நம் முன் உள்ள மாபெரும் சவால்கள்

1

Manmohan singhமின்சாரம், தண்ணீர், நகரமயமாக்கல் ஆகியவை நம் எதிரே உள்ள மிகப் பெரிய சவால்களாகும். இவற்றைச் சமாளிக்கும் வகையில் புதிய யுத்திகளை நாம் தயாரிக்க வேண்டும் என்று திட்டக் குழுவை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய திட்டக் குழு கூட்டம், புதுதில்லியில் 2011 ஏப்ரல் 21 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் கூறியதாவது:

12ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், பொருளாதாரத்தில் நாம் எதிர்கொண்டுள்ள முக்கிய சவால்கள் குறித்து விவாதிக்கவே திட்டக் குழு கூட்டம் நடத்தப்படுகிறது. தற்போது நாம் 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் கடைசி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். 12ஆவது திட்டக் காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு இதுவே சரியான நேரமாகும். இதற்குத் தேவையான முக்கியமான அம்சங்கள் குறித்துத் திட்டங்களைத் தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதன்படி, திட்டக் குழு தயாரித்த அறிக்கை தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

11ஆவது திட்டக் காலத்தின் முடிவில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும். ஆனால், இதற்காக நாம் நிர்ணயித்த இலக்கு 9 சதவீதமாகும். அதிக அளவிலான வறட்சி பாதிப்பு மற்றும் உலகளவிலான பொருளாதாரச் சரிவு இருந்தபோதிலும் இந்தச் சாதனையைச் செய்திருப்பது பாராட்டுக்கு உரியதாகும்.

பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி, இலக்கை நோக்கிய வளர்ச்சியை நாம் எட்டியுள்ளோம். பிறப்புப் பதிவுகள் அதிகரித்துள்ளன. பாலினங்களுக்கு இடையே இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இவற்றில் நமது முன்னேற்றம் குறைவாக இருந்த போதிலும், நாம் மேலும் இலக்கை நோக்கிச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சமூக பொருளாதார மேம்பாட்டின் வளர்ச்சியை நாம் மதிப்பீடு செய்யும் போது நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அதிக கால தாமதத்துடன் கிடைப்பதும் பிரச்சினைகளுக்கு காரணமாகும். உதாரணமாக வறுமை ஒழிப்புக்கான ஆலோசனைகள், 2004-2005ஆம் ஆண்டு தகவல் தொகுப்புகளின் அடிப்படையில் விவாதிக்கப்பட்டன. இது 11ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற்கு மிகவும் முற்பட்ட ஆண்டாகும்.

வறுமை ஒழிப்புக்கான மதிப்பீடுகளைச் சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்குமாறு நான் திட்டக் குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளேன். 12ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலம் நமது சாதனைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். மேலும், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் சிறப்பாகச் செயல்படும் வகையிலும் இருக்க வேண்டும். நமது நோக்கம் மிகவும் வேகமானதாகவும், நிலையான வளர்ச்சியின் அடிப்படையிலும் அமைய வேண்டும்.  இதற்காக 12ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்குப் புதிய இலக்கை நாம் வரைவு செய்ய வேண்டியது அவசியமாகும். தற்போதுள்ள கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நாம் அடைய முடியாத பலன்களைக் கருத்தில் கொண்டு, புதிய திட்டங்களை நாம் கண்டறிய வேண்டும். மேலும் இவற்றை மாற்றியமைத்து வலுப்படுத்தவும் நாம் தயாராக வேண்டும்.

தற்போது எதிர்கொள்ள வேண்டிய புதிய சவால்கள், அவற்றை அடைய புதிய முயற்சிகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்சாரம், தண்ணீர், நகரமயமாக்கல் ஆகியவை நம் எதிரே உள்ள மிகப் பெரிய சவால்களாகும். இவற்றைச் சமாளிக்கும் வகையில் புதிய யுத்திகளை நாம் தயாரிக்க வேண்டும் என்றும் திட்டக் குழுவை நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.

திட்டங்களைச் செயல்படுத்துவதில், நமக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது வளங்கள்தான். திட்டக் குழுவும், நிதி அமைச்சகமும் இணைந்து 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்கான வளங்களையும் நிதியையும் உருவாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

வளங்கள் பற்றாக்குறை இருப்பது நமக்குத் தெரியும். இருப்பினும், இந்த வளங்களுக்கு ஆதாரம் சேர்க்கும் வகையில் பொது நிதி மற்றும் தனியார் முதலீடுகளைத் திரட்டுவது போன்ற திட்டங்களைக் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.

திட்டக் குழுவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் திட்டக் குழுக் கூட்டத்தில் கூறினார்.

===============================================
தகவல் – பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நம் முன் உள்ள மாபெரும் சவால்கள்

  1. பொருளாதாரத்தில் நாம் எதிர்கொண்டுள்ள முக்கிய சவால்கள் குறித்து விவாதிக்க, 1947க்கு முந்தைய ‘பாம்பே திட்டத்தில்’ தொடங்கி வருடா வருடம், ஐந்தாறு வருடங்களுக்கு ஒரு முறை, மாமாங்கத்துக்கு மாமாங்கம், தர்க்கங்கள், வியாசங்கள், அரசு ஆவணங்கள், ஊடக ஆலோசனைகள் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்! இது இருப்பதில் இறுதி வரவு. நாளையும் ‘இந்த வாய்ப் பேச்சு வீரர்கள்’ ஆஜராவர்கள். நல்ல மனிதரான மன்மோஹன் சிங்க் செய்ய வேண்டியது:
    1. ஊழலை முன்வந்து கடுமையாகத் தண்டித்து, ஒழிக்கவேண்டும்.
    2. அவரது ஆளுமையைச் சுற்றியுள்ள கூளிகளைக் கழற்ற வேண்டும்.
    3. தயவு, தாக்ஷண்யத்தை, அறவே மறக்க வேண்டும்.
    4. நான் அப்படித்தான் சொல்வேன்: தணிக்கைத் துறையை மதித்து, அதன் மரபைப் பேண வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.