பிரம்மாவின் தலையெழுத்து
சு.கோதண்டராமன்
यद्धात्रा निजफालपट्टलिखितं स्तोकंमहद्वाधनम्
तत्प्राप्नोति मरुस्थलेपि नितरां मेरौच नाताप्यधिकम्
நாம் எங்கிருந்தாலும் நமக்குத் தலையில் எழுதினது நம்மிடம் வந்து சேரும்
– பர்த்ருஹரி
கோடைக்காலம். உச்சி வெய்யில் நேரம். பண்ணையார் தன் வீட்டு வாசலில் காற்றுப் பந்தலில் விசு பலகையின் மேல் உட்கார்ந்துகொண்டு தெருவில் போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு கிழவர் வெகு வேகமாகக் கிழக்கிலிருந்து வந்து பண்ணையாரைக் கடந்து போனார். ‘ஊருக்குப் புதிதாக இருக்கிறாரே இவர் யார்’ என்று யோசித்த பண்ணையார், கிழவரைப் பார்த்து, “எங்கே ஐயா, இந்த வேகாத வெய்யிலில் அவசரமாக ஓடுகிறீர்கள்? சற்று உட்கார்ந்து தாகத்துக்கு ஏதேனும் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறிவிட்டுப் போகலாமே” என்றார். “உட்கார நேரமில்லை, ஒரு அவசர காரியம்” என்று சொல்லிக் கொண்டே கிழவர் போய்விட்டார்.
சற்று நேரம் கழித்துக் கிழவர் மேற்கிலிருந்து திரும்பி வந்தார். பண்ணையார் அவரைக் கட்டாயமாக உட்கார்த்தி வைத்து, தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்து விட்டு, “நீங்கள் யார்? இந்த ஊரில் என்ன வேலை?” என்று விசாரித்தார். ‘அது சொல்லக் கூடாத விஷயம்’ என்று கிழவர் நழுவினார். பண்ணையார் அவரை விடுவதாக இல்லை. நீண்ட வாக்கு வாதத்திற்குப் பிறகு பண்ணையார் “அப்படி என்னய்யா பிரம்ம ரகசியம்? நான் இந்த ஊரின் தலைவனும் கூட. எனக்குத் தெரியாமல் இந்த ஊரில் எதுவும் நடக்கக் கூடாது. நீங்கள் சொல்ல மறுத்தால் உங்களைச் சிறையில் தள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. தெரியுமா? என்று மிரட்டினார்.
சிறை என்ற வார்த்தையைக் கேட்டதும் கிழவர் நடுங்கி விட்டார். ஏற்கெனவே ஒரு சிறுவன் அவரைத் தலையில் குட்டிச் சிறையில் தள்ளி விட்ட அனுபவம் அவருக்கு நினைவுக்கு வந்தது. அவர் உண்மையைக் கக்கலானார்.
“நான் தான் பிரம்மா. இந்த ஊரில் மேலத் தெருவில் இருக்கும் ராமசாமியின் மனைவிக்குப் பிரசவ நேரம். பிறக்கப் போகும் குழந்தைக்குத் தலையில் பாக்கியத்தை எழுத மறந்துவிட்டேன். பிரசவம் ஆவதற்குள் அதை எழுதிவிடவேண்டும் என்பதற்காக அவசரமாகப் போனேன். மற்றவர் கண்களுக்குப் புலனாகாத நான் எப்படியோ உங்கள் கண்ணில் பட்டு விட்டேன்.”
பண்ணையார் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் வாய்க்கு அவல் கிடைத்துவிட்டது. முழுவதையும் தெரிந்து கொள்ள விரும்பினார். “என்ன எழுதி இருக்கிறீர்கள் அந்தக் குழந்தை தலையில்?” என்று கேட்டார். கிழவர் சொல்ல மறுத்தார். பண்ணையார் மறுபடியும் சிறை அஸ்திரத்தைப் பிரயோகித்தார். யாருக்கும் சொல்வதில்லை என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டு கிழவர் சொன்னார் – அந்தப் பையனுக்கு வாழ்நாள் முழுவதும் வீட்டில் ஒரு பசு மாடும் ஒரு கலம் நெல்லும் இருக்கும். எவ்வளவு பாடுபட்டாலும் அதற்கு மேல் அவனுக்குச் சேராது. எவ்வளவு தர்மம் செய்தாலும் அது குறைந்தும் போகாது.
கிழவர் போய்விட்டார். பண்ணையார் இது பற்றி யாரிடமும் சொல்லாமல் அந்தக் குழந்தை வளருவதைக் கவனித்துக் கொண்டிருந்தார். வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப் பையன் வாலிபனாகிப் பண்ணையாரிடமே கூலி ஆளாக வேலைக்குச் சேர்ந்தான்.
ஒரு நாள் பண்ணையார் அந்தப் பையனைக் கூப்பிட்டார். “ஏண்டா, அஞ்சு வருஷமா பண்ணையிலே வேலை செய்யறியே, பணம் காசு எதாவது சேர்த்து வெச்சிருக்கியாடா, கல்யாணம் பண்ணிக்க வேண்டாமாடா?” என்றார்.
“என்னங்க சேமிப்பு, வீட்டிலே ஒரு கலம் நெல்லும் ஒரு மாடும் தாங்க இருக்கு. எங்கேங்க கல்யாணம் பண்ணிக்கிறது? எனக்கு யாருங்க பொண்ணு கொடுப்பாங்க?” என்றான் அவன். பண்ணையாருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. “நான் சொல்றபடி கேட்டீன்னா, உனக்குப் பெண் கொடுக்க நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கடா” என்றார்.
பண்ணையாரின் யோசனைப்படி அவன் தன்னுடைய மாட்டையும் ஒரு கலம் நெல்லையும் ஏழைகளுக்குத் தானம் செய்துவிட்டான். மறுநாள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று அவனுக்குக் கவலையாக இருந்த போதிலும் பண்ணையார் மேல் அவனுக்கு இருந்த பக்தியால் அவர் பொறுப்பு என்று மனதைத் தேற்றிக் கொண்டான்.
என்ன ஆச்சரியம்! மறு நாள் காலை அவன் கண்விழித்த போது, அவன் வீட்டில் ஒரு கலம் நெல் மூட்டை கட்டிப் போடப்பட்டு இருந்தது. கொல்லையில் ஒரு புதிய பசுவும் நின்றது. எங்கிருந்து வந்தது? தெரிய வில்லை.
பண்ணையார் யோசனைப்படி மறுநாளும் அவன் அவற்றைத் தானம் செய்ய அன்றும் புதிய பசுவும் நெல்லும் எங்கிருந்தோ வந்தன. தினசரி அவன் அவ்வாறு தானம் செய்வதும் தினசரி புதிது புதிதாக அவனுக்குச் செல்வம் சேருவதும் கண்ட மக்கள் அவனைக் கலியுகக் கர்ணன் என்று புகழ்ந்தனர்.
இரவு நகர சோதனைக்கு வந்த காவலர்கள் கண்ணில் ஒரு கிழவர் தலையில் ஒரு சுமையுடனும் கையில் ஒரு மாட்டுடனும் வருவது தெரிந்தது. கேட்ட கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லாததால் பண்ணையாரிடம் கொண்டு நிறுத்தினர். அவர் அவரைச் சிறையில் தள்ள உத்திரவிட்டார். உடனே கிழவர் வாய் திறந்தார். “என்னைத் தெரியவில்லையா? தெரியாத்தனமாக ஒரு நாள் உங்களிடம் தேவ ரகசியத்தைச் சொல்லி விட்டேன். நான் எழுதினது உண்மையாக வேண்டும் என்பதற்காக தினசரி இந்தச் சுமையைச் சுமந்துகொண்டு அவன் வீட்டில் போட்டு விட்டு வருகிறேன். என் தலையில் நீங்கள் அப்படி எழுதிவிட்டீர்களே!” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார்.
நன்னா வேணும், பிரம்மாவுக்கு.