இன்னம்பூரான்

அக்கறை

கிட்டத்தட்ட ஐம்பது- அறுபது வருடங்களுக்கு முன்னால், 56வது பிறந்த நாள் நெருங்க, நெருங்க, இந்திய அரசு ஊழியர்கள் நிலை குலைந்து போவார்கள். சிலர் மன அழுத்தம் காரணமாக, நிரந்தர நோயாளிகள் ஆனார்கள். சிலர் செத்தும் போனார்கள். மூத்த பையன் காலேஜ் சேர வேண்டும். பெண் கல்யாணத்துக்கு நிற்கிறாள். ஆனால், சோத்துக்கே சிங்கியடிக்கணும். 56வது பிறந்த நாள் அன்று வேலை போய் விடும். வருவாய் நின்று விடும். ஓய்வூதியம் கிடைக்க ஒரு வருட காலம் கூட ஆகலாம். மேலும் ஆகலாம். அவரவர், காசும், தம்பிடியுமாக, சிறுகச் சிறுக, எறும்பு போல், முப்பது நாற்பது வருடங்களாகச் சேமித்த பிராவிடண்ட் ஃபண்டு கூட கைக்கு எட்டாது. தாசில்தாராக ஜபர்தஸ்து செய்தவர்கள் ஹோட்டலில் கணக்கு எழுதியது எனக்குத் தெரியும். அந்த ஓய்வூதியத் தாமதம் தான் எனக்கு முதல் அரசு நிர்வாகப் பாடத்தைப் புகட்டியது, 1956ல். கிட்டத்தட்ட 37 வருடங்களில், பிறகு இருபது வருடங்கள், ஓய்வு பெற்ற பின்னும், நான் கற்றுக்கொண்ட பாடங்கள் கணக்கில் அடங்கா. சில சமயம் அவற்றைப் பற்றி எழுதியிருந்தாலும், இன்றைய தினம் (18.09.2012) மூன்று நிகழ்வுகள் என்னை அதை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வற்புறுத்துகின்றன. ஏனெனில், தங்கள் இனத்துக்கே ஹானி விளைவிக்கும் அரசு ஊழியர்கள் மக்கள் பணியில் சுணங்குவது இயல்பா?/கடமை தவறுதலா?/ அதன் ஊற்று என்ன?/ நிவாரணம் என்ன? என்ற ஆயிரக்கணக்கான வினாக்கள் எழுகின்றன. சங்கிலித்தொடராக, அவை பரிணமிக்கும் போது, விடை காணாது தவிக்கும் போது, நாம் குழம்பி விடுகிறோம். சினம் கூடுகிறது. இயலாமை படுத்துகிறது. ஒன்றுமே இசைந்து போகாததால், வசை பாடுகிறோம். தற்காலம், ஊடகங்களிலும்,மடல்களிலும், அரசு ஊழியர்கள் கடுமையாக விமரிசிக்கப்படுகிறார்கள்.

இன்றைய மூன்று நிகழ்வுகள்

1.இன்றைய செய்தி: டி.செல்வராஜ் மூன்று டவுன் பஞ்சாயத்துகளில் வாட்ச்மேன் பணியிலிருந்தவர். 2010ல், அவர் சுய விருப்பம் அடிப்படையில் வேலையிலிருந்து ஓய்வுக்கு விண்ணப்பித்தார். அது சம்பந்தமான ஆவணங்கள் லோக்கல் ஃபண்ட் ஆடிட் ஆஃபீஸுக்கு அனுப்பப்பட்டன. அவர்கள் கேட்ட வினாக்களுக்கு, பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பதில் அனுப்பவில்லை. அதனால் டி.செல்வராஜுவுக்கு இன்று வரை ஓய்வூதியம் கிடைக்கவில்லை. கோர்ட்டுக்கு போனது, தாவா. சென்னை உச்ச நீதி மன்றத்தின் தீர்வு: 

~இந்தத் தாமதம் மன்னிக்க முடியாத குற்றம். அரசியல் சாசனத்தின் 14 வது ஷரத்தை மீறுகிறது. பதில் அனுப்பியாகி விட்டது என்ற சால்ஜாப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. திரு.செல்வராஜ் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். ஒரு மாதம்தான் கெடு. அதற்குள் அவருடைய ஓய்வூதியம், பாக்கி, கோர்ட்டுச் செலவு எல்லாவற்றையும் அரசு கொடுத்து விட வேண்டும். தாமதம் செய்ததற்குப் பரிகாரமாக, பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மேல் ரூபாய் 15,000/- அபராதம்.

2. ஒரு இழையில் ‘… பிரதிகூலப் பிரதிநிதிகளை அகற்ற, அரசியல் சாஸனம் சீர்திருத்தப்பட வேண்டும்…’ என்று நான் எழுதியதை விரிவாகத் தெளிவு படுத்த வேண்டும் என்று வல்லமை ஆசிரியர் திருமதி.பவளசங்கரி என்னைக் கேட்டிருந்தார், இன்று.

3. மற்றொரு இழையில் தமிழ்த்தேனீ அவர்கள், ‘…ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு வேண்டிய அத்யாவசியப் பொருட்கள், அரசாங்கத்தால் நியாயமான விலையில் அளிக்கப்படல் வேண்டும். இது ஆளுவோரின் கடமை. அவர்கள் முறையாகத் திட்டமிடாமல் எல்லாச் சுமைகளையும் மக்கள் தலையிலே ஏற்றினால் எப்படி நியாயமாகும்?…’ என்று சராசரி மனிதனின் அன்றாட நடைமுறைக் கவலைகளைப் பகிர்ந்து கொண்டார், இன்று

இவற்றை ஒரு சேரப் பார்த்து, மூன்று நிகழ்வுகளையும் பற்றியும், அவற்றை இணைத்தும் சுருக்கமான பதில் கூறுவது தான், மேற்படித் தொடரின் இந்த முகாந்திர பதிவில் இயலும். எப்படியும், கட்டுரை நீள, நீள, பார்வையிடுவோர்களே குறைந்து விடுவோர். மேலும், இத்தகைய பொது நலம் பற்றிய விஷயங்கள் அளவளாவுதற்குத் தான் தகுதி பெற்றது; ஒரு தலைச் சொற்பொழிவுக்கு அன்று.

அரசு நிர்வாகத்தில் மேற்பார்வை மட்டும் போதாது. பயிற்சியும், ஊக்கமளிப்பதும், அதிர்ச்சி வைத்தியங்களும் தேவை. நான் கற்றுக்கொண்ட முதல் பாடம்: அக்கறை: ஆசிரியர்களுக்கு இருந்த சேமிப்புத் திட்டம் அஞ்சல் அலுவலக கணக்கில் இருக்கும். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இவற்றைக் கல்வி இலாக்கா அனுப்புவதைப் பரிசோதித்து, காசோலை அனுப்புவது என் பணி. இரு அலுவலகங்களுக்கும் இடைவிடாத மடலாடுதல்; அதனால் தாமதம். காசோலை அனுப்பிய பிறகும், கல்வி அலுவலகங்களில் அசிரத்தை. ஆசிரியர்கள் ‘தொங்கு, தொங்கு’ என்று தொங்க வேண்டும். அக்காலம் கல்வி இலாக்காவுக்கு தலைமை தாங்கிய திரு. என்.டி. சுந்தரவடிவேலு அவர்கள் என் திட்டத்தையும், நமூனாவையும் ஏற்றுக்கொண்டார். அதன்படி, இரு அலுவலகங்களும் ஒரே ஒரு முறை தான் கேள்வி-பதில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு தான் நமூனா. அடுத்தபடி, அந்தந்த ஆசிரியர்களுக்கு, உடனுக்குடன் தெரியப்படுத்துவோம். கிடைத்த பரிசு: சில ஆசிரியர்களின் அன்பு கனிந்த நன்றிக்கடிதங்கள். ஹிந்து இதழில், விரைவாக வேலை நடக்கிறது என்ற ஒரு கடிதம்.

வல்லமை ஆசிரியரின் வினா: ஜனநாயகத்தில் மூன்று வகைகள்: மக்களின் நேரடி ஆட்சி (பஞ்சாயத்தில் மட்டுமே முடியும்), பிரதிநிதி தேர்தல் (இந்தியா), மக்களே ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது(அமெரிக்கா). ஜனநாயகத்தின் நான்கு கருவிகள்: Election, Plebiscite , Referendum & Recall. அவற்றில் தேர்தலும் அதன் தறுதலையும் நமக்குத் தெரிந்ததே. இப்போதைக்கு ரிகால் (தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி, பிரதிகூலியாக மாறி பொது நலனுக்குத் தீங்கு இழைத்தால், அவரை உதறுவது.) அந்தோ பரிதாபம்! இந்த வழிமுறையை நம் அரசியல் சாஸனம் ஏற்கவில்லை. அவர்கள் நல்லவர்கள். 2012 வருட கலாட்டாக்களை ஆரூடம் பார்க்க முடியவில்லை. தற்காலம் அத்தகைய பிரதிநிதிகளால், நான் அவதிப்படுகிறோம். அதனால் தான் அந்த கருத்து.

திரு. தமிழ்த்தேனீ கேட்பது நியாயமாக தோன்றினாலும், அது தாங்கமுடியாத பொருளியல் அவலங்களால் பின்னப்பட்ட சிக்கல்களால் என்றாலும், அது தார்மீகம் அல்ல. சாத்தியம் அல்ல. மாற்று வழியும் உண்டு. There is no free lunch. மான்யங்களே மக்களின் எதிரி. லஞ்சலாவண்யத்தின் ஊற்றுக்கண். எது அத்யாவசியம்? எது நியாயவிலை? எது எது கடமை? என்ற பட்டிமன்றம் நடத்தியே, நம் ‘பிரதிநிதிகள்’ காலத்தை ஓட்டி விடுவார்கள். மான்யத்தில் மாங்காய் அடிப்பார்கள். மற்ற அலங்கோலங்களைப் பற்றி, யாராவது கேட்டால், பார்க்கலாம். விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது, தேசத்தின் செல்வத்தைக் கூட்டுவது, ஏழை பாழைகளுக்கு உகந்த வழியில் பிழைக்க வழிகாட்டுவது, மாபெரும் கட்டுமானங்களைக் கவனித்துக் கட்டுவது, சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது, பொருளியல் குற்றங்களைத் தண்டிப்பது போன்ற பொறுப்புகளும், பாதுகாப்பு, வெளி நாட்டுறவு என்று பல கடமைகள் அரசுக்கு உளன. அவற்றில் மக்களுக்கு இலவச மருத்துவம்/ கட்டாயக் கல்வி அளிப்பது, வருவாய் தாரதம்யங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது, மக்களுக்கு முழு வேலை வாய்ப்பு, முறையான ஊதியம்/ பஞ்சப்படி யாவருக்கும் கிடைப்பது, கறாராக மான்ய ஒழிப்பு, லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் விரைவாக கடுந்தண்டனை எல்லாம் அடக்கம். அவருடைய கவலைக்குரிய வினாக்களை நான் தட்டிக்கழிக்கவில்லை. அவர் நியாயமாகக் கேட்கும் புதிர்களுக்கு, மக்கள் அக்கறையாக, விழிப்புணர்ச்சியுடன், ஒரு சேர இயங்காதவரை, தீர்வு கிடைக்காது. மக்களின் மருள், ஆள்பவர்களுக்கு அருள்.

http://universitypublishingonline.org/content/978/18/4331/888/0/9781843318880int_abstract_CBO.jpg
(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *