முகில் தினகரன்

‘அப்ப நான் கௌம்பறேன் மொதலாளி’ ஈரக்கைகளைத் துடைத்தபடி வந்து நின்றான் மாரி.

‘சரி..சரி..நீ கௌம்பு மாரி…மணி பத்தரைக்கு மேல் ஆயிடுச்சு…உம் பொண்டாட்டி வேற தலை நெறைய மல்லிகைப் பூவோட உனக்காக காத்திட்டிருப்பா..நீ சீக்கிரம் பொகலைன்னா அப்புறம் என்னைத்தான் திட்டுவா..’ விஷமமாகச் சொல்லிவிட்டுக் கண்ணடித்தார் சாராய ஜெயவேலு.

‘சாராய ஜெயவேலு’ என்றால் தெரியாதவர்களே அந்த ஊரிலும் சரி, அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மற்ற ஊர்களிலும் சரி, இருக்கவே முழயாது. ‘டொங்கு’ மலை அடிவாரத்தில் தன்னுடைய பரிவாரங்களுடன் சாராயம் காய்ச்சும் தொழிலை அமர்க்களமாகச் செய்து வருபவர் அவர். கடந்த பதினைந்து வருடங்களாக சாராய சாம்ராஜ்யத்தில் தனிக்காட்டு ராஜாவாக…முடிசூடா மன்னனாக…இருக்கும் அவரை அசைக்க யாராலும் முடியவில்லை. ஆள் பலம் பண பலத்தோடு கொஞ்சம் அரசியல் செல்வாக்கும் உடையவராகையால் காவல்துறை கூட அவரை நெருங்க தயங்கியது.

இந்த சாராய ஜெயவேலுவின் வெற்றிக்கு உறு துணையாய் இருப்பது அவரது வலது கரம் போலச் செயல்படும் மாரிதான் என்பது எல்லோருக்கும் தெரியும். சரக்கு காயச்சும் போது என்னென்ன ஐட்டங்களை எத்தனைக்கெத்தனை கலக்க வேணடும், குறைந்த அளவு போட்டாலே அதிக போதை ஏற பேட்டரி செல்லுடன் எதைச் சேர்க்க வேணடும், அழுகிய பழங்களையும்… பழத் தோல்களையும் அதன் நாற்றம் சற்றும் தெரியா வண்ணம் இருக்க எப்படி பராமரிக்க வேண்டும்…போன்ற நானாவிதமான சூத்திரங்களும் யுத்திகளும் மாரிக்கு மட்டும்தான் அத்துப்படி. அதனால்தான் இந்த சாராய ஜெயவேலு கொடுக்கும் அளவு சப்ளையை மற்றப் போட்டியாளர்கள் கொடுக்க முடிவதில்லை. அது மட்டுமல்ல பல போட்டியாளர்கள் பல விதத்தில் இழுத்தும் அவர்கள் வசம் போகாமல் முதலாளிக்கே விசுவாசமாய் இருப்பவன் அவன்.

அன்று ஊரே களேபரமாய்க் கிடந்தது.

ரேஷன் கடை கியூவில் நின்று கொண்டிருந்த மாரியின் மனைவி அஞ்சலை விஷயம் கேள்விப் பட்டு பையனையும் இழுத்துக் கொண்டு ஊர்ப்பள்ளிக்கூடத்தை நோக்கி வேக வேகமாய் ஓடினாள.; அங்கு விசாலமான திண்ணையில் வரிசையாய் படுக்க வைக்கப்பட்டிருந்த சவங்களைப் பார்த்து விக்கித்துப் போய் நின்றாள்.

‘தெக்காலத் தோப்புக்குப் போற வழில நாலு பேரு செத்துக் கெடக்கறாங்களாம்…அதையும் சேர்த்தா செத்தவங்க எண்ணிக்கை பதினெட்டாயிடுச்சு’ பஞ்சாயத்து போர்டு சேர்மன் சோகமாய்ச் சொன்னார்.

‘இன்னும் கொஞ்ச நேரத்துல கலெக்டர் நேர்ல வர்றாராம்…வரட்டும் ….வந்து பசங்க படிக்கற இந்தப் பள்ளிக்கூடத்துல அடுக்கி வெச்சிருக்கற பொணங்களைப் பார்க்கட்டும்…இந்தத் தடவையாவது அந்த சாராய ஜெயவேலு மேலேயும் அவன் கையாள் மாரி மேலேயும் கடும் நடவடிக்கை எடுத்து ஜெயில்ல போட்டடும்’ பள்ளி ஆசிரியர் பதைபதைத்தார்.

‘ஏற்கனவே ரெண்டு தடவை இந்த மாதிரி நடந்திடுச்சு…ஏதோ அப்பெல்லாம் ஒருத்தர் ரெண்டு பேர் செத்ததினால தன்னோட பணபலத்தையும் அரசியல் செல்வாக்கையும் வெச்சு அந்த சாராய ஜெயவேலு தப்பிச்சிட்டான்…ஆனா இந்தத் தடவை அவன் தப்ப முடியாது…போயிருக்கறது பதினெட்டு உசுரல்லவா?’ சேர்மன் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.

‘அட..இந்த ஜனங்களுக்குத்தான் ஆகட்டும் கொஞ்சமாவது புத்தி வேண்டாமா?…எப்படியும் வருஷத்துக்கு ஒரு தடவை ரெண்டு தடவை தமிழ்நாட்டுல ஏதோவொரு இடத்துல கள்ளச்சாராயச் சாவு விழுந்துக்கிட்டேதானிருக்கு…அது தெரிஞ்சும் போய் அந்தச் சனியனைக் குடிக்கறாங்களே…இதுகளையெல்லாம் என்னத்த சொல்லித் திருத்தறது,’ ஆசிரியர் குமுறினார்.

அந்த இடத்தில் ஆளாளுக்கு தன் புருஷன் மாரியையும் அவன் முதலாளி சாராய ஜெயவேலுவையும் கண்ட மேனிக்கு கரித்துக் கொட்டுவதைப் பார்த்து மனம் தாளாமல் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தாள்.

ஊரே வசை பாடிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த சாராய ஜெயவேலுவும் மாரியும் தலைமறைவாகிப் போயிருந்தனர்.

ஒரு வாரத்திற்குப் பிறகு சில அரசியல் புள்ளிகளுக்கும்…அதிகாரிகளுக்கும் கரண்ஸி அபிஷேகம் நடத்தி நடந்து முடிந்த கள்ளச் சாராயச் சாவுகளுக்கு யாரோ ஒரு அப்பாவியை காரண கர்த்தாவாக்கி சிறையில் தள்ளி விட்டு ஊர் திரும்பினர் சாராய ஜெயவேலுவும், மாரியும்.

நாட்கணக்கில் வீட்டையும் மனைவி…மகனையம் மறந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து விட்டு ஒரு இரவு நேரத்தில் திருடனைப் போல் அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டே வீடு திரும்பிய மாரியை நேருக்கு நேர் பார்க்கக் கூசிய அஞ்சலை மௌனமாய் இருந்து வெறுப்பைக் காட்டினாள். ஆனால் பாவம் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் அவளால் அந்த மௌனப் புரட்சியைத் தொடர முடியவில்லை. ‘ஆயிரந்தான் இருந்தாலும் எம்புருஷன்…நானே இதை ஒதுக்கினா அது பாவம் என்ன செய்யும்?. பெண்மனம் நெகிழ்ந்தது.

‘என்னடி பையன் தூங்கிட்டானா?’ என்று கேட்டபடி மனைவியை நெருங்கி அவள் தோள் பட்டைப் பகுதியில் சுடு மூச்சை பிரசவித்தான்.

‘க்கும்…இதுக்கொண்ணும் கொறைச்சலில்லை…பையன் அஞ்சாறு நாளாப் படுத்த படுக்கையாக் கெடக்கறான்..கேட்க நாதியில்லை…வந்துட்டாரு…கொஞ்சறதுக்கு….’ அவனைத் தள்ளி விட்டு விட்டுக் கேவினாள் அஞ்சலை.

‘என்னடி சொல்றே? பையனுக்கு என்ன?..காய்ச்சலா?’

‘என்னமோ தெரியலைங்க…போன வாரம் பள்ளிக் கூடத்துல வரிசையா அடுக்கி வெச்சிருந்த பொணங்களைப் பார்த்து விட்டுத் திரும்பி வந்ததிலிருந்தே ஒரு மாதிரியாத்தானிருந்தான் …அடுத்த ரெண்டு நாள்ல ஜூரம் ஆரம்பிச்சிட்டுது…அதுவும் சாதாரண ஜூரமில்லைங்க…நெருப்பாக் கொதிச்சுத் தள்ளிட்டுது..புள்ள ஜூரத்துல கண்டபடி உளர ஆரம்பிச்சு…நான் பயந்து…’

அவள் பேசுவதை முழுதும் கேட்கக் கூட இயலாதவனாய் வேகமாக எழுந்து உள்ளறைக்குச் சென்று மகனைப் பார்த்த மாரி கலங்கிப் போனான். ‘டேய்…பாபு…என்னடா ஆச்சு?…அப்பா வந்திருக்கேன்டா…கண்ணைத் தெறந்து பாருடா…’ பையனின் கன்னத்தைத் தட்டியபடி கதறினான்.

மெதுவாய் கண் விழித்த பாபு எதிரே நிற்கும் மாரியைக் கண்டதும் ‘அய்யோ..வேண்டாம்…எனக்கு இந்த அப்பா வேண்டாம்…’ என்று அவசரமாய்ச் சொல்லி விட்டு மீணடும் கண்களை மூடிக் கொண்டான்.

அதிர்ந்து போன மாரி ‘ஏய்..அஞ்சலை..வாடி இங்க…ஏண்டி புள்ள இப்படியெல்லாம் பேசுது?..நீ என்னடி சொல்லிக் குடுத்தே?’

‘அதான் ஊரே சொல்லுதே…அத நான் வேற தனியா சொல்லிக் குடுக்கணுமா?’என்றாள் அவள் ‘வெடுக்’கென்று.

‘என்னடி சொல்லுது ஊரு…பொல்லாத ஊரு?’

‘ம்ம்ம்…ஊர்ல பதினெட்டு சாவ விழுகறதுக்கு நீங்களும்..உங்க அருமை மொதலாளியும்தான் காரணம்னு ஊரே பேசுறதைக் காதாரக் கேட்டுட்டான்…போதாக்கொறைக்கு ஸ்கூல்ல வரிசையா வெச்சிருந்த பொணங்களையும் பார்த்துட்டான்…செத்துப் போனவங்களோட சொந்தக்காரங்க இவனைப் பார்த்து ‘பதினெட்டு உசுரைப் பலி வாங்கின பிசாசோட மகன்டா இவன்’னு கத்தியிருக்காங்க…பையனோட சின்ன மனசுல அது பெரிய காயத்த உண்டாக்கிடுச்சு’

ஆவெசமானான் மாரி. ‘எவன் சொன்னது? அதான் இந்தச் சாவுகளுக்கு நானோ என் மொதலாளியோ காரணமில்லைன்னு போலீஸே விட்டிடுச்சே’

‘நீங்க போட்ட எலும்புத் துண்டுகளுக்காக அதுக அப்படிக் குரைச்சிருக்குக…உண்மை என்னன்னு உங்க மனசைக் கேட்டுப் பாருங்க’ அவன் முகத்துக்கு நேராய் விரலை நீட்டி அஞ்சலை கேட்க தடுமாறினான்.

அதே நேரம் படுக்கையை விட்டுத் தட்டுத் தடுமாறி எழுந்து வந்த பாபு ‘அப்பா என் ப்ரெண்ட் ஆனந்தோட அப்பாவை நீதான் கொன்னுட்டியாம்…அதனால அவன் என் கூட இனிமே பேசவே மாட்டானாம்…ராசாத்தியோட அப்பா சாகறதுக்கும் நீதான் காரணமாம்…அவளும் என் கூட டூ விட்டுட்டா…உன்னாலதான் அவங்க என் கூட பேச மாட்டேங்கறாங்க…நீ போ…வீட்டுக்கு இனிமே வராதே..வெளிய போ…எனக்கு அப்பாவே வேண்டாம்’ என்றபடி மாரியைப் பிடித்து வெளியே தள்ளினான.;

சாராயத்திலும்…அடிதடியிலுமே ஊறித் திளைத்திருந்த மாரியின் உள்ளத்தில் முதன் முதலாய் ரத்தம் கசிய ஆரம்பித்தது. ‘ச்சே…என் பையன் நல்லாயிருக்கனும்…படிச்சு மேலுக்கு வரணும்னுதானே…இந்த பாழாப் போன வேலையிலெல்லாம் நான் ஈடுபட்டேன்…இப்ப என் பையனே என்னை வேண்டாம்னு சொல்ற அளவுக்கு வந்துட்ட பிறகு இனியும் அந்தக் கருமம் பிடிச்ச வேலை எனக்கு வேணுமா?’ மனசுக்குள் குமுறினான்.

மறுநாள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு முதலாளியிடமிருந்து விடுபட்டு வந்தான். விசுவாசத்திற்குப் பரிசாய் அவர் கொடுத்த ஒரு பெருந் தொகையை பஞ்சாயத்து போர்டு சேர்மன் கையில் கொடுத்து பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்குக் கொடுத்து விடச் சொல்லி விட்டு இனி வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது? என்கிற யோசனையடன் தெருவில் கை வீசியபடி நடந்தான்.

வானத்தில் கரு மேகங்கள் ஒன்றுகூடி தூறலை ஆரம்பிக்க, காற்றில் மண்வாசனை கலந்து வர, மாரியின் மனத்திலும் நம்பிக்கை மேகங்கள் கூட ஆரம்பித்தன. 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *