தமிழ்த்தேனீ

Tamil theneeபொழுது போகலைன்னா ஏதாவது உருப்படியா செய்யக் கூடாதா? எதுக்காக அந்த எழுத்தாளர் எழுதின புத்தகத்தைப் படிக்கணும். அப்புறம் இப்பிடி எதுக்கு தனியாப் புலம்பணும்? தேவையில்லாத வேலை, நேற்றிலிருந்து தூக்கம் பிடிக்கவில்லை, சாப்பாடு பிடிக்கவில்லை, மன நிம்மதியே கெட்டுவிட்டது. ஏதோ நாமெ பாட்டுக்கு அன்னன்னிக்கு என்ன முடியுமோ, அந்தக் காரியங்களைச் செஞ்சுட்டு நிம்மதியாத் தூங்கினோம் அதையும் கெடுத்தார் அந்த எழுத்தாளர். அவரை நினைக்க நினைக்க ஆத்திரமாய் வந்தது.

“இந்த எழுத்தாளர்கள் சும்மா இருக்க மாட்டாங்களா? ஏன் இப்படி சும்மா இருக்கும் சங்கையெல்லாம் ஊதிக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்”

என்னா அது! ஹ்ஹ்ஹும் எப்பிடி உசுப்பறார் பாரு எல்லாரையும்!

“நீங்க கொஞ்சம் நெனைச்சுப் பாருங்க. நாட்டுலெ எவ்வளவோ நல்ல நிகழ்ச்சி நடக்கிறது”

டிசம்பர் மாசம், இசைவிழா அமக்களப்படுகிறது, ஒரு நாளாவது ஒரு கச்சேரியில் போய் உட்கார்ந்து நல்ல கீர்த்தனைகள் ஏதாவது கேட்டீங்களா?

இளையராஜாவோட மியூசிக் கான்செர்ட் அமக்களமா நடக்கிறது, அங்கேயாவது போய் ஒரு பாட்டையாவது கேட்டு ரசிச்சீங்களா?

எல்லாருக்கும் பிடித்த கிரிக்கெட், என்னிக்காவது போய் அந்த கேலரிலெ உட்காந்து அப்பிடியே சாண்ட்விட்ச், கொஞ்சம் கோக்கோ கோலா சாப்டுட்டு ஒரு சிக்ஸரோ அல்லது ஒரு நல்ல கேச்சோ பார்த்து ரசிச்சிருக்கீங்களா?

அட குறைஞ்சபட்சம் ஒரு நாட்டியம் அல்லது ஒரு நாடகம் எதையாவது பாக்கணும்னு மெனெக்கெட்டு பேருந்தோ, அல்லது இருசக்கர வாகனமோ அதிலெ போய் அந்த வாகனத்த விடறதுக்கு இடமில்லாம திண்டாடி, ஒரு வழியா வாகனத்தை அரைகுறை மனசோட கிடைச்ச இடத்திலெ விட்டுட்டு, வேகவேகமாப் போய் நமக்கு குடுத்த நாக்காலிலே உட்கார்ந்து எதையாவது ரசிச்சிருக்கீங்களா?

எதுவுமே இல்லையா சரி, திருவல்லிக்கேணி போற ஏதாவதொரு வாகனத்தில் போய், அந்தக் கடல் மணல்ல கால் புதையப் புதைய நடந்து, அப்பிடியே அங்க மணக்கற பஜ்ஜியை வாங்கிச் சாப்டுட்டு, அப்பிடியே கடலோரமாப் போய் கால்லேருந்து இடுப்பு வரைக்கும் நனைக்கற அலையிலெ நின்னு, தூரத்திலெ  அங்கங்கே நின்னுகிட்டிருக்கிற கப்பல்களை வேடிக்கை பாத்துட்டு, பின்னால வர குதிரை நம்மை இடிச்சுத் தள்ளிடுமோன்னு பயந்து, கொஞ்சம் ஒதுங்கி, யார் காலையோ மெதிச்சு, சாரி சொல்லி வழிஞ்சு, அப்பிடியே சின்னஞ் சிறுசுகள் குதூகலத்தோட  விளையாடற காட்சியைப் பாத்திருக்கீங்களா?

அந்த மீனவக் குழந்தைகள் பயமே இல்லாம கடல்ல நீச்சல் அடிச்சுண்டே போய் நடுக்கடலுக்கே போய்ட்டாளோன்னு பிரமை ஏற்படுத்தற அந்தத் திகில் உணர்ச்சியை அனுபவிச்சு இருக்கீங்களா?

ஏதோ நாடகத்துக்குத் தட்டி கட்டி இருக்கறா மாதிரி ஒரு வெள்ளைத் துணியிலெ தட்டி கட்டி அதுலெ நாடகத்துலெ வர கதா பாத்திரம் மாதிரி  ஒவ்வொரு பலூன் ஒவ்வொரு மாதிரி மாட்டி வெச்சிருக்கானே, அதையெல்லாம் அந்தக் குறவன் துப்பாக்கிய வாங்கி ஒரு பலூனையாவது சுட்டு இருக்கீங்களா? அதுவும் இல்லையா என்ன மனுஷனய்யா நீர்?

வைகுண்ட ஏகாதசி அன்னிக்கு  வைகுண்ட வாசல் வழியா  வாசல் வழியா பார்த்தசாரதி பெருமாளோட நாமளும் ஒருத்தரா அந்தக் கும்பல்ல கோவிந்தா போட்டுண்டே வந்தீங்களா?

அதுவும் இல்லையா? நீங்க என்னதான் செய்யறீங்க?”

இது மாதிரி ஒரு வெவஸ்தை கெட்ட தனமா ஒரு கேள்வி வேற இந்த எழுத்தாளருக்கு……. இப்பிடியெல்லாம் மக்களைத் தூண்டி விடற எழுத்தாளர்கள் உண்மையிலேயே மக்கள் என்ன நிலைமையிலெ இருக்காங்கன்னு தெரியாம ஏதாவது கவர்ச்சியா எழுதணும்னுட்டு எழுதறாங்க. பாதிக்கப்படறது நாமெதானே?

‘ஏய்யா எழுத்தாளரே கேள்விகள் கேட்பது சுலபம். பதில் சொல்றதுதான் கஷ்டம்னு உமக்குத் தெரியாதா?’

எங்களை மாதிரி நடுத்தர வர்க்கம் படற அவஸ்தை உங்களுக்கு எங்கே தெரியப் போகுது. காலையிலே எழுந்து குளிச்சுட்டு, நானும் அவளும் சேர்ந்து குழந்தைகளைத் தயார் பண்ணி, அதுங்களையும் வாசல்ல வந்து, ‘என்னா சார் ரெடியா, பையனைச் சீக்கிரம் அனுப்புங்க’ அப்பிடீன்னு கத்தற ஆட்டோக்காரன் மதியை, ‘கொஞ்சம் இருப்பா இதோ அனுப்பறேன்’ அப்பிடீன்னு சொல்லிட்டு, ‘சீக்கிரம் கிளம்புங்கடா, ஆட்டோக்காரன் காத்துண்டு இருக்கான்’னு சொல்லி, அதுலெ ஏத்தி அனுப்பிட்டு, பொண்டாட்டியை அழைத்துக் கொண்டு போய் ஆபீசுலெ விட்டுட்டு, அவசர அவசரமா ஆபீசுக்குப் போய், அந்த மேனேஜர், வேணாம் என் வாயைக் கிளறாதீங்க. அவரைப் பத்தி என் மனசுலெ இருக்கறதை அப்பிடியே சொன்னா எனக்கு வேலை போயிடும்.

அவர்கிட்ட மாட்டிண்டு முழிச்சு, தலையை தலையை ஆட்டிண்டு எப்பிடியோ சமாளிச்சு, அன்னிக்குப் பொழுதை ஓட்டிட்டு, அப்பாடா மணி 5 ஆயிடுத்துன்னு பெருமூச்சோட கிளம்பலாம்னு பாத்தா, அப்பொதான் என்னைப் புதுசாப் பாக்கறா மாதிரி ஒரு பார்வை பாத்துட்டு, ‘ஏன் மிஸ்டர் நாளைக்குக் கொஞ்ச சீக்கிரம் வர முடியுமா? ஆடிட் இருக்கு. எனக்கு தெரியும் உங்க சின்சியாரிடி. நீங்க வந்துடுவீங்க. ஒரு எட்டு மணிக்கு வந்துடுங்க. நாமெ எல்லாத்தையும் ஒரு வாட்டி சரியாப் பாத்து வெச்சுடலாம்’ என்கிற மேனேஜரிடம், ‘அதுகென்ன சார் நான் வந்துடறேன்’  அப்பிடீன்னு புன்னகையோட சொல்லிட்டு,. மனசுபூரா எரிச்சலோட (வேண்டாம்) நான் மனசுக்குள்ள அவரை என்ன திட்டினேன்னு உங்க கிட்ட சொன்னா வம்பாயிடும், இந்த வேலை போச்சுன்னா அவ்ளோதான். சரி சார்னு அவர்கிட்ட சொல்லிட்டு வேக வேகமா கிளம்பி,

மேடும் பள்ளமும் சாக்கடைத் தண்ணியும் கலந்த சாலையில் போய், ”மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்” அப்பிடீங்கற பாட்டு மாதிரி எப்பிடியோ கஷ்டப்பட்டு பிரயாணம் பண்ணி, பொண்டாட்டியை அவ ஆபீசுக்குப் போய் அவளையும் அழைச்சுண்டு, வீட்டுக்கு வந்து, உள்ள நொழையவும் உள்ளேருந்து ஏதோ வியட்நாம் போர் நடக்கறா மாதிரி ஒரு சத்தம் கேட்டுப் பதறிப் போய் உள்ளே பார்த்தால், என் பசங்கதான் ரெண்டுபேரும் என்னைப் பாத்தவுடனே ‘இவந்தாம்பா, இல்லப்பா இவந்தான்’ அப்பிடீனு குரல்விட்ட அவர்கள் இருவரையும் ஒரு புன்சிரிப்போட சமாதானப்படுத்தி………………. அப்பப்பா! மேனேஜரைக் கூட சமாளிச்சுடலாம், இந்தப் பசங்களைச் சமாளிக்கறது முடியலைடா  சாமி.

ஏதோ காப்பின்னு பொண்டாட்டி குடுத்த திரவத்தைக் குடிச்சுட்டு, இந்தப் பசங்களோட ஹோம் வொர்க், அதுக்குக் கொஞ்சம் நேரம் அவங்களோட போராடிட்டு நிமிந்து பாத்தா, மணி எட்டு. ‘சரி சரி சாப்பபாடு போடு காலையிலெ சீக்கிரம் போகணும்’ சொன்னவுடனே, ‘ஏங்க நானும் உங்களை மாதிரிதானே உங்களோடதானே வீட்டுக்கு வந்தேன். கொஞ்சம் பொறுமையா இருக்கக் கூடாதா?  ஒரு ஹெல்ப் கிடையாது. வெட்டி அதிகாரம்’ என்றாள் சலிப்புடன்.

கோபம் வந்தது. ‘சரி சரி  நீ வேற உன் புராணத்தை ஆரம்பிச்சிடாதே, எப்போ சாப்பாடு ரெடியாவுதோ, அப்போ கூப்பிடு வரேன்’ என்று  விர்ரென்று வெளியே வந்து ஒரு சிகரெட்டைப் பத்தவெச்சேன். ஒரு புகை மண்டலத்தை இழுத்தவுடன் உள்ளுக்குள்ளே ஒரு ஞானம். ‘அவ மட்டும் என்ன பண்ணுவா அவளுக்கும் முடியலை, அதைப் புரிஞ்சிக்காமே  அவகிட்ட கோவப்பட்டு என்ன பிரயோசனம்’ என்று மூளைக்குள் ஒரு விளக்கு எரிந்தது. சிகரெட்டைத் தூக்கி வீசிவிட்டு  உள்ளே சென்று,

‘சரிம்மா என்ன செய்யணும்னு சொல்லு. நான் செய்யிறேன்’ என்றேன்.  ‘ஆமா நான் ஒவ்வொண்ணா உங்ககிட்ட சொல்லி, நீங்க அதைப் புரிஞ்சுண்டு செய்யறதுக்குள்ள விடிஞ்சுடும்’ என்றாள் அவள்.

‘எல்லாம் நான் செஞ்சிட்டேன்.  சாப்பிட உக்காருங்க துர்வாசரே’ என்றாள், புன்சிரிப்புடன்.
மனம் நெகிழ்ந்தது. இந்தப் பெண்கள் நிறைய அஸ்திரம் வைத்திருக்கிறார்கள்.

ஹ்ஹுஹ்ஹும் என் மேனேஜரே எவ்வளவோ பரவாயில்ல. ஒரு வழியா இரவு உணவை முடிச்சுப் படுக்கறதுக்குள்ள மணி பத்து.

இதுலெ  இந்த எழுத்தாளர் வேற, மனுஷன் இருக்கற நிலைமை புரியாம எதையாவது எழுதி, நம்மளை மாதிரி இருக்கறவங்க ஆசையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பாக்கிறாரு. நேராப் போய் அந்த எழுத்தாளர் வீட்டைக் கண்டுபிடிச்சு, நல்லா நாலு கேள்வி கேக்கணும். போறேன் இந்த ஞாயிற்றுக் கிழமை. இதுதான் முதல் வேலை முடிவெடுத்தபடி தூங்கிப் போனேன்.

ஞாயிற்றுக் கிழமை, ஒரு நண்பர் வீட்டுக்குப் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு, அந்த எழுத்தாளர் வீட்டுக்கு போனேன்.

அங்க போய், ‘சார் உள்ளே வரலாமா?’ன்னு ஒரு குரல் குடுத்தேன்.

ஒரு பெண்மணி ‘யாரு?’ என்றாள்.

‘நான் அவரோட ரசிகன். அவரைப் பாக்கணும்’ என்றேன்.

அந்த பெண்மணி என்னைப் பார்த்த பார்வை சரியில்லை. ஏதோ அற்பப் புழுவைப் பார்ப்பது போல் ஒரு பார்வை. சரி இவங்க கிட்ட நமக்கு ஏன் தகராறு, ‘அங்கே அந்தப் பக்கம் இருக்காரு. உள்ளே போங்க’ என்றபடி உள்ளே போனாள் அந்தப் பெண்மணி.

நான் அந்த எழுத்தாளர் இருந்த அறைக்குள்  நுழைந்தேன், ‘அடேடே வாங்க சார்’ என்றார், மலர்ச்சியான முகத்துடன்.

‘உக்காருங்க, என்ன சாப்பிடறீங்க?’ என்ற அவரிடம், நான் சொல்ல வந்த விஷயத்தை எப்பிடி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ‘நான் உங்கள் ரசிகன். சார் நீங்க எழுதின ‘பூலோக சொர்க்கம்’ படிச்சேன்’ என்றேன்.

‘அப்பிடியா அது நான் ரொம்ப ரசிச்சு எழுதினது’ என்றார் அவர்.

சரி எழுத்தாளரே நீங்க ரசிச்சா உங்களுக்குள்ள வெச்சிக்க வேண்டியதுதானே ஏன் எங்க உயிரை வாங்கறீங்க? என்று மனதுக்குள் நினைத்தபடி (நடுத்தர வர்க்கம்), ‘ரொம்ப நல்லா இருந்தது’ அப்பிடின்னேன்.

உடனே அவர் என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘சார் ஒரு எழுத்தாளனுக்கு ரசிகனோட பாராட்டு தான்  ஊட்டச் சத்து மாதிரி. எனக்கு ரொம்ப சந்தோஷம் நீங்க பாராட்டினது’ என்றார் மன நிறைவுடன்.

என் கோபம் அவருக்குத் தெரியுமா? நான் மீண்டும் கோபத்துடன் அவரை நறுக்குன்னு கேள்வி கேக்கணும்னு தயார் செஞ்சு வெச்சிருந்த கேள்விக் கணையைத் தொடுக்க, கொஞ்சம் என்னையே தைரியமூட்டிக் கொண்டு ஆரம்பிக்க வாயெடுத்தேன்.

அந்த எழுத்தாளரின் கண்களில் கண்ணீர்.

‘சார் என்ன ஆச்சு?’ என்று பதறினேன்.

‘ஒண்ணுமில்லை உக்காருங்க’ என்று என்னை அமைதிப்படுத்திவிட்டு, ‘சார் இந்த உலகத்துலெ நிறைய விசித்திரம் இருக்கு. எனக்கு நிறைய வசதி இருக்கு, கார் பங்களா எல்லாம் இருக்கு. ஆனா நான் எழுதற எழுத்துகள் எல்லாம் என்னை வந்து பாக்கறாங்களே அவங்களோட அனுபவம்தான், நான் எங்கயும் போறதில்லெ’ என்றார்.

ஆமா யாரோ சொல்றதையெல்லாம் கேட்டு எழுதிட்டு, நீங்க எழுத்தாளர்னு பேர் வாங்கிக்கிறீங்க என்றேன் (மனதுக்குள்தான்). அதை அப்படியே அடக்கிக்கொண்டு,

‘ஓ அப்பிடியா, உங்க அனுபவங்களைச் சொல்லுங்க, நீங்க எப்பிடி இவ்வளோ நல்லா எழுதறீங்க என்றேன்?’

டேய் நீ இந்த ஆளைத் திட்றதுக்காக இங்க வந்துட்டு, ஏதோ பேட்டி எடுத்துண்டு இருக்கியே? என்னை உணர்த்தியது உள்ளிருந்து ஒரு குரல். அடேடே ஆமாம் சரி சரி கேட்டுற வேண்டியதுதான். அவரை நிமிர்ந்து பார்த்தேன்.

‘சார் எனக்கு ரெண்டு காலும் கிடையாது. இருக்கு… ஆனா இல்லே. ஆமாம், போலியோ அட்டாக். அதுனாலே எப்பவும் வீல் சேர்தான்.  உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் அந்த ‘பூலோக சொர்க்கம்’ கதையிலே எழுதினது எல்லாம் கேள்வி ஞானம் தான்’ என்றார்.

‘அதுனாலே அடிக்கடி வாங்க. நீங்கள்லாம் சொல்றதை வெச்சுதான் நான் நிறையா என் கற்பனையும் சேர்த்து எழுதணும். பாவம் என் பொண்டாட்டி அவளையும் எங்கயும் கூட்டிண்டு போறதில்லே’ என்றார் எழுத்தாளர்.

எல்லாக் கேள்விகளயும் மனதுக்குள்ளே அடக்கிண்டு, ‘சார் நான் அடிக்கடி இங்க வரேன். உங்களோட பேசினது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அப்போ நான் விடை பெறுகிறேன் என்றபடி கிளம்பினேன்.

அந்த எழுத்தாளர் என் மனசுலே இருப்பதைப் படித்தாற் போல, ‘சார் அடிக்கடி வாங்க, உங்க குடும்பத்திலே இருக்கறவங்க ரொம்ப குடுத்து வெச்சவங்க. நடுத்தர வர்க்கம் அனுபவிக்கிற, அத்தனை கஷ்டங்களும் எல்லா நிகழ்வுகளும்தான் சொர்க்கம், பூலோக சொர்க்கம். அதுதான் உண்மையான பூலோக சொர்க்கம்’ என்றார் அந்த எழுத்தாளர்.

நான் உறைந்து போனேன்! மனத்தைப் படிப்பவர்கள்தான் எழுத்தாளர்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “கேள்வி ஞானம்

  1. கடைசியிலே அந்த எழுத்தாளர் மேலே பரிதாபம் வர வச்சுட்டீங்க. ம்ம்ம்ம்ம்!

  2. ஆரம்பத்தில் நகைச்சுவையாக ஆரம்பித்து, போகப்போக யதார்த்தமாகக் கொண்டு சென்று இறுதியில் மனம் நெகிழச் செய்து விட்டீர்கள் ஐயா…… நல்ல கதை.

  3. கன ஜோர்! டாப் கிளாஸ்! வெளுத்து வாங்கறார், தமிழ்த்தேனீ.

  4. என்ன ஒரு யதார்த்தம் நடையில் என்று மகிழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் கண்களில் கண்ணீரை வரவழித்து விட்டது முடிவு. வாழ்த்துக்கள் உங்கள் திறமைக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *