எல்லோருக்கும் நம் இறைவன் !
விசாலம்
காக்கும் கடவுளான ஸ்ரீமகாவிஷ்ணு உலகசிருஷ்டியில் ஒரு பாரபட்சமின்றி அபயம் என்று வந்தவர்களைக் கைவிடாமல் காப்பாற்றியிருக்கிறார் இதில் ஆறறிவு படைத்தவர்கள் மட்டுமல்லாது ஐந்தறிவு பிராணிகளுக்கும் தன் அருள் தந்து உயர்ந்த பதவியையும் அளித்திருக்கிறார்.
ஸ்ரீராமர் கானகத்தில் இருந்த தருணத்தில் பலருக்கு இவரது அன்பும் அருளும் கிடைத்திருக்கிறது ஒரு படகோட்டியான குகன் ராமர் ,சீதை இலட்சுமணர் மூவரையும் மிகவும் அன்பொழிய வரவேற்று .உபசரித்து பின் கங்கையைக்கடக்கவும் உதவி புரிந்தான். அவனை அப்படியே ஆலிங்கனம் செய்துகொண்ட ராமர் தன்னுடைய சகோதரானாகவும் ஏற்றுக்கொண்டார்
அரக்கனின் மகனாகப்பிறந்த பிரஹ்லாதன் தன் ஒரே நாமமான “ஓம் நமோநாரயணாய “என்பதை விடாமல் பிடித்துக்கொண்டு அவனது தந்தை கொடுத்த அத்தனைக்கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு உயிர் பிழைத்தான் மலை உச்சியிலிருந்து அவன் தள்ளப்பட்டவுடன் ஒடோடி வந்து தன்கைகளில் அவனை ஏந்தியபடி காப்பாற்றினார் விஷ்ணு அடுத்ததாக யானையை ஹிரண்யகசிபு அனுப்ப யானை தன் காலால் அவனை மிதிக்க வந்தவுடன் பிரஹ்லாதனைக்கண்டு அருகில் வந்து அப்படியே வணங்கிவிட்டு சென்றது கடைசியில் விஷ்ணுவே நரசிம்மாவதாரம் எடுத்து அவனுக்கு அருள் புரிந்தார் தன் பக்தனுக்கு எதிரியாக நின்ற அரக்கனைக்கொன்றாலும் கடைசியில் மோட்சம் அளித்தார்
கானகத்தில் ராமர் சீதாபிராட்டியின் மடியில் தலை வைத்துப்படுத்திருக்க அந்த நேரம் பார்த்து ஜயந்தன் காகம் உருவில் வந்து சீதையின் மார்ப்பைக்கொத்தியது ஸ்ரீராமர் தன் மேல் இரத்தத்துளி சொட்டுவதைப்பார்த்து விழித்து காகத்தின் செயலைப்பார்த்து கடுங்கோபம் கொண்டு தர்ப்பையில் பிரம்மாஸ்திரம் ஜபித்து அதன் மேல் ஏவினார் .ஜயந்தன் உருவில் இருந்த காகம் உயிர்ப் பிச்சைகேட்டு பிரும்மா ,விஷ்ணு சிவன் எல்லோரிடமும் போக ஸ்ரீராமர் விட்ட அஸ்திரத்தை அவர்கள் தடுத்து நிறுத்த முடியாதென்றும் அதனால் ஸ்ரீராமரிடமே போய் மன்னிப்புக்கேட்கும்படி சொல்ல காகம் திரும்பவும் ஸ்ரீராமரிடமே வந்து அவர் பாதங்களில் விழுந்தது பரந்தாமனும் காகத்தை மன்னித்து உயிர்ப்பிச்சை அளித்தார் .
இப்போது பார்த்தசாரதியாக வந்த கிருஷ்ணனைப்பார்க்கலாம் மஹாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் .அதில் அர்ஜுனனுக்குத்தேர் ஓட்டுபவராக கண்ணன் வருகின்றான் அப்படித்தேரை ஓட்டிவரும் போது தேரில் கட்டிய குதிரைகள் தாகத்தால் நாக்கு உலர்ந்து கனைத்தன . இதைப்புரிந்து கொண்ட கிருஷ்ணர் குதிரைகளின் தாகம் போக்க தன் அம்பை பூமியில் வீசிதண்ணீரை வெளியே பீச்ச வைத்து அதனது தாகத்தைப்போக்கினார் .
பெருமாளே தன் மூச்சாகக்கொண்டிருந்த இந்திராஜும்னன் என்ற அரசன் ஒரு தடவை தவம் செய்து கொண்டிருக்க அவரைப்பார்க்க திரு அகத்திய முனிவர் வந்தார் .தன் தவத்தில் மூழ்கிப்போன அரசன் அகத்தியமுனிவரை வரவேற்க மறந்தான். பின் முனிவர் தான் வந்ததைத்தெரிவிக்க கனைத்தார் பின்னர் அவர் கோபம் கொண்டு “உனக்கு இத்தனை கர்வம் கூடாது நீ யானையாகப் பிறக்கக் கடவது ” என சாபம் கொடுத்தார் . அடுத்த பிறவியும் வந்தது . அரசன் யானையாகப் பிறந்தான். ஆனாலும் அந்தப் பரந்தாமனை நினைக்காமல் இல்லை தினமும் கஜேந்திரன் அருகே இருக்கும் குளத்திற்குச்சென்று தாமரை மலரைப்பறித்து அந்தத்திருமாலை வழிபடும் ஒரு நாள் …. தாமரை மலரைப்பறிக்க ஒரு முதலை அதன் காலைக்கவ்வியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீருக்குள்ளே இழுக்க ஆரம்பித்தது /யானையோ தன் பூஜை முடியும் வரை பொறுத்துக்கொள்ளச்சொல்லி கெஞ்சியது. ஆனாலும் முதலை விடவில்லை , யானையும் கடைசி வரைப்போராடியது . ஒன்றும் பலனளிக்காமல் போக “ஆதிமூலமே என்னைக் காப்பாற்று “என்று அலறியது திருமால் கருடன் மேல் பறந்து வந்து தன் சக்கரத்தை வீசி முதலையின் கழுத்தை அரிந்து யானையைக்காப்பாற்றிவிடுகிறார். இதுவே ‘கஜேந்திர மோட்சம்’, என பாகவதத்தில் மிகவும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது
பறவையை எடுத்துக்கொண்டால் ஜடாயூ நம் கண்முன்னால் வருகிறார் .ராமர் கானகத்தில் பர்ணசாலை அமைத்து சீதை லட்சுமணருடன் இருந்த நேரத்தில் இராவணன்சீதையை அபகரிக்க திட்டம் போட்டு அதில் வெற்றியும் பெற்று சீதாபிராட்டியை தூக்கி தன் விமானத்தில் வைத்து பறக்கும் நேரத்தில் ஜடாயூ என்ற பட்சி ராவணனை மடக்கியது அவனை மேலே போகவிடாமல் போர் புரிந்தது .சீதையைக்காப்பாற்ற தன் உயிர் போனாலும் போகட்டும் என்ற முடிவில் போரிட்டது தன் அருமை நண்பர் தசரதரின் மருமகள் சீதையைக்காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தில் ஆக்ரோஷமாகப் போரிட அந்த இலங்கேஸ்வரன் தன் கத்தியால் அதன் இறகுகளை வெட்டி மாய்த்தான் .இதை எதிர்ப்பார்க்காத ஜடாயு சுருண்டு கீழே விழ அந்த நேரத்தில் ஸ்ரீராமரும் சீதையைத்தேடி அந்தப்பக்கம் வர ஜடாயூவின் நிலைமையைக்கண்டார் .ஜடாயூ தன் உயிரைப்பிடித்து வைத்துக் கொண்டு நடந்த விஷயத்தை பரந்தாமனிடம் சொல்லி உயிரை விட்டது. ஸ்ரீராமர் அதைத் தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து அதற்கு ஈமக்கடன்கள் எல்லாம் செய்து மோட்சமும் அளித்தார் .பறவைக்கும் மோட்சமளித்த பரந்தாமனின் கருணையை என்னவென்று சொல்வது?
இலங்கைக்குப்போக பாலம் அமைக்கும் தருணம் எல்லா வானரங்களும் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்க ஒரு சிறு அணிலும் தானும் ஸ்ரீராமருக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டும் என்று எண்ணி தன் முதுகை ஈரத்தில் நனைத்து பின் மணலில் உருண்டு அந்த மணலை பாலம் கட்டும் இடத்தில் உதறிவிட்டு வந்தது. இதைப்பலமுறை செய்ய ராமரும் இதைக் கவனித்து ஓடோடி வந்து அதை மடியில் வைத்து தன் மூன்றுவிரல்களால் அதை அன்புடன் அதன் முதுகில் தடவிக்கொடுத்தார். அந்த மூன்று வரிகளை இன்றும் அணிலிடம் பார்க்கலாம்
சுக்ரீவன் தன் சகோதரன் வாலி யுடன் போரிட ராமரின் சரணம் நாட வானர இனமாக இருந்தாலும் சுக்ரீவனை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு வாலியுடன் போரிட்டு அவனுக்கு ராஜ்ஜியமும் திரும்ப வாங்கித்தருகிறார் ஸ்ரீ ராமர் அத்துடன் இல்லாமல் அனுமனுக்கு சிறிய திருவடி என்ற உன்னத பதவியும் கொடுத்து சிரஞ்சீவி பட்டமும் அளிக்கிறார் .தவிர அவர் ஆசைபடி தன்னிடமே இருந்து சேவை செய்யும் வாய்ப்பையும் அளித்து கௌரவிக்கிறார் . அவரது அன்பை என்னவென்று சொல்ல !
கிருஷ்ணாவதாரதில் கண்ணனைக்கொல்ல வந்த எல்லோருக்குமே மோட்சம் கிடைத்து விடுகிறது இதில் காளிங்கன் என்ற நாகம் நம் நினைவில் வரும் காளிங்கன் கக்கும் விஷத்தினால் யமுனையில் வாழும் பல நீர் விலங்குகள் மாண்டன மீன்களெல்லாம் செத்து மடிந்தன இதன் முன் கதைஎன்னவென்றால் முன்பு கருடன் யமுனையில் இருந்த மீன்களை எல்லாம் தின்று வந்தது இதனால் வருந்திய மீன்கள் சௌபரி என்ற முனிவரிடம் சென்று முறையிட்டன முனிவரும் மீன்களில் மேல் பரிதாபப்பட்டு கருடனை அழைத்து யமுனையில் வாழும் மீன்களைத்தின்னால் அது இறந்துவிடும் என்று சாபம் கொடுத்தார் கருடனுக்கு பயந்துக்கொண்டிருந்த காளிங்கன் நல்லதாகப் போயிற்று என்று எண்ணி தான் வாழ மிகவும் பாதுகாப்பான இடம் யமுனைதான் என்று அங்கு வந்து தங்கி அட்டூழியம் செய்தது இதனால் கோப கோபியர்கள் கவலையுற்று கண்ணனிடம் சொல்ல அவரும் யமுனையில் நேரே காளிங்கனின் தலையில் குதித்து வாலைப்பிடித்தபடி நடனமாடிபோர் புரிந்து அதை சாகும் நிலைக்கு கொண்டுவர காளிங்கனின் இரு மனைவிகள் அழுதபடி கண்ணனிடம் சரணமடைந்தனர் பின் தங்கள் மாங்கல்ய பிச்சை கேட்டனர்.. கண்ணன் அந்த கொடிய பாம்பையும் மன்னித்து உயிர்ப்பிச்சை அளித்தார். இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகளில் அனைத்துயிர்களிடத்தும் பரந்தாமன் சமமாக கருணைக்காட்டி உய்விக்க வருபவன் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். என்னே ஆண்டவனின் அருள்!
படங்களுக்கு நன்றி:
http://www.radiokrishna.com/cosmologia.htm
http://devotionalonly.com/lord-mahavishnu-pictures-and-wallpapers/