இஸ்ரேல் பயணம் – 6
நாகேஸ்வரி அண்ணாமலை
இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில் விமானத்தில் சென்று இறங்கினாலும் டெல் அவிவ் நகருக்குப் போகும் திட்டம் எங்களுக்கு இல்லை. அது இப்போது மிகவும் பெரிய தொழில்நகரமாகி விட்டது. இஸ்ரேலின் ஜெருசலேம் மிகப் பழமை வாய்ந்த ஊர். இங்குதான் கிறிஸ்துவர்களின் வேதப் புத்தகமாகிய பழைய, புதிய ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல இடங்களைக் காண முடிகிறது. இதனால் ஜெருசலேமில் தங்கிகொண்டு இஸ்ரேலின் மற்ற இடங்களையும் பாலஸ்தீனர்களின் ஆளுகையில் இருக்கும் வெஸ்ட் பேங்க்கில் இருக்கும் இடங்களையும் பார்ப்பதென்று முடிவு செய்தோம். டெல் அவிவ் விமான நிலையம் டெல் அவிவிற்கும் ஜெருசலேமிற்கும் இடையில் இருக்கிறது. (டெல் அவிவ் விமான நிலையத்தின் பெயர் பென் குரியன் விமான நிலையம். போலந்தில் 1888-இல் பிறந்த பென் குரியன் தன் இளவயதிலேயே ஸயோனிஸத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆட்டோமான் காலத்திலேயே பாலஸ்தீனத்திற்கு வந்து யூதர்களுக்கென்று தனி நாடு நிறுவுவதில் தீவிரமாகப் பணிபுரிந்தார். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு அதன் முதல் பிரதம மந்திரியானார்.) டெல் அவிவ் விமானநிலையத்தை விட்டு ஜெருசலேம் நோக்கி வர வர சமவெளியாக இருந்த இடங்கள் மலைப்பாங்கான இடங்களாகவும் பாலைவனப்பிரதேசமாகவும் மாறிக்கொண்டிருந்தன. ஜெருசலேமும் இம்மாதிரி மலைப்பாங்கான இடத்தில் அமைந்திருக்கிறது.
ஜெருசலேம் நகரம் 48 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. இது பரப்பளவைப் பொறுத்த வரை இஸ்ரேலின் பெரிய நகரம் என்று கருதப்பட்டாலும் ஜனத்தொகையில் டெல் அவிவை விட சிறியதுதான். இங்கு வாழும் 7,00,000 பேர்களில் 4,60,000 பேர் யூதர்கள், 2,25,000 பேர் இஸ்லாமியர்கள் (அரேபியர்கள்), 15,000 பேர் கிறிஸ்துவர்கள். இந்த நகரின் மையத்தில் உள்ள புராதனப் பகுதி புராதன நகரம் (old city) என்று அழைக்கப்படுகிறது. இப்போது இந்த புராதன நகரத்தைச் சுற்றிப் பல புறநகர்ப் பகுதிகள் தோன்றியிருக்கின்றன. புராதன நகரம் கடல் மட்டத்திற்கு மேல் 2,600 அடி உயரத்தில் இருக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளாக உருவாக்க ஐ.நா. 1947-இல் திட்டமிட்டபோது ஜெருசலேம், பெத்லஹேம் போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர்கள் ஐ.நா.வின் நேர் பார்வையில் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு இஸ்ரேலியர்களுக்கும் அரேபியர்களுக்கும் நடந்த ஆறு சண்டைகளில் 1967-இல் நடந்த சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் ஜெருசலேமை தனதாக்கிக் கொண்டது. அதனால் அது இப்போது இஸ்ரேலின் கீழ் இருக்கிறது.
புராதன நகரம் முழுவதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக இருக்கிறது. அது பல மட்டங்களைக் கொண்டதாக இருக்கிறது. அதற்குள் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாது. அதற்குள் போவதற்கு ஏழு வாயில்கள் இருக்கின்றன. நடந்து செல்லக் கூடியவர்கள் மட்டுமே புராதன நகருக்குள் சென்று அங்குள்ள பைபிளோடு தொடர்புடைய, யூதர்களும் முஸ்லீம்களும் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடும் பல இடங்களையும் பார்க்கலாம். அது ஒரு தனி உலகம்.
ஜெருசலேமில் ஆங்காங்கே ஆலிவ் மரங்களும் பேரீச்சம்பழ மரங்களும் இருக்கின்றன. இவை இரண்டும் இந்தப் பிரதேசத்தில் காலம் காலமாக விளைபவை. ஆனால் அமெரிக்க யூதர்களிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் இன்னும் மற்ற இடங்களில் வாழும் யூதர்களிடமிருந்தும் இஸ்ரேலுக்கு நிறையப் பணம் வருவதால், விவசாயத்தில் புது தொழில்முறைகளைக் கையாண்டு இஸ்ரேல் முழுவதும் பல வகைச் செடிகளைப் பயிர்செய்கிறார்கள். இங்கு விளையும் கத்தரிக்காய் பெரிதாகவும் சுவையாகவும் இருக்கிறது. மேலும் மிகவும் பெரிதாக இருந்தாலும் பிஞ்சாக இருக்கிறது. ஒரு நாள் அவற்றை வாங்கிச் சமைத்த எனக்கு அவற்றில் இரண்டையாவது இந்தியாவிற்குக் கொண்டுவர ஆசை. இஸ்ரேலின் சொட்டு நீர்ப் பாசன முறையை அவர்களிடமிருந்து கற்றுத் தமிழ்நாட்டிலும் இப்போது அதைக் கடைப்பிடிப்பதாகப் பத்திரிக்கையில் படித்தேன். நவீன விவசாயத் தொழில் முன்னேற்றத்தில் இதுவும் ஒன்று. அதுவும் தண்ணீர் அதிகம் இல்லாத இஸ்ரேலில் இந்த முறை மிகவும் பயன்படுகிறது.
ஜெருசலேம் முழுக்க பேருந்துகளிலேயே போய்வரலாம். நிறைய பேருந்துகள் ஓடுகின்றன. சாலைகளின், ஊர்களின் பெயர்கள் ஹீப்ரு, அரேபியம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ளன. யூதர்களுக்கு வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் வரை ஓய்வு தினம் (shabbath day – அதாவது அன்று இறைவனுக்கு நன்றி சொல்லி முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று கருதுவதால்). அன்று அரசுப் பேருந்துகளை நிறுத்திவிடுகிறார்கள்; கடைகளையும் மூடிவிடுகிறார்கள். உணவகங்களும் இதில் சேர்த்தி. ஆனால் துபாயில் ரம்ஜான் சமயத்தில் போல் வெளியில் நம் உணவை உண்பதைத் தடுப்பதில்லை.
ஜெருசலேமில், குறிப்பாக பழைய நகர்ப் பகுதியில் நிறைய யூதர்கள் தங்களுடைய பாரம்பரிய உடைகளில் நடமாடிக்கொண்டிருந்தனர்.
ஜெருசலேமிலும் புறநகர்ப் பகுதிகளில் அமெரிக்க மாடலில் பெரிய மால்கள் இருக்கின்றன. அமெரிக்க மாடல் மால்கள் உலகெங்கிலும் பரவி வரும்போது அமெரிக்காவிடமிருந்து எக்கச்சக்கமாகப் பண உதவி பெறும் இஸ்ரேலில் இந்த மாதிரி மால்கள் இல்லாமல் இருக்குமா?
ஜெருசலேமைச் சுற்றிலும் சிறிய தேவாலயங்கள், கிறிஸ்தவத் துறவி மடங்கள் (monasteries) மற்றும் மசூதிகள் இருக்கின்றன. பழைய நகரை விடுத்து ஜெருசலேமில் மிக முக்கியமான இரண்டு இடங்கள் எல்லோரும் பார்க்க வேண்டியவை. ஒன்று இஸ்ரேல் மியுஸியம் (The Israel Museum); இரண்டாவது யாத் வாஷம் (Yad Vashem). முதலாவது யூதர்களின் பழைய பெருமை வாய்ந்த சரித்திரத்தை எடுத்துக் கூறி தங்கள் இனம் இறைவனின் படைப்பில் சிறந்த இனம் என்று எடுத்துக் காட்ட உருவாக்கப்பட்டது. இரண்டாவது ஜெர்மனியில் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட அறுபது லட்சம் யூதர்களுக்காக நிறுவப்பட்ட நினைவுச் சின்னம். யூதர்களுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை அவர்களுடைய தலைமுறைகளும் உலகமும் என்றும் மறக்காமல் இருப்பதற்காகவும் இனி அந்த மாதிரி கொடுமை யூதர்களுக்கு எப்போதும் இழைக்கப்படாமல் இருப்பதற்காகவும் அமைக்கப்பட்டது. இரண்டிலும் பணத்தைக் கொண்டு கொட்டியிருக்கிறார்கள்.
இஸ்ரேல் மியுசியத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. முதல் பிரிவு யூதர்களுடைய 3000 வருஷ சரித்திரத்தைப் பற்றிக் கூறுகிறது அவர்களுடைய கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகிய பற்றிப் பல விளக்கங்கள் இருக்கின்றன. அவர்கள் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்த சரித்திரம் இருக்கிறது. ஆங்காங்கு அவர்கள் கட்டிய யூதக்கோயில்கள் (Synagogue என்று யூதக்கோயில்களை அழைக்கிறார்கள்) பற்றிய விபரங்களும் நான்கு யூதக்கோயில்களின் உட்புறங்களின் மாடல்களும் இருக்கின்றன. கொச்சியில் இருக்கும் யூதக்கோயில் அவற்றில் ஒன்று. யூதர்கள் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்தபோது இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கும் வந்திருக்கிறார்கள். குடிபெயர்ந்த பல இடங்களில் அந்தந்த இடங்களின் கலாச்சாரங்களைப் பின்பற்றி உபயோகித்த பொருட்கள் – துணிகள், உடைகள், ஆபரணங்கள் – காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அவர்கள் உபயோகித்த மணப்பெண் உடை ஒன்றும் இருந்தது. சரித்திர மத்திய காலத்திலிருந்து இன்று வரை, பல இடங்களிலிருந்தும் – ஸ்பெயின், சீனா போன்ற தூர தேச நாடுகளிலிருந்தும் – சேகரித்த பல பொருள்கள் காட்சிப் பொருள்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.
பல வகையான புத்தகங்களின் கைப் பிரதிகளும் இங்கே இருக்கின்றன. 14-ஆம் நூற்றாண்டில் பாஸ் ஓவர் (Passover) பண்டிகையின் போது ஒரு யூத மதத் தலைவர் வாசித்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி ஒன்றும் 15-ஆம் நூற்றாண்டில் சேகரிக்கப்பட்ட பழைய ஏற்பாடு பைபிள், சட்ட சம்பந்தப்பட்ட புத்தகங்களின் பிரதிகளும் இருக்கின்றன. Passover என்பது யூதர்கள் எகிப்தில் ஃபேரோவின் அடிமைகளாக இருந்தபோது கடவுளிடம் தங்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்குமாறு வேண்டிக்கொண்ட போது இறைவன் யூதர்களை விடுவிக்கும்படியும் இல்லையென்றால் பல இன்னல்களுக்கு உட்படும்படியும் எகிப்து அரசனை எச்சரித்து எகிப்தியர்களுக்குப் பல தண்டனைகள் கொடுத்தார். அதில் எகிப்தியக் குடும்பத்தின் எல்லா ஆண்பிள்ளைகளையும் கொன்றுவிடுவது ஒன்று. இறைவன் யூதர்களிடம் ஆடுகளைப் பலிகொடுத்து அவற்றின் இரத்தத்தை யூதர்களின் வீடுகளின் வாசலில் பூசிவைத்தால் அந்த வீடுகளைத் தான் அடையாளம் கண்டுகொண்டு யூதர்களின் குழந்தைகளைக் கொல்லாமல் விட்டுவிடுவதாக வாக்களித்தாராம். அதைக் கொண்டாடும் நாள்தான் Passover ஆகியது.
கலைப் பொருள்கள் பகுதியில் பல காலங்களில் சேகரிக்கப்பட்ட கலைப் பொருள்களிலிருந்து தற்கால ஓவியங்கள் – எல்லாம் யூதர்களின் படைப்புகள் – வரை இருக்கின்றன. சீனாவின் பீங்கான் சாமான்களிலிருந்து ஆப்பிரிக்காவின் மனித உருவப் பொம்மைகள், மற்றும் 18-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு அழகு செய்துகொள்ளும் கலைக்கூடம் வரை இருக்கின்றன. இப்பகுதியில் பெயர்பெற்ற நவீன கலைஞர்களின் படைப்புகளையும் காணலாம்.
இன்னொரு பகுதி தொல்லியல் துறை. இதில் இஸ்ரேலில் தோண்டி எடுக்கப்பட்ட பல தொல்லியல் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே அதிகமாகத் தோண்டப்பட்ட இடம் இஸ்ரேல்தான் என்கிறார்கள். (இப்போதும் புராதன நகரத்தில் பல இடங்களில் தரையைத் தோண்டும் வேலை நடக்கிறது. புராதன நகரத்தில் பல இடங்கள் யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை இருப்பதால் இப்படித் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.) கி.மு.வின் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி.யின் பல நூற்றாண்டுகள் வரை கண்டெடுக்கப்பட்ட பல அரிய பொருள்கள் இருக்கின்றன. சாலமன் அரசன் காலத்தில் கட்டப்பட்ட யூதர்களின் முதல் கோவிலிலிருந்து கிடைத்ததாகக் கருதப்படும் பழைய ஹீப்ரு எழுத்துக்கள் எழுதப்பட்ட தந்தத்தில் செய்த மாதுளம் பழத் தொல்லியல் பொருள் ஒன்றும் இருக்கிறது. யூதர்களின் இரண்டாவது கோவில் மாடல் ஒன்றும் இந்த மியுசியத்தில் இருக்கிறது.
இன்னொரு முக்கியமான அம்சம் உயிரற்ற கடலின் (Dead Sea) அருகில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட சுவடிகள் (Dead Sea Scrolls) அடங்கிய பகுதி. 1947-இல் பெடுயின் (Bedouin) இனத்தைச் சேர்ந்த இடையன் ஒருவன் தொலைந்துபோன தன் ஆட்டுக் குட்டியைத் தேடுவதற்காகக் குகைக்குள் சென்றபோது அவனுக்குத் தற்செயலாகக் கிடைத்த சுவடிகளை மிகவும் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள். அதன் பிறகு சில தசாப்தங்களில் இன்னும் 800 சுவடிகள் பதினொரு குகைகளில் கிடைத்தனவாம். இந்தக் குகைகளுக்குப் பக்கத்தில் உள்ள கும்ரான் என்ற ஊரில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று இப்போது நம்பப்படுகிறது. இந்தச் சுவடிகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 68 வரை எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இது கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் கிறிஸ்தவ மத வரலாற்றையே இவை மாற்றிவிடலாம் என அஞ்சப்பட்டது. ஆனால் இவை யூதர்களின் பழைய வேதமான தோரா (Torah) என்று பின்னால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சுவடிகளின் மூலப்பொருள் தோலாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவை ஆராய்ச்சிக்கு உரிய விஷயமாகப் பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இவற்றை மியுசியத்தின் தளத்திற்குக் கீழே உள்ள அரை இருட்டு அறையில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது காட்சிக்கு வைத்திருப்பவற்றை எடுத்துவிட்டுப் புதிதாகச் சிலவற்றை வைப்பார்களாம். ஒன்றையே வைத்திருந்தால் அவை கொஞ்சம் பழுதடைந்து போகலாம் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.
யாத் வாஷம் ஒரு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இது உலகத் தரம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. 1953-இல் கட்டப்பட்டது. இப்போது நிறைய புது விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. Hall of Names என்னும் பகுதி 180 மீட்டர் நீளமுடையது. இது வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் இரண்டு பக்கங்களிலும் ஜெர்மன் படுகொலையில் கொல்லப்பட்ட யூதர்களின் பெயர்கள், அவர்களுடைய சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. சுமார் இருபது லட்சம் பக்கங்கள் இங்கு இருக்கின்றன. இதன் கோன் வடிவமான கூரையில் 600 படங்கள் இருக்கின்றன. இதன் ஒருகோடியில் இருக்கும் கணினி அறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய data base இருக்கிறது. அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களின் உதவியால் யார் பற்றிய விபரம் வேண்டுமானாலும் அதில் தேடலாம்.
கலைக்காட்சியகம் (Art Museum) ஒன்றும் யாத் வாஷத்தின் முக்கிய அம்சம். இங்குள்ள ஓவியங்கள் யாவும் ‘படுகொலை’ (Holocaust) சமயத்தில் பல யூதர்கள் உருவாக்கியவை. படுகொலையில் தப்பிக்காத பலரின் படங்களும் இருக்கின்றன. இங்குள்ள Exhibition Pavilion-இல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருள்கள் இருந்தாலும் எல்லாம் ஜெர்மானியப் படுகொலையோடு சம்பந்தப்பட்டவை. அடுத்து வரும் Learning Center-உம் அப்படியே. ஜெர்மானியப் படுகொலை ஏன் நடந்தது, எப்படி நடந்தது, யார் காரணம் போன்ற கேள்விகளுக்கு விடை காண விரும்புவோர் இங்கு கணினிகள் மூலம் விடை காணலாம்; காதில் மாட்டிக்கொள்ளும் ear phones மூலமும் விடை தெரிந்துகொள்ளலாம். Visual Center-இல் யூதப் படுகொலை பற்றிய எல்லா ஆவணப் படங்களும் இருக்கின்றன. இங்குள்ள யூதக்கோவிலில் ஐரோப்பாவில் பல இடங்களில் அழிக்கப்பட்ட யூதக்கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பல வகையான பொருள்கள் இருக்கின்றன.
இந்த மியுசியத்தின் சார்பில் பல ஆன் லைன் வகுப்புகள் நடத்துகிறார்கள். உலகின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் இதில் சேரலாம். யூதர்களின் சரித்திரத்தையும் ஜெர்மானியப் படுகொலை பற்றியும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.
யாத் வாஷத்திற்கு அனுமதி இலவசம். ஆனால் இங்கு வருபவர்கள் உரிய முறையில் உடை அணிந்திருக்க வேண்டும். அரைக்கால் பேண்ட்டுகள் (shorts), குட்டைப் பாவாடைகள் (mini skirts) அணிந்துகொண்டு மியுசியத்திற்குள் நுழைய முடியாது. இந்த வரலாற்று நிகழ்வுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்னும் நிமித்தமாக இந்த நிபந்தனை இருக்கிறது என்று நினைக்கிறேன். பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. ‘யூதப் படுகொலை’ சம்பந்தப்பட்ட சில காட்சிப் பொருள்கள் அவர்களின் மனதைப் பாதிக்கலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு போலும். எல்லாப் பகுதிகளையும் வெள்ளிக்கிழமை இரண்டு மணிக்கே மூடிவிடுகிறார்கள். சனிக்கிழமை முழுவதும் விடுமுறை. ஜெர்மானியப் படுகொலை பற்றிய எல்லா விபரங்களையும் பார்ப்பவர் மனதில் இருத்த வேண்டும் என்பதே இம்மியுசியத்தின் முக்கிய நோக்கமாகத் தெரிகிறது. இதற்கு வெளியே வந்து பார்த்தால் இஸ்ரேல் ஊர் முழுவதும் மிக அழகிய முறையில் தோற்றமளிக்கிறது.
நாங்கள் இஸ்ரேலுக்குப் போகும் முன்பே ஒரு அமெரிக்க யூத நண்பர் ‘இந்த மியுசியத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இஸ்ரேல் ஏன் உருவாக்கப்பட்டது என்று உங்களுக்கு நன்றாகப் புரியும்’ என்று சொல்லிக் கண்டிப்பாக இதைப் பார்த்து வரும்படிக் கூறினார். இப்போது இஸ்ரேல் உருவான சரித்திரம் தெரிந்த பிறகு ‘ஜெர்மானியப் படுகொலைக்கு’ வெகு காலம் முன்பே யூதர்கள் தங்களுக்கென்று, தங்கள் புண்ணிய பூமி என்று அவர்கள் கருதிய பாலஸ்தீனத்தில் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது நினைவுக்கு வருகிறது.
Picture of Israel Museum
http://www.google.com/imgres?imgurl=http://www.english.imjnet.org.il/Media/Uploads/Israel-Museum-entry-nighttime%281%29.jpg&imgrefurl=http://www.english.imjnet.org.il/htmls/page_1465.aspx?c0%3D14896%26bsp%3D14393&h=162&w=210&sz=1&tbnid=vt2yO0zlC3pKeM:&tbnh=160&tbnw=207&zoom=1&usg=__T26jleT2QwX_vLNk640UeUOJxU8=&docid=VqhASgAdKKw_UM&itg=1&hl=en&sa=X&ei=yXjzUJLUEMmtqAGcj4DwDg&ved=0CKUBEPwdMA0
overview of Yad Vashem The first of many pictures
http://www1.yadvashem.org/yv/en/museum/overview.asp
model of second Jewish temple
http://en.wikipedia.org/wiki/File:Jerus-n4i.jpg



mika mika nalla oru payana thodar, god bless you for long live
anbudan
ramu babu
Wonderful series. Not sure if 6th part is the last one. Please mention what happened to katrikai whether it landed India or not with you. ):
என் கட்டுரைத் தொடர் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதில் எனக்கு மகிழ்ச்சி. கட்டுரை இன்னும் சில வாரங்கள் தொடரும்.
ஒரு முறை – 2007-இல் – கணவர் ஒரு கருத்தரங்கிற்கு டோக்கியோ சென்றபோது நானும் சென்றிருந்தேன். அங்கு சிறிய சமையலறையோடு கூடிய ஓட்டல் அறையில் தங்கினோம். அங்கு ஜப்பான் கத்தரிக்காயைச் சமைத்தேன். அதற்கு முன்பே 1996-இல் ஒரு வருடம் டோக்கியோவில் கணவருடன் தங்கியிருந்தபோது அந்தக் கத்தரிக்காய் வகையைச் சமைத்து அதன் சுவையை அறிந்திருக்கிறேன். 2007-லிலும் சமைத்தபோது அதன் சுவையை மறுபடி அறிந்து இரண்டு கத்தரிக்காய்களை மைசூருக்கு எடுத்து வந்தேன். எப்படியோ விமானநிலையத்தில் சுங்கசோதனைக்குத் தப்பி மைசூர் கொண்டுவந்துவிட்டேன். எங்கள் பக்கத்து வீட்டுக்காரரும் நண்பருமான, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் இது பற்றிக் கூறினேன். அவர் உடனே ‘இந்தியர்கள் வெளிநாடுகளில் அங்குள்ள விதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அது பற்றி நினைப்பது கூட இல்லை என்று ஒரு முறை அப்போது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் கூறினார். அது சரிதான் போலும்’ என்றார். அதன் பிறகு வெளிநாடுகளிலிருந்து பச்சைக் காய்கறிகள் கொண்டுவரும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.