முகத்தில் நவரசம்
விசாலம்
ஒரு தடவை பம்பாய் ஷண்முகானந்த சபாவில், பத்மவிபூஷண் பாலசரஸ்வதி அவர்களின் நாட்டியம் பார்க்க சென்றிருந்தேன். முதன் முதலில் அவர் மேடைக்கு வந்து, எல்லோருக்கும் நடனபாணியிலேயே அஞ்சலி செலுத்தினார். அவரது பருமன், நடனத்திற்கு முட்டுக்கட்டை போடுமோ என்ற பயம் என் மனதில் இருந்தது. ஆனால் அவர் ஆடிய வர்ணமும், பதங்களும் மனதில் இன்றும் பசுமையாக நிற்கிறது. என்னவொரு முகபாவம் ! ஹாஸ்யம், சோகம், சிருங்காரம் என்று பல ரசங்கள் ஒவ்வொரு நொடியிலும் மாற்றிக் காட்ட வேண்டுமென்றால், எத்தனை திறமை வேண்டும்? இப்போது அவரது பேரன் அநிருத் என்பவர் அதே போல் நாட்டியம் ஆடி பாலசரஸ்வதியம்மாவை நமக்கு நினைவு படுத்துகிறார். இவர் ஆடிய “மோகமான இந்த வேளையில் என் மீது மோடி செய்யலாமா” என்ற சுப்பராமஐயரின் கல்யாணி ராக பதம், இவரது பாட்டியை நினைவுக்கு கொண்டு வந்தது.
பாலசரஸ்வதியம்மாவும் பாடியபடியே பிரமாதமாக அபிநயம் பிடிப்பார். அதே போல் பேரனும் நாட்டியத்தில் உச்சியைத் தொட்டுவிட்டார்.
பரத நாட்டிய வகைகளில் பத்து முக்கியப்பிரிவுகள் உண்டு. அதில் பதம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. வர்ணம் என்று மூச்சு இரைக்க ஆடிவந்த நடன கலைஞருக்கு, பதம் ஆட வரும் போது ஒரு ரெஸ்ட் என்றே சொல்லலாம். ஏனென்றால் இதற்கு முகபாவங்களும், கைகள் அசைவு, கண்கள் அசைவு இவைகளால் பிடிக்கும் அபிநயங்களும் தான் முக்கியம்.
பாடலுக்கேற்ப நவ ரசங்களுடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும். இதில் ஒரு சௌகரியம் என்னவென்றால் உடல் பருமனாக இருந்தாலும் தேர்ச்சி பெற்றவர்கள் இதைச் செய்து காட்ட முடியும்.
ஒரு குரு பதத்தைப்பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது.
‘கை வழி கண்ணும்
கண் வழி கருத்தும்
கருத்து வழி ரசமும்
கால் வழி தாளமும்
சொல் வழி ராகமும்
சென்று சுவை பிறக்கும்
இவை எல்லாம் சேர்ந்து அபிநயம். அபி என்றால் சம்ஸ்கிருதத்தில் நோக்கிடம், நய என்றால் எடுத்துச்செல்வது. நாட்டியத்தின் மூலம் எழும் பாவத்தை, உணர்ச்சிகளைப் பார்ப்பவர்களிடம் எடுத்துசெல்வது அபிநயம் என்று சொல்லலாம்.
பதத்திற்கு பாவம் மிக முக்கியம். இந்த பாவம் (bavam) வேண்டுமென்றால் நடனம் ஆடுபவ்ர் மட்டும் திறமைசாலியாக இருந்தால் போதாது. கூட பிண்ணனியில் பாடுபவரும் ‘ஏஒன்” னாக இருத்தல் அவசியம். நடனத்தில் ஒரு வாக்கியமே திரும்ப திரும்ப வர, அதில் ஒரு நாடகமே வந்துவிடும்.
உதாரணமாக “தீராதவிளையாட்டுப்பிள்ளை” என்ற வரிகளில் கண்ணன் வெண்ணெய் திருடுவது, யசோதையிடம் கோபிகள் பற்றி புகார் சொல்வது, கோபிகளைச்சீண்டுவது என்ற பல பாவங்களைக் காட்டமுடியும்.
பதங்களில் பல முருகன், கண்ணன், சிவன் என்று பல கடவுளர் மேல் நாயகி கொள்ளும் காதல் வெளிப்படுத்தப் படுகிறது.
இதனால் உண்டாகும் கோபம், காதல், வாத்சல்யம், சோகம் என பல ரசங்களை வெளியே கொண்டு வரும் திறமை நடன கலைஞருக்கு வேண்டும். இந்த விஷயத்தில் அபிநய சரஸ்வதியான பாலசரஸ்வதி அவர்கள் நடனத்தின் கலங்கரைவிளக்கம். சங்கீதகலாநிதி பட்டம் பெற்றவர்.
பதம் ஆடுவதில் முகுடம் சூட்டிக்கொண்டவர், திருமதி பிருந்தா. திருமதி முக்தா அவர்களின் சகோதரி. இவர் பதம் ஆடி பிடித்த அபிநயத்தில், ஸ்ரீ ரவீந்தரநாத்டாகூரும், முன்னாள் பிரதமர் நேஹ்ருஜியும் மயங்கிப் போனார்களாம்.
பக்தி காலம் முழங்கி அதன் உச்சம் மெள்ள மெள்ள குறைய ஆரம்பித்தது. இந்த நேரம் பதம், ஜாவளி என்று பல இசைக்கலைஞர்கள் கீர்த்தனைகளை இயற்ற ஆரம்பித்தனர்.
ஆமாம் ! இந்தக் காதல், காமம் கொண்ட பதங்கள் எப்படி ஆரம்பித்திருக்க வேண்டும் ? அந்தக்கால ராஜாக்களில் பலர் புகழுக்கு மயங்கினர். ஸ்ரீ தியாகபிரம்மத்தையும், சரபோஜி மன்னர் தன் அவைக்கு தன்னைப்பற்றி புகழ்ந்து பாட அழைத்தார். பல பரிசுகள் தருவதாகவும் கூறினார். அப்போது எழுந்த பாட்டுதான் “நிதி சால சுகமா ?’ கல்யாணி ராகத்தில் அமைந்த ஒன்று.
அன்று பல மன்னர்கள் புகழை விரும்பியதால் பல கவிஞர்கள் அரசனின் புகழைப்பாட தலைப்பட்டனர். அத்துடன் அரச சபையில் மன்னரைப் புகழ்ந்து நாட்டியமும் ஆரம்பித்தது. தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்க மன்னன் காலத்திலிருந்து சிருங்கார ரச சங்கீர்த்தனங்கள் ஆரம்பித்தன.
ஸ்ரீ அன்னமாசார்யாரின் பல பாடல்கள் பாலாஜி மேல் கொண்ட காதலை விவரித்து, சிருங்கார ரசம் பொங்க இருந்தன. அதைக்கொண்டு திரு க்ஷேத்ரக்ஞர்என்ற தெலுங்கு அந்தணர், நாயகன் நாயகி உறவு மேற்பட பதங்கள் இயற்றினார். நாயக நாயகியின் லட்சணங்களைத் தன் பதங்களில் வெளிப்படுத்தினார். ராகமும் ரசமும் சேர்ந்து பதம் உயிர்க்கொண்டு கேட்பவர்களின் இதயத்தைத் தொட்டது. இவர் சிறுவயதிலிருந்தே இசையில் நல்ல தேர்ச்சி பெற்றார். இவருக்கு ஒரு பெரிய யோகியிடம் கோபால மூலமந்திரம் உபதேசமாகப்பெறும் பாக்கியம் கிட்டியது. பின்னர் ஒரு நாள் கோபாலனின் தரிசனமும் கண்டு மனமகிழ்ந்து போனார்.
இதனால் இவர் இயற்றிய பதங்களில் ‘முவ்வா கோபாலா ‘ என்ற முத்திரை இருக்கும். இவர் முதலில் தன் மாமாவின் பெண் ருக்மிணி என்பவரை மணந்து கொண்டார். பின்னர் அவருக்கு மோகனாங்கி என்ற தேவதாசியிடமும் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய பதங்கள் சிருங்காரரசம் கொண்டதாக அமைந்தன.
இவர் அபூர்வ ராகங்களிலும் பதம் இயற்றியிருக்கிறார். அதில் சைந்தவி, ஆஹிரி, நவரோஜ் போன்றவைகளை எடுத்துக்கொள்ளலாம்.
பதங்களில் அனாவசியமான பிருகாக்களும், துரிதகாலமும் அதிகமாகக் காணமுடியாது. ஆகையால் பதங்களை ரசிக்க நல்ல ஞானம் வேண்டும். சாதாரணமாக ஒரு பாட்டு ஐந்து நிமிடத்தில் முடியுமானால் பதம் இழு இழுவென்று இழுத்து, பதினைந்து நிமிடம் ஆகலாம். ஆனால் அந்த ரசத்திற்குள் நாம் நுழைந்து விட்டால் நம்மை அது எங்கேயோ இழுத்துச்சென்றுவிடும். திரு எம்டி ராமநாதன் அவர்களின் பாட்டுக் கச்சேரியில் சுருதி சுத்தமும், மெல்ல நகரும் பல்லவியும் பார்க்க பதம் கேட்பது போல் இருக்கும்.
இந்தப் பத சக்கரவர்த்தி, பல சமஸ்தானங்களில் பாடியிருக்கிறார். மதுரை திருமலைநாயக்கன் அவையில் இரண்டாயிரம் பதங்கள், தஞ்சாவூர் அரச சபையில் ஆயிரம் பதங்கள், கோல்கொண்டா பாதுஷாவின் முன்னால் ஆயிரத்திற்கு மேல் பாடியிருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். ஒரே பிரமிப்பாக இருந்தது. தவிர கதிர்காம கந்தன், காஞ்சி வரதராஜன், திருவள்ளூர் வீரராகவஸ்வாமி என்று பல கடவுளர் மேலும் பதம் இயற்றியிருக்கிறார். இவர் கோபலனைத் தேடிக்கொண்டு பல கோயில்கள் யாத்திரை சென்றிருப்பதால் இவரை க்ஷேத்ரையா என்று மக்கள் அழைக்கின்றனர். இவரது அசல் பெயர் வரதய்யா, காஞ்சி வரதராஜர் அருளால் பிறந்ததால்.
பதங்களில் வரும் நாயகன் பரமாத்மா என்றும், நாயகி ஜீவாத்மா என்றும், தூது போகும் சகி குரு என்றும், ஒரு நடன கலைஞர் எனக்கு விளக்கினார். ஆகையால் பதம் ஆடும் நர்தகி மிகவும் ஜாக்கிரதையாக, பதத்தில் உயிர்க்கொண்டு, அந்தப்பாத்திரமாகவே மாற அதன் பலன் கிடைக்கும்.
தமிழ்ப்பதங்கள் இயற்றியவர்களில் திரு முத்துதாண்டவர், கனம் கிருஷ்ணய்யர், கவிகுஞ்சரபாரதி, மாம்பழகவிராயர், சுப்பராமஐயர் என் கவனத்தில் வருகிறார்கள்.
“வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும், உள்ளம் குழையுதடி கிளியே, ஊனுமுருகுதடி” என்ற பதம் அம்பாசமுத்திரம் சுப்பராயசுவாமி இயற்றியது. இதை பலர் ஆடக் கண்டிருக்கிறேன்.
பதங்களை பாரம்பரிய நெறிமுறைகளோடு மிக அழகாக பாடிக்கொண்டே வாசிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் வீணை தனம்மாள், அதேபோல் அவருடைய பெண் ஜயம்மாவும்தான். வீணை தனம்மாளின் பேத்திகள் பிருந்தா, முக்தா, பாலசரஸ்வதி ஆகியோர்கள் அந்தப் பரம்பரையை அப்படியே காத்து வந்தவர்கள்.
நான் திருமதி பிருந்தா, முக்தாம்மா இருவரையும் பார்த்து பேசியும் இருக்கிறேன். திருமதி அருணாசாயிராம் வீட்டில் அவரது தாய்க்கு பதம் கற்றுக்கொடுப்பார். இன்று அவரிடம் கற்றுக்கொண்டு எனக்கு மிகவும் பழக்கமான இசை மேதைகள், பதங்கள் பாடிவருபவர்கள் திரு ஹரிஹரனின் தாய் திருமதி, அலமேலுமணி, திருமதி கீதாராஜா.
இந்தக்கால வேகஓட்டத்தில், இயந்திரயுகத்தில் பதங்கள் கேட்க பொறுமை இருக்குமா ? கேட்பவர்கள் இருக்கிறார்களா என்பது ஒரு கேள்விக்குறி !
இன்று பலர் நடனம் கற்றுக்கொண்டாலும் பாரம்பரிய நடனத்தைக் கற்பார்களா, காப்பார்களா என்பதும் சந்தேகம் தான் !
புகைப்படத்துக்கு நன்றி:
http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5f/Balasaraswati_Bharat_Natyam_Great_1949.jpg