சேட்டைக்காரன் (எ) வேணுகோபாலன்

அவன் பெயர் ஒன்றும் எல்லாரும் அழைப்பதுபோல ‘பல்லில்லி’ இல்லை; பாலகிருஷ்ணன் என்று அழகான பெயர். இந்த ‘பல்லில்லி’ என்ற பெயரை யார், எந்தக் காரணத்திற்காக வைத்தார்கள் என்பதையெல்லாம் சரியாக நினைவுபடுத்திச் சொல்ல முடியவில்லையென்றாலும், அப்படித்தான்  எல்லாராலும் அழைக்கப்பட்டான். இல்லாவிட்டாலும் அவனை யார் எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், அவன் திரும்பிப் பார்த்திருப்பான். ஒரு விசில்; ஒரு கைதட்டல் அல்லது ஒரு ‘டேய்’ அவனைத் திரும்பிப் பார்க்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அனேகமாக அவனுக்கே தனது இயற்பெயர் பாலகிருஷ்ணன் என்பது மறந்திருக்கலாம். ஒருவேளை, அவனுக்குப் பெயரே வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சொன்னாலும் அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அவன் போன்றவர்களுக்கு எப்படி உயிரும் உணர்ச்சியும் இருக்கிறது என்பதை பலரால் உதாசீனப்படுத்த முடிகிறதோ, அதே மூர்க்கத்தனத்துடன் அவனது பெயரையும் அலட்சியப்படுத்த முடிந்திருந்தது. பெரும்பாலானோர் அதைத்தான் செய்தார்கள்

      அவனுக்கும் ஒரு இயல்பான கடந்தகாலம் இருந்தது. பாலகிருஷ்ணன் ஐந்தாம் வகுப்புவரை படித்திருக்கிறான். வயதுக்கு மீறிய உயரம்; மாநிறம்; சுருள்முடியில் அழகாக வகிடெடுத்துக் கொண்டு வருவான். பெரிய படிப்புக்காரனெல்லாம் கிடையாது என்றாலும், தினசரி முதல் மணியடிப்பதற்குள் வகுப்புக்குள் உட்கார்கிற மாணவர்களுள் அவனும் ஒருவனாய்த் தானிருந்தான். பள்ளிக்கூடத்தின் வாசலில் ஈ மொய்க்கிற சவ்வு மிட்டாய், வெள்ளெரிப்பிஞ்சு, மாங்காய் ஆகியவற்றின் மீது ஈர்ப்பில்லாமல், பள்ளி முடிந்ததும் அமைதியாக வீடுதிரும்புவான். கிரிக்கெட், கபடி, கோகோ எதிலும் கலந்து கொள்ள மாட்டான். இயல்பாகவே, அவனுக்கு சினேகிதர்களே இல்லாமல் போனதில் வியப்பொன்றுமில்லை

      ஆனால், அது கடந்தகாலம்!

      இப்போது அவன் முன்னைக் காட்டிலும் உயரம்; உடம்பு கொஞ்சம் மெலிந்து விட்டிருந்தது. பள்ளிக்கூடத்துக்குப் போன காலங்களில் அவனது தோற்றத்தில் தென்பட்ட பொலிவு இப்போது கிடையாது. சில சமயங்களில் ஒரே சட்டை, கால்சராயைப் போட்டுக்கொண்டு அவன் நாட்கணக்கில் சுற்றிக் கொண்டிருப்பான். அவனைப் பார்த்தால் பெண்களும் குழந்தைகளும் ஒதுங்கிச் செல்வார்கள் என்றாலும் அவன் எவருக்கும் எந்த இடையூறும் செய்ததில்லை. சொல்லப்போனால், அவன் தான் பற்பல இடையூறுகளுக்கு இலக்காகி விட்டிருந்தான்.

      இப்போது பல்லில்லியை எந்தத் திண்ணையில் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உட்கார வைத்து அவனைப் பேசவைத்து வேடிக்கைப் பார்க்கலாம். மீசை அரும்பத் தொடங்கியவர்கள் முதல் அவனைக் காட்டிலும் இளையவர்கள் வரையில் நிறைய பேர், பேதமில்லாமல் அவனை அழைத்து அருகில் உட்காரவைத்து, அவனைத் தங்களது கேளிக்கைக்குப் பயன்படுத்திக்கொள்வர்.

      ”டேய் பல்லில்லி! கண்ணன் சித்தப்பா பாட்டுப் பாடுறா…”

      இந்த நேயர் விருப்பம் அடிக்கடி நிகழ்ந்தேறும். அழைத்ததும் ஓடிச்சென்று, கேட்டவுடன் தயக்கமின்றிப் பாடுவான் பல்லில்லி!

      ”கண்ணன் சித்தப்பா!

     கருப்பட்டி தின்னாரு

     எப்படித்தின்னாரு…..

     ட்ச்..ட்ச்..ட்ச்…ட்ச்…..” என்று கண்ணன் சித்தப்பா கருப்பட்டி தின்னதை அபிநயித்துக் காட்டுவான்.  நேயர் விருப்பம்  கேட்டவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ‘இன்னொரு வாட்டிப் பாடிக்காட்டுறா…’ என்று ஒன்ஸ் மோர் கேட்பவர்களும் உண்டு. எத்தனை பேர், எத்தனை முறை கேட்டாலும் சங்கோஜப்படாமல், சந்தோஷமாகப் பாடுவான் பல்லில்லி.

      ”டேய், வாசு சித்தப்பா பாட்டு பாடுறா…!” என்று யாராவது கேட்பார்கள். உடனே சுற்றியமர்ந்திருக்கும் பட்டாளமே விசிலடிக்கும்; உற்சாகக்கூச்சலிடும்.

      ”மாட்டேன்!” என்று நாணுவான் பல்லில்லி. எல்லாரும் அவனை வற்புறுத்துவார்கள்; ஆசை வார்த்தை சொல்லுவார்கள்.

      ”பாடுறா டேய்! கதலிப்பழம் வாங்கித்தர்றேண்டா!”

      ”கடலை மிட்டாய்…?”

      ”சரி, கடலை மிட்டாய் வாங்கித்தர்றேண்டா…..!”

      ”ஒரே ஒரு வாட்டிதான் பாடுவேன்…!” பல்லில்லி நிபந்தனை விதிப்பான்.

      ”சரி, பாடு!”

      ”வாசு சித்தப்பா…

      $@!#*&$%^@!#!@#$&@!

      $@!#*&$%^@!#!@#$&@ “

      சுற்றியிருக்கும் கூட்டம் குபீரென்று சிரிக்கும். அந்தச் சிரிப்பொலியைக் கேட்டு, அந்தந்தத் திண்ணைக்குரிய வீட்டிலிருந்து எவராவது வெளிப்படுவார்கள்.

      ”டேய், என்னடா சத்தம் இங்கே? டேய் பல்லில்லி, கிறுக்கா, எந்திரிச்சிப் போடா…போடா அறிவுகெட்டவனே….!”

      பல்லில்லி போகாமல், சிரித்துக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து தானும் விழுந்து விழுந்து சிரிப்பான். அவனுக்கு சற்றுமுன் தான் பாடிய பாட்டின் விபரீதமான பொருள்பற்றிக் கிஞ்சித்தும் தெரியாது. பொழுதுபோகாமல் ஊர்சுற்றித்திரிகிற கும்பல்களுக்கு, தான் ஒரு இலவசமான கேளிக்கையாக இருப்பதும், அவர்களில் சிலர் தனக்குக் கற்றுத்தருகிற சில சங்கதிகளில் வக்கிரம் தோய்ந்து கிடப்பதும், அதையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு, அந்த அருவருப்புகளையே தனது அடையாளங்களாக்குவதும் – எதுவும் தெரியாது. சொல்லிப் புரிய வைக்கவும் முடியாது. காரணம் எதுவென்றால், மருத்துவ விபரங்களுக்குள் போகாமல் ஒற்றை வார்த்தையில், அவனுக்கு ‘கிறுக்கு’ பிடித்திருந்தது; அவ்வளவுதான்!

      மாசி மாதத் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஏழாவது நாளன்று ’சப்பரம்’ என்று சொல்லப்படுகிற அலங்கரிக்கப்பட்ட மேடையில், நடராஜரின் திருவுருவத்தை வைத்துக் கொண்டு ‘தில்லையம்பலம்… திருச்சிற்றம்பலம்… ஆடினாரே… ஆடினாரே..’  என்று சுமந்து வருகிறவர்களும் ஆடியவாறே தேரோடும் வீதிகளில் ஓடோடி வருவார்கள். ஒரு வருடம் தெருமுனை வரைக்கும் வந்த ஊர்வலம் உள்ளே வராமல் மாற்றுப்பாதையில் சென்றபோதுதான், பாலகிருஷ்ணனின் அம்மா இறந்த தகவல் பலருக்குத் தெரிய வந்தது.

      அன்று அதிகாலை எழுந்து, கோவில் குளத்தில் குளித்துவிட்டு, அரசமரத்தை வழக்கம்போல் சுற்றிவந்துவிட்டு, முத்தாரம்மன் கோவிலில் எண்ணை விளக்கேற்றிவிட்டு, வீட்டுக்கு வந்தவர் அடுத்த சில நிமிடங்களில் தன் மேல் மண்ணெண்ணையை ஊற்றிப் பற்றவைத்துக் கொண்டு இறந்துபோனார் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. ‘ஏன்?’ – இந்த ஒற்றைக் கேள்விக்கு அவரவர் தங்களது அனுமானங்களுக்கேற்ப பல பதில்களைப் பரப்புரை செய்து கொண்டிருந்தனர் என்றாலும், அந்தத் துயரசம்பவத்தின் உண்மையான காரணம் எதுவென்று யாராலும் சரிவர ஊகிக்க முடியவில்லை. அன்றுமுதல் பாலகிருஷ்ணன் பள்ளிக்கூடம் போவதை நிறுத்திவிட்டான் என்பது மட்டும் சகமாணவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவன் வீட்டை விட்டு வெளியே வராமலிருந்ததுதான் அவன் தாயாரின் மரணத்தைக் காட்டிலும் பெரிய மர்மமானது.

      அவனது வயதுக்காரர்கள் அவனை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலையில், திடீரென்று பாலகிருஷ்ணன் வெளியே மீண்டும் நடமாட ஆரம்பித்தான். அந்தக் காலகட்டத்தில் தான், முதலில் அதிர்ச்சியூட்டினாலும் நாட்பட நாட்பட பலரின் அனுதாபத்துக்கும் சிலரின் எள்ளலுக்கும் ஆளான அவனது நடவடிக்கைகள், அவனை பாலகிருஷ்ணனிலிருந்து பல்லில்லி ஆக்கின என்று சொல்லலாம். உண்மையில், அந்தப் பெயருக்கு எந்தப் பொருளும் கிடையாது. அவனுக்குச் சூட்டப்பட்ட பட்டப்பெயரும் அவனைப்போலவே குறிக்கோளற்றதாக அமைந்தது.

      திருமணமோ, திருவிழாவோ, ஊர்வலமோ எதுவாயிருந்தாலும் சரி, மேளக்காரர்களுக்குப் பின்னால் சிரித்தபடி ஆடிக்கொண்டே போவான். தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் வாலைத்தூக்கி அசுத்தம் செய்யும்போது குலுங்கிக் குலுங்கி உரக்கச் சிரிப்பான். காய்கறி விற்பவர்கள் பின்னாலேயே சென்று அவர்களைப் போலவே குரலெழுப்பியபடி தொடர்வான். தபால்காரருடன் தெருவின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ‘சார் போஸ்ட்’ என்று குரல் கொடுப்பான். இப்படி, இன்னும் அவனது வினோதமான நடவடிக்கைகளின் பட்டியலின் நீளம் மிகவும் அதிகம். ஆரம்பத்தில் அனுதாபம் காட்டியவர்களும் பின்னாளில் ஏனோ அவனை அயர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.

      அன்று தெருவில் விறகுவண்டிகள் வந்து போயிருந்தன. பல வீடுகளின் வாசலில் விறகுத்தடிகள் இறக்கப்பட்டிருக்க, கோடாரியால் பெரிய பெரிய தடிகள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. எங்கள் வீட்டு வாசலிலும் விறகு வந்து இறங்கியிருந்தது. விறகுவெட்டி வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருப்பதை பல்லில்லி வேடிக்கை பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தான்.

      விறகுவெட்டி ஒவ்வொரு முறையும் கோடாரியை உயர்த்தும்போது தலையைத் தூக்கி, அது வேகமாக விறகின் மீது விழும்போது தலையை அதே வேகத்தில் இறக்கி, வாய்விட்டுச் சிரித்து, கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தான். அவனது நடவடிக்கைகள் புரியாமல் முதலில் சிரித்தபோது ‘ஐயோ பாவம், சிரிக்காதேடா’ என்று என் பாட்டி கண்டித்திருந்தார் என்பதால் குழப்பத்துடன் அவனையே ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

      ”லேய், தள்ளி உட்காருலே! “ விறகுவெட்டி எச்சரித்துக் கொண்டிருந்தார். “கண்ணுலே சிலாம்பு ஏறுனா பெறகு கதை கந்தலாயிரும்…தள்ளி உட்காருலே!”

      பல்லில்லி தள்ளி உட்காராமல் சிரித்துக் கொண்டிருக்கவே, அந்த விறகுவெட்டி பொறுமையிழந்து அவனை வசைபாட ஆரம்பித்தார்.

      ”ஐயோ பாவம்!” என்றாள் பாட்டி. “தாயில்லாப் புள்ளே எப்படிச் சீரழியுது பாரு!”

       நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் விறகு வெட்டப்படுவதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று, விறகுவெட்டியின் கோடாரியின் அதிரடியில் ஒரு பெரிய விறகுத்துண்டு ஜிவ்வென்று காற்றில் பறந்து பின்னால் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த பல்லில்லியின்  நெற்றியை ஒரு ஏவுகணை போலத் தாக்கியது.

      ”அம்மா!”

      புத்தி சுவாதீனமில்லாதவன், வலியில் அலறியதைக் கேட்டதும், ‘அம்மா’ என்ற அந்த ஒரு ஒற்றை வார்த்தையின் பொருள் எனக்கு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மிக அழுத்தமாய்ப் புரிந்தது போலிருந்தது.

               ***********

படங்களுக்கு நன்றி:

http://natarajar.blogspot.in/2008_06_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வரிவடிவங்கள்-பல்லில்லி்!

  1. கதையின் முடிவு என்றும் மனதில் நிலைத்து நிற்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.