முகம் பார்க்க ஆடி

வே. எழிலரசு
faces

முருகனுக்கு இருப்பதை
ஆறுமுகம் எனச் சொல்கிறீர்கள்.
இராவணனை மட்டும் ஏன்
பத்து தலை என்று சொல்ல வேண்டும்
பத்து முகங்கள் என்று சொன்னால் என்ன?

தலையும் முகமும் வெவ்வேறு அர்த்த தளங்களை
விரிக்கும் குறியீடுகளா?

அப்படியானால் என் முகம் என்பது என்ன?
கண்ணாடியில் நான் பார்ப்பதா?
பிறரால் நான் பார்க்கப்படுவதா?

என் முகம்
இரண்டு கண்களும் இரண்டு நாசி துவாரங்களும்
புன்னகைக்கும் உதடுகளும்
இரண்டு கேள்விக் குறிகளுக்குள் அடைபட்ட
சதைக்கோளம் மட்டும்தானா?

அன்பின் வழித்தடம் அழியாத வரைபடமா?
ஒப்பனைகளில் ஒளியா வக்கிரத்தின் வார்ப்படமா?
என் முகமா நான்?
என் மனமா நான்?

என் முகம் எப்படி எப்படியோ சிலருக்கு நினைவில் இருக்கலாம்.
எவளோ ஒருத்திக்கு ஒரு முத்தமாக
எவனோ ஒருவனுக்கு ஒரு குவளை பழச் சாறாக.
வன்மத்துடன் எங்கோ எவனோ தீட்டுகின்ற கத்தியில்
என் குருதியை ருசிக்கும் அவா இருக்கலாம்.

என் முகம் என்பது சிலருக்கு
நான் படித்த புத்தகங்களாகவும்
சிலருக்கு
நான் எழுதிய கவிதைகளாகவும் இருக்கலாம்.
இதுவரை என்னைப் பார்த்திராதவர் கூட அவரவர்களுக்கான
என் முகத்தை வரைந்து விட்டிருக்கலாம்.

வலைத்தள நண்பர்கள் வரைந்துள்ள
எனக்கான முகத்தைக்
கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்க வெண்டும்
என் கழுத்துக்கு மேலே
எப்பொழுதும் ஒரே முகத்தைப் பொருத்திக்கொண்டதில்லை
உங்களைப் போலவே நானும்.

பறவையின் முகத்தோடு சில நாட்களும்
விலங்குகளின் முகத்தோடு சில காலமும்
நான் அலைந்து திரிந்ததே
இப்போதைய முகத்தை கண்டடையத்தான்.

இந்த எனது முகமும் நிரந்தரமல்ல.
நாளைய முகத்தின் மாதிரி பிரதி.
ஒரு ஓவியன் தூரிகையின் சில தீற்றல்களால்
ஒரு முகத்தை வரைந்துவிடுகின்றான்.

நான் எனது நாளைய முகத்தை வரைய பல தீற்றல்களை
அழிக்க வேண்டியுள்ளது.
ஒரு நரியின் ஒப்பனையை நான் கலைத்த போது
மான் என அறிந்தார் யாவரும்.

ஒப்பனைகள் களைகின்றபோதெல்லாம்
அகத்தில் சுடர், புறத்தில் பூக்கள்.

இப்பொழுது என் முகம்
ஒரு பறவையின் முகத்தைப் போல் இருப்பதாகக்
காதலி சொல்கிறாள்.

நிஜமாக எப்படி இருக்கிறது என்று
நண்பர்களைக் கேட்டுத்தான் அறிய வேண்டும்,
அவர்கள் ஓவ்வொருவரும்
என்றென்றும் ரசப்பூச்சு அழியாத கண்ணாடி ஒன்றைத்
தங்கள் கண்களுக்குள் ஒளித்து வைத்துள்ளார்கள்.

====================================

படத்திற்கு நன்றி – http://www.muchanu.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “முகம் பார்க்க ஆடி

 1. oru nija kavinjan nigazhththugira , murugan raavnan patriya uraiyaadal , avan nija kavinjan yenbadhaal mugam patriya unnadhamaana kavidhaiyaaga maarivittadhu. ‘naan yenadhu naalaya mugathai varaiya pala theetralgalai azhikkavendiyulladhu’ yenbadhu mugangalai thaandi vaasippavanai azhaithuchchelvadhai rasiththen.

 2. சமீபத்தில் நான் படித்த ,ரசித்த,கவிதைகளுள் ஒன்று..வே.எழிலரசு-வின் கவிதை.
  அவர் தொட்ர்ந்து எழுத வேண்டும்.
  இந்த கவிதையில் கடைசி வரி..”நிஜமாக எப்படி இருக்கிறது என்று
  நண்பர்களைக் கேட்டுத்தான் அறிய வேண்டும்,
  அவர்கள் ஓவ்வொருவரும்
  என்றென்றும் ரசப்பூச்சு அழியாத கண்ணாடி ஒன்றைத்
  தங்கள் கண்களுக்குள் ஒளித்து வைத்துள்ளார்கள்.”என்ற முடிப்புக்கு சபாஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *