அன்பெனும் பிடியிலே…

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)

Subashini_Thirumalaiசனிப் பயணம் தனியாகச் செல்வானேன் என்று தோன்றவே, என் நண்பர் வெங்கடேசனைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, செங்கல்பட்டு வரை சென்றேன். சென்னை வெய்யிலின் உக்கிரகத்தை அனுபவித்துக்கொண்டே பயணித்தோம். அன்று ஏசி கார் கிடைக்கவில்லை. சரி, தானாகவே கொஞ்சம் செலவு மிச்சமாகிவிட்டது. உள்ளுர உவப்புத்தான்.

“போகுமிடம் உங்களுக்குத் தெரியுமா?” என வெங்கடேசன் என்னைக் கேட்டார்.
“போன் எண் இருக்கிறது. செங்கல்பட்டுக்குப் போய் விசாரித்துக் கொள்ளலாம்” என்ற என் பதிலைக் கேட்டுவிட்டு, மரியாதை நிமித்தம் அமைதியாகி விட்டார். எனக்கு அவர் உடன் வரும் தைரியம் என்பது, எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை. கார் செங்கல்பட்டை நோக்கிப் பயணப்பட்டது. அப்பொழுது மணி காலை பத்து இருக்கும். கார் டிரைவர் யீனீ க்ஷீணீபீவீஷீவை ஆன் செய்ய, நான் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். வெங்கடேசன் அவர் பாட்டுக்கு அந்த பக்க ஜன்னலில் பார்த்துக்கொண்டு வந்தார்.

சித்திரைக்குப் பௌர்ணமி அழகு. ஆனால் சித்ரா பௌர்ணமிக்குப் பெருமை சேர்ப்பது, மதுரை. மதுரைக்குச் சிறப்பு சேர்ப்பது, அதன் நடுவில் அமைந்த மீனாட்சி அம்மன் கோவிலின் தெய்வீக அழகும், அதனைச் சுற்றிய தெருக்களும்தான். நான்மாடக் கூடல் அது. தாமரை மலர் போன்ற அமைப்புள்ள கூடல் நகர் என்று சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடல் பகர்கின்றது.

இதையும் தாண்டி, மதுரை மாநகரின் பேரெழில், காந்தி மியூஸியம் என்றால் மிகையில்லை. மதுரை இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சிம்மக்கல், யானைக்கல் தாண்டி வைகை ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தைக் கடந்து கீழே இறங்கினால் கோரிப்பாளையம். பாலத்தின் வலது கீழ்ப்பக்கம் தான் கள்ளழகர், சித்ரா பௌர்ணமி அன்று, குதிரை வாகனத்தின் மேலேறி, வையை ஆற்றில் இறங்கி மீனாட்சி திருக்கல்யாணத்தைப் பார்க்க வருவார். அவர் வருவதற்குள் திருமணம் நடந்தேறி விட்டது என்கின்ற சேதி கிடைத்துவிடும். இவ்வைபவம் வருடந்தோறும் நடக்கும் திருவிழாவாகும். பல ஊர்களிலிருந்து அன்று வையை ஆற்றில் அழகரோடு அவர்களும் இறங்கி, அழகர் பெருமானின் அருளைப் பெறுவர்.

krishnammal jagannathanபாலத்தின் வலப்பக்கம் மதுரை எக்ஸ்கின் ஆஸ்பத்திரி உள்ளது. பாலத்தின் இடப்பக்கம் கீழே மீனாட்சி மகளிர் கல்லூரி உள்ளது. பாலத்தின் இடது பக்கம் வளையும் சாலை செல்லூர், தத்தனேரி சுடுகாடு, வழியாக பாத்திமா கல்லூரியை அடையலாம். நான் படித்த கல்லூரி. மதுரை மேம்பாலத்தின் நேர் வழிச்சாலையில் வலது பக்கம் அமெரிக்கன் கல்லூரி இருக்கும். அதனைத் தொடர்ந்து இறுதியில் ஒரு பெரிய வளைவு உண்டு. ஒரு அழகிய அமைதியான நீண்ட தார்ச்சாலை உள்ளது. இதன் இரு மருங்கும் நிழல் தரும் மரங்கள் உண்டு. இதன் வழியாக 19ஆம் எண் பேருந்து முனிசிபல் காலனியிலிருந்து புறப்பட்டு வரும். அப்பொழுது நகரப் பேருந்து டி.வி.எஸ். நிறுவனத்தாரின் வசம் இருந்தது. இப்பேருந்தில், ஏறும் வழியில் ஏறி, இறங்கும் வழியில் இறங்க வேண்டும். அல்லாவிடின் மாறி ஏறினாலோ, இறங்கினாலோ, திரும்ப நம்மை அழைத்து, ஒழுங்கான வழியில் பயன்படுத்தச் சொல்வர் ஓட்டுநரும், நடத்துநரும்.

இச்சாலையின் இடது பக்கம் ‘தமுக்க மைதானம்’ என்றொரு பெரிய மைதானம் உண்டு. சென்னையில் பொங்கல் விடுமுறையில் பொருட்காட்சி நடப்பதுபோல், தமுக்கம் மைதானத்தில் சித்திரைத் திருவிழாவையொட்டி “சித்திரைப் பொருட்காட்சி” நடக்கும் (இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது). இச்சித்திரைப் பொருட்காட்சி மிகவும் சிறப்புடையதாக இருக்கும். டி.வி.எஸ். நிறுவனத்தார் ஒவ்வொரு வருடமும் ஏதாவது புதுமையாய்க் காட்சிப்படுத்துவர். பொதுக் கூட்டங்கள், இலக்கியக் கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகள் என்று பற்பல நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். சித்திரைப் பொருட்காட்சியின் பொழுது முகப்பு அலங்காரம் பிரமாதமாக இருக்கும். (இப்பொழுது புத்தகக் கண்காட்சி கூட இங்குதான் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டேன்).

இதன் எதிரில் மிகப் பெரிய, அழகான மரங்கள் நிறைந்த நிழல்தரு பூங்கா ஒன்று உள்ளது. அதுதான் “இராஜாஜி பூங்கா” என்று அழைக்கப்படும். இங்கு மாணவர்கள் படிப்பதும் பேசுவதும் உண்டு. இது இச்சாலையின் இறுதி வரை உள்ளது. இந்த நீண்ட நெடுஞ்சாலையில் தமுக்க மைதானத்திற்கு அடுத்து யூனியன் கிளப் ஒன்று உண்டு. இச்சாலையின் இறுதியில் நட்ட நடுவில் மிக எழிலாக விதானங்களுடன் கூடிய மஞ்சள் நிறக் கட்டடம் ஒன்று உள்ளது. அதுதான் ‘காந்தி மியூஸியம்’. இதன் இடப்பக்கம் முனிசிபல் காலனி இருக்கிறது. அதன் வழியாக நீதிமன்றம் வரைச் செல்லலாம். இதன் வலப்பக்கம் மருத்துவக் கல்லூரியும், கலெக்டர் அலுவலகமும் உள்ளன.

gandhi museum

காந்தி மியூஸியத்தின் முதன்மை நுழைவாயிலிலிருந்து பார்த்தோமானால் முதலில் இரு பக்கமும் நெட்லிங்க மரங்கள் வரிசையாய் அணிவகுத்து நின்று நம்மை வரவேற்கும். பின் நட்டநடுவாய் மகாத்மா காந்தியின் சிலை நம் மீது பொருள் உள்ள பார்வையை வழங்கும். அதன் பின்னால்தான் காந்தி மியூஸியக் கட்டடமே அமைந்திருக்கின்றது. இக்கட்டடத்தின் முதன்மைப் பகுதியில் முதல் தளத்தில், மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, சுதந்திரப் போராட்டம், நம் தேசத் தலைவர்கள் ஆகியவற்றைப் பற்றியும் ஒரு நிலைத்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் பார்வைக்கு ஆகும்.

வெளியே, காந்தி சிலைக்கு இடது பக்கம் காந்தி பயன் படுத்திய பொருட்களை அப்படியே ஒரு குடில் அமைத்துக் காட்சிப் படுத்தியுள்ளனர். மியூஸியத்தின் கீழ்த்தளத்தில் இடது பக்கத்தில் நூலகம் உள்ளது. இதையும் தாண்டி காந்தி நினைவு நிதி அலுவலகம் உண்டு. அதன் முன்னே உள்ள பெரிய மரத்தடியில் பற்பல கூட்டங்கள் நடைபெறும். இலக்கியம் சார்ந்தும் காந்தியம் சார்ந்தும் நடத்தப்படும். பல்லைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் தெ.பொ.மீ, பேரா. சீனிவாச ராகவன் என இங்கே பேசியவர்களின் பெயர்களை ஒரு நீண்ட பட்டியலே போட்டுவிடலாம்.

மியூஸியத்தின் பின்பக்கம் ஒரு பெரிய நீண்ட புல்வெளி உண்டு. அதன் இடப் பக்கம், வருவோர்கள் தங்க விருந்தினர் அறைகள் உண்டு. வலப் பக்கம் குடியிருப்புகள் உண்டு. இந்தப் புல்வெளியில்தான், குடியரசுத் தலைவர் இராசேந்திரப் பிரசாத், டாக்டர் ஆர்.ராதாகிருஷ்ணன், காந்தி கிராமம் நிறுவிய ஸ்ரீ இராமச்சந்திரன், சுதந்திரப் போராட்ட வீரர் என்.எம்.ஆர். சுப்பராமன் என அனைவரும் பேசியிருக்கிறார்கள். அங்குதான் தேநீர் விருந்தும் நடக்கும்.

இப்பகுதியிலிருந்து வலப் பக்கமாய் வெளியில் வந்தோமானல், ஒரு பெரிய திறந்த வெளி அரங்கம் ஒன்று இருக்கும். அங்கு நாடகங்கள் பல நடத்தப்பட்டு இருக்கின்றன. அங்குதான் ஞாயிறு தோறும், மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல் ஆகியோரைப் பற்றிய படங்கள் திரையிடுவார்கள். நல்ல கூட்டம் கூடும்.

என் தந்தை ட்டி.டி. திருமலை, பூதான் இயக்கத்தில் பணிபுரிந்த பின், 1952ஆம் ஆண்டுகளில் காந்தி மியூஸியத்தில் உள்ள, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி அலுவலகத்தின் “காந்திய தத்துவப் பிரசாரகர்” என்னும் பணியில் சேர்ந்திருந்தார். 1962ஆம் ஆண்டு என் குடும்பம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்குக் குடிபுகுந்தது. முதலில் கோரிப்பாளையும் தாண்டி, தந்தி அலுவலகம் தாண்டி, 2 கி.மீ. உள்ளே குடியேறினோம். அவ்வீட்டின் அருகே ஓ.சி.பி.எம். உயர்நிலைப் பள்ளியும், டோக் பெருமாட்டி கல்லூரியும் உள்ளன (ஓ.சி.பி.எம். பள்ளியில் தான் நானும் என் சகோதரிகளும் பயின்றோம்).

ஓரிரு வருடங்களில், காந்தி மியூஸியம் அருகேயுள்ள தல்லாகுளம் பகுதியில் குடியேறினோம். எங்களுக்கு, பள்ளிக்குச் சென்ற பொழுதுகள் தவிர எஞ்சிய பொழுதுகள் காந்தி மியூஸியத்தில்தான் கழிந்தன. ஞாயிறு தோறும் அங்கே திரையிடும் திரைப்படங்களைப் பார்ப்போம். அங்கு நடைபெறும் கூட்டங்களில் அமர்வோம். அப்பாவைப் பார்க்க வரும் பெரிய பெரிய மனிதர்களை நாங்களும் சந்தித்தோம். இலக்கிய சான்றோர்கள், காந்திய வாதிகள், தலைவர்கள், பெரிய பிரமுகர்கள் எனப் பலருடன் பழகவும் செய்தோம்.

krishnammal jagannathan

அப்பொழுது எனக்கு வயது பத்துப் பன்னிரண்டே இருக்கலாம். மிகவும் சிவப்பாக, சுறுசுறுப்பாக, அழகான, அன்பு கனிந்து கசியும் முகமாக திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அறிமுகம். அவர்களது அன்பு விசாரிப்புத் தவிர வேறொன்றும் நானறியேன். அப்போது அவர்களுக்கு ஒரு மகன் உண்டு என்றும், அவன் பெயர் பூமிக்குமார் என்றும் அறிந்திருந்தேன். அந்த வயதில் அந்தப் பெயர் என்னை மிகவும் வசீகரித்த நினைவு இருக்கின்றது.

1973ஆம் ஆண்டில் மதுரையை விட்டு வந்தபின், மதுரை பக்கம் நான் சென்றது, காந்தி கல்வி நிறுவன இயக்குநர் அண்ணாமலை, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரேமா திருமணத்தின் போதுதான். நான் சுவாசித்து விட்டுச் சென்ற காற்றை மீண்டும் சுவாசித்தேன். சுமார் 25 வருடங்கழித்து என்றே நினைக்கின்றேன். அதேபோல் அடுத்த 25 வருடங்கழித்துதான் நான் பார்த்தேன். ஆமாம்! கிருஷ்ணம்மாள் அக்காவைப் பார்க்கத்தான் 50 வருடங்கழித்து செங்கல்பட்டு செல்கின்றேன்.

அவரது சர்வோதயப் பணிகளின் தீவிரத்தையும் இயக்கத்தின் நேர்மையையும் கேள்விப்பட்டு அவரைப் பற்றி நூல்களிலும் படித்துவிட்டு, அவருடன் ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும் என்கின்ற ஆவலில் தூண்டுதலால் கிளம்பினேன்.

அன்று, என் பத்து வயதில் பார்த்த கிருஷ்ணம்மாக்கா எப்படி இருப்பார்கள்! சென்ற வருடம் காந்தி கல்வி நிலையத்திற்கு அவர்கள் வருகிறார் என்றவுடன் நான் என்னிலையில் இல்லை. காந்தியப் பணிகளைத் தீவிரமாகச் செய்துகொண்டிருக்கும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவரைக் காண வேண்டும் எனில் மிகவும் கொடுப்பினைதானே! அவர்களது பணிகளின் மேன்மை தெரியாத அறியாத வயதில் பார்த்தது. இப்போது அதன் உன்னதத்தை உணர்ந்து தெளிவாய் இருக்கும்போது அவர்களைச் சந்திப்பது என்பது மிகவும் சிறப்பான நிகழ்வாகும்.

krishnammal jagannathanகாந்தி கல்வி நிலையத்தில், அதை நிறுவிய என் தந்தையின் பிறந்த நாளை, காந்தியத் தேர்வாகிய “சத்திய சோதனைத் தேர்வில்” தேர்ச்சி பெற்று, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசும், கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கும் விழாவாகக் கொண்டாடும் மரபு உண்டு. அத்தகைய விழாவிற்குதான் சென்ற ஆண்டு கிருஷ்ணம்மாக்கா விழாவைத் தலைமையேற்று சிறப்பிக்க அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுதுதான் அவருக்கு ‘Lively hood’ விருதும் கிடைத்த சமயம். சாதனைப் பெண்மணிகளின் வரிசையில் அவர்களைப் பற்றியும் கட்டுரையொன்றை நான் எழுதியிருந்த காலகட்டம்.

என் மனத்தில் பரபரப்பு. அக்கா வந்தும் விட்டார்கள். நான் அசந்தே போனேன். ஏனெனில் உடல் நிறமும் மாறவில்லை. உள்ள நிறமும் மாறவில்லை. அதே அன்பும் கனிவும் கண்களிலிருந்து கசிந்தது. என்ன வயது தான் கோடுகளை அவர் உடலில் வரைந்திருந்தது. அவ்வளவுதான். அதையும் மீறி அவர் சுறுசுறுப்பாக மேடையேறி, தன் அனுபவங்களை அன்பாக, அழகாகப் பகிர்ந்துகொண்டார். விழா முடிந்ததும், அன்று எனக்களித்த அன்பை அருமையாய்ப் பரிமாறினார். நானும் பதிலுக்கு என் அன்பை அவரிடம் சமர்ப்பித்தேன்.

நண்பர் வெங்கடேசனின் அழைப்பு என்னை யதார்த்தத்திற்கு அழைத்து வந்துவிட்டது. அவரைப் பார்த்து ‘ஹி… ஹி’ என அசடு வழிந்தேன். ‘என்ன மதுரையில் இருந்தீர்களா’ என்றதும் மேலும் என்னிடம் அசடு வழிந்தது. நல்ல விஷயத்திற்கு அசடாக இருப்பது சிறப்புதானே! அப்படியானால் அசடு நல்லதுதான்.

செங்கல்பட்டு வந்து சேர்ந்தோம். கிருஷ்ணம்மாக்காவின் உதவிப் பெண்ணிடம் முகவரியைத் தொலைபேசியில் வாங்கிக்கொண்டோம். வெங்கடேசன் நினைத்த மாதிரி விரைவில் முகவரியைக் கண்டுபிடிக்க இயலவில்லை. கொஞ்சம் திட்டும் வாங்கினேன். ஏனென்றால் வெறும் தொலைபேசியை நம்பி புறப்பட்டு வந்ததற்கு. சரி.. சரி… நல்ல காரியத்திற்கு என்றால் திட்டு வாங்குவது நல்லதுதான். அது ஊருக்கு வெளியே இருந்தது. 5 கி.மீ. தூரம் நன்கு சுற்றியலைந்த பின்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

ஒரு வழியாய், அன்று மதியம் 1 மணிக்குத்தான் போய்ச் சேர்ந்தோம். கிருஷ்ணம்மாக்கா வாசலிலேயே காத்திருந்தார்.

krishnammal jagannathan

எங்கள் இருவரையும் அமரவைத்து விட்டு, மதிய உணவிற்கு ஏற்பாடு பண்ணிவிட்டார். என் அருகில் அமர்ந்துகொண்டார். என் கைகளைத் தன் அன்புக் கரங்களில் வைத்துக்கொண்டார். நான் அப்படியே பிடித்துகொண்டு அனுபவித்துக்கொண்டு இருந்தேன். அப்போது வண்ணதாசனின் வார்த்தைகள்தான் என் உள்ளத்தில் ஒளிர்ந்தது. “வயதானவர்களின் கைரேகைகள் ஓதுவது அவர்கள் வாழ்வின் வேதம்” என்று. அவர் கண்களில் கண்ணீர் கசிந்தது. அந்த அன்பில் நான் அழகாக அமர்ந்துகொண்டேன்.

ஜெகன்னாதன் ஐயா அவர்களுக்கு 97 வயது. அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். மகன் டாக்டர் பூமிக்குமார், கம்போடியாவிலிருந்து நேற்று இரவுதான் வந்திருந்தாராம். அவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் கம்போடியாவில் மனநலக் குறைவான குழந்தைகளுக்கு மருத்துவப் பணி செய்துகொண்டிருக்கிறார். மகள் சத்யா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் மருத்துவராகச் சேவை புரிகிறார். அவரது வீட்டில்தான் இப்போது இருக்கிறார்கள்.

கிருஷ்ணம்மாக்கா இன்னமும் என் கரங்களை விடவில்லை. பின்னோக்கி சென்றுவிட்டார். வெங்கடேசனிடம் சொல்வது போல் தன் நினைவு வளையத்திற்குள் சென்றுவிட்டார்.

“1955ஆம் ஆண்டு பூதான் இயக்கத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் நடத்திய கூட்டத்தில்தான் திருமலையை முதலில் பார்த்தது. நாள், கிழமை, ஓய்வு என்று எதுவும் எங்களுக்குக் கிடையாது. நிலத்தைச் சேகரித்து, நிலமில்லாதவர்களுக்கு அளிப்பதுதான் எங்கள் வேலை. எங்களுக்குச் சம்பளம் என்று கிடையாது. ஒரு மாதம் ஒருவருக்கு என்று 25 ரூபாய் வழங்கப்பட்டது. அவ்வளவுதான் இந்த இயக்கத்தால் கொடுக்க முடியும். நான் பார்த்து வளர்த்த குழந்தைகள்” என்று பகிர்ந்துகொண்டார் கிருஷ்ணம்மாக்கா.

“ஆச்சு! நிலமில்லாதவர்க்கு நிலம் வாங்கிக் கொடுத்தாகிவிட்டது. அரசு கொடுக்கும் வீடு மிகவும் சிறியதாக இருப்பதால், விசாலமான வீடு கட்டித் தர வேண்டும் என்று எனக்கு ஆசை. 50 வீடுகள் கட்டிவிட்டேன். அவரவர் வீடுகளுக்கு அவரவர் செங்கற்கள் செய்து தரவேண்டும். மற்றவைகளை நான் ஏற்பாடு பண்ணிடுவேன். இப்போது வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி 86 வயது நிரம்புகிறது. இன்னும் ‘4’ ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். மொத்தம் 5000 வீடுகள் கட்ட வேண்டும். 50 வீடுகள் முடித்திருக்கின்றேன். இன்னும் 4500 வீடுகள் பாக்கி இருக்கிறன. 4 ஆண்டுகளுக்குள் கட்டி முடித்துவிடுவேன்” என்று உறுதியாய்ச் சொற்கள் வெளிவந்தன. நாங்கள் இருவரும் திகைத்துப் போய் அவரது வாய்பார்த்து அமர்ந்திருந்தோம்.

நாஞ்சில் நாடன் அவர்கள் மொழியில் சொன்னால், வயது என்பது எண்ணிக்கை தானே! இதற்கிடையில் உணவு தயாராகிவிட்டதால், அவர்களே பரிமாறினார்கள். பல மாதங்கள் கழித்து மகன் வந்திருப்பதால் அவர்களுடன் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றார். அருமையான உணவை அன்புடன் பரிமாறினார்.

krishnammal jagannathan

சாப்பிட்டு அமர்ந்ததும், அன்னா ஹஸாரே பற்றிப் பேச்சு எழுந்தது. “என்னிடம் அனைவரும் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார்கள். இது பற்றி அறிக்கை விடுங்கள் என்று. அறிக்கை விடுவதா இயக்கம், இயக்கம் என்றால் அதில் கலந்துகொள்ள வேண்டும். இயக்கம் தொடங்க வேண்டும் என்றால் பத்து நாட்களுக்கு முன்பே அதற்குத் தயாராக வேண்டும். படிப்படியாய், படிப்படியாய், வரிசை வரிசையாய் பணிகளைச் செய்து, போராட்டத்திற்கு ஆட்களை அனுப்ப வேண்டும். இப்படித் திடீரென்று… எனக்குத் தெரியவில்லை. இன்னும் நீடித்திருந்தால் ஒருவேளை அறிக்கை விட்டிருக்க மாட்டேன், கலந்து கொள்ள டெல்லி சென்றிருப்பேன். ஆனால் நான் என் சக்தியை வீடு கட்டுவதற்காகச் சேமித்து வைத்திருக்கின்றேன். என் எண்ணம், ஆற்றல் எல்லாம் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்ட வேண்டும். 4 வருடங்களில் 4500 வீடு கட்டி முடிக்க வேண்டும் என்பதுதான்” என்றார்.

இன்னமும் என் கைகள் அவர் கரங்களில்தான் இருக்கின்றன. அவை அவர்களின் வாழ்வின் வேதத்தை எனக்கு ஓதிக்கொண்டு இருக்கின்றன. சில நிமிடங்கள் மௌனத்தின் மடியில் நிம்மதியாய் இருந்து கொண்டன. கொஞ்சம் கண் அசந்தும் போயின. பின், கிருஷ்ணம்மாக்கா, வெங்கடடேசனைப் பார்த்துத் தன் மௌனத்தின் கனத்தைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார் (இன்னமும் அவர்கள் அன்புப் பிடியில்தான் நான் இருந்தேன்).

“அப்போது அற்தப் பகுதியில் உலக வங்கியின் கடன் உதவியோடு இறால் பண்ணை வேலைகள் முடுக்கி விடப்பட்டிருந்தன. வேறு வகையில் வருமானம் வந்துகொண்டிருந்த நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை நல்ல விலைக்கு இறால் பண்ணையாளர்களுக்கு விற்று விட்டனர். இதனால் இவர்களின் நிலத்தில் இருக்கும் வேலையில் வரும் வருவாயில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த குடும்பங்கள் வேலையில்லாது திண்டாடினர். இறால் பண்ணையில் பத்து குடும்பங்கள் பார்த்து வந்த வருவாயில் ஒரே ஒரு குடும்பம்தான் பிழைக்க முடிந்தது. ஒரு தடவை இறால் பண்ணை ஆக்கப்பட்டுவிட்டதென்றால் அந்த நிலமானது விவசாயத்திற்குப் பயன்படாது போய்விடும். இறால் குட்டைக்குப் பாதி தண்ணீர்தான் கடல் தண்ணீர். மீதிக்கு நல்ல தண்ணீர்தான் இருக்க வேண்டும். அதனால் இறால் பண்ணையாளர்கள் இராட்சச போர்களைப் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், சிறு விவசாயிகளின் நிலத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் வாடத் தொடங்கின. வேறு வழியின்றி இவர்களும் பண்ணைக்குத் தங்கள் நிலத்தை விற்று விட்டு, நடுத் தெருவிற்கு வந்துவிட்டனர்.

இதை எதிர்த்துப் பல கட்டங்களில் பேராட்டங்கள் நடத்தியும் பலனில்லாததால், இறால் பண்ணைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தோம். வழக்கை விசாரிக்கும் நாள் வந்தது. டெல்லி சென்றோம். எங்களுக்கு எதிராக 112 வக்கீல்கள், 100 கம்பெனிகள், நாங்களோ இரண்டு வக்கீலுடன் இருந்தோம். 20 நாட்கள் விசாரணை நடந்தது. பயன் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் தங்கி இருக்குமிடத்திலிருந்து காந்தி சமாதி இரண்டு கிலோ மீட்டர் இருக்கும்.

அன்று காலையில் ஏழு மணியிருக்கும். ஜெகன்னாதன் ஐயாவைக் காணவில்லை. நான் தேடிப் போனேன். காந்தி சமாதி அருகே உண்ணாவிரதத்திற்கு ஐயா உட்கார்ந்து விட்டார். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. நானும் அமர்ந்துவிட்டேன். நல்ல வெய்யில், பக்கத்து வீட்டிலிருப்பவர்களிடம் ஒரு கட்டிலை வாங்கி அவரை அமர்த்தினேன். வெய்யில் ஏற ஏற உடலிலிருந்தும் தண்ணீர் வெளியேறுகிறது. தண்ணீர்கூட அருந்தாது உண்ணாவிரதம். நேரம் போய்க்கொண்டிருந்தது.

krishnammal jagannathan

திடீரென்று ஒரு பேருந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் ஓடிவந்தார். அம்மா! தமிழா! இங்கு எவரும் உங்களை மதிக்கமாட்டார்கள். இந்தாருங்கள். என்னிடம் இதுதான் இருக்கின்றது. தன்னிடம் இருந்த 47 ரூபாயை என்னிடம் திணித்துவிட்டு ஓடிவிட்டார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. டாக்டர் அறம் ஓடிவந்து நான் இதற்கு பொறுப்பேற்கின்றேன். தயவுசெய்து பழரசம் குடியுங்கள் என்று கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து, அன்றே எங்களைச் சென்னைக்கு இரயிலேற்றிவிட்டார்.

நாங்கள் இருவரும், எங்களுடன் உதவியாளர் ஒருவர் ஆக மூவரும் பயணம் செய்தோம். எங்களுடன் பயணித்த ஒருவர் எங்களைக் கவனித்திருக்கிறார். நாங்கள் இரயிலேறியதிலிருந்து பச்சைத் தண்ணீர்கூட அருந்தவில்லை என்று. அவர் போபாலில் இறங்க வேண்டும். அதற்குள் அவரது வீட்டில் தொடர்பு கொண்டு எங்களுக்காக சூடாக சமைத்து உணவைப் பாத்திரத்தில் எடுத்துவரச் சொல்லிவிட்டார். இறங்கும் போது, கொடுத்துவிட்டு, தயவு செய்து சாப்பிடும்படி வேண்டிக் கொண்டார்.

ஐயாவின் உடல்நிலை சரியில்லை. அதனால் அவரைச் சமாதானப்படுத்தி இரு சப்பாத்திகளைக் கொடுத்தேன். எங்கோ பிறந்த ஒருவர் உணவளிக்கிறார். உணர்வுகளை உணர்வுகள்தாம் அறிந்துகொள்ளும். அன்பின் இயல்பு இதுதானே. பயணத்தில் ஜெகன்னாதன் ஐயாவிற்கு ‘ஹார்ட் அட்டாக்’ வந்துவிட்டது. சத்யாவிற்கு போன் செய்து, இரயில் நிலையத்திலிருந்து நேரே மருத்துவமனைக்குச் செல்ல ஏற்பாடு பண்ணினேன். இருபது நாட்கள் ஐ.சி.யு.வில் இருக்க நேரிட்டது” என்று… மீண்டும் அந்த கணத்திற்குள் சென்றுவிட்டார்.

எங்களுக்குப் புரிந்தது. அன்று எந்த மீடியாவும் இவர்களை ஏன், எதற்கு என்று கேட்கவில்லை. அதை இவர்களும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் நேர்மையும் தியாகமும் அர்ப்பணிப்பு உணர்வும் மட்டுமே போதும் என்பதில் உறுதியிருந்தது.

ஈண்டு ஒன்று கவனிக்க வேண்டியிருக்கின்றது. ஷெரோம் பத்து வருடங்களாகப் போராடும் ஷெரோம் ஏன் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை! அவர்களும் இந்தியாவில் உள்ளவர்கள் தானே! இது மூத்த பத்திரிகையாளரின் நியாயமான கேள்வி. இறால் பண்ணையின் பாதிப்பும் யாரையும் பாதிக்கவில்லை. இப்படிப் பல இயக்கங்கள் தத்தம் அளவில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அன்னா ஹசாரேயின் செயல், அதிர்ஷ்டவசமாக மீடியாவால் கவனிக்கப்பட்டுவிட்டது. ‘லஞ்சம்’ என்பது ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை. இதன் பாதிப்புதான் பள்ளி மாணவர்கள் வரை சென்று இருக்கின்றது.

krishnammal jagannathanசென்னை தக்கர்பாபாவில் “அன்னா ஹசாரேவிற்காக லஞ்சமில்லா இந்தியாவை உருவாக்குவோம்” என்று ஒரு 4 இயக்கங்கள் அன்று கூடின. நானும் முழு நாளும் அங்கு இருந்தேன். நரேஷ் குப்தாவிற்கு சந்தோஷம்தான். ஏனெனில் எல்லா வயதினரும் கூடியிருந்தனர். என்னுடைய கவனிப்பு இதுதான்:

4 இயக்க ஒருங்கிணைப்பாளர்களும் ஒருங்கிணையவில்லை. ஒரு உணர்ச்சிகரமான சந்திப்பாக இருந்தது. உண்ணாவிரதத்திற்குக் காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. என்னவோ தக்கர்பாபா நிறுவனம் அனுமதி அளிக்காததுபோல் நடந்து கொண்டனர். இந்நிறுவனத்தின் உண்மையான இயல்பையும் அறியவில்லை. அவர்களுக்கு என்ன தெரியும்? ஒருங்கிணைப்பாளர்களிடமே ஒருங்கிணைப்பு இல்லை. ஒரு பெரிய போராட்டத்திற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், அதைத் தடுத்து ஒரு மறைவிடத்தில் அவர்களைப் போட்டு விட்டதாகவுமான உணர்வு. கொஞ்சம் பதற்றமுமாய் இருந்ததால், திரு.அண்ணாமலை (தக்கர்பாபாவின் இணைச் செயலாளர், காந்தி கல்வி நிலைய இயக்குநர்) “மகாத்மா காந்தியே இங்கு வந்து இந்நிறுவனத்தைத் தொடங்கிய இடம். எல்லாவகையிலும் இது பொருத்தமான இடம்” என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
ஒரு இயக்கம் தொடங்குமுன் அதற்கு நாம் எவ்வளவு தயார் செய்துகொள்ள வேண்டும்? எவ்வளவு தூரம் பிறரைத் தயார்ப்படுத்த வேண்டும் என்று கிருஷ்ணம்மாக்கா கூறியது எவ்வளவு உண்மை என்று தோன்றுகிறது.

உண்மைதான்! பள்ளியிறுதி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மூன்று நாட்களாக உணவைத் தவிர்த்திருந்தனர். நிச்சயமாக நியாயமில்லாத செயல்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அதை எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்று புரிந்தது. அவர்களுக்கு வேண்டியது உண்மையான நேர்மையான தலைமை. மேலும், அன்னா ஹஸாரே இந்த இயக்கத்தின் வழி இளைஞர்கள், நாம், ஒவ்வொருவரும் நம் அளவில் இலஞ்சம் கொடுக்க மாட்டோம். லஞ்சம் தவிர்த்து, காலம் தாழ்த்திச் செயல் நடந்தாலும், பொறுமையாய் இருந்து சாதிப்போம் என்கின்ற உணர்வைப் பெற்று அதில் உறுதியாய் இருப்போம் என்கின்ற எண்ணம்தான் இருக்க வேண்டும். அதுவழி செயல்பட வேண்டும். என்ன சொல்கிறீர் பத்திரிகையாளர் ஞானியே!

அன்று முழுவதும் திரு. அண்ணாமலை, அவரின் மனைவி டாக்டர் பிரேமா (ஒருங்கிணைப்பாளர், காந்தி கல்வி நிலையம்) ஆகிய இருவரிடம் இருந்து, ஒரு கூட்டத்தைச் சரியான வழியில் நெறிப்படுத்தி அழைத்துச் செல்வது எப்படிப்பட்ட கஷ்டம் என்று கற்றுக்கொண்டேன். ஆமாம்! இதை வாய்ப்பாகக் கொண்டு ஒரு சிலர், தங்களுக்கே விளம்பர வாய்ப்பாக்கிக் கொள்ள யத்தனித்தனர். அதை மிகவும் அழகாக நிறுவனத்திற்கும் பெயர் கெடாதபடி, அவர்கள் எண்ணம் நோகாதபடி எடுத்துச் சொன்ன விதம் அவர்களிடம் எனக்குப் பிடித்திருந்தது.

அடடா! எங்கேயோ போய்விட்டேனே!

வெங்கடேசன், “கிளம்பலாம். பாவம்! வயதானவர்கள்! அவர்களுக்கு ஓய்வு தேவை” என்றார்.

ஆமாம்! விடைபெற யத்தனித்தேன். என்ன செய்ய? அவரது அன்புப் பிடியிலிருந்து விடுபட என்னால் இயலவில்லை. எனினும் மெதுவே என் கரங்களை விடுவித்துக் கொண்டேன்.
எங்களுக்குத் தன்மகன் கொணர்ந்த கம்போடியா அழகுப் பையொன்றை அளித்தார். ஆசீர்வாதங்களைப் பெற்று விடைபெற்றுக் கொண்டோம். மனமிலாது எங்களை வழியனுப்பினார் கிருஷ்ணம்மாள் அக்கா.

கார், சொன்னை நோக்கிப் புறப்பட்டது. வழியில் ஏறிக்கொண்ட வெங்கடேசன் திரும்பி வரும் போது வழியில் வண்டலூரில் இறங்கிக்கொண்டார். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. ஏனெனில் அந்த அனுபவத்தை எங்களிடம் பத்திரமாக சேமித்து வைப்பதில் தீவிரமாக இருந்தோம்.

=============================================================
If we are true with the fundamental laws of nature, one will enjoy the process of life. Otherwise suffering is inevitable – Sathguru.
=============================================================

படங்களுக்கு நன்றி: http://www.rightlivelihood.org, http://www.gandhimmm.org

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “அன்பெனும் பிடியிலே…

 1. கட்டுரை முழுதையும் பல முறைகள் படித்தேன். அருமையான, கட்டுக்கோப்புடன், உணர்ச்சிகளின் பிம்பங்களும், பின்புலங்களும் வந்து நின்றன, கண்ணின் முன். கிருஷ்ணம்மா-ஜெகந்நாதன் தம்பதிகள் என் அகக்கண்ணுக்கு, காந்திஜி-கஸ்தூரி பா திவ்ய தம்பதிகளாகத்தான் பட்டனர்.

  ஆலவாய் நகரத்தை ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளீர்கள். எல்லா இடங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இன்று மதுரையில் வன்முறை ஆள்கிறது என்கிறார்கள். அங்கு இருக்கும் காந்தி அருங்காட்சியகத்தில், அண்ணலின் காலணிகள் காட்சியில் உள்ளன. அவற்றை மனத்தளவில் சிரம் தாங்கினாலே, தீதுகள் வாரா.

 2. “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே”
  என்றார் வள்ளலார். அன்புக்குள்ள சக்தி
  அப்படி இருக்கிறது. திருமந்திரம் அருளிய
  திருமூலர் “அன்பு சிவம் இரண்டு என்பர்
  அறிவிலார்” என்று சொல்லுவதிலிருந்து
  அன்பே ஆன்மீகத்திற்கு அடிப்படை என்பது
  புரிகிறது. உள்ளத்திலே அன்பு இல்லாதவன்
  புற அழகு எவ்வளவு நன்றாக இருந்தாலும்
  ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது
  வள்ளுவர் வாக்கு. அன்பெனும் பிடியிலே
  கட்டுரை அருமை.
  இரா. தீத்தாரப்பன், இராஜபாளையம்.

 3. வணக்கம். தங்கள் மதுரை வர்ணிப்பு, என்னை மெய் சிலிர்க்கச் செய்தது.
  கட்டுரையை மீண்டும் வாசிக்க வேண்டும்.
  என் மனமார்ந்த பாராட்டுகள்.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  -சத்யன்

 4. hi subhashini,

  ‘anbenum pidiyil’ thangal anubavitha anbai anubavithu magizhthen. Naan ippozhuthu ‘Utah’ vil magaludan ullen. thangal sirippai oli (sound) vadivilthan kettirukkiren, Indru padathudan adai innaithu kettukkonden. Nandri.

 5. this write up is better than previous three. they just reproduced the extracts of nanjil naadan, vanna dasan.

  subha please write on your own

  dont mention the names of guide, body guards, servants accompany with you

 6. அம்மா!
  வணக்கம்!

  நான் உங்களின் அக்காவைச் சந்திக்க விரும்புகிறேன்!

  அவரின் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் என்றும் என்னுடன் இருக்கும் என நம்புகிறேன்!

  அவரின் முகவரியை எனக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டுமாய் வேண்டுகிறேன்!

  எனது மின்னஞ்சல் முகவரி : venshagan@gmail.com

  நன்றி!

 7. மிக்க மகிழ்ச்சி…. தங்களது தந்தையாரும் விநோபாவின் பூதான் இயக்கத்தில் பங்கேற்றிருக்கின்றார் என அறியும்பொழுது மனம் நெகிழ்கின்றது.

  எங்கள் வீடும் காந்திய வீடே. விநோபாவின் பூதான் இயக்கத்தில் எங்கள் வீட்டுப் பெரியவர்களும் இருந்தனர்.

  வாழ்த்துகள்.

  அருட்பேராற்றல் கருணையினால் தாங்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களனைவரும் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் மற்றும் மெய்ஞானம் ஓங்கி நீடூழி வாழ்க வளமுடன்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *