…நீயும் புரிஞ்சுக்குவே. சரி விடுடா….அந்தப் பொண்ணு நமக்கு வேண்டாம்..யாராவது கட்டிட்டுப் போகட்டும்.

சரிப்பா..அதைப் பத்தி இப்ப என்ன…இப்போ இந்தப் பொண்ண ….இப்படி….என்று இழுத்தான்.

யாரு வீட்டுப் பொண்ணோ? அவங்களோட ஹான்ட்பாக்லேர்ந்து ஃபோனை எடுத்து நான் தான் நர்ஸுகிட்ட நம்பரைக் கொடுத்தேன்..அதில் நித்யான்னு ஒரு நம்பர்…இந்தப் பொண்ணு கொஞ்ச நேரம் முன்னாடி பேசிருக்கு…ஆனால் இப்ப அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப்ல இருக்கு..பாப்போம் யாரு வராங்கன்னு. போன் என்கிட்டத் தான் இருக்கு…இதோ..என்று தன்னோட சட்டைப் பையில் கை வைத்துக் காண்பிக்கிறார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே….”சௌக்கியமா..?.கண்ணே…சௌக்கியமா..?.சௌக்கியமா கண்ணே….சௌக்கியமா.?” என்று பாடகி நித்யஸ்ரீயின் குரல் அப்பாவின் சட்டைப் பையில் இருந்து கைபேசியால் அழைத்தது…

இதென்னடா வம்பாப் போச்சு.?  இப்ப என்ன பண்றது? சௌக்கியம் இல்லை..ன்னு சொல்லிட வேண்டியது தான், என்று கைபேசியைப் பார்த்ததும்…அதில் பச்சை எழுத்தில் நித்யா….நித்யா என்று மின்னிக் கொண்டிருந்தது.

விஷயத்தை பதட்டத்தோடு சொல்லியவர்…நீங்க உடனே வாங்கம்மா…இங்க தான் இருக்கோம் என்று ஹாஸ்பிடல் விபரங்கள் அனைத்தும் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

யாரோ நித்யாவாம்…இந்தப் பெண்ணோட அக்காவாம்..அதான் இப்போ பண்ணிச்சு…இதோ இப்போ வரேன்னு சொன்னாங்க…பாப்போம்…வந்தால் நம்ம தலைவலி விட்டுச்சு என்றவர்…போய் அம்மாவுக்கு என்னன்னு பார்த்துட்டு வா….என்று அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.

சண்முகம் அம்மா இருக்கும் அறைக்குச் செல்கிறான்…

டாக்டர்…திடீர்னு ஒரு விபத்தைப் பார்த்த அதிர்ச்சியில் மயக்கமாயிட்டாங்க என் அம்மா..இப்போ எப்படி? என்று கவலை தோய்ந்த முகத்தோடு கேட்டான் சண்முகம்.

கவலைப் பட ஒண்ணுமே இல்ல..ஷி இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் .சும்மா வீக்னெஸ் தான். ட்ரிப்ஸ் ஏத்தியிருக்கு..முடிஞ்சதும் நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க…ஒண்ணுமில்லை..எல்லாம் நார்மல் தான். என்று சொல்லிவிட்டு சிரித்தபடியே நடந்தார்.

சண்முகம்…அம்மாவை விட்டுவிட்டு ..நேராக அந்தப் பெண்ணின் அறைக்குச் செல்கிறான்.அங்கே……அவளுக்கு காலில் கட்டுப் போட்டிருப்பதைக் கண்டு மனம் பதபதைத்தான் எனாச்சு சிஸ்டர் இவங்களுக்கு..?

ஒரு காலில் முட்டுக் கழண்டிருக்கு…..பெட் ரெஸ்ட் வேணும்.. மல்டிபல் ஃபராக்சர் நல்லவேளை ஹெட் இஞ்ஜுரி  ஆகலை.என்று சொல்லியபடியே…இன்ஜெக்ஷன்  தரணம் நீங்க கொஞ்சம் வெளில இருங்க..! என்றாள்.

சரி…இவங்க அக்காவுக்கு தகவல் கொடுத்தாச்சு…அவங்க வந்த்கிட்டே இருக்காங்க. நான் வரேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து   கிளம்பினான்..மனசெல்லாம் வலியோடு. 

அப்பா சொல்வது போல நான் இங்கு வந்து இறங்கியதும் பார்த்த முதல் முகம்…ஒரே பார்வையில் சுண்டி இழுக்கும் வசீகரம்…என் பார்வை பட்டதும் இப்படிக் கருகிப் போனதோ…?.ச்சே..ச்சே…நானும் ஏன் அப்பா மாதிரி…! தப்பு… தப்பு..தப்பு…போ…போ..என்று அந்த எண்ணத்தை விரட்டினான்.

கொஞ்ச நேரம் முன்னாடி கூட எப்படி சந்தோஷப் பறவையாக சுதந்திரமா வண்டியில் பறந்து கொண்டிருந்தவள் இப்போது கால் ஒடிந்தவளாகப் கட்டுக்களோடு  படுக்கையில் பார்க்க மனசு வேதனை  பட்டது. அழகான பெண். எதற்கு இவ்வளவு தூரம் தனியாக வந்தாள்..? ஏன் என் கண்களில் பட்டாள்? விடை தெரியாத கேள்வி, அதனால் மனதில் மதிப்பு உயர்ந்து கொண்டே போனது.

ஓடிவந்து, அப்பா…அம்மாவை கூட்டிட்டு  போகலாம்னு சொல்லிட்டாங்க…எல்லாம் நார்மல் தானாம்..வீக்னெஸ் தானாம்…அந்தப் பொண்ணுக்குத் தான் காலில் பயங்கர  அடி…கட்டுப் போட்டிருக்காங்க மல்டிபல் ஃபராக்சர் ன்னு  சொன்னாங்க பாவம்பா…என்றவனை..

நீ போயி ரிசப்ஷனில்  பார்த்துட்டு வா..பில்லைக்கட்டு, நாம இங்கேர்ந்து சீக்கிரமா கிளம்பலாம்.. இந்தப் பிள்ளைக்கு அவங்க வீட்லேர்ந்து யாராச்சும் வராங்களான்னு பாப்போம்..சொன்னவர் கிளம்புவதில் குறியாக இருந்தார்.

சண்முகம் லிஃ ப்டில் இறங்கி  வெளியேறவும் தேன்மொழியின் அப்பா, அம்மா, நித்யா மூவரும்  பதட்டத்தோடு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அறைக்குள் நுழைந்தவர்கள்…தேன்மொழி…..தேன்மொழி…எப்படிம்மா…..இப்படியாச்சு…? என்று கதறிக் கொண்டு வர..அங்கிருந்த நர்ஸ் ” சத்தம் போடாதீங்க…அமைதியா இருங்க ” என்றாள்.

அம்மா…. சொல்லிருக்கேன் இல்லையா…ப்ளீஸ்….என்று நித்யா சொல்ல…அமைதியானார்கள் இருவரும். அடக்க முடியாமல்  “சொல்லாமக் கொள்ளாம அதிகப் பிரசங்கித் தனம் பண்ணினால் இப்படித் தான் ..இதுக்குத் தான் சொல்றது ‘அடாது செய்தால் படாது படுவாய்’ என்று …உனக்கு எதாச்சும் ஆச்சுன்ன நாங்க என்னாவுறது. இப்பவே பயந்து கலங்கிப் போயி தான் வந்தோம் உன் முகத்தைப் பார்த்ததும் தான் எங்களுக்கு மூச்சு வந்துச்சு தெரிஞ்சுக்கோ. அம்மா கண்ணீர் மல்க சொல்லிக் கொண்டே மகளின்  தலையைக் கோதி விட்டபடி..

உனக்குத் தான் கோண புத்தி…இவளாச்சும் உன்னைத் திருத்தி யிருக்கலாம்..இதுல ரெண்டு பேரும் கூட்டு களவாணித்தனம் பண்ணிபுட்டீங்க….ஆண்டவன் காட்டிக் கொடுத்துட்டாரில்ல..இந்த வெளயாட்டுத் தேவையா உனக்கு..? இப்பக் காலுக்கு என்ன ஆச்சு…? காலே போயிருச்சா..அட தெய்வமே..என்று கலங்கினாள். கட்டிக் கொடுக்க வேண்டியவ…இப்படி கால ஒடிச்சுக்கிட்டு வந்து கெடக்கிறியே…நாங்க என்னத்த செய்வோம்…? என்று புலம்பும் அம்மாவை அணைத்த படியே தேற்றினாள் நித்யா.

“எவ்ளோ தைரியம்…பாரு இதுக்கு…எல்லாம் நீ கொடுக்குற செல்லம் தான்….சொன்னா உனக்கு மூக்குக்கு மேல கோபம் வந்துரும்….”

நல்ல வரன் நித்யாவுக்கு வரப் போவுதுன்னு நம்பிட்டு இருந்தோம்….. எல்லாத்தையும் மண்ணாக்கி போட்டியே….! அம்மாவும் அப்பாவும் மாறி மாறி ஆற்றாமையைப் பேசித் தீர்த்துக் கொண்டார்கள்.   “இந்த வரன் வர்ரதுக்கு முன்பே இப்படி ஒரு சோகம் வரணுமா  நமக்கு?.” என்று நொந்தாள் அம்மா !   

என்னம்மா சொல்றீங்க ரெண்டு பேரும் ….ம்ம்ச்சு… சும்மாயிருங்க…தேன்மொழிய ஏன் திட்றீங்க…அது பாவம்…! குழந்தைத்தனமா நடந்துகிடுச்சு. இப்படியாகும்னு யார் கண்டா? நித்யா நிதானமாகச் சொன்னாள்.நம்ம நல்ல நேரம் இத்தோட போச்சு…ஹெட் இஞ்ஜுரியாயிருந்தால்  இப்ப நாம என்ன பண்றது.?..கெட்டதிலும் ஒரு நல்லதுன்னு பாருங்க.

ஆமாம்…நித்யா..அந்த மாப்பிள்ளை வீட்டுக்கு ஃபோனைப் போட்டு இப்ப பெண்ணைப் பார்க்க வேண்டாம்னு சொல்லிட்டோம்.எல்லாத்துக்கும் நல்ல சகுனம் வரவேணும். இல்லாட்டி செய்யக் கூடாது. நாம வேற பார்த்துக்கலாம் நித்யாம்மா..நமக்கும் மீறின சக்தி ஒண்ணு இருக்குது. அது தான் இப்படி செஞ்சி காமிச்சுருக்கு. நல்லவேளையாத் தேனு பிழைச்சாள்.அவளுக்கு எதாச்சும் ஒண்ணு ஆயிருந்துச்சுன்னா…நினைக்கவே என் ஈரக்கொல நடுங்குது என்று சிலிர்த்துக் கொண்டாள் அம்மா.

வாசலில் நிழலாட…எட்டிப் பார்க்கிறாள்…டாக்டர் நித்யா….!

மேடம்…நான் சண்முகம்…இவங்க ஆக்ஸிடென்ட்  ஆனதும் நாங்க தான் இவங்களை இங்கே சேர்த்தோம்..இந்தாங்க இவங்களோட ஹெல்மெட். ஹான்ட்பேக் , மொபைல் ஃபோன்., ஸ்கூட்டர் சாவி ..எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க……இவங்களைப் பார்க்க வந்தேன்…நீங்க யாரு ? என்று இழுத்தான்..

ஒ…ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்ங்க , எப்படியாச்சு இது…? பை த பை  நான்…நித்யா..இவள் என் தங்கை தேன்மொழி.ஒரு விஷயமா ஏர்போர்ட் போயிருக்கா…வரும்போது இப்படியாச்சு…உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியலை…ப்ளீஸ் உட்காருங்க…என்றாள் நித்யா.  

என் அம்மாவும் இங்கதான் அட்மிட் ஆனாங்க..லேசா மயக்கம்..தான். இப்போ சரியாகி நாங்க வீட்டுக்கு கிளம்பறோம்..அதான் சொல்லிட்டு இதெல்லாம் கொடுத்திட்டு போகலாம்னு வந்தேன்,  என்றவன் அப்போ நான் கிளம்பறேன்..தேன்மொழி கிட்ட சொல்லிடுங்க என்றான்.

அவனை மூவரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்…சரி..சொல்லிடறோம் என்றார்கள். நித்யாவின் மனசுக்குள் இவன் தான் சண்முகம் என்று தோன்றவும். கூடவே…”அதான் அந்த சம்பந்தம் வேண்டாம்னு முடிவு பண்ணியாச்சே” என்று நினைத்தவள் எல்லாம் இவனாலே வந்த வினை…என்று நினைத்தாள்.

அதற்குள் தேன்மொழி விழித்து…எல்லோரையும் பார்க்கிறாள்…சண்முகத்தைப் பார்த்தவள் கண்களில் புது ஒளிக்கீற்று. வாங்க வாங்க என்கிறாள்..ரொம்ப நாட்கள் பழகியவள் போல இருந்தது அவள் குரல்.

இவருக்கு ஏன் நம்ம  தேன்மொழியிடம் பேச்சு..வேண்டியிருக்கு .? இதுக்கு முன்பு பேசியிருப்பாரோ ..?  சந்தேகம்…நித்யாவின்  மனக் கதவைத் தட்டாமல் நேராக இடித்துத் தள்ளி உள்ளே நுழைந்து சிம்மாசனம் தேடி அமர்ந்தது. நித்யாவின் நிம்மதி இத்தோடு காலி என்று சிரித்தது.

மெல்ல சிரமத்தோடு எழ முயற்சி செய்த தேன்மொழி……நித்யா எழுந்து ஓடணும் போல இருக்கு….என்று சொல்ல….!

எல்லாம் ஓடுவ…ஓடுவ….! குரலில் சிறிது எரிச்சல் எட்டிப் பார்த்தது..நித்யாவிடம்.
 
இவன் தயக்கத்துடன்…எப்படி இருக்கீங்க தேன்மொழி…? என்று கேட்க..அருகில் இருக்கும் மூவரும் திகைப்புடன் திரும்பிப் பார்க்கிறார்கள்….யார் நீ ? அந்தப் பார்வைகள்  இவனைக் …கேட்டது.?

தேன்மொழியால் காலை அசைக்க முடியவில்லை..பெரிய பாறாங்கல்லைஅவள் காலில் கட்டி வைத்தது போல கனத்தது. அவளுக்கு எழுந்து ஓட வேண்டும் போல இருந்தது.   கால்விரல் கூட அசைவில்லாமல் மரக் கட்டை போல கண்ணுக்குத் தெரிய இனி ஓடுவதாவது…எல்லாம் இனிமேல் கனவில் தான்..என்று நினைக்கும்போதே வெடித்தது மனது.  

நான் இனிமேல் எப்படி நடப்பேன்..?.  எப்படி கல்லூரிக்குப் போவேன் ?  கால் முறிந்து நொண்டியாக…… சொல்லும் போதே துக்கம் நெஞ்சைக் கப்பென அடைத்தது.

அப்படிச் சொல்லாதீங்க…கால் கூடிய சீக்கிரமா சரியாகிடும்…!

நீங்க அக்கா நித்யாவைப் பெண் பார்க்க நாளைக்குத் தானே வருவதாக இருந்தது. அதுக்குள்ளே ஆண்டவன் சித்தம் பார்த்தீங்களா….இப்படி ஹாஸ்பிடலில் வைத்துப் பெண் பார்க்கும்படியா….இவள் முடிக்க வில்லை… தேன்மொழி கண்களில் கண்ணீர் பொங்கியது.  

அதற்குள்…

நோ….நித்யா அதிர்ந்தவள்…இதைப் பற்றி இப்போ கவலைப் படாதே தேன்மொழி…எல்லாம் தள்ளி போயாச்சு. நீ நல்லபடியா வீட்டுக்குத் திரும்பணும்.அதுவரைக்கும் ஒண்ணும்  கிடையாது. இப்போ இவர் உன்னை வந்து பார்த்துட்டு உன் மொபைல் கொடுக்க வந்தார் அவ்ளோதான்…என்றவள்…நீங்கள் போகலாம் என்பது போல சண்முகத்தை வெற்றுப் பார்வை பார்த்தாள்.

சண்முகமும்….மென்மையாக ஆமாங்க தேன்மொழி…என்று அழுத்தமாகச் சொன்னவன்…எஸ்..ஐ’ம் சாரி…எங்க வீட்டிலும் அப்படித் தான் சொல்றாங்க. அதனால் என்ன..அவங்க செண்டிமெண்டுக்கும் கொஞ்சம் மரியாதை தருவோமே என்றவன் நித்யாவைப் பார்க்க அவள் ஏதோ ஒரு நாவலில் தன் தலையைப் புதைத்துக் கொண்டிருந்தாள். குனிந்திருந்த தலை கூட சொன்னது “கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்…” என்று.

டேக் கேர்…தேன்மொழி அப்ப நான் கிளம்பறேன்..நாளைக்கு வந்து பார்க்கிறேன் ..என்றவன்…விறு விறுவென்று மறைந்து போனான்.

இவன் நாளைக்கு வேற வரப் போறானா? நாளைக்கு வரட்டும் சொல்றேன்…என்றவளைப் பார்த்து தேன்மொழி…ஏன் நித்யா…அவரைப் போய்…நீ…?

நீ சும்மாயிரு என்று ஒரே வார்த்தையில்  நித்யா தங்கையின் வாயை அடைத்தாள்.

அம்மாவும் அப்பாவும் இவர்களின் பேச்சில் இருக்கும் நோக்குப் புரியாமல் சரி விடும்மா..இனி வரமாட்டான்..நான் வேணுமானா அவங்க வீட்டில் சொல்லி வர விடாம பண்றேன்…என்றார்.

அதெல்லாம் ஒன்றும்  வேணாம்ப்பா…நான் பார்த்துக்கறேன்..நீங்க கிளம்புங்க…நேரமாச்சு…இங்க ரூம்ல ஒருத்தர் தான் தங்கணும்…என்று சொன்னதும்.

சரி பார்த்துக்கோ நாங்க கிளம்பறோம் நாளைக்கு வரோம்…என்று சொல்லிவிட்டு அவர்களும் கிளம்பிப் போனார்கள்.

நாளைக்கு அவர் வந்தால் நீ என்ன சொல்லி அவர் மனதைப் புண்படுத்துவே……..கண்களில் வழியும் கண்ணீரோடு கேட்டாள் தேன்மொழி.

அதுசரி…என்னாச்சு உனக்கு? நல்லாத் தானே இருந்தே…நீ தான் அவனைப் பார்க்கப் போறேன்னு சொல்லி எல்லாத்தையும் கெடுத்தே…இனிமேல் அந்தாளு பேச்சை எங்கிட்ட எடுக்காதே. அப்பாவும் அம்மாவும் இந்த வரன் சரியில்லை…சகுனத் தடைன்னு சொல்லி மூடிட்டாங்க. உண்மையச் சொல்லு இவங்க காரா உன்னை இடிச்சுத் தள்ளியது..?

உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டு இப்போ வந்து நிக்கிறாரா…? ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்…!எனக்கு சந்தேகமா இருக்கு..என்றாள் நித்யா.

வில் யு ப்ளீஸ் ஷட் அப்  நித்யா…? என்றவள் மேற்கொண்டு பேசாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

ஆமா..அவரைப்  பத்தி சொன்னா நீ ஏன்…கண்ணீரும் கம்பலையுமா கைகேயி வேஷம் போடறே..? கையில் ஒரு மாத்திரையும் தண்ணீருமாக தேன்மொழியின் அருகில் வருகிறாள் நித்யா..

“இந்தா போட்டுக்கோ…வலிக்கு.” தண்ணீரை வாயில் கொஞ்சம் கொஞ்சமாக விட..

நான் அதுக்கு அழலை….அவரை நீ தனியா எவ்வளவு வேணாத் திட்டிக்கோ…ஆனால் என்னைப் பார்க்க வரும்போது அவரைத் திட்டாதே..ப்ளீஸ்…நானே நொண்டியா கிடக்கேன்  இங்கே..அந்த வருத்தமே எனக்குப் போதும்.

என் கால் சரியாகுமா நித்யா? கவலை தோய்ந்த குரலில் கேட்கிறாள் தேன்மொழி.

ஆகும் தேனு..நீ பழயபடி வர இன்னும் பத்து மாசம் ஆகும். ஆனால் சரியாகும். நிறைய ரெஸ்ட் எடுக்கணும். கால் எலும்பைத் தாங்கும் ஜவ்வு கிழிந்து சைடு முட்டு வெளியே தள்ளியிருக்கு…கவலைப் படாதே…நல்லவேளையா பெரிசா ஒண்ணும் ஆகலை.

ஏன்  நித்யா…எனக்கு இதுவே ரொம்பப் பெரிசா இருக்கே…!

இதைவிடப் பெரிசெல்லாம் இருக்கு…தெய்வம் காப்பாத்தினார் உன்னை. பொறுத்துக்கோ நீ.

நித்யா…நித்யா…நான் ஒண்ணு சொன்னால் நீ தப்பா நினைக்க மாட்டியே..!

ம்ம்..சொல்லு…அது தப்பா இருந்தா தப்பு தான்..தப்பாத்தான் எடுத்துப்பேன்.

வந்து …ஒரே ஒரு ரெக்வஸ்ட்,  எப்படியோ நாம குடும்பமும் அவங்க குடும்பமும் ஒண்ணு சேர முடியாத நிலை..இதில் உனக்கு வருத்தம் ஒண்ணுமில்லையே.

இல்லவே இல்லை…எனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லை. எனக்கு அப்பா அம்மா தான் முக்கியம்,. இவர் இல்லாட்டா இன்னொருத்தர்.ஆனால்….எந்த சஞ்சலமும் இல்லாம இருக்கணும். அது முக்கியம்.

அப்போ….சண்முகத்தை எனக்கு விட்டுக் கொடுத்துடு நித்யா…ப்ளீஸ்..!

இந்த வார்த்தையை எதிர்பார்க்காத நித்யாவுக்கு தூக்கி வாரிப் போட்டது,

“வாட்…??!!!!” என்ன கேட்கிற நீ? தெரிஞ்சுதான் பேசறியா? இது அவருக்குத் தெரியுமா? இல்லை அவர் உன்னிடம் ஏதாவது இது மாதிரி சொன்னாரா?….என்னால நம்பவே முடியலை..தேனு…

ம்ஹும்…இது எனக்கும் உனக்கும் தவிர யாருக்கும் தெரியாது.

அப்போ…எப்படி..?

நித்யா…நான் கடைசியா வண்டில வரும்போது அவரை உன்னருகில் வைத்து மனக்கண்ணில் பார்க்க ஆசைப் பட்டேன்…அதில் கூட நீ ஒட்டவில்லை…அப்போதான் அவர் முன்னே என்னை வைத்து நானே கற்பனை செய்ய ஆரம்பித்தேன். அப்போதான் எனக்கே அதிர்ச்சி..உன்னை ஏமாத்தி விட்டேனோ என்று எனக்குள் ஒரு குற்ற உணர்வு…அப்போ தான் தெரியாமல் பிரேக்கைப் போட்டு இப்படி விழுந்துட்டேன்.என்னை மன்னிச்சுடு…நித்யா. இது கடவுள் கொடுத்த தண்டனை., ,என்று அழ ஆரம்பித்தாள்.

நித்யா….மௌனமானாள்…என்ன சொல்வதென்றே தெரியாத மனப் போராட்டம். தங்கையின் உள்ளம் புரிந்தது. எஸ்…ஷி இஸ் இன் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்.  வெரி சைல்டிஷ்…இன்னும்..!

சின்னப் பெண்ணாக இருக்கும்போது ஒரு பொம்மையைப் பார்த்ததும் “இது எனக்கு என்று பிடுங்கி மார்போடு அணைத்துக் கொள்ளும் அவளது பழக்கம்..பெரியவளானதும் கூட எனக்கு வாங்கிய புடவையை தனக்குப் பிடித்திருந்தால் உடனே  “நித்யா இது எனக்கு என்று அள்ளி எடுத்து நெஞ்சோடு புதைத்து கண்ணை மூடிக் கொண்டு….”ரொம்பப் பிடிச்சிருக்கு இந்தப் புடவையை   எனக்கு தந்துடேன்…” என்று தோளோடு சார்த்திக் கொண்டு அழகு பார்ப்பவள்…

இப்போ….இப்படி…! ஒருவேளை என்னைப் பெண் பார்த்துவிட்டு போனவரை இவள் இப்படிக் கேட்டிருந்தால்….நம்ம குடும்ப மானம் என்னாகியிருக்கும் அச்சச்சோ…தப்பிச்சேன் .கடவுளே…!

இதையாவது இப்போ தடுத்து நிறுத்த முடியுமா?அம்மா அப்பா என்ன சொல்வா…போகட்டும் அவங்க வீட்டில் இதை எப்படி எடுத்துப்பாங்க…நித்யாவின் கண்கள் பனித்தது.

நீயாவது இப்போ காலை ஓடிச்சிட்டு படுத்திருக்கே…நான் என் மனசு ஒடிஞ்சு போயி நிக்கறேன்….எண்ணங்கள் கதற எல்லாத்தையும் உன் அல்ப ஆசையில் கெடுத்துட்டியே….! இப்போ இதை வேற என்கிட்டயே சொல்றியே…நான் என்ன ஜடமா? நித்யாவின் மனசு பேயாட்டம் போட்டு அமைதியாயிற்று.

ஆமாம்..நான்  மெல்ல இதில் இருந்து மீள வேண்டும்.என்று நினைத்தவள்..”எனக்கு இவர் தேவையில்லை..” என்று மனதுக்குள்  தீர்மானமாகச் சொல்லிக் கொண்டு..

சரி தேனு நீ குழம்பாதே…என்றவளிடம்..

நித்யா…என்னை மன்னிச்சுக்கோ….என்று தேன்மொழி  கண்ணீர் வழிய  கெஞ்சும் விழிகளோடு நித்யாவைப் பார்த்தாள்.

இட்ஸ்….ஆல்ரைட்…! விஷ் யூ ஆல் த பெஸ்ட்..! கண்ணியமாக ஒதுங்கிச் சென்றாள் நித்யா. சரி..நீ அவசரப்பட்டு யாரிடமும் எந்த விஷயமும் சொல்லாதே..காலம் வரும் போது பார்த்துக்கலாம். கொஞ்சம் பொறுமையா இரு..என்றவள்…நான் கொஞ்சம் கிளினிக் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்…நர்ஸ் கிட்ட சொல்லிட்டு போறேன்…என்றவள் கிளம்பினாள்.

தேன்மொழி கண்களை மூடிக் கொண்டு கற்பனையில்” ரயில் தண்டவாளத்தில் கைகளை விரித்தபடி நடக்கிறாள்…. ஆற்றங்கரை ஆலமர விழுதைப் பிடித்து ஊஞ்சல் ஆடி விழுகிறாள்…மலை உச்சிக் கோவிலுக்குப் போக படிகளில்  தாவித் தாவி ஏறுகிறாள்..கடலைலையைத்  துரத்தி ஓடுகிறாள்…..பட்டாம்பூச்சியைப் பிடிக்க ஓடுகிறாள்…..வயல் வரப்பில், ஒற்றையடிப் பாதையில், வயல்காட்டுச் சகதியில் கால்கள் அமிழ நடக்கிறாள்…எதையோ தேடுகிறாள்….வான் மேகத்தைப் பார்த்து ஆடும் மயிலாக, துள்ளி துள்ளி ஓடும் மானாக தன்னையே  விரட்டி விரட்டிப் பிடித்துக் கொண்டு ஓடி ஓடிக் களைத்து இறுதியில் படுக்கையில் வந்து விழுகிறாள்.”

இவளின் ஐம்புலன்களும் சிலிர்க்க கண்களைத் திறந்தால்,.நம்பவே முடியாமல்…இவளருகில்…அவளையே பார்த்துக் கொண்டு அமைதியான புன்னகை  தவழக் காத்திருந்தான் சண்முகம்…

நல்ல தூக்கமா தேனு ..! அதான்… தூங்கட்டும்னு பார்த்துகிட்டு இருந்தேன்..அன்போடு சொன்னான்.

எப்போ வந்தீங்க…? வந்ததும் எழுப்பியிருக்கலாமே..நான் தூங்கலை, சும்மா சுத்திக்கிட்டு இருந்தேன்…எனக்கு இந்த உலகத்தில் சுத்த நிறைய இடம் இருக்கு. அங்கெல்லாம் போயிட்டு இப்போ தான் வந்தேன்…என்றாள்..

ஆனால் எனக்கு இந்த உலகத்தில் என் வீட்டை விட்டால் நீ இருக்கும் இடம் மட்டும் தான்…! நான் ஏன் இப்படி ஆனேன் என்று எனக்கே ஆச்சரியமா இருக்கு. என்னோட ஆச்சரியத்துக்கு சொந்தக்காரி நீ தான் தேன்மொழி.. தடையில்லாமல் தயக்கமில்லாமல் பேசினான் சண்முகம்.

என் மேல் இருக்கும் அனுதாபம் தானே உங்களை இங்கே வரவழைக்கிறது….ஆனால் ஒண்ணு…எனக்குக் கருணையோ, அனுதாபமோ என்மேல் எப்போதும் யாருக்கும் இருப்பதை என் மனம் அனுமதிப்பதே இல்லை..என்றாள் தேன்மொழி.

உண்மைதான் அனுதாபத்தில், கருணையில் எழும் அன்பு நிலைக்காது…எனக்கும் தெரியும்.

இல்லை தேன்மொழி….உன்மேல் எனக்கு அனுதாபம் வரலை…இது கருணை இல்லை…உனக்கு நான் எப்படிப் புரிய வைப்பேன்…எனக்குத் தெரியலை..

நான் இப்போ எழுந்து நடக்க முடியாத படி நொண்டியா ஆயிட்டேன் ..அதாவது தெரியுமா?

அப்படிச் சொல்லாதே தேன்மொழி… உன்னால் நடக்க முடியும்..இதெல்லாம் தற்காலிகமானது..ஆனால் நான் உனக்கு நிரந்தரமானவன்.

விரக்தியில்…சிரிக்கிறாள்..

ஏன் சிரிக்கிற தேன்மொழி…நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையைத் திருப்பிப் போட ஒரு சின்ன விபத்தும் அது தரும் வலியும்  போதும். சந்தோஷம்  , இளமை, இனிமை, நிம்மதி, சுதந்திரம், இதெல்லாம் நிரந்தரமா எப்பவும் என்னோட இருக்கும்னு நினைச்சுக் கனவு கண்டேன்…ஆனால் இப்போ, இதெல்லாம் என்கிட்டேர்ந்து விலக ஒரு அடி போதும் என்று எனக்குப் புரிய வெச்சிடிச்சு. இதில் எது தற்காலிகம்? எது நிரந்தரம்?ன்னு  நீங்களே சொல்லுங்க சண்முகம்…என்றவளின் கண்களில் நீர் முத்துக்கள் திரண்டு பனித்துளியாய் இமைகளில் நின்றது.

என்ன பெரிய தத்துவம் எல்லாம் பேசறீங்க….?

அனுபவங்கள் தானே தத்துவமா ஆகுது….ஒரே நாளில் வேறு விதமா வாழ்க்கை துவங்கி இருக்கே…இது ஒரு ஆச்சரியம் இல்லையா?

அவளது கண்ணீரைத் துடைக்கத் துடிக்கும் தனது விரல்களைக் கட்டுப் படுத்திய வண்ணம் கனத்த இதயத்தோடு அவன்….”வேண்டாம், கண்ணீர்…அழாதீங்க….நானிருக்கேன்…உனக்கு..எல்லாம் நான் பார்த்துக்கறேன்…” என்று மென்மையாகச் சொல்ல.

“வாசன் ஐ கேர் ” விளம்பரம் மாதிரி இருக்கு..என்று  சொல்லிச் சிரிக்க முயன்றாள்….இல்லை மனத்தின் ரணம் புன்னகையைக் கூட புதைத்து விட்டிருந்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் நித்யா  வந்துடுவாங்க. நீங்க கிளம்புங்க…உங்களை யாரும் தப்பா நினைக்கக் கூடாது..என் மனசு தாங்காது. சொன்னவளின் பார்வையில் அன்பு வழிந்தது.

ஹனி என்றான்….அவள் வித்தியாசமாகப் பார்த்தாள்..நீ உன் பெயரில் அதைத் தான் வெச்சிருக்கே…என்று சொல்லிச் சிரித்தான்…

அவள்…காரணமே இல்லாமல்.”தேங்க்ஸ்” என்றாள். அந்த ஒற்றை வார்த்தையில் அவனுக்கு இந்த உலகம் பல  சுற்று விரிந்தது போலிருந்தது.

கறந்த பாலின் தூய்மை உன் உள்ளம்…வான் மழையைப் போல பரிசுத்தம் உன் எண்ணம்….உனக்கு ஒன்றும் ஆகாது. நீ சீக்கிரமா நல்லாயிடுவே பாரேன்…என்றான்…அவனையறியாமலே அவளை ஒருமையில் உரிமை கொண்டாட, அவள் நிஜமாய் அந்த அன்னியோன்யத்தை பார்வையால் வரவேற்றாள்.

என்னங்க…கவிதையாய் பேசறீங்க…..நீங்க அதிகமா அன்பைக் காட்டுவதை என்னால தாங்கிக்க முடியலை. ஆனால் சந்தோஷமா இருக்கு..என்று சொல்லி அவன் முகத்தையே இமை அசையாமல் பார்க்கிறாள்.

ஒண்ணு சொல்லு தேன்மொழி…நான் இப்படி அடிக்கடி இங்கே வந்து உன்னைப் பார்ப்பதில் உனக்கு சிரமம் இருந்தால் சொல்லிடு…என்று நிறுத்தி அவளது பதிலுக்கு எதிர் பார்த்து அவள் முகத்தைப் பார்க்கிறான்  சண்முகம்.

ஏன்..வருவதை நிறுத்திக் கொள்ளவா?  இல்லை….நீங்க வருவதை நிறுத்திக் கொள்ளலாம்…ஆனால் நான் உங்கள் எண்ணத்தில் ஓடி வருவதை உங்களால் தவிர்க்க முடியுமா? என்றவளை புன்னகையோடு பார்த்து…

நீ சொல்வது சரிதான்…என்கிறான்.

வேண்டாங்க….பேசாமல் நித்யாவைக் கல்யாணம் பண்ணிக்….சொல்ல வந்தவளை அவளது மனமே வாயைப் பொத்தியது…”சொல்லாதே “என்று தடுத்தது.

உடலும் மனமும் போராட்டத்தில் அலைக்கழித்தது. அலைகள் மேல் தடுமாறும் ஓடம் போல அவளது நிலை தள்ளாடியபடி…மிதப்பது போல் இருந்தது அவளுக்கு. நேற்று வரை இவனை எனக்குத் தெரியாது. ஆனால் இன்று இந்தப் பரந்த உலகில் இவன் மட்டும் இருப்பது போலத் தெரிகிறது. இவனை மட்டுமே மனசுக்குத் தெரியுது…இது என்ன விந்தை. இவன் போகக் கூடாது என்று மனசு அவனைச் சுத்துது. அவன் வரும் வரை மனதில் வலிகளின் ஆட்சி. அவனைக் கண்டதும் இல்லாத கால்கள் கூட சலங்கை கட்டிக் கொண்ட  ஆனந்தம் …இதெல்லாம் தான் காதலா…இல்லை….அதையும் தாண்டிப் புனிதமானதா?

அவன்…என்ன தீவிரமா எதையோ யோசிக்கிறாய்…அப்போ நான் கிளம்பறேன் தேனூ….அக்கா  வந்துருவாங்க..சொல்லிவிட்டு அவளது விரல் நுனியை  லேசாகத் தொட்டு விட்டுப் போகிறான். இவளது ஐம்புலன்களும் சிலிர்த்து எழுகிறது அந்த தெய்வீக ஸ்பரிசத்தில். நம்பவே முடியாமல் சண்முகம் அடிக்கடி வாயேன் ப்ளீஸ்…என்று கெஞ்சும் விழிகளுக்கு அவன் விடையாக மறைந்தான்.

அவன் அந்த இடத்தில இல்லாமல் போனாலும் அவனது பேசும் விழிகள், கனிந்த பார்வை, கருணை வார்த்தை, என்று அந்த அறை முழுதும் அவனது உணர்வுகளை செதுக்கி  வைத்து விட்டுப் போயிருந்தான் சண்முகம்.

இவளது மூச்சிலும் அவன் பெயரே  சுகமாக நுழைந்து உடலெங்கும் சக்தி தந்துவிட்டு  வெளியேறியது.

அவன் சென்ற சில நிமிடங்களில் நித்யா உள்ளே நுழைகிறாள்….

என்ன…தேன்மொழி….இப்போ அவர் இங்கே வந்தாரா?

ஆமாம்…வந்தார்..

அவர் ஏன் இப்படி அடிக்கடி வந்து உன்னைப் பார்த்துத் தொல்லை கொடுக்கிறார்…நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..! இந்தக் கல்யாணமே வேண்டாம்னு நாம அவங்க வீட்டில் சொல்லியாச்சு பிறகும் ஏன் வந்து..உன்னைப் பார்க்கணும்.?

ஏன் நித்யா ரொம்ப கோபமா இருக்கே…அவர்மேல..?

இந்தா சாப்பிடு என்று தட்டை நீட்டியவள்…சீக்கிரமா சாப்டு தூங்கணும் நீ. உனக்கு நல்ல ரெஸ்ட் தேவை.என்று கண்டித்தாள் நித்யா.

இந்த மாப்பிள்ளையைப் பார்க்கப் போயி தானே நீ இப்படிக் காலை  ஒடிச்சுகிட்டு வந்து படுக்கையில கெடக்க. இவர் வீட்டுக்கு வரதுக்கு முன்னயே இப்படி….இவர் ராசிக்கும் நம்ம குடும்பத்துக்கும் சரிபட்டு வராதுன்னு அம்மா கண்டிப்பா சொல்லிட்டாங்க தேனு..நீ புரிஞ்சுக்க. அதான் வேண்டாம்…. நீ சொன்ன பிறகும் நான் யோசனை செய்து பார்த்தேன். இது சரி பட்டு வராது தேனும்மா..

அவர்…ரொம்ப நல்லவர் நித்யா…

உனக்கென்ன இவ்வளவு கரிசனம் வேண்டிக் கிடக்கு இப்பவே…!

நீ தான் டாக்டர். கொஞ்சம் கூட கருணையே இல்லாம ஒரு பேசண்டுகிட்ட எரிஞ்சு விழுவுற.

உன் பார்வை வேறு…என் பார்வை வேறு.அதையும் நீ புரிஞ்சுக்கோ. இதனால் நமக்குள் எதுக்கு வாக்குவாதம். இதுக்கெல்லாம் அப்பா ஒத்துக்கவே மாட்டாரு. இது… நீயா வளர்த்துக்கிட்ட கவர்ச்சிக்  கற்பனை. இப்போ நீ இருக்கும் நிலையில் அவர் உன்னை சும்மா வந்து பார்க்கிறார்னு தான் எனக்குத் தோணுது. இதை நீ அவர்கிட்டக் கூட கேட்காதே. தப்பாப் போயிடும். பிறகு பெரிய பிரச்சனை எல்லாம் வரும்.நான் சொல்றதை சொல்லிபுட்டேன். கேட்டாக் கேளு..இல்லாட்டி எக்கேடோ கேட்டுப் போ.

இந்தா இந்த மாத்திரையைச் போட்டுக்கோ என்று வெந்நீரோடு நீட்டினாள் நித்யா.

வீட்டுக்குள் நுழைந்த சண்முகத்தைப் பார்த்ததும்… ஏன் ஒரு மாதிரியா இருக்கே? சண்முகம்…எங்க போயிட்டு வரே,,,? இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கே….இந்த அலையன்ஸ் இல்லாட்டி என்ன…வேற பார்த்தா போகுது.வேற இடத்திலும் சொல்லி வெச்சிருக்கோம்..

அப்பா..ப்ளீஸ்…இனி யாரையும் பார்க்காதீங்க எனக்கு வேண்டாம்….மெதுவாகச் சொன்னான்.

என்ன வேண்டாம்..கல்யாணமா..? இல்லை வேற பொண்ணா..?

நீங்க சொன்ன அந்த ரெண்டாவது…!

அப்போ..நீயே முடிவு செய்துட்டியாக்கும்.

ஆமாம்பா..  நாம் உதவி செய்த சொன்ன அந்தப் ஸ்கூட்டர் விபத்துப் பொண்ணு…தேன்மொழி…..டாக்டர் நித்யாவோட தங்கை.

அப்டி போடு….! உனக்கென்ன பைத்தியமா? இப்பவே அந்தப் பொண்ணு  கால ஒடிச்சுக்கிட்டு  நிக்குது..அது மேல என்ன உனக்கு…? எங்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை.  ஆக்கங் கெட்டவள் !  

அவுக வீட்டு மூத்தது டாக்டர்..அதையே வேண்டாம்னு சொல்லிபோட்டு…இப்ப இந்தப் பெண்ணைக் கட்டிகிறேன்னு என் மகன் சொல்றான்னு சொல்ல…நான் என்ன கேனையனா..?..என்னால முடியாது சாமி. அதக் குடும்பமே வேண்டாம்.

அப்போ நான் போய் கேட்கட்டுமா ?   நீங்கள் போக விரும்பாவிட்டால் .. !

அந்த அளவுக்கு உன்னை வளர்த்து விட்டுட்டாளா அவள்…? நினெச்சேன்…!

அப்பா உங்களுக்கு அவளைத் தெரியாது…எனக்கு அவளைத் தெரியும்..! அப்பா பேசப் பேச இவனுக்கு உடம்பெல்லாம் கோபம் கொப்பளிக்கிறது…சரி…போகட்டும் இன்னும் என்னெல்லாம் பேசுறார்னு பாப்போம்…என்று வீறாப்புடன் மெளனமாக இருந்தான்.

ஆமா….என்ன தெரியும்..பெரிசா…என்னமோ கல்யாணம் கட்டி புள்ளகுட்டி பெத்தா மாதிரி பேசுற..நீ…வந்து ரெண்டே நாள்ல இம்புட்டு மாத்தி உட்டுட்டாளே உன்ன…! இவள்ல்லாம் வீட்டுக்குள்ள நுழைஞ்சா என்னாவுறது குடும்பம்?.

என்னங்க…யாரைப் பத்தி பேசுறீங்க…என்று அம்மா நடுவில் வர.

அதாண்டி….அந்தப் பெண்ணு தேன்மொழி ஹாஸ்பிடல்ல  இருக்கே அவளைத் தான் நாம இவனுக்கு கலியாணம் பண்ணப் பேசணுமாம். வேற எந்த பெண்ணையும் பார்க்க  வேண்டாமாம்..அப்படித்தானடா…என்று கம்பீரமான குரலில் ஒரு தோரணையாகக் கேட்கிறார் அப்பா.

அப்படியா…அதுல என்ன தப்பு…ரெண்டாவது மவளக் கேட்டால்  போகுது….! அவுங்களுக்கென்ன… தாராளமா கொடுப்பாங்க.

அடியேய்…நீ என்னக் கூறோடத் தான் பேசுறியா?

ஆமாங்க…இப்போ யோசனை செய்து தான் சொல்றேன். நாம நம்ம பிள்ளையப் பிரிஞ்சு இத்தனை வருஷம் இருந்தோம்…இப்போ அவன் இன்னும் ரெண்டு மாசத்துல மறுபடியும் கிளம்பிப் போயிருவான்..பெறவு  எப்ப வருவான்னு நாம காத்துக் கெடக்கணும். அதுக்கு அவனுக்குப் பிடிச்ச பொண்ணக் கட்டி வெச்சு கூட அனுப்பினா நமக்கு அடுத்த  தடவ  அவன் வரும்போது  பேரப்பிள்ளையோட வருவானில்ல…என் மவனோட சந்தோசம் தான் என்  சந்தோசம்..அத்த விட்டுட்டு வேறெல்லாம் நீங்க கூறு கெட்டத்தனமா பேசாதீங்க சொல்லிபுட்டேன்.

அவுக வீட்ல போயி நான் பேசறேன்…இதுல என்ன இருக்குது..? ஏண்டா…சண்முகம்..அந்த காலொடிஞ்ச   பிள்ளையவா கட்டப்போறே…நீ…! நல்லா  யோசனை பண்ணிச் சொல்லு என்கிறாள் அம்மா.

அம்மா..அவளுக்கு கால் சரியாகிடும்மா…அந்தப் பொண்ணும் ரொம்ப நல்லவள் தான், குழந்தை மனசு. .நான் பேசியிருக்கேன். அப்பா சொல்ற மாதிரியெல்லாம் இல்லை.

அவங்க வீடும் நம்ம வீடும் சேராதுன்னு தான அந்தக் குடும்பமே வேண்டாம்னு முடிவு செஞ்சோம். இப்ப அதே வீட்டில் பொண்ணு கேட்டா…வெளங்கிரும்…! கல்யாணம்கறது ஆயிரம் காலத்துப் பயிறு சொன்னாக் கேளு சண்முகம்…அந்த வீட்டு சங்காத்தமே வேண்டாம். சகுனத்தடை நல்லாக்  காட்டிக் குடுத்துச்சு.

அப்பா..இதையே அவங்க  சொன்னங்கன்னா…என் நிலைமை என்னாவும்…அதையும் கொஞ்சம் நீங்க நினைச்சுப் பாருங்க….,உங்களோட மூட நம்பிக்கைக்கு ஒரு பெண்ணோட வாழ்க்கை பாதிக்கும் அதையும் யோசியுங்க கொஞ்சம்.

வயசாக வயசாக எண்ணங்கள் விரிஞ்சு மனசும் விட்டுக் கொடுக்க தெரியணும் . ஆனால் நீங்க ஏன் தான் இன்னும்  பிடிவாதமா இப்படி…!

ஏண்டா சண்முகம்…இதுக்குப் போயிட்டு அப்பாகிட்ட வம்பு வளக்கிற…அவசரப் படாதே…எல்லாம் யோசிக்கலாம்.இப்போ தானே நீயே சொல்லியிருக்கே. பார்க்கலாம். சரியா..அம்மா ஆதரவாகப் பேசி முடிக்கிறாள். இப்போ போயி தூங்கு பொழுது  வந்ததும் பேசிக்கலாம். 

எல்லாம் என் தலையெழுத்து…ஒரே மகன்னு தலையில் தூக்கி வெச்சுக் கொண்டாடினா இப்படித் தான்…சமயம் பார்த்து கால வாரும். இதுக்கு இவன் வராமலே இருந்திருக்கலாம். அவுட் ஆஃப்  சைட் அவுட் ஆஃப் மைண்ட்..ன்னு இருந்திருக்கும்…இப்போ தாயும் பிள்ளையுமா சேர்ந்துக்கிட்டு என்னைப் போட்டு பார்க்கலாம்னு நினைப்பா? நீ அடம்பிடிச்சால்…. இங்க என்கிட்டே ஒண்ணும் நடக்காது. நிச்சயமா அந்தத் தேன்மொழி நம்ம வீட்டு மருமவ இல்லை…! ஆமா சொல்லிப்புட்டேன். என்று உறுமினார்.

அப்ப  தந்தை சொல் மிக்க மந்திரமில்லைன்னு நான் என் லீவை கான்சல் பண்ணிபுட்டு நாளைக்கு கிளம்பிக்கிறேன். எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். அம்மா…நான் நாளைக்கு கிளம்புறேன்….நானும் சொல்லிபுட்டேன். அவரு பிள்ள தானே….நானு…எனக்கும் எல்லாம் இருக்கும்…!

அப்படி ரோஷம் வந்தால் போடா…எல்லாம் பெறகு பார்த்துக்கலாம்..எல்லாம் அயல்நாட்டில் சம்பாதிக்கிறோம்ங்கற ஏத்தம்….இதுவும் பண்ணும் இதுக்கு மேலயும் பண்ணும். நீ எந்த நாட்டில் இருந்தால் எனக்கென்ன.? நீ என் பேச்சைத் தான் கேட்கணும்…நான் உசுரோட இருக்கும் வரைக்கும்.

சண்முகம் கோபத்தோடு அறைக்குள் நுழைந்து பெட்டியை இழுத்து தனது துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்..கிளம்பிப் போறேன்…இங்க இருந்தா இருக்கும் கொஞ்சநஞ்ச நிம்மதியும் போகும். இவங்க பேச்சைக் கேட்டு லீவைப்  போட்டு வந்தேன் பாரு…என் புத்தியச் சொல்லணும்…!

என்னடா முனகறே…!

ம்…..இனிமேல் நீங்க ஒண்ணும் எனக்கு பெண்ணு பார்க்க வா….கலியாணம் கட்ட வா…ன்னு தகவல் அனுப்ப வேண்டாம்….நான் அங்கியே எதையோ பார்த்து..அதான் நீங்க கேட்டீங்களே வெள்ளக்காரியோ, கறுப்புக்காரியாவோ…பார்த்து கலியாணம் கட்டி ஃபோட்டோ  அனுப்பி வைக்கிறேன்…பார்த்து சந்தோஷப் பட்டுக்கோங்க. நாளைக்கு நான் கிளம்பறேன். பொதுவாகச் சொல்லிவிட்டு சாப்பிடாமல் படுக்கையில் விழுந்து போர்வையால் முகத்தோடு இழுத்துப் போர்த்திக் கொள்கிறான் சண்முகம்.

உறங்கத் தெரியாமல் தவிக்கிறது அவன் மனது. ச்சே…நான் ஏன் இப்படி மாறிப் போனேன்….அப்பாவிடம் இவ்வளவு கடுமையாகப் பேசி இருக்கக் கூடாதோ..? காதல் வந்தால் இந்த வைராக்கியமும் கூடவே நுழைந்து கொள்ளுமோ…! இது காதலா? இலையில்லை…இது ஒரு ஆத்மீக பந்தம்…உன்னை நான் விரும்புகிறேன் என்று கூடச் சொல்லாமல் தானே உருவான ஆத்மாவின் கோலம். இதை அழிக்க மாட்டேன்…எதற்காகவும்..யாருக்காகவும்..அழிக்க மாட்டேன் நடப்பது நடக்கட்டும்.

பெயரே  தெரியாத கடவுள் எல்லாம் வரிசையாக கண் முன்னே கொண்டு வந்து கும்பிடுகிறான்…” எப்பிடியாச்சும் தேனு என் வாழ்நாள் முழுதும் கூட வரணும்…வரம் கொடு ” என்று கண்ணை மூடுகிறான்.

மென்மையான இளம் புன்னகை சிந்த தேன்மொழி கனவின்  உள்ளே நுழைகிறாள். பாசம் நேசம், இவை மட்டும் அறிந்த மனம் சண்முகத்தைத் தேடுகிறது. உங்கள் அருகாமை தரும் சுகந்தம் ஸ்பரிசத்தில் கிடைக்கும் கந்தர்வம் என்னை இங்கு வரை அழைத்து வந்தது சண்முகம்..

வா தேனு…இப்போ தான் எல்லா கடவுள் கிட்டயும் உன்னை எனக்கு அளிக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தேன்..

என்னை யாருக்கும் விட்டுக் கொடுத்து விடாதே சண்முகம்..அவளின் ஒவ்வொரு பார்வை வீச்சிலும் கேள்வியாய், பதிலாய்,,எனக்கு நீ வேண்டும்….உன்னை நான் யாருக்கும் தர மாட்டேன் என்றது.

சத்தியமாய் வலிகள் கடந்து வழிகள் பிறக்க  உண்மைகளை விழுங்கும் காலம் நமக்குக் கல்யாணக் கதவைத் திறக்கும், தேன்மொழி. உன் அன்பில் தீபமாக சுடர்விட..இது தானே நான் எதிர் பார்த்தது தேன்மொழி

எனக்கு மருந்து வேண்டாம்…சண்முகம்…..உன் புன்னகை ஒன்றே போதும். நான் விரைவில் குணமாகி ஓடி வருவேன்.என்னால் ..உன்னை யாருக்கும் விட்டுத் தர முடியாது..எனக்காகக் காத்திரு சண்முகம்.,

அதுவரை நம் வார்த்தைகளுக்கு வேலையில்லாமல் வெறும் எண்ணங்கள் வாழ்க்கையை  நடத்திக் கொண்டிருக்கட்டும். அப்பொழுதே அங்கு தூய அன்பு உதயமானது.

நீ போகிறாய்….நான்….துடிக்கிறேன் சண்முகம்..நீ நின்ற வெற்றிடம் என் இதயத்திலும்…

நீ  போகிறாய்….நான்  துடிக்கிறேன்.. நான் போகிறேன்…நீ துடிக்கிறாய்..என்று மென்மையாகச் சிரிக்கிறான்..

அவள் மறைந்து விட…இவன் தேட…கனவு கலைகிறது…..!

கலைந்த கனவு கூட எத்தனை இனிமையாக இருக்கிறது என்று எண்ணிய சண்முகம். கனடா நாட்டில் இயற்கை எழில் கூட இத்தனை இனிமையைத் தந்தது இல்லையே…எனக்கு..தேன்மொழியின் அன்பு அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததோ….ஆச்சரியம் தான்…இவளைப் போயா ஆக்கங்கெட்டவள்  என்றார் அப்பா…இவளின் துணை  இருந்தால் போதுமே… என்னவெல்லாம் சாதிக்கலாமே….

எத்தனை மன வேதனையில் படுத்தேன்..ஒரு நொடியில் மனதை இலவம் பஞ்சாக ஆக்கி சுகமான சிந்தனை தந்தவள் கனவில் கூட. இந்த தூய அன்பு ஏன் அப்பாவுக்குப்  புரியவில்லை..எண்ணியபடியே உறங்கிப் போகிறான்.

மறுநாள் பொழுது விடியும் போதே இவனுக்குள் தீர்மானமும் விடிகிறது. அப்பா என்ன சொன்னாலும் பரவாயில்லை..எப்படியாவது தேன்மொழி வீட்டுக்குச் சென்று என் மனதில் இருப்பதைச் சொல்லி விட வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான். அப்படியே கிளம்பி விட வேண்டியது தான். இனி இங்கு இருந்து யாரிடம் கெஞ்சணும். அவர் பிடிவாதம் அவருக்கு…என் பிடிவாதம் எனக்கு..

பெட்டியை இழுத்துக் கொண்டு நான் வரேன்மா….!

எங்கடா..இதென்ன சோதனை….சண்முகம் …வேண்டாம்டா…போகாதே….என்னங்க..அவன் கிளம்பறான்…பார்த்துட்டு சும்மா இருக்கீங்க…அவன் இஷ்டத்துக்கு விட வேண்டியது தானே…அவன் என்ன தப்பாவா செஞ்சான்..இப்ப கொவிச்சுகிட்டுக் கிளம்பறான்…பாருங்க..!

அதுக்கேண்டி இப்படி ஒப்பாரி வெக்கிறே….அவ்ளோ திமிர் இருந்தா போகட்டும்…விடு . அவனுக்கு போக இடம் இருக்குன்னு நம்மகிட்டக்  காமிக்கிறான்..நீ உன் வேலையைப் பாரு..வந்து எனக்கு சாப்பாடு எடுத்து வை. எனக்கு பசிக்குது. 

இருதலைக் கொள்ளி  எறும்பின் நிலையாய்…மகனிடம் கண்களால் கெஞ்சியபடியே அப்பாவுக்கு தட்டை வைக்கிறாள் அம்மா.. வாடா சண்முகம்..நீயும் என்று அழைக்கிறாள்.

இல்லம்மா நீங்க சாப்டுங்க…எனக்குப் பசியில்லை….நான் வரேன்…என்றவன் வாசல்படி இறங்கி கேட்டைத் தாண்டி வெளியேறுகிறான்.

கனடா என்ன அடுத்த சந்திலா இருக்கு? இனி என்ன பண்ணுவது என்று யோசித்தபடியே…டாக்ஸி…என்று அழைத்து அதில் ஏறிக் கொள்கிறான். நேரா ஃபோர்டிஸ் ஹாஸ்பிடல் விடுங்க…என்று சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து கண்ணை மூடிக் கொள்கிறான். நான் செய்வது சரியா? தவறா ? மனசாட்சி  தராசைத் தூக்குகிறது. தேன்மொழி தட்டு கனமாக  இவன் இதயம் இளகி லேசாகிறது.

ஹாஸ்பிடலில் தேன்மொழியின் அம்மா வந்து நித்யா நீ கிளம்பு நான் பார்த்துக்கறேன் இவளை…இதெல்லாம் வேண்டாத வேலை….சும்மாக் கெடக்குற சங்கை ஊதிக் கெடுத்தானாம்ன்னு ….இந்தப் பிள்ள பண்ணிய கூத்து…இப்பப் பாரு எத்தனை அலைச்சல்….இன்னும் எத்தனை நாள் இங்கயே இருக்கணுமோ…?

இல்லம்மா…இன்னிக்கு வீட்டுப் போகலாம்னு சொல்லிட்டாங்க. அங்க பெட் ரெஸ்ட் தான் இவளுக்கு. நான் சொன்னேன் இதெல்லாம் வேண்டாம்னு….உன் மக கேட்டாத்தானே..தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிக்கும். உனக்குத் தெரியாதா அவளைப் பத்தி.

பழைய படி நடப்பாளா..? தெரியலையே…கட்டிக் கொடுக்க வேண்டிய பொண்ணு…பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது..

சரி..சும்மாப் புலம்பாதே. ஆனது ஆச்சு..ஆக வேண்டியது இருக்கே!

பேசாமல் அந்த சண்முகத்தை இவளை கட்டிகிட சம்மதமான்னு கேட்டு இவளை அவர் தலைல கட்டிடலாம்..இனி இவளாச்சு…  அவராச்சுன்னு…என்ன சொல்றேம்மா…என்று அம்மாவின் முகத்தைப் பார்த்தாள் நித்யா.

ஏண்டி…நீ சுயநினைவோடத் தான் பேசுறியா….? நீ இருக்கும்போது இவளுக்கென்ன இப்பக் கல்யாணம்…அதுவே யானை தன் தலைல தானே மண்ணை வாரி போட்டுக்குறாப்பல செஞ்சிருக்குற காரியம் வேற. இந்த லட்சணத்துல கெடக்குறது கெடக்கட்டும்னு…இவளுக்குக் கல்யாணமா? அதுவும் உனக்குப் பார்த்த மாப்பிள்ளையோட.. நல்லாருக்கு போ…கலிகாலம்ங்கறது சரியாத் தான் இருக்கு. என்று அலுத்துக் கொண்டாள்.

எனக்கு எங்கே பார்த்தீங்க….? ஒரு ஜாதகம் வந்துச்சு….அவ்ளோ தானே.

அந்த சண்முகம் இவ மேல உசுரா இருக்காரு…அதான் நான் யோசித்தேன். நீயும் யோசித்துப் பாரு. ஒருவேளை இது நடக்கணும்னு தான் இப்படி எல்லாம் நடந்திருக்கோ என்னவோ..இதும் ஒரு நல்ல சகுனம் தானே.? எனக்கென்னவோ இது தான் சரிபட்டு வரும்னு தோணுது. எனக்கு இப்போ கல்யாணம் அவசரம் இல்லை…நான் இங்கியே தான் இருக்கணும்னு நினைக்கறேன்…என்னோட கிளினிக்கை பார்த்துகிட்டு….என்னை எங்கே கனடாவுக்கு அனுப்பப் பார்க்குறீங்க  நீங்க? என்று மெல்ல ஒரு விதையை ஊன்றி வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் நித்யா.

ஒருவேளை நித்யா சொல்வது நிஜமாக இருக்குமோ…அந்த சண்முகம் ரொம்பத் தங்கமான மாப்பிள்ளை…நம்ம தேன்மொழிக்கு சரியான ஜோடி தான்….ஒரு காரியம் ஒரு காரணம் இல்லாமல் நடக்காதுன்னு சொல்லுவாங்க. அதான் போல…தேன்மொழிக்கு என்ன குறைச்சல்.?.கெட்டிக்காரி…என்று எண்ணிக் கொண்டே…தேனு…தேனு….என்று அவளது அருகில் அமர்ந்தாள்.

அம்மா…..வந்துட்டியாம்மா……..கால் ரொம்ப வலியா  இருக்கும்மா…என்னால தானே  உங்களுக்கெல்லாம் ரொம்ப சிரமம்…இல்லம்மா..? என்னை மன்னிச்சுக்கங்கம்மா…!

பரவாயில்ல தேனு…நீ சீக்கிரமா குணமாயிடுவே..இன்னிக்கு சாயந்தரமா நாம டிஸ்சார்ஜ் ஆவுரோமாம் நித்யா சொல்லிச்சு.

இதைக் கேட்டதும் தேனுவுக்கு முகத்தில் வருத்த ரேகை ஓடியது. அப்போ சண்முகத்தை இனிமேல் எப்படிப் பார்ப்பது? பார்க்க முடியாதா? மனம் ஏங்கியது.

காரை எடுத்து வீட்டை நோக்கி ஒட்டிக் கொண்டிருந்தாள் நித்யா. அவளது கைபேசி “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது” என்று அழைத்தது. யாராயிருக்கும்….தெரியாத நம்பர்…

எடுத்ததும்….தெரிந்த குரல்…
……..
ஹலோ…நித்யா தான் பேசறேன்…
……..
என்னங்க சொல்றீங்க…
……..
அப்டியா…?
……. 
அச்சச்சோ….
………
இப்போ நான் என்ன பண்ணட்டும்…?
………..
அவரா…நம்பவே முடியலையே…
…………..
சரிம்மா….கண்டிப்பா செய்யறேன்மா..
………….
இல்லம்மா….தப்பா நினைக்கலை..
……….
பரவாயில்லம்மா…

என்று கைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது.

அப்படியே காரைத் திருப்பி நேராக ஏர்போர்ட்டுக்கு பறக்கிறாள்..இடையில் அப்பாவுக்கு ஃபோனைப் பண்ணி பேசிக் கொண்டே..கடைசியாக .அப்பா..நான் எல்லாம் யோசித்து தான் சொல்றேன்….என்று சொல்ல…

சரிம்மா…நீயாவது ஜாக்கிரதையா வண்டிய ஒட்டி….தேன்மொழியோட மாப்பிள்ளையை அழைச்சிட்டு வா… அதற்குள் நான் அவங்க அப்பா கிட்ட பேசிப் பார்க்கிறேன். நீ கவலைப் படாதே…உன் மனசு யாருக்கு வரும்? எனக்கு என் ரெண்டு மகளும் ரெண்டு கண்ணுங்க. ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்மா..என்று சொல்லிவிட்டு வைத்தார்.

கார் வேகமாக விரைந்து கொண்டிருந்தது….இன்னைக்கு எந்த விமானம் எப்போ கனடா போகிறது என்று யாரிடமோ போனில் கேட்டுக் கொண்டே ஒரு கையால் ஒட்டிக் கொண்டிருந்தாள் நித்யா. மனசில் ஒரே படபடப்பு. எப்டியாவது சண்முகத்தை ஏர்போர்ட்டில் கண்டு பிடித்து அழைத்து வந்து தேன்மொழியோட சேர்க்க வேண்டும். இது நடக்குமா? அம்மா தாயே மகமாயி..இது நடக்கணும்..மனசெல்லாம் வேண்டுதலோடு செல்கிறாள் டாக்டர் நித்யா.

தேன்மொழிக்கு படுக்கையில் இருப்புக் கொள்ளவில்லை…ஆனால் என்ன பண்ணுவது…? இன்னைக்கே டிச்சார்ஜா…அதுவும் பிடிக்கவில்லை….இன்னும் ரெண்டு மாசமும் இப்படியே இருந்தால் நல்லாயிருக்கும்னு நினைத்தாள். சண்முகம் வீட்டுக்கு வர முடியாதே….என்ற கவலை.

இன்னிக்கு நான் வீட்டுக்குப் கிளம்பி விட்டால் சண்முகம் வந்து பார்த்து ஏமாந்து போயிடுவாரே. சண்முகம்..ப்ளீஸ்…. உடனே வாயேன்….எனக்காக வந்துட்டுப் போ என்று மனதார நினைத்துக் கொண்டே வாசலைப் பார்த்து பரவசத்தில் சிரித்தாள்.

அங்கே  ஒளிமயமான வாழ்க்கையை  சத்தியம் செய்தபடி சண்முகம் காத்திருந்தான், அவன் முகம் சோகத்தில் வெளுத்திருந்தது.

வாங்க….வாங்க…என்று வாய் நிறைய வரவேற்ற அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் இருவரும்.   

அவரவர் பண்புக்கு அவரவர் ஆத்மா போடும் கோலங்கள் ஒரு மொழி பேசி தாம்பத்திய வாழ்க்கைக்குப் பாலம் அமைக்கிறது   எத்தனை விசித்திரமானது திருமணக் கோலம்.

இல்ல…நான் இன்னைக்கு கனடா கிளம்பறேன்…இப்போ அரைமணியில் ஏர்போர்ட் போகணும்…அதான் சொல்லிட்டு உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்…தேன்மொழி…..தொண்டை கம்மி வார்த்தைகள் முட்டித் திக்கி திக்கி….கண்களில்  ததும்பி வந்து நின்றது அவனது உள்ளம்.

என்ன சொல்றீங்க நீங்க? அப்படி என்னாச்சுது…? யாராச்சும் எதாச்சும் சொன்னாங்களா.?..நான் முடமா ஆயிட்டேன்னு தானே உங்க வீட்டில் என்னை….கல்யாணத்…. தேன்மொழியும்  திக்குகிறாள்..

இல்லம்மா….அதில்லை…போகட்டும்….நான் இப்போ கிளம்பறேன்…இந்த இது என் ஈமெயில் ஐ டி. உனக்கு முடியும் போது எனக்கு எழுது. என்றவன் அவளது அம்மாவைப் பார்த்து…” அம்மா…என்னை மன்னிச்சுருங்க…நான் தென்மொழியைத் தான் மனதார விரும்பறேன்…” முடிஞ்சா எங்க கல்யாணத்தை நடத்தி வையுங்க …என் அப்பா அம்மா சம்மதத்தையும் வாங்கி…அதுவரைக்கும் நாங்க காத்திருப்போம்”. 

சொல்லிவிட்டு கடைசியாக தேன்மொழியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “டேக் கேர் ஹனி”  சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கிறான்..அவனது துக்கம் அவன் முகத்தை இறுக்கியது.

அவர் சொன்னதை முழுதும் புரிந்து கொண்டு மனது மகிழ்ச்சியை ஜீரணிப்பதற்குள்…சண்முகம் கிளம்பிவிட…என்னடி இது..தேனு…? என்று ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் ஆனந்த அதிர்ச்சியில் நிற்கிறாள் தேன்மொழியின் அம்மா.

நேரா… ஏர்போர்ட் போப்பா….என்று டாக்சியில்  ஏறி அமர்ந்ததும்…கார் ஹாஸ்பிடலை விட்டு வேகமாக வெளியேறியது. காருக்குள் எஃப் எம்மில்…பாடல் ஒலிக்க ஆரம்பித்தது…

வாயை மூடி சும்மா இருடா…
ரோட்டப் பாத்து நேரா நடடா…
கண்ணக் கட்டிக் காட்டுல விட்டுடும்டா…
காதல் ஒரு வம்புடா…….!

கார் டிரைவர் ஓட்டிக்கொண்டே ஸ்டியரிங்கில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.

ஒருத்தனோட சோகானுபவம் கூட  பலருக்கு இதமான இசையாக இருக்கு…என்று நினைத்துக் கொள்கிறான் சண்முகம்.

ஏர்போர்ட்டில்  வந்து இறங்கியதும் மனது திக்…திக்..என்று தப்பைச் சொன்னது…”எதற்கு இந்த  வீம்பு…பிடிவாதம் என்று கால்கள் அடி எடுத்து  வைக்க மறுத்தது…இருந்தும் வைராக்கியம் தைரியம் கொடுத்துக் கொண்டே இருந்தது.

பெட்டியை இழுத்துக் கொண்டு நிமிர்ந்து அகத்தைக் முகம் காட்டி விடக்கூடாதென்ற எண்ணத்தோடு நடக்கிறான். நேராக டிக்கெட் கவுன்ட்டருக்குச் சென்று….வரிசையில் நிற்கையில்…..

இவனது வரவுக்காகவே காத்திருந்த நித்யா…நேராக அவனிடம் சென்று ..”ஒரு நிமிஷம்….வெளில வாங்க” என்று அழைத்து….என்னது..நீங்க .இப்படிப் பண்ணலாமா? என்று சண்முகத்தின் அம்மா சொன்ன விஷயத்தைச் சொல்லி…”எல்லாம் நான் பார்த்துக்கறேன்..எல்லாரும் சம்மதம் சொல்லியாச்சு…இங்க்ளுடிங்  உங்கப்பா….என்று சொல்லிச் சிரிக்கிறாள் நித்யா. 

எல்லாம் ஃபோனில் வாங்கிய சம்மதம்…எப்பிடி..? ஹபஹபஹபஹ்பா….சரியான ஜாடிக்கு ஏத்த மூடி தான் இந்த தேன்மொழி. என்று சொல்லிக் கொண்டே இப்போ நாம நேரா எங்கே போகட்டும்…? என்று கேட்கிறாள்.

வேறெங்கே…தேன்மொழியைப் பார்க்கத் தான்…பிறகு என் வீட்டுக்கு….என்று சிரிக்கிறான் சண்முகம்…!அவன் முகம் இப்போது பிரகாசமாய் மின்னுகிறது.

அது சரி…இப்படி இருந்தால் எந்த அப்பா அம்மாவுக்குக் கோபம் வராது…? என்று கிண்டலாகச் சொன்னவள்..உங்களை இத்தனை நேரம் இங்கே காணாமல் நானும்  உங்க வீட்டிலையும்  எவ்ளோ தவிச்சுப் போயிருக்கோம் தெரியுமா…? கடைசியா உங்க முகத்தைப் பார்த்ததும் தான் எனக்கு நிம்மதி…வந்துச்சு. இந்தாங்க முதல்ல உங்க அம்மாகிட்ட பேசுங்க…பாவம் காத்திருப்பாங்க..என்று தனது கைபேசியைத் தருகிறாள் டாக்டர்  நித்யா. 

கார் ஹாஸ்பிடலை நோக்கி விரைகிறது.

படுக்கையில் படுத்தபடி ” ப்ளீஸ் போகாதே..சண்முகம்….வந்துடு சண்முகம்…வந்துடு சண்முகம்.” என்று மனதுக்குள் ஓயாமல் ஜபித்துக்  கொண்டே இருந்தாள் தேன்மொழி..அவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கை மனசெல்லாம் நிறைந்திருக்க அவள் பார்வை அறையின் வாசல் பக்கம் திரும்பியே இருந்தது.

நல்ல சகுனமாக எங்கிருந்தோ தூரத்தில்  மங்களகரமாக   நாதஸ்வர ஓசை தேன்மொழி காதில் கேட்டுக் கொண்டிருந்தது. 

“ஒளிமயமான… எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது….
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது…”

அவளது கண்களில் ஆனந்தக் கண்ணீர்  தாரையாக வழிந்து கொண்டிருந்தது.
 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.