தேவை, மக்கள் கண்காணிப்புக் குழு

உதகை சத்யன்

uthagai sathyanஅன்னா ஹசாரேக்குக் கிடைத்த வெற்றி. சத்தியத்திற்குக் கிடைத்த வெற்றி. நேர்மைக்குக் கிடைத்த வெற்றி. உண்மைக்குக் கிடைத்த வெற்றி. இது ஒரு இனிய தொடக்கம் மட்டுமே.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வெறுமனே தண்டித்தால் மட்டும் போதாது. அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது என்பது அவசியமான ஒன்றுதான். ஆனால் ஜனநாயகத்தின் கடமை அத்துடன் நிற்கவில்லை. ஜனநாயகத்தில் மக்கள் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம்.
பாராளுமன்றமும் சட்ட மன்றமும் மக்களுக்கான சட்டங்களை நிறைவேற்றுகின்றனதானா? என மக்கள் கண்காணிக்க வேண்டும். அச்சட்டங்கள் சரியாக அமல்படுத்தபடுகின்றனவா? என்றும் கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மக்களிடயே அடையாளப்படுத்த வேண்டும். இதை யார் செய்வது? இதற்குத் தலைமை தாங்கப் போவது யார்? இங்குதான் மக்கள் கண்காணிப்புக் குழுவின் அவசியம் தோன்றுகிறது. ஊரெங்கும் மக்கள் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதற்குப் புரட்சியாளர்கள், சமுக ஆர்வலர்கள் பெரும் பங்கு ஆற்ற முடியும், ஆற்ற வேண்டும்.

ஏன் புரட்சியாளர்கள் இந்திய அளவில் ஒன்றாக இணையக் கூடாது? பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கையில்லாவிட்டாலும் ஆயுதம் தாங்கிய புரட்சி என்பதை நிறுத்தி வைத்துவிட்டு, மக்களை விழிப்படையச் செய்து, ஏன் ஒன்றிணைக்கக் கூடாது? கிராமம் தொடங்கி. நகரங்கள் வரை இந்தியாவெங்கும் ஏன் ஒரு சமுதாய இயக்கம் ஆரம்பிக்கக் கூடாது? அரசியலில் பங்கு பெறாமல் ஆனால் அரசியலில் உள்ளவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்க மக்களை ஏன் ஒன்றிணைக்கக் கூடாது?

anna hazare

மக்கள் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து, ஏற்கெனவே மக்களிடம் பிரபலமானவர்களை அக்குழுவில் இடம் பெறச் செய்து இதற்கு ஒரு செயல் திட்டம் எழுதலாமே? அந்தந்த ஊரில், அந்தந்த நகரில், அந்தந்த மாநிலத்தில் பிரபலமானவர்கள் ஏராளம். சமூக உணர்வும் சமூக அக்கறையும் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அவர்களது சித்தாந்தப் பின்னணியை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஊருக்கு, மாநிலத்திற்கு நல்லது நடக்க வேண்டும். மெத்த படித்த ஆசிரியர்கள், சமூக ஊழியர்கள். தொண்டு நிறுவனங்கள். ஏன் மதம் சார்ந்த சமூகத் தொண்டு நிறுவனங்களில் உள்ளவரைக் கூட மக்கள் கண்காணிப்புக் குழுவில் இடம் பெறச் செய்யலாம்.

உண்மையான மார்க்சிஸ்டுகள், புரட்சியாளர்கள், சமுக ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஊழியர்கள் என அனைவரையும் இணைத்து மக்கள் கண்காணிப்புக் குழுக்களை அமைக்கலாம்.

இது சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் அவசியமான, மக்களுக்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்ற ஆலோசனை வழங்கலாம். மக்களுக்கு விரோதமாக அரசு செயல்பட்டால் என்ன செய்யலாம்? என்று மக்கள் கண்காணிப்புக் குழுக்களே முடிவெடுக்கலாம். தேவையெனில் மக்களைத் திரட்டி, சத்தியாகிரகப் போராட்டத்தில் குதிக்கலாம். மக்கள் சக்தி ஒன்றுபட்டு இருந்தால் எந்த அரசும் மக்களை அடக்குமுறை செய்துவிடாது. மீறி அடக்கு முறை செய்தால் மக்கள் சக்தி இன்னமும் பெருகும். மக்கள் சக்தி வளரும். மக்களே முடிவெடுப்பார்கள்,  அதற்கு மக்கள் கண்காணிப்புக் குழுக்கள் தலைமை தாங்கும்.

பூனைக்கு மணி கட்டுவது யார்?

புரட்சியாளர்கள், மார்க்சியவாதிகள், சமூக ஆய்வாளர்கள், பத்திரிகையாளர் மற்றும் தொலைக்காட்சியினர்……… இவர்கள் அனைவரும் சேர்ந்தே இதைச் சாதிக்க வேண்டும்,

இதற்குப் புரட்சியாளர்களின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். உண்மையில் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் புரட்சியாளர்கள், புரட்சியை நேசிப்பவர்கள், சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் ஒன்றுகூடி மக்கள் கண்காணிப்புக் குழுவை அமைக்கப் பாடுபடட்டும். இன்றைய நிலையில் இதைவிடச் சிறந்த புரட்சிகர மார்க்கம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை,

ஒவ்வொரு துறையிலும் செய்ய வேண்டியது என்ன என மக்கள் கண்காணிப்புக் குழுக்கள் முடிவெடுக்கட்டும். அதற்கென ஒரு செயல் திட்டம் வரையட்டும். தம்மால் முடிந்த அளவு அதற்காக உழைக்கட்டும். முழு நேரமாகத்தான் உழைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் இருக்கட்டும். அவரவர் சொந்த வாழ்க்கை, தொழிலில் இதில் ஈடுபட்டுக்கொண்டே சிறிது நேரம் மக்கள் இயக்கத்திற்காக உழைத்தாலே போதுமானது.

மக்கள் கண்காணிப்புக் குழு, தன் செயல் திட்டத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல, தேவையான நிதியை ஈட்ட சினிமா நட்சத்திரங்களின் உதவியை நாடினாலும் தவறில்லை. சமூக உணர்வு, தேசப் பற்று, விஞ்ஞான அறிவு உள்ளவர்கள் எந்தத் துறையிலும் உள்ளனர்.

a.r.rahmanஏன் மக்கள் இயக்க நிதிக்காக இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அல்லது சினிமா நட்சத்திரங்களின் ஆடல், பாடல் நிகழச்சிகள் கூட நடத்தலாம். இந்நிகழ்ச்சிகளில் கூட மக்கள் கண்காணிப்புக் குழுவின் கொள்கைகளை எடுத்துச் சொல்ல உதவியாகச் சிறந்த இயக்குநர்கள், சிறந்த படைப்பாளிகள், சிறந்த எழுத்தாளர்கள் கொண்ட குழுவை அமைக்கலாம்.

மக்களுக்கு நல்ல கருத்துகளைக் கொண்டு செல்ல வேண்டும். 100 சதவீத பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என்ற நிலை மாறி 50 சதவீத சமூக உணர்வுள்ள நிகழ்ச்சிகளை நடத்தினால், ஊடகங்கள் மூலம் இன்றைய இளைய சமுதாயத்தினரைச் சென்றடையும்.

சமூக அக்கறை, தேசப் பற்று, தியாக உணர்வு, நல்ல எண்ணங்கள் உடைய பிரச்சனைகள், மன நோயாளிகளின் பிரச்சனைகள், குழந்தைகளின் பிரச்சினைகள், பெண்களுக்கான பிரச்சனைகள், சாதிய கொடுமைகள், மூடநம்பிக்கை……. என்று பல்வேறு விதமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து,  பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் கலந்து கொடுத்தாலே பெரும் நல்ல விளைவுகள் ஏற்படும். அதுவே, சமூக மாற்றத்தின் முதலடியாக விளங்கும்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், இந்தியா மீது பற்றுள்ளவர்கள் யோசிப்பார்களா?

இங்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இத்தகைய இயக்கத்தில் சமூக அக்கறையுள்ள ஆன்மீக வாதிகளையும் இணைத்துக்கொள்ளலாம். ஆன்மீகம் அவர்களது தனிப்பட்ட விஷயம்.

sachin tendulkarஇந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின், கோடிகோடியாகப் பணம் கொடுக்க முன்வந்தும் பிராந்தி, விஸ்கி விளம்பரத்தில் நடிக்க மறுத்தார். இது அவருடைய சமூக அக்கறையைக் காட்டுகிறது. இந்தச் சமூக உணர்வை நாம் ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது? மக்கள் கண்காணிப்புக் குழுவில் அவரும் இணைந்தால் எவ்வளவு நான்றாகயிருக்கும்.

அவர் கையொப்பமிட்ட ஒரு துண்டு பிரசுரத்தில் பூனை குறுக்கே போனால் காரியம் நடைப்பெறாது என்பது ஒரு மூடநம்பிக்கை. சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என்பது சந்திரனையும் சூரியனையும் பாம்பு பிடிப்பது அல்ல. மாறாக நிழல் பிடிப்பதுதான் என்ற விஞ்ஞானன உண்மையை நாடெங்கும் விநியோகித்தால் எத்தனை கோடி (பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள்) இந்தியர்கள், இந்த மூட நம்பிக்கையைப் பற்றி யோசிப்பார்கள்? எத்தனை பேர் மாறுவார்கள்? ஆனால் சச்சின் ஒரு விநாயகர் பிரியர். இது, அவரின் சொந்த விஷயம். அவரிடம் உள்ள சமூக உணர்வை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். காமம் போல ஆன்மீகமும் அந்தரங்கமே. சமூக விஷயங்களை அலசி ஆராயும் போது ஆன்மீகத்திற்குப் பெரும்பாலும் இடம் அளிக்க முடியாது.

சச்சின் போன்ற சமூக உணர்வுள்ளவர்கள் ஒவ்வொரு துறையிலும் இருக்கிறார்கள். சமூக மாற்றத்தை விரும்புவோர், அவர்களை ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது?

ஒவ்வொரு நீண்ட பயணத்திற்கும் முதலடி என்று ஒன்று உள்ளது. இந்திய மக்கள் உண்மையில் இரண்டாவது சுதந்திரம் பெற, வாழ்வு பெற, எல்லாரும் எல்லாமும் பெற முதலடி எடுத்து வைக்கப் போகிறவர் யார்?

மார்க்சியத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் தாழ்மையுடன் என் கருத்தை பரிசீலிக்கக் கோருகிறேன். எனக்காக அல்ல, மக்களுக்காக அல்ல, சத்தியத்திற்காக.

முயல்வோம், முயன்றால் முடியாதது ஏதுமில்லை.

வெற்றி நமதே.

================================================

படங்களுக்கு நன்றி: http://www.hindustantimes.com, http://en.wikipedia.org, http://ipl-twenty20-cricket-info.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “தேவை, மக்கள் கண்காணிப்புக் குழு

 1. திரு..உதகை சத்யன் கூறுவதின் தொடர்பாக…

  1. முதலில் உருவாக்கப்படவேண்டியது: பொதுஜன அபிப்ராயம்/Public Opinion as defined by Walter Lippman.
  2. மக்கள் கண்காணிப்பு/ மக்களுக்கு ஆலோசனை இரண்டும் இணைந்து இயங்க வேண்டும்: Model: Citizen Advice, UK.
  3. 2வதற்கு பின்பலம்: ஓய்வு பெற்ற பெரியவர்கள், குடும்பத்தலைவிகள், மாணவ சமுதாயம்.
  4. தன்னலமற்ற தலைவர்கள் வேண்டும்.
  5. நாட்டுப்பற்று.

 2. Good Suggestion,

  தவறு செய்யும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மக்களிடயே அடையாளப்படுத்த வேண்டும். நேற்று நல்ல, தெளிந்த, பெருக்கெடுத்து ஓடின ஆறுகள் எல்லாம் இன்றைக்கு அசுத்தமாகி, சாக்கடைபோல் ஆகிவிட்டன. இதே மாதிரிதான் எல்லா அரசியல் கட்சிகளும் மக்களுக்குச் சேவை என ஆரம்பித்து, சுயலாபத்தில் முடிந்துவிட்டன. இந்தத் தலைமுறை ஊழலைக் களைய முடிவெடுத்து அன்னா ஹசாரே பின் அணி திரண்டுவிட்டார்கள்.

 3. திரு. உதகை சத்யன் அவர்களுக்கு நன்றி. மீண்டும் இதுபோல நல்ல கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.

 4. திரு குமார் அவர்களுக்கு நன்றி.
  உங்கள் கருத்துகள் சரியானவை.
  மிக்க நன்றி.
  தொடர்ந்து நேரம் கெடைக்கும் போது எழுதுவேன்.
  தங்கள் ஆதரவுக்கு மீண்டும் நன்றி.
  உதகை சத்யன்.

 5. தாங்கள் கூறிய அனைத்துக் கருத்துகளும் இந்திய திருநாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை.
  அப்படி ஒரு கண்காணிப்பு குழு அமைந்தால் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, மக்களிடம் (லஞ்சம்) ஊழல் செய்யும்
  காவல் துறையினரை மிகவும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
  thanks…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *