நூ. த. லோகசுந்தரம்

இன்றைக்கு 1350 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி தமிழகத்தில் நடைந்தேறிய சமய மறுமலர்ச்சி என வரலாற்றாளர் குறிக்கும் சைவ வைணவ இறைவழிபாட்டு நெறிகளின் மீள்ஆளுமைக்குப் பெருந்துணையான கருவி இசை கலந்த தமிழ் வாரப்பாடல்களாகும்.

சைவநெறியின் முதல்வர்களாகப் பேசப்படும் சமயப்பெரியோர் நால்வராம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்பர். இப் பெரியோர்களில் முதல் மூவர் தம் நூற்பாடல்கள் 1000 ஆண்டுகளுக்கு முன் தொகுப்பு புதிய பண்ணணடை செய்யப்பட்டு தேவாரம் எனப் போற்றுதலும் புகழும் பெற்றன. இப்பாடல்களில் காட்டப்படும் கோயில்கள் தன் தொன்மை மாண்பினால் பலராலும் தொடர்ந்து மதித்துப் போற்றப்பட்டு இந்நாளும் பெரிதும் பேசப்பட்டு போற்றுதலுக்கும் வழிபாட்டிலும் பேணப்படுவனவாக உள்ளன.

அக்காலத்து எழுந்த ‘பதிகம்’ எனும் யாப்பின்வழி பப்பத்துப் பாடல் தொகுதிகளாகக் காணும் நூல்கள் தங்களுக்கே என உரிய கோயில்கள் ‘பாடல் பெற்றன’ எனவும் அவ்வழி பெறாது அப்பாடல்களில் சிவனுறைத் தலங்களாகக் காட்டப்பட்ட பழமை பொருந்தியவை ‘வைப்புத்தலங்கள்’ என்பது சைவ மரபு. பாடல் பெற்றவை இந்நாளைய தமிழகத்து 265ம் புறத்துள்ள புலங்களில் அமைந்தவை 10 ம்ஆகும். ஏனைய ‘வைப்பு’ என வருவன 300 க்கும் மேல் என 8274 பாடல்களை சைவ நெறியில் ஈடுபாடு மிக்குள்ளோர் நன்காய்ந்து கண்டுள்ளனர். இத்தொன்மம் மிக்கத் தலங்களை வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று வழிபடும் கொள்கைதனை தலைமேற் கொண்டவராக பலர் உள்ளனர். இவ்வழி பலர் காசி கோதரம் கயிலாயம், அமர்நாதம், நேபாளம் எனச் செல்வதை நன்கே அறிவோம். இதற்கிணையாக வடநாட்டுமக்கள் தமிழகத்து எல்லையில் உள்ள இராமேசுவரம் வந்து வழிபடுவதும் கண்கூடு.

பாடல்பெற்ற 275 தலங்களில் இந்திய எல்லைக்குள் அமைந்தவையான 272 தனை முன்பே நேரடியாக வழிபட்டும் 250+ எனவரும் வைப்புத்தலங்களில் அவ்வப்போது வாய்ப்புள்ள காலத்து வழிபட முயல்வது எனும் கொள்கையில் சென்ற திங்கள் வழிபட்ட ‘குரக்குத்தளி’ எனும் கொங்கு நாட்டுக் கோயில் ஒன்றின் விவரம் வைத்தமை வாசகர்கள் அறிவீர்கள். மேலும் சில கோயில்களைப் பற்றிய கருத்துரை ஓர் குறுந்தொடராக வருவன காண்க.

பாடல் பெற்றவையில், ஓர் பழம் மரபில் சோழநாடென வழங்கும் காவிரி ஆற்றுக் கீழ்திசைப்படுகையில் வளம் பெறும் புலத்தமைந்தவை வடகரையில் 127 ம் தென்கரையின 63 எனவும் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றினில் வடகரையின 2 மீண்டும் ஓர் முறையும், வைப்பாக குறிக்கப்படுபன மூன்றினை முதலாவதாகக் காணும் வாய்ப்பை இம்முறைச் செலவினில் பெற்றேன்.

மாநகராம் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே இந்நாள் லால்குடி எனும் ஓர் குறு மாவட்ட தலைமையாய ஊருக்கு மிகமிக அருகே இருபுறமும் பாடல் பெற்றவைகளில் ‘வடகரை மாந்துறை’ மேற்காகவும் ‘அன்பில் ஆலந்துறை’ கிழக்காகவும் அமைந்துள்ளன. திருச்சி நகரிலிருந்தே நகரப் பேருந்தே செல்கின்றது (சத்திரம் பேருந்து நிலையம்) செல்வழி ஒருமணி தூரம் 22 கி மீ.இரண்டினுக்கும் இடை லால்குடிக்குள்ளேயே வைப்புத்தலத் ‘தவத்துறை’ கோயில் உள்ளது. சமயபுரம் 18 கி மீ.எனும் பெயர் பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு வடக்காக திருப்பட்டூர்(பிடவூர்) 20 கி மீ. ஊட்டத்தூர் (ஊற்றத்தூர்) 27 கி மீ.எனும் தலங்களையும் வழிபட்டேன். இணைப்புப் படங்களில் கோயில்களின் இருப்பிடங்களும் சில காட்சிகளையும் காணலாம். அத்தலங்களின் கூடிய செய்திகள் அடுத்து தனித்தனிக் கருத்துரைத் தொடர்களாக வரும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தேவாரத் தலங்கள் சில (பகுதி-1)

  1. /*  இருபுறமும் பாடல் பெற்றவைகளில் ‘வடகரை மாந்துறை’ மேற்காகவும்*/  காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இன்னொரு மாந்துறை( திருமாந்துறை) யும் பாடல் பெற்ற தலம்தானே? இது தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடிக்கும், கஞ்சனூருக்கும் இடையில் உள்ளது. இங்கு உறையும் ஈசனின் பெயர் அட்சயநாதர்(ஆம்பரவனேசுவரர்), அம்மையின்  பெயர் யோகநாயகி( வாழ்வு தந்த அம்மன்).
    இப்படி ஒரே பெயரில் இரு தலங்கள் இருந்தால் பாடல் குறிப்பிடுவது எந்தத் தலமென்று எப்படிக் கொள்வது என்ற சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *