அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளுக்கு, சொந்த நாட்டிலேயே ஒரு ராஜ்யதூதராலயம்

1

 

கே.எஸ்.சுதாகர்
 
வெள்ளையர்கள் (First Fleet) முதன் முதலில் அவுஸ்திரேலியாவிற்கு அடியெடுத்து வைத்த தினத்தை ‘அவுஸ்திரேலியா நாள்’ என்று கொண்டாடுகிறார்கள்.
 
1972 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தன்று (தை 27), சிட்னியில் இருந்து கன்பராவிற்கு வந்த ஆதிக்குடிகள் நான்கு பேர் கன்பராவில் உள்ள பாராளுமன்றத்திற்கு (தற்போதைய பழைய பாராளுமன்றம்) முன்னால் உள்ள Ngunnawal என்ற நிலத்தில் ஒரு கூடாரம் அமைத்து தமது கொடியைப் பறக்கவிட்டார்கள். ‘அவுஸ்திரேலியா அரசு தங்களை  வெளிநாட்டுப் பிரஜைகள் போல நடத்துவதால், வெளிநாட்டு மக்களுக்கு இருக்கும் Embassy போல தங்களுக்கும் ஒன்று தேவை’ என அறிவித்து அந்தக் கூடாரத்தை ஆதிக்குடிகளின் Embassy என அறிவித்தார்கள்.

அங்கிருந்தபடியே ஆதிவாசிகள் தமது நிலம் சம்பந்தமான உரிமைகளை நிலைநாட்டுவதற்காக பகிஸ்கரிப்பு ஒன்றை மேற்கொண்டார்கள். ஆதிவாசிகள் நிலம் சம்பந்தமாக வலுவான கொள்கை உடையவர்கள். உலகத்தைப் படைத்தவர்கள் முன்னோர்கள் என நம்புபவர்கள். இயற்கையுடன் ஒன்றி வாழ விரும்புபவர்கள். அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் நிறையக் கனிமங்கள் இருந்தன. அவற்றை அகழ்தெடுப்பதற்கான உரிமையை அரசு பல நிறுவனங்களுக்கு வழங்கியது. அவர்களது பகிஸ்கரிப்புக்கு ஆதரவாக அவர்களுடன், சுதேசிகள் அல்லாதோரும் (Non – Indigenous supporters) நாலாபுறமும் இருந்து வந்து அங்கே கூடினார்கள். அதற்கடுத்த மாதம் அவர்கள் நிலம் சம்பந்தமான பல கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தார்கள். இவை நிராகரிக்கப்பட்டு, குடில் அகற்றப்பட்டது. எட்டுப்பேர் கைது செய்யப்பட்டார்கள். அவுஸ்திரேலிய அரசு அந்தக் கூடாரத்தை ஆதிக்குடிகளின் உத்தியோகப்பூர்வ தூதராலயமாக ஏற்றுக் கொள்ளவில்லை.
 
1973 ஒக்டோபரில் மீண்டும் 70 ஆதிவாசிகள் கன்பரா பாராளுமன்றத்திற்கு முன்பாகக் கூடினார்கள். திரும்பவும் தற்காலிகக் கூடாரம் (Tent Embassy) அமைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் காரணங்களால் இது பலமுறை தாக்கப்பட்டது. எரிகுண்டுகள் வீசப்பட்டன. 2003ல், யூனில் நடந்த மோசமான தாக்குதலால், 31 வருடங்கள் பேணிப்பாதுகாத்தத் தரவுகள் அழிக்கப்பட்டன.
 
நிறுவப்பபட்டு 20 வருடங்கள் பூர்த்தியான நிலையில் அது மீண்டும் புனரமைக்கப்பட்டு 1992ம் ஆண்டு  முதல் நிரந்தரமாக அங்கே உள்ளது. அவுஸ்திரேலிய அரசு பலமுறை அதை அகற்றுவதற்கு முயற்சித்த போதிலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

 இந்த வருடம் தை மாதம் நடந்த 40வது வருட அவுஸ்திரேலிய தினத்தன்று, பிரதமர் ஜூலியா கில்லாட்டும் எதிர்க்கட்சித்தலைவர் ரோனி அபொற்றும் ஆதிவாசிகளின் தூதுவராலயத்திற்கு அண்மையாகவிருந்த (Lobby Restaurant) லாபி விடுதிக்கு வந்திருந்தார்கள். அன்றைய தினம் காலை ரோனி அபொற் அவர்கள் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனமான ABC என்ற தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்முக உரையாடல் சம்பந்தமாக ஆதிவாசிகள் ஆத்திரம் அடைந்திருந்தார்கள்.  ஆதிவாசிகள் ’அவுஸ்திரேலியா நாளை’ எதிர்ப்பதற்கு முடிவெடுத்தார்கள். அதனால் அவர்கள் இருவரும் எதிர்ப்பாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டார்கள். அவர்களிடமிருந்து மீண்டு செல்வதே பெரும்பாடாகிவிட்டது. காவல்துறை பாதுகாப்புடன் ஜூலியா கில்லாட்டும் ரோனி அபொற்றும் அங்கிருந்து அகற்றப்பட்டார்கள். அந்த நிகழ்வின்போது பிரதமர் தனது ஒரு கால் பாதணியை இழக்க நேரிட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளுக்கு, சொந்த நாட்டிலேயே ஒரு ராஜ்யதூதராலயம்

  1. அம்மையாருக்கும் அவர் செருப்புக்கும் என்று ஒத்துப்போயிருக்கிறது.
    அவரது எதிரி அவரது காலடியில்; பழங்குடி மக்களல்ல என்பது அவருக்கு புரியுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *