“அயலக இந்தியர் நலன் காப்போம்” – அமைச்சர் வயலார் ரவி

வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக வெளிநாடு வாழ் இந்தியர் நல விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். டாக்காவில் 2011 ஏப்ரல் 20 அன்று கொழும்பு நடவடிக்கை குறித்த நான்காவது அமைச்சர்கள் நிலையிலான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகையில் அமைச்சர் இத்தகவல்களைத் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உதவ, குடியேற்ற விதிகளில் மாற்றம், மோசடி ஏஜென்டுகளைத் தண்டிக்கக் கடுமையான தண்டனைச் சட்ட விதிகள் உள்ளிட்டவை மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் அடங்கும்.
தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது குறித்து வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்தவும், அது பற்றிய நிர்வாகத்திற்கு உதவவும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்ட இணையத்தள அடிப்படையிலான குடியேற்ற ஒப்புதல் முறை நிறுவப்பட்டிருக்கிறது.
செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் டாக்கா பிரகடனம் ஆகிய இரு முக்கிய ஆவணங்களை இயற்றுவதற்கு இந்த ஆலோசனை ஆக்கபூர்வமான முடிவை எட்ட, இந்தியா முழு ஒத்துழைப்பையும் வழங்கும். இந்த இரு ஆவணங்களும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்களின் குறைகளுக்குத் தீர்வு காண தூதரகங்கள் மற்றும் அரசுகளுக்கு இடையிலும் வேலை வழங்கும் நிறுவனங்களோடும் கூட்டுக் கலந்தாலோசனை வழிமுறைகளை உருவாக்க உறுப்பு நாடுகள் பணியாற்ற வேண்டும். உலக மயமாக்கல் மற்றும் பிற நாடுகளுக்குக் குடியேறுதல் ஆகிய பிரச்சினைகளில் உலக மக்கள் தொகையில் 58 சதவீத மக்கள் தொகை கொண்டுள்ள ஆசியாவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிர்வாகம் மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்த பிராந்திய கலந்தாலோசனை அமைப்பாக கொழும்பு நடவடிக்கை 2003ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதில் 11 உறுப்பு நாடுகள் உள்ளன. டாக்காவில் இந்த நாடுகள் இது தொடர்பான ஆய்வுக்காகவும் எதிர்காலச் செயல் திட்டத்திற்காகவும் கூடியுள்ளன.
===============================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை
படத்திற்கு நன்றி: http://www.vayalarravi.org
